Published:Updated:

'வனத்தின் மீது ஈஷாவுக்கும் அக்கறை இருக்கிறது!' - மோடி வருகை பின்னணியும் ஈஷா விளக்கமும்

'வனத்தின் மீது ஈஷாவுக்கும் அக்கறை இருக்கிறது!' - மோடி வருகை பின்னணியும் ஈஷா விளக்கமும்
'வனத்தின் மீது ஈஷாவுக்கும் அக்கறை இருக்கிறது!' - மோடி வருகை பின்னணியும் ஈஷா விளக்கமும்

'வனத்தின் மீது ஈஷாவுக்கும் அக்கறை இருக்கிறது!' - மோடி வருகை பின்னணியும் ஈஷா விளக்கமும்

கோவை, ஈஷா யோக மையத்தில் 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவன் சிலையைத் திறந்து வைக்க நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. 'காட்டு வளங்களை அழிக்கும் ஈஷா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கக் கூடாது' என சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். ' போராட்டத்தில் ஈடுபடும் அமைப்புகள் யார் என்பது குறித்தும் பிரதமருக்கு நன்றாகவே தெரியும்' என்கிறார் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன். 

வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்தின் மீது வன ஆக்ரமிப்பு தொடர்பாக, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பட்டு வருகிறது. யானையின் வழித்தடங்களை ஆக்ரமித்தது; அரசு நிலங்களை வளைத்தது; மலையில் இருந்து இறங்கி வரும் சிற்றோடையை ஆசிரமத்திற்குள் மடைமாற்றியது; இளம்பெண்களை சந்நியாசியாக மாற்றியது என, கடந்த பத்து ஆண்டுகளாக ஈஷா பெயர் அடிபட்டு வருகிறது. இந்நிலையில், 112 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிவன் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு வருகை தர இருக்கிறார் பிரதமர் மோடி. இந்த விழாவில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சி குறித்து நேற்று பேட்டியளித்த முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன், 'விதிகளை மீறி 13 லட்சம் சதுர அடியை ஆக்கிரமித்து, ஈஷா யோகா மையம் கட்டடங்களை நிறுவியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, தொடர்ந்து அவர்கள் கட்டடங்களை எழுப்பி வருகின்றனர். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கக் கூடாது' என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவும், 'பல ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. அவர்கள் நடத்தும் நிகழ்ச்சியை எதிர்க்கிறோம். பிரதமர் வருவதால் மட்டும் நாங்கள் எதிர்ப்பு காட்டவில்லை. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால்தான் குரல் எழுப்புகிறோம்' என்றார்.

ஈஷா ஆக்ரமிப்பு குறித்து நம்மிடம் பேசிய சூழல் ஆர்வலர்கள், "மதம் சம்பந்தப்பட்ட நிறுவனமாக ஈஷா இல்லை எனக் கூறிவிட்டு, 'மதம் சம்பந்தமான வழிபாட்டுத்தளம் அமைப்பதற்காக அனுமதி கோருகிறோம்' என மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்துள்ளனர். 112 அடி உயர சிலை அமைப்பதற்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம், நகர ஊரமைப்புத் துறை ஆகியவற்றின் அனுமதியைப் பெறாமலேயே கட்டுமானங்களை எழுப்பியுள்ளனர்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இக்கரை பொல்லுவ பட்டி எனும் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஈஷா அமைந்துள்ளது. 1994-ல் தொடங்கியபோது, 2913.34 சதுர அடி கட்டடங்களை மட்டுமே கட்டியிருந்தது. இப்போது 4 இலட்சத்து 27 ஆயிரத்து 700 சதுர அடிக்கு கட்டடங்கள், பூங்காக்கள், விளையாட்டு இடங்கள், யோகா மண்டபங்கள், கார் நிறுத்தும் இடங்களை எழுப்பியுள்ளது.

இவற்றிற்கு மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் ஒப்புதலையும் அவர்கள் பெறவில்லை. இந்தக் குழுவில் மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் அனுமதிக்கு விண்ணப்பிக்காமல், உள்ளூர் ஊராட்சியின் ஒப்புதலை மட்டும் பெற்றிருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஈஷா வந்த பிறகுதான், யானைகளின் வாழ்விடத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஐம்பதுக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியானது. தமிழ்நாட்டில் மின்தடை இருந்தாலும், ஈஷாவுக்கு மட்டும் தடையற்ற மின்சாரத்தை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பை ஒட்டுமொத்தமாக சம்பாதித்திருக்கும் ஈஷாவின் நிகழ்ச்சிக்குப் பிரதமர் வந்தால், அவர்களுடைய விதிமீறல்களுக்கு அரசே அங்கீகாரம் கொடுத்தது போல் ஆகிவிடும்" என்றார் ஆதங்கத்தோடு. 

ஈஷா யோக மையத்தின் சார்பாக விளக்கம் அளித்துள்ள சுவாமி தீரஜா, "ஈஷா மையம் எந்தவித விதிமீறலிலும் ஈடுபடவில்லை. சட்டத்திற்குப் புறம்பான எந்தக் காரியத்திலும் நாங்கள் ஈடுபடுவதில்லை. 'சுற்றுச்சூழல் விதிமீறலில் ஈடுபட்டோம்' என்பது முற்றிலும் தவறானது. எங்களின் செயல்பாடுகள் அனைத்தும் சட்டத்திற்குட்பட்டவை. அவற்றை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கும் உண்மைக்கு மாறானவை. எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதன்மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர், வனத்துறை மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகியவற்றின் அனுமதியைப் பெற்றிருக்கிறோம். 112 அடி உயர சிலைக்கு அரசின் ஒப்புதலை வாங்கியிருக்கிறோம். மாவட்ட கலெக்டரால்

தடையின்மை சான்றும் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் நடத்தும் மகா சிவராத்திரி விழாவைத் தடுக்கும் நோக்கில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

2013-ம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும், 'நாங்கள் விதிகளை மீறவில்லை' என மாவட்ட நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பாக பலவித திட்டங்களை ஈஷா செயல்படுத்தி வருகிறது. மலைப் பகுதிகளில் மரங்களை வளர்த்து பராமரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இதுகுறித்த அனைத்து விவரங்களையும் மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மகா சிவராத்திரி விழாக்களைக் கொண்டாடி வருகிறோம். எங்களால் சூழலியலுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டதில்லை. மலிவான விளம்பரத்திற்காக சிலர் எங்கள் மீது குற்றம் சொல்கின்றனர்" என்றார் விரிவாக. 

தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். " ஈஷா நிகழ்ச்சிக்கு பிரதமர் வருவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து எனக்குத் தெரியவில்லை. இதனால் பிரதமரின் வருகை எந்த வகையிலும் பாதிக்காது. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் யார் என்பதும் எங்களுக்குத் தெரியும். விதிமீறல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மதரீதியான விஷயம் என்பதற்காக மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

வனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஈஷாவுக்கும் அக்கறை இருக்கிறது. அதற்கான பணிகளில் அவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பு காருண்யா விழாவுக்கு சோனியா காந்தி வந்து சென்றிருக்கிறார். விதிமீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசுதான். அதற்கான அனைத்து அதிகாரங்களும் அவர்களிடம் இருக்கிறது. பிரதமர் வந்துவிட்டுச் செல்வதால், அவர்களது விதிமீறல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று சொல்வதை ஏற்க முடியாது. சட்டரீதியாக அவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். பிரதமர் வந்துவிட்டுச் செல்வதால், 'நாங்கள் பதில் சொல்ல மாட்டோம்'  என அவர்கள் எப்படிச் சொல்ல முடியும்?" என்றார் உறுதியாக. 

- ஆ.விஜயானந்த்

படம்-தி.விஜய்

அடுத்த கட்டுரைக்கு