Published:Updated:

"சினிமாவை வெறுத்து இராணுவத்தில் சேரப்போன எம்.ஜி.ஆர்” : நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் 19

"சினிமாவை வெறுத்து  இராணுவத்தில் சேரப்போன எம்.ஜி.ஆர்” : நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் 19
"சினிமாவை வெறுத்து இராணுவத்தில் சேரப்போன எம்.ஜி.ஆர்” : நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் 19

சினிமா வாய்ப்புகள் இல்லாததும், கதாநாயகனாக நடிக்க கிடைத்த வாய்ப்பும் கடைசி நேரத்தில் கைநழுவிப்போன விரக்தியில் எம்.ஜி.ஆர் தீவிர சிந்தனை வயப்பட்டார். 'திருமணமாகிவிட்டதால் அடுத்தடுத்து குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் அதிகரிக்கலாம்;  நாடக சம்பாத்தியத்தில் அவற்றை ஈடுகட்டமுடியாது. அதேசமயம், “டேய் நம்ம ராம்சந்தர் சினிமாவில் நடிக்கிறான்டா” என அவனது நண்பர்கள் அவரை உயரத்தில் வைத்து கொண்டாடிக்கொண்டிக்கிறார்கள். இந்த நேரத்தில் சினிமாவில் கிடைத்த தோல்வியோடு நாடகத்திற்கே திரும்பினால் அவர்கள் முகங்களில் எப்படி விழிப்பது”.. 'ராம்சந்தர் தோத்துட்டான்டா' என அதே வாயால் அவர்கள் கேலி செய்ய மாட்டார்களா..' பல இரவுகள் எம்.ஜி.ஆருக்கு இதே சிந்தனை. தீவிர சிந்தனைக்குப்பின் சினிமா சாராத ஒரு தொழிலுக்கு சென்றுவிடுவதென்ற ஒரு தீர்மானத்திற்கு வந்தார். அதாவது யாருக்கும் தெரியாமல் சினிமாவை விட்டே முற்றாக விலகுவது என்ற முடிவு!

சென்னையில் அப்போது இரண்டாம் உலகப்போருக்கான சூழல் நெருங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்துகொண்டிருந்தார்கள். ராணுவத்தில் சேர்ந்துவிட்டால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று எம்.ஜி.ஆர் நம்பினார். ராணுவத்திற்கான தேர்விலும் பங்கேற்றுவிட்டு கடிதத்திற்காக காத்துக்கொண்டிருந்தநேரத்தில்  மீண்டும் ஒரு சினிமா தயாரிப்பு கம்பெனியிலிருந்து அழைப்பு வந்தது அவருக்கு. சாதாரண வேடம் இல்லை... கதாநாயகனாக! 

அதேசமயம் எம்.ஜி.ஆர் ராணுவத்தில் வேலைக்கு சேருவதென எடுத்த முடிவு தாயார் சத்தியபாமாவுக்கு தெரியவர கொதித்துப்போனார். “ தங்கம்போல இரண்டு பசங்களை பெத்திருக்கேன். எங்கேயோ கண்காணாத இடத்துல போய் நீ இருக்கியா இல்லையான்னு சந்தேகத்தோட நான் என் வாழ்க்கையை வாழனுமா...அப்படி ஒண்ணும் நீ லட்சம் லட்சமாக சம்பாதிக்கத்தேவையில்ல...இங்கவே இரு....”

மீண்டும் தன் முடிவை மாற்றிக்கொண்டுவிட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் சொன்னபடி வாய்ப்பு தரவில்லை அந்த சினிமா நிறுவனம். ஆனால் இந்த முறை விரக்தியடையவில்லை, சினிமா வாய்ப்புகளுக்காக  ஸ்டுடியோக்களின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்தார். 

அப்படி கிடைத்ததுதான் அசோக்குமார் பட வாய்ப்பு. அன்றைய சூப்பர் தியாகராஜ பாகவதருடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு மகிழ்ச்சியளி்த்தது. அந்த காலகட்டத்தில் வாழ்க்கை ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் பார்கவியுடனும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தமுடியவில்லை அவரால். அத்தனை மன்ச்சோர்வுக்குள்ளாகியிருந்தார் அக்காலத்தில். இருந்தாலும் 'சினிமாவில் என்றாவது ஒருநாள் நாம் வென்றுவிடுவோம்' என்ற நம்பிக்கை மட்டும் மனதில் கனன்றுகொண்டேயிருந்தது. 

அப்போது இரண்டாம் உலகப்போருக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. போரின் விளைவாக சென்னை நகரத்தின் மீது குண்டுகள் பொழியும் என்று பீதி மக்களிடையே பரவலாக பேசப்பட்டது. சென்னையின் பிரபலஸ்தர்கள் பலரும் வந்தவிலைக்கு தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு ரயில் ஏறினார்கள் சொந்த ஊருக்கு. சத்தியபாமாவும் அந்த யோசனையை தெரிவித்தார் மகன்களிடம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. சினிமாவில் வெற்றிபெறுவதற்கான காலம் கனிந்துவரும் சூழலி்ல் உயிருக்கு பயந்துபோய் ஓடிவிடுவதா என சகோதரர்கள் இருவருமே தெளிவாக சொன்னார்கள். சத்தியபாமா, “குறைந்தது மருமகள் பிள்ளைகளை மட்டுமாவது பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பிவிடலாம். போர் முடிந்து ஆபத்து இல்லையென்பது முடிவானபின் அழைத்துக்கொள்ளலாம்” என்று யோசனை சொன்னார். அதை ஏற்றார்கள் மகன்கள்.

ஆனால்கணவரைப் பிரிய இரு மருமகள்களுமே சம்மதிக்கவில்லை. இறுதியாக ஒப்புக்கொண்டனர். ரயில் நிலையத்தில் தங்கமணியும், சக்கரபாணி மனைவி நாணிக்குட்டியும் அழுது அழுது விங்கிய கண்களுடன் பாலக்காட்டிற்கு புறப்பட்டனர். பாலக்காட்டிலிருந்து தங்கமணி கணவருக்கு கடிதம் எழுதியபடியே இருந்தார். பார்கவி புறப்பட்டுச் சென்ற 20 வது எம்.ஜி.ஆருக்கு திடீரென மனைவியின் ஞாபகம் நினைவில் வந்துவந்து சென்றது. மறுநாள் அம்மாவிடம் சொல்லிவிட்டு பாலக்காட்டிற்கு புறப்பட்டு சென்றார். சென்னையில் எம்.ஜி.ஆர் புறப்பட்ட அதேநேரத்தில் பாலக்காட்டிலிருந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு தந்தி அனுப்பப்பட்டது.

தந்தி சென்னை வந்துசேர்ந்த சமயம் எம்.ஜி.ஆர் பாலக்காட்டில் தங்கமணி வீட்டை அடைந்துவிட்டார். மகிழ்ச்சியான மனநிலையில் வீட்டிற்குள் நுழைந்தவருக்கு அதிர்ச்சி. தங்கமணியின் படத்திற்கு மாலைபோட்டி வத்தி ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. 'ஐயோ' என்று அலறியபடி கீழே விழுந்தார் எம்.ஜி.ஆர். சக்கரபாணி மனைவி நாணிக்குட்டி மச்சினரைத் தேற்றி விஸயத்தைச் சொன்னார்.

முன்தினம் காலை மார்பு வலிப்பதாக சொல்லி தண்ணீர் வாங்கிக்குடித்த தங்கமணி சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். உடனடியாக எம்.ஜி.ஆருக்கு தந்தி அனுப்பியிருக்கிறார்கள். தந்தி வருவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் கிளம்பிவிட்டதால் இந்த விபரங்கள் தெரியாமல் அவர் வந்து சேர்ந்திருக்கிறார். நாயர் வகுப்பினரின் குல வழக்கப்படி உடலை சீக்கிரம் புதைத்துவிட்டிருக்கிறார்கள். பேரிடியாக சொல்லப்பட்ட இந்த தகவலால் நொந்துபோனார் எம்.ஜி.ஆர். மனைவியின் உடலைக்கூடபார்க்கமுடியாமல் போன சோகத்திலிருந்து அவர் மீள பல மாதங்கள் ஆனது.  

இதனிடையே சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. சிறுசிறுவேடங்கள் என்றாலும் நடிக்க ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் தமிழறியும் பெருமாள்,  தாசிப்பெண், ஹரிச்சந்திரா படங்கள் வெளியாகின. இதன்பிறகு சாலிவாஹனன். எம்.ஜி.ஆருக்கு இந்த படத்தினால் பெரிய புகழ் ஒன்றும் கிடைத்துவிடவில்லை என்றாலும் வேறொரு வகையில் இந்தப் படம் எம்.ஜி.ஆர் வாழ்வி்ல் முக்கியத்துவம் பெற்றது. ஆம்... இந்த படத்தில்தான் தன் வாழ்வின் பிற்பகுதியில்  தன்னுடைய நெருங்கிய நண்பராகப்போகிற முக்கிய நபர் ஒருவரை அவர் சந்தித்தார். அந்த சந்திப்பிற்குப்பிறகு எம்.ஜி.ஆர் தன் திரைப்பட வாழ்வின் வளர்ச்சிக்கான  முக்கியமான முடிவுகளை எடுத்தார். 

யார் அவர்....

தொடரும்..

- எஸ்.கிருபாகரன்