Published:Updated:

'ஜெயலலிதா சிகிச்சையின் போட்டோ, வீடியோ ஆதாரம் இருக்கிறது!' அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

'ஜெயலலிதா சிகிச்சையின் போட்டோ, வீடியோ ஆதாரம் இருக்கிறது!' அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
'ஜெயலலிதா சிகிச்சையின் போட்டோ, வீடியோ ஆதாரம் இருக்கிறது!' அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

'ஜெயலலிதா சிகிச்சையின் போட்டோ, வீடியோ ஆதாரம் இருக்கிறது!' அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மிழக அரசியலில் ஜெயலலிதாவின் மரணம் தான் இப்போதைய ஹாட் டாபிக். 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என எதிர்கட்சிகள் மட்டுமல்லாது, அ.தி.மு.க.வைச் சார்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் புகார் தெரிவிக்க பரபரக்கிறது விவகாரம்.

தி.மு.க ஆட்சி அமைந்தால் மதுவிலக்குக்கு தான் முதல் கையெழுத்து என அறிவித்திருந்த தி.மு.க., இப்போது முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணம் மீதான நீதி விசாரணைக்கு தான் என்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மறுபுறம் விசாரணையை எதிர்கொள்ள தயார் என அறிவித்தார் சசிகலா. லண்டனில் இருந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை வரவழைத்து, பேட்டி கொடுக்க வைத்தது அப்போலோ மருத்துவமனை. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை எனவும் ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.

இப்போது ஜெயலலிதா மரணம் குறித்து அ.தி.மு.க.வின் தலைவர்கள் பேசத்துவங்கி இருக்கிறார்கள். 'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்ற கதையாக, எதிர்ப்பை சமாளிக்க ஜெயலலிதா மரண விவகாரம் தொடர்பாக ஆளாளுக்கு பேசத்துவங்கியுள்ள நிலையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் மணிகூண்டு பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது.

"அம்மா இறப்புல மர்மம் இருக்குன்னு தேவையில்லாத சர்ச்சையை சிலபேரு கிளப்பி விடுறாங்க...அவங்க மருத்துவமனையில இருந்தப்ப தினமும் என்ன நடந்ததுன்னு நாங்க வீடியோ எடுத்திருக்கோம். அதையும் உங்களுக்கு காட்றோம்னு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திலயெல்லாம் சொல்லியிருக்காங்க. எதுக்கு இதை உங்களுக்குச் சொல்றேன்னா, இங்க நம்ம கணவர் இருக்காங்க, அவருக்கு பலகோடி சொத்து இருக்கும்..அவரை கொலைபண்ணிட்டா, அவரோட சொத்து தனக்கு வந்திடும்னு எந்த பொண்ணும் நினைக்கமாட்டா.
அம்மாவைப் பொறுத்தவரை, 30 வருஷமாக தன்னுடைய உயிர் தோழியாக, சின்னம்மாவை உடன் வைத்திருந்தார். தன்னோட 32 வயசுல அம்மாகிட்ட சேர்ந்தாங்க சின்னம்மா. இன்னிக்கு அவருக்கு 62 வயசாச்சு. இன்னிக்கு அக்கா மகன், அண்ணன் மகன், தங்கச்சி மகள்னு சொல்றாங்க இல்ல..சொத்துக்கு ஆசைப்பட்டு அப்படி சொல்கிற பலபேரை அம்மா நமக்கு காமிச்சதில்லை..சொன்னதில்லை. சரி சின்னபிள்ளைக போகட்டும். ஆனா, அம்மா அவங்க அவங்களுக்கு என்ன செய்யணுமோ அத்தனையும் செஞ்சிட்டாங்க.

அம்மா ஆஸ்பத்திரியில இருந்த நேரத்துல, மூன்று தொகுதிகள்ல இடைத்தேர்தல் வருது. அவங்களால கையெழுத்துப் போடமுடியாத சூழ்நிலையில ரேகை வெச்சு, எங்களையெல்லாம் கூப்பிட்டு, நல்லபடியா வேலைபார்த்து ஜெயிச்சுட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பி வெச்சாங்க. அந்த தேர்தல்ல ஜெயிச்சதும், அதை டிவியில பார்த்துட்டு, அம்மா எங்களையெல்லாம் கூப்பிட்டு மூன்று வகையான இனிப்பு கொடுத்துட்டு, நான் அறிக்கைமட்டும் தான் கொடுத்திருந்தேன். நீங்கள்லாம் நல்லா வேலைபார்த்து, வேட்பாளர்களை ஜெயிக்க வெச்சிருக்கீங்க..இது எம்.ஜி.ஆருக்கு கிடைச்ச சாதனைன்னு சொன்னாங்க. அப்பக்கூட எனக்கு கிடைச்ச சாதனைன்னு அம்மா சொல்லல.ஆக மகிழ்ச்சியா இருந்தாங்க..அஞ்சி நாளைக்கு ஒருதடவை, பத்து நாளைக்கு ஒருதடவை நாங்கள்லாம் சந்திச்சு பேசிகிட்டு இருந்தோம். திடீருன்னு அவங்களுக்கு மாரடைப்பு வந்ததுனால இறந்துட்டாங்க.

ஆஸ்பத்திரியில ஒருவாரம், பத்துநாள் இருக்கறவங்களை பாத்தா, சேவ் பண்ணாம, தலைக்கு மைப்போடாம இருப்பாங்க. 15 நாளுக்கு மேல போனா ஆளே அடையாளம் தெரியாது. நானே அப்படி போனா, கருப்பு மை கலைஞ்ச பிறகு, 'எங்கப்பா சீனிவாசனைக் காணோம்'னு தேடணும். இந்த பிரச்னை தான் அம்மாவுக்கும். சினிமா கதாநாயகியாக, அழகான தலைவராக நாம் அம்மாவை பார்த்து பழகிட்டோம். அப்படிப்பட்டவங்க, பத்து நாள் பதினைஞ்சு நாள்னு ஆஸ்பிட்டல்லயே போனதும் அவங்களோட உருவங்கள் மாறுச்சு. ஊசி, மருந்தால் முகங்கள் கருப்பேறிச்சு. அவங்க இயற்கையிலேயே அழகுதான். ஆனா, அவங்க உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில, பெட்லயே படுத்திருக்கும் போது, எப்படியெல்லாம் முகங்கள் இருக்கும்ங்கிறது நம்ம எல்லாத்துக்கும் தெரியும்.

அப்பவும் கூட போட்டோ எடுத்துப்போடலாம்னு அப்போலா ஆஸ்பத்திரி சேர்மன் மற்றும் எங்களைப் போன்றவர்கள் எல்லாம், ‘‘ அம்மா, நீங்க நலமா இருக்கீங்கங்கிறதை போட்டோ எடுத்து பேப்பர்ல போடலாமா?"னு கேட்டோம். அதுக்கு அவங்க, ‘‘ சீனிவாசன், நீங்கள்லாம் இதுக்கு முன்னாடி என்னை எப்படி பார்த்திருக்கீங்க..இப்ப நான் இருக்கற நிலை என்னா? நான் உடல்நிலை தேறி, குளிச்சி முழுகி, நல்லா டிரஸ் பண்ணிகிட்டு, நானே வந்து வெளிய நின்னு எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்வேன். அதுவரைக்கும் பொறுமையாக இருங்க..பெண்கள், அம்மா இப்படி ஆகிட்டாங்களேனு நினைப்பாங்க..அதுனால உடல்தேறி வரட்டும் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் புகைப்படம் எடுக்காதீங்க‘‘னு சொல்லிட்டாங்க.  ஆனா போட்டோ, வீடியோ எடுக்கப்பட்டிருக்கு. அவங்களுக்கு சிகிச்சை செய்யும்போது போட்டோ, வீடியோ எல்லாம் எடுத்து வைச்சிருக்கு. ரொம்ப தேவைப்பட்டா அதைப் போட்டு காட்டுவாங்க,’’ என்றார்.

கண்ணாடி வழியாகத் தான் பார்த்தேன் என ஆளுநரும், சிசிடிவி கேமரா இல்லை, போட்டோ எடுக்கவில்லை என அப்போலோ சேர்மனும் சொல்லி வரும் நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ஆர்.குமரேசன்,

படங்கள் : வீ. சிவக்குமார்.

அடுத்த கட்டுரைக்கு