Published:Updated:

'இழந்த காதலும்' எதிர்பாராமல் நடந்த எம்.ஜி.ஆரின் திருமணமும்... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் அத்தியாயம் - 18

'இழந்த காதலும்' எதிர்பாராமல் நடந்த எம்.ஜி.ஆரின் திருமணமும்... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் அத்தியாயம் - 18

'இழந்த காதலும்' எதிர்பாராமல் நடந்த எம்.ஜி.ஆரின் திருமணமும்... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் அத்தியாயம் - 18

'இழந்த காதலும்' எதிர்பாராமல் நடந்த எம்.ஜி.ஆரின் திருமணமும்... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் அத்தியாயம் - 18

'இழந்த காதலும்' எதிர்பாராமல் நடந்த எம்.ஜி.ஆரின் திருமணமும்... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் அத்தியாயம் - 18

Published:Updated:
'இழந்த காதலும்' எதிர்பாராமல் நடந்த எம்.ஜி.ஆரின் திருமணமும்... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் அத்தியாயம் - 18

21 வயதில் எம்.ஜி.ஆருக்கு அந்த வயதுக்கே உரிய காதல் எண்ணம் அரும்பியது. திரைப்படங்களில் கதாநாயகிகளை உருகி உருகி காதலித்து வெற்றிபெற்ற எம்.ஜி.ஆரால் தன் முதல் காதலில் வெற்றிபெற முடியாமல் போனது ஆச்சர்யமல்ல. தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாயிற்றே! 

இளைய மகனும் திருமண வயதை எட்டிவிட்டதை உணர்ந்த சத்தியபாமா, பெரிய பிள்ளையைப் போன்றே ராம்சந்தருக்கும் உறவிலேயே பெண் பார்த்து திருமணத்தை முடித்துவைக்க முடிவெடுத்தார். பாலக்காட்டில் சில நாட்கள் தங்கி அப்படி ஒரு பெண்ணை தேடிப்பிடித்தார். 

பாலக்காட்டில் துாரத்து உறவினர் ஒருவருடைய மகள்தான். பெயர் பார்கவி. நல்ல கோதுமை நிறம். கேரளாவுக்கே உரிய அழகு. மகனுக்கு நிச்சயம் பிடித்துவிடும் என்ற நம்பிக்கையில் திருமணத் தேதியையே குறித்துவிட்ட சத்தியபாமா, “என்ன செய்வாய் என்று தெரியாது. தம்பியை உடனே பாலக்காட்டிற்கு அனுப்பிவை. நீயும் வந்துவிடு”- என நிலைமையைச் சொல்லி சக்கரபாணிக்கு கடிதம் எழுதினார். ஆனால் தம்பியின் சுபாவம் அறிந்தவரான சக்கரபாணி, திருமணம் நிச்சயமான தகவலை சொன்னால் கோபப்படுவானே தவிர ஒப்புக்கொள்ளமாட்டான் என்பதை உணர்ந்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்மாவின் கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு அன்றிரவு முழுவதும் யோசித்து ஒரு தீர்வு கண்டார். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்றுதான் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே...பெரியவர் சக்கரபாணி சொன்னது ஒரே பொய்தான். 

“ஊருக்கு போன இடத்தில் அம்மாவுக்கு உடல் சுகமில்லையாம். உடனே உன்னையும் மணியையும் பார்க்கனும்னு புலம்பறதா உறவினர்கள்ட்ட இருந்து தபால் வந்திருக்கு. உடனே புறப்பட்டுப் போ... நானும்  அண்ணியும் பின்னாடியே வர்றோம்” 

'அம்மாவுக்கு உடல் சுகமில்லையா'

- அதிர்ந்துபோன எம்.ஜி.ஆர் அடுத்த ரயிலிலேயே பாலக்காட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு போனபின்தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்து தாயிடம் கோபப்பட்டார். 'திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையென்றால் தான் பாலக்காட்டிலேயே செத்துப்போவேன் என சத்தியபாமா மிரட்டிப் பணியவைத்தார். ஆனாலும் கோபம் இருந்தது. எல்லாம் பார்கவியை பார்க்கும்வரையில்தான். மணமேடையில் பார்கவியை பார்த்தபின் அவரது கோபம் போன திசை தெரியவில்லை.

'திருமண உடையாக தான் கதர்தான் அணிவேன்' என்ற ஒற்றை நிபந்தனையுடன் பார்கவி கழுத்தில் தாலி கட்டினார் எம்.ஜி.ஆர். (பார்கவியுடனான எம்.ஜி.ஆரின் திருமணம் நடந்தது 1939 ம் ஆண்டின் பிற்பகுதி என்றே கணிக்கமுடிகிறது. அதுபற்றிய தெளிவான குறிப்பு எங்கும் கிடைக்கப்பெறவில்லை.)

சென்னையில் எம்.ஜி.ஆரின் இல்லற வாழ்வு துவங்கியது. அப்போதுதான் எம்.ஜி.ஆர் நடித்து 'மாயா மச்சீந்திரா' படம் வெளியாகி இருந்தது. அப்போதுதான் தனது கணவர் சினிமா நடிகர் என்ற விஷயமே பார்கவிக்கு தெரியவந்தது. 

சுத்த சைவமான பார்கவி கணவருக்காக சைவ உணவுகளை சமைக்கக் கற்றுக்கொண்டார். சக்கரபாணி குடும்பத்தினருடன் எளிதாக ஒட்டிக்கொண்டார். எந்த மனவேறுபாடுமின்றி இயல்பாக அவர் எல்லோரிடமும் பழகிய விதம் சத்தியபாமாவுக்கு மகிழ்ச்சியளித்தது. மகனுக்கு நல்லதொரு மனைவி வாய்த்ததில் அவருக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி. தனது மகள் தங்கமணி உயிரோடு இருந்தால் எப்படியெல்லாம் இருப்பார் என கற்பனை செய்திருந்தாரோ அப்படியே பார்கவியின் குணம் இருந்ததும் அவருக்கு கூடுதல் சந்தோஷம். 

இதனால் மருமகளை தங்கமணி என்ற தனது மகளின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தார். பார்கவி என்ற தனது சொந்தப் பெயரையே மறந்துவிடும்படி கொஞ்சநாளில் உறவினர்கள் அனைவராலும் தங்கமணி என்றே அழைக்கப்பட்டார் பார்கவி.

இல்லற வாழ்க்கை இனிதாக கடந்துகொண்டிருந்தாலும் எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அரிதாகவே வாய்ப்புகள் வந்தன. அதுவும் சிறுசிறு பாத்திரங்கள். கதாநாயகன் வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு அவை வெறுப்பையே தந்தன. என்றாலும் பொருளாதார சூழலுக்காக அவற்றில் நடித்துவந்தார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அவர் எதிர்பார்த்த கதாநாயகன் கனவு நிறைவேறும் நாள் வந்தது. 

நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி. திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு துவங்கிய சிலநாட்களில் தயாரிப்பாளருக்கும் படத்தின் இயக்குனர் நந்தலால் என்பவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. 

இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆருக்கும் மனவருத்தமடையச் செய்யும் சில சம்பவங்கள் நடந்தன. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார். கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த  அன்றைய தினம் எம்.ஜி.ஆர் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.

அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து, 'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட, எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார். எம்.ஜி.ஆர் மனதில் இது நீங்காத காயத்தை ஏற்படுத்திவிட்டது. ஆயினும் அரிதாக கிடைத்த கதாநாயகன் வாய்ப்பை அவசரப்பட்டு இழந்து எதிர்காலத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது என தன் வேதனையை வெளிக்காட்டாமல் தொடர்ந்து நடித்தார்.

ஆனால் விதி வேறுவிதமாக வேலை செய்தது. அடுத்த சில நாட்களில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே மோதல் முற்றி படமே நின்றது. கதாநாயகன் கனவு கலைந்த விரக்தியில் எம்.ஜி.ஆர் வீட்டில் முடங்கிக்கிடந்தார் சில மாதங்கள். அதேசமயம் அவருக்கு சினிமாத்துறை மீது கோபமும் எழுந்தது.  அந்தக் கோபத்தில் யாரும் எதிர்பாராத ஒரு முடிவெடுத்தார் அவர்.

என்ன முடிவு அது..?

- எஸ்.கிருபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism