Published:Updated:

மர்ம பங்களா.. பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா! சசிகலா, ஜெயலலிதாவின் சகோதரியான கதை, அத்தியாயம் - 28

அ.தி.மு.க (ஜெ அணி)
அ.தி.மு.க (ஜெ அணி)

மர்ம பங்களா.. பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா! சசிகலா, ஜெயலலிதாவின் சகோதரியான கதை, அத்தியாயம் - 28

மர்மபங்களா... பயங்கர மனிதர்கள் மற்றும் ஜெயலலிதா!

“ஜெயலலிதா ஒரு மர்ம பங்களாவில் வசிக்கிறார். அங்கு ஜெயலலிதாவுடன் சில பயங்கர மனிதர்கள் இருக்கிறார்கள். அந்தப் பயங்கர மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் ஜெயலலிதா இருக்கிறார்”. இந்த வார்த்தைகள், 1988-ம் ஆண்டு திருநாவுக்கரசு ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட வார்த்தைகள். அவர் குறிப்பிட்ட மர்ம பங்களா போயஸ் கார்டன், வேதா நிலையம். அவர் சொன்ன அந்த மர்ம மனிதர்கள் சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன்.

ஜா.அணி-ஜெ.அணி என ஏற்கனவே இரண்டாகப் பிளந்துகிடந்த அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. ஜெ.அணி இரண்டாக உடைந்து, அதில் இருந்து நால்வர் அணி முளைத்தது. நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு ஆகியோர் அந்த அணியின் நால்வராகத் திகழ்ந்தனர். ஜெயலலிதாவை நம்பி, ஜா.அணியை விட்டு ஜெ.அணிக்கு வந்த மாவட்டச் செயலாளர்கள், கட்சிக்காரர்களுக்கு ஜெ.அணிக்குள் ஏற்பட்ட இந்தப் பிளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியே போனால் கருணாநிதி அ.தி.மு.க-வை கபளீகரம் செய்துவிட்டு ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்று அஞ்சிக் கொண்டிருந்தனர்.

ஆனால், ஜெயலலிதா எதைப் பற்றியும் யோசித்ததாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் பள்ளிக்கூடத்துப் பிள்ளையைப்போல்  ‘மெடிக்கல் லீவ்’ போட்டுவிட்டு 2 மாதங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். அதற்குமுன்பாக நாவலரிடம் மட்டும் நேரில் போய் ஜெயலலிதா சமாதானம் பேசினார். ஆனால், நாவலர் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. “சமாதானம் பேசுவது என்றால், எங்கள் அணியில் அனைவரையும் வைத்துக் கொண்டு பேசுங்கள்” என்று சொல்லி ஜெயலலிதாவைத் திருப்பி அனுப்பிவிட்டார். திருநாவுக்கரசை ஆள் அனுப்பி சமாதானப்படுத்தினார் ஜெயலலிதா. ஆனால் அவரும் சமாதானத்துக்கு உடன்படவில்லை. மிகப் பிடிவாதமாக ஜெயலலிதாவின் சமாதானத்தை மறுத்துவிட்டார். அந்த அளவுக்கு நடராஜன்-சசிகலா குடும்பத்தால் திருநாவுக்கரசு தொல்லைகளையும் அவமானங்களையும் அனுபவித்திருந்தார். 

கே.கே.எஸ்.எஸ்.ஆர் எந்தப் பக்கம்?

நடராஜன் திருநாவுக்கரசை ஒருமுறை தொலைபேசியில் அழைத்து, கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வாசித்தார். அதைக் கேட்ட திருநாவுக்கரசு, “கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு முக்கியமானதாக இல்லை. மிகச் சாதாரணமான பொறுப்பாக இருக்கிறது. நம் அணி  இக்கட்டான நேரத்தில் இருந்தபோது, ஜானகி அணியின் திட்டங்களை முறியடித்து நம்முடைய 33 எம்.எல்.ஏ-க்களையும் பம்பாய், டெல்லி என்று சுற்றுலா அழைத்துச் சென்றவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அதுபோக அவருடைய மில்லில் தங்கவைத்துத்தான் நம் அணி எம்.எல்.ஏ-க்களை பாதுகாத்தோம். அப்படிப்பட்டவருக்கு கட்சியின் மாநில அமைப்பாளர் பொறுப்பு அல்லது எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பைக் கொடுத்தால் அவர் இன்னும் உற்சாகமாக பணியாற்றுவார் எனக் குறிப்பிட்டார்.

அதைக்கேட்ட நடராஜன், நான் உங்களிடம் ஆலோசனை கேட்க இந்தப் பட்டியலை வாசிக்கவில்லை; உங்களுக்கு தகவல் சொல்வதற்காக மட்டுமே இந்தப் பட்டியலை வாசித்தேன்; உங்களுக்கு வாசித்துக் காட்டுவதற்கு முன்பே பத்திரிகைகளுக்கும் அனுப்பிவிட்டேன்” என்றார். நடராஜனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட திருநாவுக்கரசு துடித்துப் போனார். உடனே சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களிடம் திருநாவுக்கரசு இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். அது கே.கே.எஸ்.எஸ்.ஆரின் காதுகளை எட்டியிருந்தது. அதுதவிர, கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நடராஜனும் ஜெயலலிதாவும் நடந்து கொண்டவிதம் அவரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருந்தது. இந்த நேரத்தில் தன் இடத்தை உறுதிப்படுத்த நினைத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார்.

காலையில் நாவலர் நெடுஞ்செழியனையும், பண்ருட்டி ராமச்சந்திரனையும் சந்திப்பார்... மாலையில் ஜெயலலிதாவையும் நடராஜனையும் சந்திப்பார். அவ்வப்போது ஜெயலலிதாவைச் சந்தித்து சமாதானம் பேசினார். அதில் கோபப்பட்ட ஜெயலலிதா ஒரு நாள் “எனக்கு நீங்கள் அறிவுரை சொல்லத் தேவையில்லை... அந்த அணிக்குப் போவது என்றால் போய்த் தொலையுங்கள்” என்று கத்தினார். அதற்குமேல் பொறுக்கமுடியாத கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஜெயலலிதாவுக்கு முன்னாள் இருந்த நாற்காலியை உதைத்துத் தள்ளிவிட்டு போயஸ் கார்டனை விட்டு வெளியேறினார்.

நேராக விருதுநகர் கிளம்பிப்போனவர் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வரவழைத்தார். “கே.கே.எஸ்.எஸ்.ஆர்  பின்னால் 10 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். விரைவில் அவர்களோடு நால்வர் அணியில் போய் இணையப்போகிறார்” என்று வெளியான அந்தச் செய்தியைப் பார்த்ததும் ஜெயலலிதா கொஞ்சம் கதிகலங்கித்தான் போனார். திருநாவுக்கரசு இல்லாத நேரத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் இல்லாமல் போனால் அது மிகப்பெரிய பின்னடைவு என்று யோசித்தவர் நடராஜனை சமாதானம் பேச விருதுநகருக்கு அனுப்பினார். ஜெயலலிதாவே விருதுநகர் ஜின்னிங் பேக்டரி தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு கே.கே.எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்தவும் செய்தார். 

கே.கே.எஸ்.எஸ்.ஆரை வீழ்த்திய நடராஜன்!

கே.கே.எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்த விமானத்தில் சென்ற நடராஜன் மதுரையில் போய் இறங்கினார். அங்கிருந்து விருதுநகர் சென்று கே.கே.எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்தினார். அந்த வேலையை மட்டும் முடித்துவிட்டு நடராஜன் சென்னை திரும்பிவிடவில்லை. கே.கே.எஸ்.எஸ்.ஆர் பின்னால் எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் போவார்கள் என்று சந்தேகம் இருந்ததோ... அவர்களை எல்லாம் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் தென்னவன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டவர்களை ஜெ.அணியில் இருந்து யாரும் பிரிக்கமுடியாதபடி பார்த்துக் கொண்டார். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பியவர் ஜெயலலிதாவைச் சந்தித்து, “கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு பின்னால் பத்து மாவட்டச் செயலாளர்கள் இல்லை; மதுரை நவநீதனும், திருநெல்வேலி கருப்பசாமி பாண்டியன் மட்டும்தான் உள்ளனர்; அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று ஜெயலலிதாவுக்கு தெம்பு கொடுத்தார்.

அதில் ஆறுதலடைந்த ஜெயலலிதா மீண்டும் தன்னைச் சந்திக்க வந்த கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு நேரம் ஒதுக்காமல் அவமானப்படுத்தினார். அதனால் மீண்டும் என்ன செய்வதென்று தெரியாமல் கே.கே.எஸ்.எஸ்.ஆர் முழித்துக் கொண்டிருந்தபோது அவரது முகத்தில் சிலர் ஆசிட் அடித்தனர். அந்த சிகிச்சைக்காக சென்னை அப்போலோவில் அட்மிட் ஆன கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு 6 மாதங்களுக்கு மேல் சிகிச்சை நடைபெற்றது. அதனால், அப்போதைக்கு அவர் எந்த அணி என்ற பிரச்னை முற்றுப்பெற்றது. 

கதை தொடரும்...

ஜோ.ஸ்டாலின் 
படங்கள் - சு.குமரேசன்

அடுத்த கட்டுரைக்கு