சசிகலா புஷ்பா நியமித்தார்... சசிகலா நீக்கினார்! டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் கதை #VikatanExclusive

சசிகலா புஷ்பா நியமித்தார்... சசிகலா நீக்கினார்! டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் கதை #VikatanExclusive
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த உளவுத்துறை ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கி விட்டார். இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் உள்விவகாரத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதம் சிக்கியிருப்பதாக காவல்துறை உள்வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக காவல்துறையில் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.க்கு அடுத்து முக்கிய பதவியாக கருதப்படுவது உளவுத்துறை ஐ.ஜி. இந்த பதவி பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு விசுவாசிகளாக இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கே வழங்கப்படும். சில நேரங்களில் நேர்மையான அதிகாரிகளுக்கு வழங்கப்படும். உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை இடமாற்றி விட்டு சத்யமூர்த்தியை அந்த பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா. அதற்கு சில காரணங்கள் சொல்லப்பட்டன. அதில் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நில விவகாரமும் ஒன்று. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஏற்பட்ட அரசியல் பரபரப்பில் சத்யமூர்த்தி நீண்ட விடுப்பில் சென்றார். காலியாக இருந்த அந்த பதவிக்கு காபந்து முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பரிந்துரையில் போலீஸ் நலப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். அவரது நியமன பின்னணியில் அரசியல் இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.
சசிகலா தரப்பினருக்கு நெருக்கடி கொடுக்கவே டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு அந்த பதவியை பன்னீர்செல்வம் வழங்கினார். ஆனால் சசிகலா அணியிலிருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராகியதும் டேவிட்சன் தேவாசீர்வாதம் இடமாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த பதவிக்கு சென்னை மாநகர போலீஸில் நுண்ணறிவுப்பிரிவு ஐ.ஜியாக இருக்கும் தாமரைக்கண்ணனின் பெயர் அடிபடுகிறது. இந்த பட்டியலில் ஸ்ரீதர் பெயரும் இருக்கிறதாம். இவர்களில் ஒருவர் உளவுத்துறை ஜ.ஜி.யாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. 11 நாள்கள் உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு கொடுக்கப்பட்ட அசைமெண்டை கச்சிதமாக முடித்து விட்டாராம். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த இடமாற்றத்தை எதிர்பார்த்ததுதான் என்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார் டேவிட்சன். இருப்பினும் டேவிட்சனின் பணிநியமன கதையை நம்மிடம் விவரித்தார் உயர் ஜ.பி.எஸ். அதிகாரி ஒருவர்.
"தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். ஆனால் அவரும் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய சமயத்தில் நெளிவு சுளிவாகத்தான் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நில விவகாரத்திலும் இவரது பெயர் அடிப்பட்டது. இதனால் உளவுத்துறையிலிருந்து போலீஸ் நலப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். உளவுத்துறையில் அனுபவமிக்கவராக திகழ்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளில் இவரும் ஒருவர். அதே நேரத்தில் எந்தவித அரசியல் தலையீட்டிலும் சிக்காதவர். இந்த சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே நடந்த அதிகார போட்டியில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை மாற்ற பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். அதில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜிம் ஒருவர். ஆனால், ஜார்ஜை மாற்ற முடியவில்லை. உளவுத்துறை ஐ.ஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். அவரை நியமிக்க பரிந்துரை செய்ததில் ஜெயலலிதாவுக்கே சவால் விட்ட சசிகலா புஷ்பா எம்.பி.யும் ஒருவர். இந்த தகவல்கள் எல்லாம் சசிகலாவுக்கு தெரிந்தவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், டேவிட்சன் தேவாசீர்வாதத்தை இடமாற்றம் செய்ய கூறியுள்ளார். உடனடியாக அவரை இடமாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மீண்டும் போலீஸ் நலப் பிரிவுக்கு மாற்றியதோடு உளவுத்துறை ஐ.ஜி பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
வழக்கமாக இதுபோன்ற முக்கியமான பதவிகளில் இடமாற்றம் செய்யப்படும் போது அந்த பதவிக்கு உடனடியாக வேறுநபர் நியமிக்கப்படுவதுண்டு. ஆனால் உளவுத்துறை ஐ.ஜி பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் சசிகலா தரப்புக்கு வேண்டப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். ஏனெனில் உளவுத்துறை ஐ.ஜி.யும் அடிக்கடி முதல்வரை சந்தித்து பேசி சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியதிருக்கும். மேலும் ஜெயலலிதா, கட்சியிரை நம்புவதை விட காக்கிகள் கொடுக்கும் ரிப்போர்ட்டுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அந்தவழியில் சசிகலாவும், எடப்பாடி பழனிசாமியும், காக்கிகளை நம்பத் தொடங்கி உள்ளனர்.
- எஸ்.மகேஷ்