Published:Updated:

'பன்னீர்செல்வம் தலைமை தாங்கட்டும்!' - தீபக், திசை மாறிய பின்னணி

'பன்னீர்செல்வம் தலைமை தாங்கட்டும்!' - தீபக், திசை மாறிய பின்னணி
'பன்னீர்செல்வம் தலைமை தாங்கட்டும்!' - தீபக், திசை மாறிய பின்னணி

'பன்னீர்செல்வம் தலைமை தாங்கட்டும்!' - தீபக், திசை மாறிய பின்னணி

'ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணைக் கமிஷன் தேவை' என அதிர வைத்திருக்கிறார் தீபக். இதுநாள் வரையில் சசிகலா முகாமில் இருந்தவர், இப்படியொரு அணுகுண்டை வீசியதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் சசிகலா உறவுகள். 'ஒருவாரமாகவே தீபக்கோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. எதையும் ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை. பன்னீர்செல்வம் அணியின் தூண்டுதலின்பேரிலேயே இவ்வாறு பேசியிருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டங்களில், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை மருத்துவமனைக்குள் சசிகலா அனுமதிக்கவில்லை. ஆனால், தீபாவின் சகோதரர் தீபக் வருகைக்கு எந்த எதிர்ப்பையும் அவர்கள் காட்டவில்லை. '75 நாட்களில் 70 நாட்கள் வரையில் நான் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருந்தேன். சிகிச்சையில் எந்த மர்மங்களும் இல்லை. மருத்துவமனை வளாகத்திற்குள் அவர்(தீபா) தகராறு செய்வதை சசி அத்தை விரும்பவில்லை' என வெளிப்படையாகவே பேசினார் தீபக். ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளிலும் தீபக் முன்னிலைப்படுத்தப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்புகூட அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுடன் பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்தார். இந்நிலையில், இன்று மீடியாக்களிடம் பேசிய தீபக், ' டி.டி.வி.தினகரன் தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம். அ.தி.மு.க தொண்டர்களும் இதை ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.கவுக்குத் திரும்ப வேண்டும். கட்சித் தலைமையை ஏற்க அவருக்குத்தான் தகுதி உள்ளது' என அதிர வைத்திருக்கிறார். 

' தீபக் திசைமாற என்ன காரணம்?' என அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். "இன்று நேற்றல்ல. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீபக்கிற்கு தேவையான வசதிகளை சசிகலா தரப்பினர் செய்து கொடுத்து வந்தனர். அவரை முழுதாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தனியார் கம்பெனியின் ஸ்கிராப் வருமானத்தில் மாதம்தோறும் தீபக்கிற்கு பங்கு போய்க் கொண்டிருந்தது. அவர்களது குடும்ப செலவுகளுக்கும் எந்தக் குறையும் வைக்கப்படவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே, அரசியல் சூழல்கள் மாற ஆரம்பித்துவிட்டன. ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீட்டிற்கு தீபாவும் தீபக்கும் உரிமை கோரத் தகுதியானவர்கள். அந்த அடிப்படையில் நீதிமன்றம் சென்றாலும் செல்லுபடியாகும். இதைக் கருத்தில் கொண்டு தீபக்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவரும், சில நிபந்தனைகளை கார்டனில் உள்ளவர்களுக்கு தெரிவித்தார்.

'சின்னம்மா சிறையில் இருக்கிறார். அவர் வந்ததும் பேசிக் கொள்வோம்' என்றெல்லாம் சசிகலா உறவினர்கள் சமாதானம் பேசியுள்ளனர். அதேவேளையில், தினகரனுடன் பல விஷயங்களில் முரண்பட்டார் தீபக். சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா சமாதியில் மாலை போடுவதற்கு தீபக் சென்றுள்ளார். அதுதொடர்பான செய்தி ஆளும்கட்சி டி.வியிலும் நமது எம்.ஜி.ஆரிலும் வெளியிடப்படவில்லை. என்னை வேண்டும் என்றே தினகரன் புறக்கணிக்கிறார். அவர்களுக்கு எதிராக நான் எதையுமே செய்ததில்லை. என்னை ஏன் எதிரியாகப் பார்க்க வேண்டும்?' என சண்டை போட்டிருக்கிறார். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த பிறகு, விவகாரம் இன்னும் பூதாகரமாக்கிவிட்டது. இதை அறிந்த சசிகலாவின் சகோதரர், 'அவர் எதையாவது பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்குள் சரிக்கட்டுங்கள்' எனப் பேசியிருக்கிறார். அவர் எடுத்த முயற்சியும் கைகூடவில்லை. நிலைமை கைமீறிப் போய்விட்டது. அவரது சூழலை பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்திக் கொண்டார் என கார்டனில் உள்ளவர்கள் நம்புகிறார்கள்" என்றார் விரிவாக. 

ஜெயலலிதா பிறந்தநாளில் நீதி கேட்டு நெடும் பயணம் செல்ல இருக்கிறார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். 'தீபாவை அடுத்து தீபக்கும் பயணத்தில் இணைவாரா?' எனக் கேள்வி எழுப்புகின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள். 

-ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு