பிரீமியம் ஸ்டோரி
அணு ஆட்டம்!

சர்வதேச அணு சக்தி முகமையும், சதியும்!

''அணு மின்சாரத்தின் பாதுகாப்புபற்றிய பொது மக்களின் நம்பிக்கை, மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது!''

- யுகியா அமானோ,

ஐ.ஏ.சி.ஏ. இயக்குநர்  

##~##

ர்வதேச அணு சக்தி சந்தைக்குள் சென்று, நமக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்ள விரும்புகிறது இந்தியா. ஆனால் 'நீ வெடிகுண்டு தயாரிப்பவன், நம்பகத்தன்மை அற்றவன்’ என்று குற்றம் சாட்டி, இந்தியாவை இந்த சந்தைக்குள் நுழையவிடவில்லை கடைக்காரர்கள். கனடா 40 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் சிரஸ் எனும் ஆய்வு அணு உலையை விற்றபோது, அமைதியான உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்து வாங்கிவிட்டு, பின்னர் 1974-ம் ஆண்டு அணுகுண்டுப் பரிசோதனைக்கு நாம் எடுத்தாண்ட தால், நம்மை நம்ப மறுக்கிறார்கள்.

இந்த நிலையில் புதுப் பணக்காரராக மாறிக் கொண்டு இருக்கும் நமது பணப் பையைக் கவனித்த 'அங்கிள் சாம்’, நமது கையைப் பிடித்து இழுத்து அவர் கடைக்குக் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறார்.

'அணு சக்தி வழங்குவோர் குழுமம்’ எனும் வர்த்தக சங்கத்தின் சிறப்பு அனுமதியை வாங்கித் தந்து, சந்தையின் வாசலில் நிற்கும் ஐ.ஏ.ஈ.ஏ. எனும் 'சர்வதேச அணு சக்தி முகமை’ காவல ரின் கண்காணிப்பு ஒத்துழைப்புக்கும் வழி செய்கிறார் அங்கிள் சாம். இந்தக் காவலரிடம் நமது பைகளைத் திறந்து காட்டி, நாம் வாங்கும் பொருட்களை என்ன செய்கிறோம், எப்படிக் கையாள்கிறோம் என்று விளக்க வேண்டும். அதற்காக கண்காணிப்பு உடன்படிக்கை ஒன்றை அவரோடு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அணு ஆட்டம்!

யார் இந்த முகமை? 1957-ம் ஆண்டு, 'அமைதிக்கான அணுக்கள்’ என்ற கொள்கைக் குரலோடு, ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிறுவனம். இது உறுப்பு நாடுகளுடனும், உலகளாவிய பலதரப்பட்ட நிறுவனங்களுடனும் சேர்ந்து, பாதுகாப்பான, அமைதியான அணு சக்தியின் வளர்ச்சிக்கு உழைக்கிறது. யுனெஸ்கோ, யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் எனப் பல உன்னதமான அங்கங்களைக்கொண்டு உலகின் நல்வாழ்வுக்காக இயங்கும் ஐ.நா. சபைக்கு திருஷ்டிப் பரிகார கொம்புகளாக இருக்கின்றன இந்த முகமையும், உலக வங்கிபோன்ற நிதி நிறுவனங்களும்!

சர்வதேசியம், கருத்துப் பரிமாற்றம், பன்முகப் பார்வை, வெளிப்படைத்தன்மை, மனித நேயம் என நேர்மறை இயல்புகளை ஏராளமாகக்கொண்ட ஐ.நா. சபை அலுவலகங்களுக்கும், கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் செல்வது ஓர் அலாதியான அனுபவம். ஆனால், ஆஸ்திரியா நாட்டின் அழகான தலைநகரான வியன்னாவில் அமைந்திருக்கும் ஐ.ஏ.ஈ.ஏ. அலுவலகம், விறைப்பாகவும் முறைப்பாக வும் இருக்கிறது. உள்ளே விடுவதற்கே ஓராயிரம் கேள்விகள் கேட்டார்கள். ஒரு வழியாக உள்ளே போய் தகவல்களைக் கேட்டால், 'பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டவனிடம் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னதுபோல’ ஏதேதோ பேசினார்கள். அணு சக்தி என்றாலே இப்படி ஆகி விடுமோ என்னவோ?

எகிப்து நாட்டைச் சார்ந்த முகமது எல் பாரடை, இதன் தலைவராகப் பணியாற்றினார். 2009 டிசம்பர் முதல் ஜப்பான் நாட்டைச் சார்ந்த யுகியா அமானோ வழிநடத்துகிறார். 35 நாடு களைச் சார்ந்த பிரதிநிதிகள், ஆளுநர்களாக ஆட்சி பரிபாலனம் செய்கின்றனர். இந்த உயர் மட்டக் குழுவோடு இந்தியா கண்காணிப்பு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது.

இந்திய அணு சக்தித் துறையைச் சார்ந்தவர்கள் சிலர், இதனை எதிர்த்தனர். சர்வதேச அணு சக்தி முகமைப் பரிசோதனைகளுக்கு நாம் அடிபணிந்தால், அது நமது ஆய்வுகளின் போக்கையும் தரத்தையும் கெடுத்துவிடும் என்றனர். ஓர் அணு மின் நிலையத்தில் ஒரு மூலையில் இருந்து எரிபொருளை எடுத்து இன்னொரு மூலைக்குக் கொண்டுபோனாலும், முகமைக்குத் தகவல் கொடுக்க வேண்டும். அவர் களின் பரிசோதகர்கள் வந்து, பார்த்து அனுமதி தந்தால்தான், நாம் இயங்க முடியும் என்று தயங்கி னார்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓர் உலையில் இருந்து எரிந்துபட்ட எரிபொருளை நம் நாட்டு ஈனுலையில் உபயோகித்தால், அந்த ஈனுலையும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும் என வேதனைப்பட்டனர்.

இந்தியாவும் முகமையும் நீண்ட நெடும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி சில முடிவுகள் எடுத்தனர். ராணுவத் தொடர்பு கள் ஏதும் இல்லாத 14 அணு உலைகளை முகமையின் கண்காணிப்புக்குள் கொண்டுவர இந்தியா சம்மதித்தது. ஆனாலும் இரண்டு பிரச்னைகளில் தீர்வு ஏற்படவில்லை, ஒன்று, இந்த அணு உலைகளின் மொத்த வாழ்நாளுக்கும் தேவையான எரிபொருளை இந்தியா சேமித்து வைத்துக்கொள்வதை முகமை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு, ஏதேனும் காரணங்களால் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட அணு மின் நிலையங்களுக்கு சர்வதேச எரிபொருள் நிறுத்தப்பட்டால், அந்த நிலைமையை சரிப்படுத்திக்கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது.

முகமைக்குள் வேறு குழப்பமான கருத்துகளும் நிலவின. அதிகமான இந்திய உலைகள் கண்காணிப்புக்குள் வருவதால், ஆயுதப் பரவலாக்கம் நிகழாது என்றனர் சிலர். பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவைப்போன்று சலுகைகள் பெற முயற்சிக்கும் என்றனர் பிறர். இப்படியான குழப்பங்களுக்கு மத்தியிலும் மன்மோகன் சிங் அரசு இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியே தீர்வது எனக் கங்கணம் கட்டிக் காரியத்தில் ஈடுபட்டது. உடன்படிக்கைபற்றிய எந்தத் தகவலையும், மன்மோகன் அரசு தோழமைக் கட்சிகளுக்கோ, எதிர்க் கட்சிகளுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ, அனைவருக்கும் மேலான இந்தியக் குடிமக்களுக்கோ அறியத் தரவில்லை. முகமையின் ஆளுநர் குழுவுக்கு உடன்படிக்கையின் நகல் இன்னும் அனுப்பப்படாததால் வெளியிட இயலவில்லை என்று போக்குக் காட்டியது டெல்லி அரசு.

2008 ஜூன் 17 அன்று பிரணாப் முகர்ஜி, இடதுசாரிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, இந்த உடன்படிக்கையை மட்டும் நிறைவேற்றிக் கொள்கிறோம் எனக் கெஞ்சிக் கூத்தாடி ஒப்புதல் பெற்றார். ஜனநாயக மரபுகள் முற்றிலுமாகப் புறந்தள்ளப்பட்டன. ஜூலை மாதம் முழுவதும் ஆளும் கட்சியினரும், அவர்களின் அதிகாரிகளும் ஓடியாடி, ஆகஸ்ட் 1 அன்று நடந்த முகமையின் ஆளுநர் குழுக் கூட்டத்தில் உடன்படிக்கையை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளச் செய்தனர். அங்கிள் சாமும் அவர் பங்கைச் செய்தார். 2009 மார்ச் மாதம் முகமையின் கூடுதல் வரைவு எனும் அடுத்த கட்ட ஆமோதிப்பையும் பெற்று, அமெரிக்காவின் கடையில் அடிமையாக அடைக்கலம் புகுந்துவிட்டோம்.

அணு சக்தி சந்தைக்குள்ளே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜப்பான் எனப் பல கடைகள் மூடப்படுகின்றன. ஆனால், இந்திய அரசோ கடந்த ஆறேழு வருடங்களாக அணு சக்தியை 'வாராது வந்து மாமணி’ எனப் போற்றி புகழ்ந்து வருகிறது. ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம்! உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்! 

அணு ஆட்டம்!

இரா.பொன்னம்பலம்

தமிழக வேளாண்மை விற்பனைத் துறையில் கண்காணிப்பாளராக 33 ஆண்டுகள் பணிபுரிந்த பொன்னம்பலம், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூட்டணி சந்தையைச் சிந்தித்து வடிவமைத்தார். நுகர்வோர் உரிமைகளுக்காக, குறிப்பாக உணவு உத்தரவாதத்துக்காக, அதிலும் நெல் பயிரின் முக்கியத்துவத்துக்காக உழைக்கும் இந்த செயல் வீரர், அணு மின் நிலையங்கள், நுகர்வோரின் சுற்றுச்சூழல், உணவு உரிமைகளை மீறுவதாகக் குறிப்பிடுகிறார். பரந்துபட்ட தெளிவான இந்தப் பார்வையோடு, கூடங்குளம், கல்பாக்கம் அணு மின் நிலையங்களை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

-அதிரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு