"அரசுக்குத் தேவை உளவியல் சிகிச்சை!’’ - கொதிக்கும் குழந்தைகள் பாதுகாப்புச் செயற்பாட்டாளர்

"அரசுக்குத் தேவை உளவியல் சிகிச்சை!’’ - கொதிக்கும் குழந்தைகள் பாதுகாப்புச் செயற்பாட்டாளர்
நந்தினி, ஹாசினி என குழந்தைப் பாலியல் வன்கொடுமை வலி ஓய்வதற்குள், எண்ணூரைச் சேர்ந்த குழந்தை ரித்திகாவின் மரணம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2016 -ம் ஆண்டு மட்டும் தமிழகம் முழுக்க 460 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதில், காவல்துறை உதவியுடன் 145 குழந்தைகள் மீட்கப்பட்டிருந்தாலும் காவல்துறையின் செயல்பாடு என்பது முழுமை இல்லாதவை என்கிறது அதே விவரம். இப்படிக் காணாமல் போகும் குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதுதான் பரிதாபம். இந்த அவலங்கள் நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ற கேள்விக்கு உரிய பதில் இல்லை.
குழந்தைகள் சூறையாடலை நுகர்வாக்கி விட்டார்கள்
''அமைப்புகள் செயலிழந்து போனதன் விளைவே இத்தனை குழந்தைகள் சூறையாடப்படுவதற்கு காரணம்.'' என்று குற்றம் சாட்டுகிறார் குழந்தைகள் பாதுகாப்பு செயற்பாட்டாளரான பாடம் நாராயணன். "இது எங்கோ ஒரு குழந்தைக்கு மட்டும் நடக்கும் கொடூரம் அல்ல. அனைவருக்குமே ஏதோ ஒருவகையில் பாலியல் சீண்டல் நடந்துகொண்டேதான் இருக்கிறது. நமக்கு தெரிந்தே நடந்திருக்கும். தெரியாமலும் நடந்திருக்கும். அல்லது அதுகுறித்த புரிதலும் இல்லாமல் இருந்திருக்கும். இந்த அவலம் சமூகத்தின் புரையோடிய புண்ணாக ஆகிவிட்டது. பெண்களை போகப்பொருளாகப் பார்க்கும் மன கோளாறுதான் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் வக்கிரமத்தை கட்டவிழ்த்துவிடுகிறது.
அரசு செயலிழப்பே குழந்தைகள் தொடர் வன்கொடுமை
இந்தக் கொடூர சம்பவங்களை வேர் அறுக்க ஒட்டுமொத்த சமூகத்தையுமே கழுவ வேண்டி உள்ளது. அதனை செய்ய வேண்டிய அரசு செயலிழந்து போனதன் விளைவுதான் இத்தனை கொடூரங்கள் தொடரக் காரணம். அந்த அந்த வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வியைத் தர வேண்டிய அரசு இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்காக உள்ள சமூக நலத்துறையிலும்கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அல்லது ஆலோசனைகள் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளும் இல்லை.
மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழகத்தில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆணையத்தில் இருந்து எந்த நிவாரணமும் தருவதில்லை; பாதுகாப்பும் தருவதில்லை. பெயர் அளவில் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையம் உள்ளது. குழந்தைகள் குறித்த எந்த புரிதலும் இல்லாதவர்களைத்தான் இதற்கு தலைவராக நியமிக்கிறார்கள். அதுவும் ஒரு தனிப்பட்ட கட்சியில் இருந்து பதவி நியமனம் நடைபெறுவதுதான் வேதனை.
வெட்கப்பட வேண்டியது அரசுதான்!'
சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவராக கல்யாணி மதிவாணன் என்பவரை அரசு நியமிக்கிறது. யார் இவர்? குழந்தை நலனுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? இவரை ஏன் ஆணையத் தலைவராக நியமிக்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகள் எல்லோருக்கும் எழுந்தன. எனவே, தலைவராக அவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து எங்களுடைய 'மாற்றம்' அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் தற்போது முறையாக விளம்பரம் கொடுத்து தலைவரை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதேபோன்று மறு வாழ்வு அளிக்கக் கூடிய குழந்தைகள் நல குழுமத்தில் தலைவர்களாக இருப்பவர்களும் எந்த வகையிலும் குழந்தை நலனோடு சம்பந்தம் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
குழந்தைகளைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டங்களாவது முறையாக செயல்படுத்தப்படுகிறதா? அதுவும் இல்லை. இது போன்ற புகார்களைக்கூடபோலீசார் வாங்க மறுக்கின்றனர். சில இடங்களில் அப்படி ஒரு சட்டம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அமைப்புகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தால், குழந்தைகள் பாதுகாப்பு எப்படி உறுதி செய்யப்படும்..? எனவே, குழந்தைகள் சம்பந்தப்பட்ட இதுபோன்றக் கொடுமைகள் அரங்கேறும்போதெல்லாம் வெட்கப்பட வேண்டியது அரசுதான்!'' என்று ஆவேசமாக பேசி முடிக்கிறார்.
கே.புவனேஸ்வரி