Published:Updated:

'ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்: சூழலியல் கேட்டைக் கொண்டுவரும்தான்...' ஒப்புக்கொண்ட அரசின் ஆய்வறிக்கை!

'ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்: சூழலியல் கேட்டைக் கொண்டுவரும்தான்...' ஒப்புக்கொண்ட அரசின் ஆய்வறிக்கை!
'ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்: சூழலியல் கேட்டைக் கொண்டுவரும்தான்...' ஒப்புக்கொண்ட அரசின் ஆய்வறிக்கை!

'ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்: சூழலியல் கேட்டைக் கொண்டுவரும்தான்...' ஒப்புக்கொண்ட அரசின் ஆய்வறிக்கை!

“தேவையில்லாமல் அச்சங்கொள்கிறார்கள். கவலைகொள்ள எதுவுமில்லை... எரிவாயு எடுக்கப் பயன்படுத்தப்படும் ‘ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்’ முறையால் எந்தச் சூழலியல் கேடுகளும் இல்லை. இது அறிவியலின் உச்சம்.இதை எதிர்க்கும் அனைவரும் அறிவிலிகள்” என்ற குரல் நெடுவாசல் போராட்டம் தொடங்கிய நாள் முதலே உரக்கக் கேட்கிறது. அதுவும் மத்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட தேசபக்தர்களாகக் கருதிக்கொள்ளும் சிலர், இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களைத் தீவிரவாதிகள்... தேசவிரோதிகள் என்று முத்திரைக் குத்தும் செயலும் தொடர்ந்து நடந்துவருகிறது. 

சரி. உண்மைதான் என்ன...? இந்தத் திட்டத்தால் எந்தச் சூழலியலும் கேடு இல்லையா... அறிவியல் தெரியாமல்தான் தேசத்தின் வளர்ச்சியைத் தடுத்துக்கொண்டிருக்கிறார்களா சாமான்ய விவசாயிகள்...? இந்தக் கேள்விகளுடன் ஷேல் கேஸ் குறித்து அரசின் பழைய அறிக்கைகளையும், ஆய்வுகளையும் இணையத்தில் படித்துக்கொண்டிருந்தபோது நம் கண்ணில் தென்பட்டது இந்திய அரசின் அமைப்பான ‘நிதி ஆயோக்’-ன் ஆலோசகர்களான அனில்குமார் ஜெயின் மற்றும் ராஜ்நாத் ராம் ஆகியோரின் அறிக்கை.

இந்த அறிக்கை இந்தியாவின் ‘ஷேல் கேஸின் எதிர்காலம் மற்றும் சவால்கள்’ குறித்து அரசின் வார்த்தைகளில் தெளிவாகப் பேசுகிறது. ஹைட்ராலிக் முறையால் உலக நாடுகளில் ஏற்பட்ட சூழலியல் கேடுகளை ஆராய்ந்து, இந்த முறையைப் பின்பற்றினால் இங்கும் அதுபோல சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று அறிக்கையில் அனில்குமார் ஜெயின் மற்றும் ராஜ்நாத் ராம் பட்டியலிட்டிருக்கும் பகுதி மிகமுக்கியமானது. 

அவர்கள் அதிக அளவு தண்ணீர் நுகர்வு, நிலமும் நீரும் மாசுபடுவது மற்றும் பூகம்பம் என மூன்று பிரச்னைகளைப் பட்டியலிடுகிறார்கள். 

இனி அவர்களின் வார்த்தைகளிலேயே,

“தண்ணீர் உறிஞ்சப்படும்... நீர்நிலைகள் மாசுபடும்... பூகம்பம் ஏற்படும்!” 

திட்டமிட்டப்படி எந்தச் சிறுவிபத்தும் இல்லாம எல்லாம் சரியாக நிகழ்ந்தால்கூட இந்த ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் முறையால் நீர்நிலைகள் மோசமாகப் பாதிக்கப்படும் என்கிறது இந்த ஆய்வு அறிக்கை.  நிலத்தை முதலில் நீளவாட்டில் துளையிட்டுப் பின் மிடைமட்டத்தில் துளையிட்டு வாயுவை இழுக்கும். இதில் சிறு தவறு நிகழ்ந்தாலும், ரசாயனங்கள் நிலத்தடி நீருடன் கலக்கும் வாய்ப்பிருக்கிறது.

இந்தியா தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கிறது. நிலத்தடிநீர் மாசுபடுவது என்பதைக் கடந்து, ஷேல் கேஸ் பிரித்தெடுப்பதற்காக ஓர் ஆழ்துளை கிணறு வெட்ட ஏறத்தாழ 2 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும். பிரித்தெடுத்தல் நிகழ்ந்தபின், இந்தத் தண்ணீரை அப்புறப்படுத்துவது அளப்பெரிய சூழலியல் சவால். 

பத்து சதுர கிலோ மீட்டரில்... ஹைட்ராலிக் முறையில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஏறத்தாழ 100 முதல் 500 சதுர கிலோமீட்டர் வரை நிலம் தேவைப்படும். அதிக அளவில் சேற்றையும், தண்ணீரையும் நிலத்துக்குள் செலுத்தி வாயுவைப் பிரித்தெடுக்கும்போது, அந்தச் சுற்றுவட்டாரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தக் காரணத்தினாலேயே ஜெர்மனியில் ஷேல் பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு பல நாடுகள் அனுமதி தர யோசிக்கிறது. 

இந்த மூன்றும் அவர்கள் பட்டியலிட்டிருக்கும் பிரச்னைகள். இந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தவர்கள் போராட்டக்காரர்கள் அல்ல. அதுவும், அனில்குமார் ஜெயின் இந்திய ஆட்சிப் பணியாளர். அவரே, தெளிவாக இதில் உள்ள சூழலியல் கேடுகளை முன்வைக்கிறார்... அதைத் தீர்க்க வேண்டும் என்கிறார். ஆனால், இதே பிரச்னைகளைப் போராட்டக்காரர்கள் முன்வைத்தால், அவர்கள் என்ன படித்த மேதாவிகளா... விஞ்ஞானிகளா... என்று கேள்வி எழுப்புவது எதுமாதிரியான அறம்?  

‘கடமையும், பொறுப்பும்!’

எளிய மக்களுக்குத் தங்கள் வாழ்வாதாரம் குறித்தும், குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் சில அச்சங்கள் இருக்கின்றன. அதைவிடக் குறிப்பாக, இந்திய அரசு தங்களைப் புறக்கணிக்கிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது. மக்களுக்குச் செவிசாய்த்து, அவர்களுடன் தொடர் உரையாடலை நிகழ்த்தி இது மக்கள்நலன் அரசுதான் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டியது அரசின் கடமை. சுற்றுச்சூழலை, எளியவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைக்கும் திட்டங்களுக்கு உண்மையாக அரசுதான் எதிர்நிற்க வேண்டும். அது அரசின் பொறுப்பும்கூட. ஆனால், அரசு தன் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்ததுபோலத் தெரியவில்லை... இது ஷேல் கேஸ் பிரித்தெடுப்பதில் ஏற்படும் ஆபத்தைவிடப் பேராபத்தானது!

- மு. நியாஸ் அகமது

அடுத்த கட்டுரைக்கு