Published:Updated:

ஜெயலலிதா தமிழகத்துக்கு தந்த ‘சஸ்பென்ஸ்’!, ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? அத்தியாயம் - 4

Vikatan Correspondent
ஜெயலலிதா தமிழகத்துக்கு தந்த ‘சஸ்பென்ஸ்’!, ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? அத்தியாயம் - 4
ஜெயலலிதா தமிழகத்துக்கு தந்த ‘சஸ்பென்ஸ்’!, ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? அத்தியாயம் - 4

அரசியல் சாசன அமர்வு’ பன்னீருக்கு கொடுத்த பரிசு!

மானியக் கோரிக்கையை ‘மாணிக்கக் கோரிக்கை’ என்று வாசித்த ஓ.பன்னீர் செல்வம் மாண்புமிகு அமைச்சராக இருந்தாலும், ‘இருட்டுக்குள் மறைந்திருப்பதுபோல’ இருக்கும் இடம் தெரியாமல்தான் இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, யாருக்கோ... எதற்கோ அளித்த தீர்ப்பு ஒன்று, பன்னீர் செல்வத்தின் மீது ஊடக வெளிச்சம் பாய்வதற்கும் காரணமாக அமைந்தது. 

2001 காலகட்டத்தில் ‘டான்சி’ வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றிருந்தார். அதனால் அவர் 2001 சட்டமன்றத் தேர்தலில்கூட போட்டியிடவில்லை. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. அதையடுத்து அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் சட்டமன்றத்துக்குள் செல்லக்கூடாது என்பதால்தான், தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிடுவதையே சட்டம் தடுக்கிறது. அதை அ.தி.மு.க-வின் வெற்றிப் பெருமிதத்தில் இருந்த ஜெயலலிதா புரிந்துகொள்ளவில்லை; அன்றைய தமிழக ஆளுநர் பாத்தீமாபீவியும் புரிந்துகொள்ளவில்லை. குற்றவாளியாகவே சட்டமன்றத்துக்குள் செல்லலாம்; அதன்பிறகு டான்சி வழக்கை வெல்லலாம்; அதற்குப்பிறகு தேர்தலைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற தலைகீழ் விதிப்படி இயங்க முடிவு செய்தார் ஜெயலலிதா. அதற்கு தமிழக ஆளுநர் பாத்திமாபீவியும் அப்போது உறுதுணையாக இருந்தார்.

கார்டனில் நடந்த முதலமைச்சர் ‘ரேஸ்’!

ஜெயலலிதாவின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் டான்சி வழக்கின் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் நடைபெற்றது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்பே, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு வெளியானது. 2001 செப்டம்பர் 21-ம் தேதி வெளியான அந்தத் தீர்ப்பு, “கவர்னர் பாத்திமாபீவி முதலமைச்சராக ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லாது” என்று உத்தரவிட்டது. அதில் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது. பன்னீர் செல்வத்துக்கு பம்பர் அடிக்கும் நேரம் நெருங்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பரபரப்பானது; போயஸ் தோட்டமும் பதற்றமானது; அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி தமிழகத்தை நிரப்பியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் போயஸ் கார்டன் வீட்டில் குவிந்தனர். பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ-வும் வருவாய்த்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வமும் ஒரு ஒப்புக்காக போயஸ் கார்டன் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தார். கட்சியின் சீனியர்கள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சிலர் மட்டும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் போவதும் வருவதுமாக இருந்தனர். யாரெல்லாம் ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு வருகிறார்களோ... அவர்கள்தான் அடுத்த முதல்வர் என்று செய்தி பரவியது. அந்தநேரத்தில் நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் போயஸ் தோட்டத்துக்கு வீட்டுக்குள் போய் ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு வந்தார். உடனே அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று செய்தி பரவியது. பொன்னையன், காளிமுத்து, உப்பிலியாபுரம் சரோஜா, சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி என்று ஒவ்வொரு நொடியும் ஒருவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டனர்; யூகங்கள் ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தன. ஒருகட்டத்தில், “அம்மா கவர்னரைச் சந்திக்கப்போகிறார். அந்தச் சந்திப்பு முடிந்ததும், ராகுகாலத்துக்குப் பிறகு தலைமைக்கழகத்தில் வைத்து முடிவை அறிவிப்பார். அதனால், மாலை 4.30 மணிக்கு எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் தலைமைக் கழகத்துக்கு வந்துவிடுங்கள் என்று அறிவிப்பு வெளியானது. 

தமிழகத்துக்கு ஜெயலலிதா தந்த சஸ்பென்ஸ்! 

மாலை 4.30 மணிக்கே எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் தலைமைக் கழகத்தில் குவிந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு... நம்மை முதலமைச்சராக அம்மா அறிவித்துவிடமாட்டாரா என்ற நப்பாசை... அதன் காரணமாக எழுந்த ஆர்வம்... காரசாரமான விவாதங்கள் என தலைமைக் கழகம் அல்லோலகல்லோலப்பட்டது. ஜெயலலிதா இரவு 7 மணிக்கு தலைமைக் கழகம் வந்து சேர்ந்தார். மாடியில் நின்று கையசைத்துவிட்டு கூட்ட அரங்குக்குச் சென்றார். சிந்தாமல் சிதறாமல் வார்த்தைகளை அளந்து பேசினார். “இப்போது ஏற்பட்டு இருக்கிற சூழ்லை உங்களுக்கு எல்லாம் தெரியும். புதிதாக ஒரு முதல்வரை தற்காலிகமாக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான் ஒரு பெயரைக் குறிப்பிடுகிறேன். அதற்கு ஒப்புதல் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு நான் அவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று சொல்லி சில நொடிகள் நிறுத்தினார். அந்த நொடிகள்தான் அன்றைய தமிழகத்தின் உச்சக்கட்ட சஸ்பென்ஸ் நிறைந்த நொடிகள். கூட்ட அரங்கில் இருந்த எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களுக்கு இதயம் அடைத்தேவிட்டது; ஒவ்வொரு நொடியையும் அவர்களால் தாங்க முடியவில்லை; சர்வ நிசப்தம் நிலவியது. அதை உடைத்து மீண்டும் பேச ஆரம்பித்த ஜெயலலிதா, “பெரியகுளம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் இப்போதைய வருவாய்த்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம்” என்றார். சீனியர்களுக்கு இதயம் நொறுங்கிவிட்டது. சிலருக்கு ஜெயலலிதாவின் வார்த்தைகளை நம்பவே முடியவில்லை. ஒட்டுமொத்தமாக எல்லோரும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பன்னீர் செல்வத்தைத் தேடினார்கள். பல எம்.எல்.ஏ-க்கள் அப்போதுதான் பன்னீர் செல்வத்தை முதல்முறையாகப் பார்க்கின்றனர். மற்றவர்களின் நிலையே இப்படி என்றால், பன்னீர் செல்வத்தின் நிலையை எந்த வார்த்தைகளிலும் வருணிக்க முடியாது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம், ‘ஓன்றும் புரியாமல்... உடல்நடுங்கி உட்கார்ந்திருந்தார்’ என்பதை மட்டும்தான் சொல்லமுடியும்.  பிறகு சமாளித்துக் கொண்டு மெல்ல எழுந்தவர் கைகளை கும்பிடுவதுபோல் வைத்துக்கொண்டே ஜெயலலிதாவை நோக்கி நடந்துபோனார். பக்கத்தில்போய் தரையோடு தரையாக விழுந்து ஜெயலலிதாவை   வணங்கினார். அப்போதும் அவர் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. 

இவர்தான் முதலமைச்சர்... - ஜெயலலிதா செய்த அறிமுகம்!

அதன் பிறகு தலைமைக் கழகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. கான்பரஸ் ஹாலுக்கு வந்த ஜெயலிதா தன் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டு திரும்பிப் பார்த்தால் பன்னீர் செல்வத்தைக் காணவில்லை. பல அடி தூரம் தள்ளி பவ்யமாக உடல் வணங்கி நின்றிருந்தார். திரும்பிப் பார்த்த ஜெயலலிதா, “வாங்க! பக்கத்துல உட்காருங்க... அவருக்கு சேர் போடுங்க” என்று படபடக்க சேர் வந்தது. பன்னீர் நாற்காலியின் நுனியில் பவ்யமாக அமர்ந்தார். பத்திரிகையாளர்களுக்குப் புரிந்துவிட்டது புதிய முதல்வர் இவர்தான் என்று. ஆனால், “இவரை இதற்கு முன்பு எங்கு பார்த்திருக்கிறோம்.... இவர் எந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ... என்று சென்னைப் பத்திரிகையாளர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது பேச ஆரம்பித்த ஜெயலலிதா, “எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் புதிய முதல்வர் பன்னீர் செல்வம்” என்று சம்பிரதாயமாக அறிவித்துவிட்டு, பத்திரிகையாளர்களின்  மற்ற கேள்விகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு போயஸ் தோட்டம் நோக்கிப் பறந்தார். 

ஓ.பன்னீர் செல்வம் ஆகிய நான்...

2001 செப்டம்பர் 21-ம் தேதி, இரவு 8.05 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் ராஜ்பவன் வந்துசேர்ந்தார். தலைமைச் செயலாளர் பன்னீர் செல்வத்தை வரவேற்று சோபா ஒன்றில் அமரவைத்தார். அதன்பிறகு 10 நிமிடங்கள் கழித்து ஜெயலலிதாவும் சசிகலாவும் வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்துவிட்ட பன்னீர் செல்வம், நாற்காலியை விட்டு எழுந்து ஓடி அவர்கள் முன்னால் போய் ஒரு தாராள கும்பிடு போட்டார். அதைக் சட்டை செய்யாமல், ஜெயலலிதாவும் சசிகலாவும் பன்னீரைத் தாண்டிப்போய், அங்கு போடப்பட்டு இருந்த இருவர் அமரும் சோபாவில் மகாராணிகளைப் போல் அமர்ந்திருந்தனர். அவர்கள் அமரும்வரை காத்திருந்துவிட்டு அதன்பிறகு பக்த்தில் தனியாக இருந்த நாற்காலியில் அமர்ந்தார் பன்னீர் செல்வம். அதன்பிறகு கவர்னர் வந்து பன்னீர் செல்வத்தை மேடைக்கு அழைத்ததும், பிரமாண வாக்குமூலத்தை ஜெயலலிதா கையில் கொடுத்துவிட்டு அவர் காலில் விழுந்து வணங்கினார். அதுவரை எங்குமே காணப்படாத டி.டி.வி.தினகரன், பன்னீர் செல்வம் மேடைக்குப் போகும் நேரத்தில் சரியாக வெள்ளைக்குர்தாவில் உள்ளே வந்தார். அவரை நன்றி கொப்பளிக்கும் பார்வையோடு பார்த்துக் கொண்டே மேடையேறினார் பன்னீர் செல்வம். ‘ஓ.பன்னீர் செல்வமாகிய நான்...’ என்று சொல்லி முதலமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.  பதவிப்பிரமாணம் நடந்தபோது ஒவ்வொரு அமைச்சர்களைப் பற்றியும் சசிகலாவும் ஜெயலலிதாவும் கமெண்ட் அடித்து சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து கவர்னரின் மனைவியும் சிரித்துக் கொண்டிருந்தார்.

அம்மா சொல்லாமல் செய்யமாட்டேன்!

பதவிப்பிரமாணம் முடிந்தபிறகு, பத்திரிகையாளர்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்தனர். “அம்மாவைக் கேட்காமல் உங்களிடம் பேச முடியாது” என்று சொல்லிவிட்டுக் கழன்று கொண்டார் பன்னீர் செல்வம். புதுகேபினட் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி ராஜ்பவன் புல்வெளியில் நடைபெற்றது. மற்ற அமைச்சர்கள் ஓடிப்போய் அவரவர் இடங்களில் நின்று கொண்டனர். முதல்வர் பன்னீர் செல்வம் ஜெயலலிதாவை ஓரக்கண்ணால் பார்க்க, சசிகலாவும் ஜெயலலிதாவும் விழுந்து விழுந்து சிரித்தனர். கண்ஜாடை காட்டி அவரையும் போகச் சொன்னார் ஜெயலலிதா. சுற்றிலும் அமைச்சர்கள் நிற்க நடுநாயகமாக அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவும் சசிகலாவும் அதை ஓரக்கண்களால் பார்த்துக் கொண்டே வெளியேறினர்.  

பயணம் தொடரும்...

ஜோ.ஸ்டாலின்.
படங்கள்-சு.குமரேசன்.