Published:Updated:

நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 29

Vikatan Correspondent
நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 29
நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்! சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 29

நடராஜனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்!

“நீங்கள் என்னைவிட்டு விலகிப்போய்விட்டால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவேன்” என நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். தன் அரசியல் வெற்றிகளுக்கு நடராஜனை எந்த அளவுக்கு ஜெயலலிதா நம்பி இருந்தார் என்பதற்கு அந்தக் கடிதமே சாட்சி. நடராசனின் அரசியல், சசிகலாவின் உபசரிப்புகள், திவாகரன் அளித்த பாதுகாப்புப்படை என மன்னார்குடி குடும்பம், ஜெயலலிதாவை ஒரு மகாராணியைப்போல் பார்த்துக்கொண்டது. மன்னார்குடி குடும்பத்தின் கண்காணிப்பும், கவனிப்புமே போதும் என்று முடிவுசெய்துவிட்ட ஜெயலலிதா, கட்சிக்குள் மற்றவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. 

உதிர்ந்த ரோமங்களுக்கு மதிப்பில்லை! 

இந்த அரசியலை அறியாத கட்சியின் சீனியர்கள் சிலர், நால்வர் அணியோடு ஜெ.அணி சார்பில் சமாதானம் பேசினார்கள். அவர்களில் முக்கியமானவர் மதுரை நவநீதன். இவர் மதுரை மாநகரின் முன்னாள் மேயராக இருந்தவர். நாவலர் நெடுஞ்செழியனிடம் போய் சமாதானம் பேசினார். அதற்கு நாவலர், “கட்சிக்குள் சசிகலா-நடராஜன் குடும்பம் தலையிடக்கூடாது; கட்சியின் வரவு-செலவுக் கணக்குகளை சமர்பிக்கவேண்டும்; அரசியல் விவகாரக்குழுவுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்; இந்த நிபந்தனைகளை ஜெயலலிதா ஏற்றால் சமாதானம் பேசலாம்” எனச்சொல்லி நவநீதனை அனுப்பினார். ‘நாம் ஏதோ சாதித்துவிட்டோம்’ என்ற மிதப்பில் நாவலரின் கோரிக்கைகளோடு போயஸ் கார்டனுக்குப் போனார் நவநீதன். அங்கு அவரால் கேட்டைத் தாண்டி உள்ளே போக முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் பூனைப்படை அவரை உள்ளேவிடவில்லை. அவர்களிடம் நாவலர் சொன்ன விஷயங்களைச் சொல்லி போராடிப்பார்த்தார் நவநீதன். எதற்கும் மசியவில்லை பூனைப்படை. அந்தப் படையை மீறி ஒன்றும் செய்யமுடியாத இயலாமையோடு சோர்ந்துபோய் மதுரைக்குத் திரும்பினார் நவநீதன். நவநீதன் திரும்பவரமாட்டார் என்பது நாவலருக்கு நன்றாகத் தெரியும். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜெயலலிதா, “ஜெ.அணியில் இருந்து பிரிந்துபோன நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு போன்றவர்கள் உதிர்ந்த ரோமங்கள். தலையில் இருந்துவிட்டு ரோமங்கள் உதிர்ந்துவிட்டால் அவற்றுக்கு எந்த மதிப்பும் இருக்காது. அதுபோலத்தான் அந்த நால்வர் அணிக்கும் இப்போது அரசியலில் எந்த மதிப்பும் இல்லை” என்று பேசினார். 

இறங்கிச் சென்று ஏறி மிதிக்கும் கொள்கை! 

ஜெயலலிதாவின் சுபாவம் எல்லோரும் அறிந்தது; அவர் யாரிடமும் இறங்கிப்போகமாட்டார்; ஆனால் அரசியலுக்காக சிலரிடம் கொஞ்சம் இறங்கிப்போக நேரிட்டது. ஜெயலலிதாவே அப்படி இறங்கிப்போக நினைத்த நேரத்தில், நடராஜன் ஜெயலலிதா இறங்காமல் பார்த்துக்கொண்டார். திருநாவுக்கரசு விஷயத்தில் இது அப்பட்டமாக வெளிப்பட்டது. நால்வர் அணிக்குப் போன திருநாவுக்கரசு மீண்டும் தனது அணிக்குத் திரும்பவேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தார். திருநாவுக்கரசாலும் ஜெ.அணியில் இருந்து விலகி வேறு அணியில் இருக்கமுடியவில்லை. அதனால், அவரும் சமாதானத்தையே விரும்பினார். ஜெயலலிதா சார்பில் ஜெகதீசன் என்பவர் திருநாவுக்கரசிடம் சமாதானம் பேசினார். திருநாவுக்கரசு சேலத்தில் இருந்தபோது, ஜெயலலிதாவே தொலைபேசியில் அழைத்துக் கனிவாகப் பேசி மீண்டும் தன் அணிக்கு வருமாறு அழைத்தார். அதையடுத்து ஒரு முறை போயஸ் தோட்டத்துக்கு இரவு 7 மணிக்குமேல் நேரில் வந்த திருநாவுக்கரசு ஜெயலலிதாவிடம் சமாதானம் ஆனார். அதன்பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் ஜெயலலிதா அணிக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்ததும் ஜெயலலிதா பெயரில் நடராஜன் ஒரு அறிக்கையை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அதில் “என்னைக் கடுமையாக விமர்சனம் செய்ததற்காக திருநாவுக்கரசு நேரிலும் எழுத்துப்பூர்வமாகவும் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பை ஏற்று நான் அவரைக் கட்சியில் சேர்த்துக் கொண்டேன்” என்று  இருந்தது. அது அவமானமாக இருந்தாலும் திருநாவுக்கரசு பெரிதுபடுத்தவில்லை.

“நம்முடைய பெயரில் நடராஜன்தான் இந்த அறிக்கையைக் கொடுத்திருக்கிறார்” என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். ‘நடராஜன் செய்தால்... சரியாகத்தான் இருக்கும்’ என்று நினைத்து அவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. கே.கே.எஸ்.எஸ்.ஆரை சமாதானப்படுத்தி சென்னைக்கு வரவழைத்துவிட்டு, அதன்பிறகு அவருக்கு நேரம் கொடுக்காமல் அவரை அவமானப்படுத்தினார். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆரை கடைசிவரை ஜெயலலிதா போய்ப் பார்க்கவில்லை. அதுபற்றி பலரும் கேள்வி எழுப்பியபோது, ‘அப்போலோ பி.சி.ரெட்டிக்கும் ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் பிரச்னை. அதனால்தான் அந்த மருத்துவமனைக்கு அவர் போகவில்லை’ என்று நடராசன் ஒரு தகவலைப் பரப்பினார். ஓரிருமுறை நடராசன் மட்டும் கே.கே.எஸ்.எஸ்.ஆரைப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, அவருடைய மருத்துவச்செலவுகளை ஜெயலலிதாதான் செய்கிறார் என்று செய்தியைப் பரப்பிவிட்டார். ஆனால், உண்மையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் குடும்பம்தான் மருத்துவச் செலவுகளைப் பார்த்துக் கொண்டது. 
எம்.பி.சுப்பிரமணியன் மீண்டும் ஜெ.அணிக்குத் திரும்பினார். அவர் தனது ஆதரவாளர்களுடன் திரளாக போயஸ் கார்டன் வந்தார். ஆனால், வீட்டுக்குள் எம்.பி.எஸ்-க்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. அதுவும் உள்ளே போனதும் ஜெயலலிதா பக்கத்தில் நிறுத்தி, இரண்டே நொடியில் ஒரு புகைப்படத்தை எடுத்துவிட்டு வெளியில் அனுப்பிவிட்டனர். தலைமைக் கழகத்தில் போய்ப் பார்க்கலாம் என்றால், அங்கு ஜெயலலிதா வந்தே பல வருடங்கள் ஆகிவிட்டது என்றனர்.  சேலம் மாவட்டத்தில் சேலம் கண்ணனுக்கு இணையாக நாச்சிமுத்துவையும் ஒரு மாவட்டச் செயலாளராக நியமித்து கண்ணனை அவமானப்படுத்தினார். இதில் நொந்துபோன கண்ணன் ஒரே மேடையில் ஜெயலலிதாவுடன் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தார். திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பவுன்குமாரை நீக்கிவிட்டு, அவருக்கு பதில் கே.பி.கண்ணனை நியமித்தார். அதன்பிறகு என்ன நினைத்தாரோ பவுன்குமாரை போயஸ் தோட்டத்துக்கு வரச் சொன்னார் ஜெயலலிதா. போயஸ் கார்டன் வந்தவரை வீட்டுக்குள் விடாமல் பார்த்துக் கொண்டார் நடராஜன். அவரும் திரும்பிப்போய்விட்டார். இப்படிப்பட்ட அவமதிப்புகள் ஒருபக்கம்தொடர்ந்து கொண்டே இருந்தன. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் அழைத்து அவமானப்படுத்தும் வேலையையும் ஜெயலலிதா செய்தார்.

ஜெயலலிதாவை அலையவிட்ட டெல்லி!

தமிழ்நாட்டில் கட்சி சீனியர்களை இவ்வளவு அவமானப்படுத்திய ஜெயலலிதாவை டெல்லி தொடர்ந்து அவமானப்படுத்திக்கொண்டே இருந்தது. தேர்தல் கூட்டணிக்காக பிரதமர் ராஜீவ் காந்தியை சந்திக்க எவ்வளவோ முயன்றார் ஜெயலலிதா. யார் யாரையோ தூது அனுப்பினார். ஆனால், சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. ஓரிருமுறை தொலைபேசியில் ராஜீவ் காந்திக்கு பேச முயன்றார். அப்போது ராஜீவ் காந்திக்கு பெர்சனர் செக்ரட்டரியாக இருந்த ஷீலா தீட்சித், “பிரதமரிடம் நீங்கள் நினைத்தபோது எல்லாம் தொலைபேசியில் பேச முடியாது. முறையாக கடிதம் கொடுத்து, நேரில் வந்து சந்திக்கப்பாருங்கள்” என்று கறாராகச் சொல்லிவிட்டார். தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால், கூட்டணிக்கு கட்சிகள் யாரும் வரவில்லை. அதனால், ஜெயலலிதா என்னசெய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ஜெயலலிதாவை அமைதியாக இருக்க வைத்துவிட்டு அதற்காக ஒரு ஆட்டத்தை நடராஜன் ஆடினார். அந்த ஆட்டத்தில், தமிழக இ.காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஜானகி அணி, நால்வர் அணி எல்லாம் தெறித்தன. தமிழகத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கும், தமிழகத்தில் ராஜீவ் காந்தி கலந்து கொண்ட காங்கிரஸ் பேரணியும்கூட, நடராஜனின் ஆட்டத்தில் கலகலத்துப் போனது.

கதை தொடரும்.

ஜோ.ஸ்டாலின்

படங்கள்-சு.குமரேசன்.