Published:Updated:

மிஸ்டர் கழுகு: தயாநிதிக்கு செம சிக்கல்!

மிஸ்டர் கழுகு: தயாநிதிக்கு செம சிக்கல்!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: தயாநிதிக்கு செம சிக்கல்!
##~##

ழுகார் வந்ததும் நமக்கு ஸ்பெஷல் சல்யூட் அடித்த விதமே, சிரிப்பை வரவழைத்தது! ''கோர்ட்... போலீஸ்... சி.பி.ஐ.... கைது... என எல்லாமே காக்கிக் கதைகளாக இருப்பதால்தான், உமக்கு ஒரு சல்யூட் வைத்தேன்!'' என்று காரணம் சொன்ன கழுகாரிடம், 

''முதலில் கோர்ட்டில் இருந்து ஆரம்பியும்!'' என்றோம்.

''முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றிய சொத்துக் குவிப்புக் கொக்கி, மெள்ள மெள்ள இறுக ஆரம்பித்துவிட்டது. முதல் முறை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக ஜெயலலிதா மீது பதிவான வழக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பெங்களூரு சிறப்பு

மிஸ்டர் கழுகு: தயாநிதிக்கு செம சிக்கல்!

நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 'ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனதால், சொத்துக் குவிப்பு வழக்கு அம்பேல் ஆகிவிடும்’ என்று தி.மு.க-வினரே நினைத்தனர். ஆனால், அதற்கு மாறாக, வழக்கு வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டது என்று சில வாரங்களுக்கு முன்னால் நான் சொல்லியது ஞாபகம் இருக்கிறதா? வரும் 27-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 'முதல்வர் ஆஜராக வேண்டும்’ என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டுள்ளார்.''

''எத்தனையோ சம்மன்கள் பார்த்தாச்சே... அதோடு இதுவும் ஒன்றுதானே?''

''இல்லை என்கிறார்கள், பெங்களூரு நீதித் துறை வட்டத்தினர். 'எத்தனையோ தடவைகள் கோர்ட் உத்தரவுகளை, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீறியுள்ளனர். இதனால், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கோபத்தில் இருக்கிறார். அவரது வலுவான வாதங்களைப் பார்த்துதான் நீதிபதி இம்மாதிரியான ஆஜர் உத்தரவைப் போட்டார்’ என்கிறார்கள். ஒரு முறை ஜெயலலிதாவின் வக்கீல் நவநீதகிருஷ்ணனைப் பார்த்து, 'இப்படி ஒரு வழக்கு இங்கு நடப்பது உங்களது பெட்டிஷனருக்குத் தெரியுமா?’ என்று நீதிபதியே கேட்டார். அந்தக் கோபம்தான் இன்று வெடித்துள்ளது.''

''ஓகோ!''

''அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, 'இந்த வழக்கில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள், நேரில் ஆஜராகவே இல்லை. இந்திய கிரிமினல் சட்டம் 313-ன்படி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரையும் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்’ என்று சொன்னதும், ஜெ. தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ்வர ராவ், 'ஆடிட்டர் பாலாஜியை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பெங்களூரு ஹைகோர்ட்டில் நாங்கள் போட்ட மனு விசாரணையில் இருக்கிறது. அதன் தீர்ப்பு வரும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜராக சொல்லக் கூடாது’ எனக் கேட்டாராம். 'ஒருமுறைகூட ஜெயலலிதா ஆஜராகாதது, கோர்ட்டை அவமதிக்கும் செயல்’ என்று ஆச்சார்யா சொல்ல... 27-ம் தேதி என்று நாள் குறித்துள்ளார் நீதிபதி. 'கோட்டையில் உட்கார்ந்து​கொண்டு கோர்ட் படி ஏறுவதா?’ என்று ஜெ. தரப்பு கொந்தளிக்க ஆரம்பித்துள்ளதாம்.''

''கோர்ட் மேட்டர் இது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்...''

''அடுத்து சி.பி.ஐ. விவகாரத்துக்கு வருகிறேன்! தயாநிதி மாறன்-சிவசங்கரன் சம்பந்தமான விஷயம் குறித்து எழுதிய உமது நிருபர், சிங்கப்பூரில் இருந்து ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி அதிகாரியைப்பற்றி கோடிட்டுக் காட்டி இருந்தார். அந்த அதிகாரியை கடந்த 13-ம் தேதி சி.பி.ஐ. வரவழைத்துவிட்டது.''

''வேகமாகத்தான் இருக்கிறதோ சி.பி.ஐ.?''

''ம்! சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனம், தயாநிதி மாறனின் கட்டாயத்தால்தான் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். இதில் சிவசங்கரன் சொல்வது நிஜமா, அல்லது தயாநிதி சொல்வது நிஜமா என்ற பூர்வாங்க விசாரணையில் சி.பி.ஐ. இறங்கி உள்ளது. இதற்கான பணப் பரிவர்த்தனைகள் மும்பையில் உள்ள ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலமாகத்தான் நடந்ததாம். இதை சிவசங்கரன் தனது வாக்குமூலத்தில் விவரித்துள்ளாராம். கடந்த மே மாதம் அந்த வங்கிக்கு சி.பி.ஐ. ஒரு தாக்கீது அனுப்பியது. அந்தக் காலகட்டத்தில் வங்கி அதிகாரிகளாக இருந்தவர்களின் பட்டியலும் சி.பி.ஐ. வசம் வந்து சேர்ந்தது.  மும்பையில் இந்த வங்கியின் மெர்ஜர் மற்றும் அக்கியூசேஷன் [Merger & Acquisition Cell]பிரிவுதான் இந்தப் பங்கு பரிவர்த்தனைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிகளைக் கவனித்த அதிகாரியின் பெயர், பிரகலாத் சாந்திகிராம். அகமதாபாத்தைச் சேர்ந்த இவர், மும்பையில் இந்த வங்கியில் பணியாற்றி, இப்போது சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் இருக்கிறார். சி.பி.ஐ. தனது துருப்புச் சீட்டாக நினைப்பது இவரைத்தான்!''

மிஸ்டர் கழுகு: தயாநிதிக்கு செம சிக்கல்!

''என்ன சொன்னாராம் இவர்?''

''முழு விவரங்கள் இனிமேல்தான் மெள்ளக் கசியும். ஆனால், தயாநிதிக்கு செம சிக்கல் காத்திருக்கிறது என்கிறது சி.பி.ஐ.! டெல்லி வந்தார் பிரகலாத். சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் மதியம் 11.30-க்குத் தொடங்கிய விசாரணை, மாலை 5.30 வரை நீடித்தது. 'ஏர்செல்லின் பங்குகள் மேக்சிஸுக்கு எப்படி விற்கப்பட்டன? இதன் உரிமை எப்படி கைமாறியது?’ என்பன போன்ற விவரங்களை இவர் கூறியுள்ளார். சிவசங்கரன் - அனந்தகிருஷ்ணன் - வங்கி... இந்த முக்கோணப் பரிமாற்றங்களை அப்படியே  வாக்குமூலமாகக் கொடுத்துள்​ளாராம் பிரகலாத். ஏர்செல் விற்பனையில் சுமார் 500 மில்லியன் டாலர் வரை குறைவாகவே தனக்குக் கிடைத்தது என்பது சிவசங்கரனின் புகார். இதில் சிவசங்கரனின் புகார் உண்மையா என்பதை அறியவும் பிரகலாத்  போன்ற வங்கி அதிகாரிகளிடம் விசாரணை தொடங்கி உள்ளதாம். ஒட்டுமொத்தமாக, சன் குரூப் - ஆனந்த கிருஷ்ணன் - சிவசங்கரன் ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இடையே நடந்த வர்த்தக விவரங்களை அறியும் விவகாரம் சூடு பிடித்துவிட்டது. இதன் பிறகுதான் மலேசியா அனந்தகிருஷ்ணனுக்கு ஆதரவாக அதில், தயாநிதி மாறன் இருந்தாரா என்பது முழுமையாகத் தெரியவரும்...''

''அடுத்து யாரை விசாரிப்பார்கள்?''

''சென்னையில் கால் ஊன்றி இன்று இந்தியா முழுவதும் கொடிநாட்டி வரும் மிக முக்கியமான மருத்துவக் குடும்பம் இந்த விசாரணை வளையத்துக்குள் வரப்போகிறது. அடுத்த சில நாட்களில், தயாநிதி மாறனுக்கு சி.பி.ஐ. அழைப்பு வரலாம். அவரது டெல்லி விசிட் வெகு சீக்கிரமே இருக்கும்.''

''இங்கே தமிழ்நாடு போலீஸும் சீரியஸாக அலைந்து​கொண்டு இருக்கிறதே?''

''சன் பிக்சர்ஸ் சக்சேனா கைதைத் தொடர்ந்து, பலரும் பல புகார்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவரை 12-க்கும் அதிகமான புகார்கள் அவர் மீது பதிந்து உள்ளன. இந்த வழக்குகளில் தனித் தனியாகக் கைது செய்து ஜாமீன் கிடைக்கவிடாமல் தடுக்கவே, இந்த நடவடிக்கை. இதன் தொடர்ச்​சியாக, கலாநிதி மாறனுக்கு சென்னை கே.கே.நகர் போலீஸார் சம்மன் அனுப்பி, விசாரணைக்கு அழைத்தார்கள். அவர் 26-ம் தேதி ஆஜராவதாகச் சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகுதான், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு போலீஸ் சீரியஸாக முன்னேறும். சி.பி.ஐ-யின் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகுதான், தமிழக போலீஸாரின் நடவடிக்கைகள் அமையும்.''

''மியூச்சுவல் அண்டர்ஸ்டேண்டிங்கா?''

''இருக்கலாம்! அடுத்த விஷயத்தைக் கேளும்... நீரா ராடியாவின் டேப் விவகாரங்களை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது அல்லவா? இப்போது, மேலும் 11 போன் அழைப்புகளை புதிதாக சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. அதில், கனிமொழி, ஆ.ராசா, ராசாவின் செயலாளராக இருந்த சந்தோலியா ஆகியோரின் புதிய உரை​யாடல்கள் இருக்கின்றனவாம். இத்துடன், ஸ்வான் டெலிகாமைச் சேர்ந்த வினோத் கோயங்கா மற்றும் அவரது மனைவி அஸீலா, சகோதரர் பிரமோத், அவரது மகன் என்று 11 சாட்சிகளையும் தஸ்தாவேஜ்களையும் சி.பி.ஐ. புதிதாகச் சேர்த்துள்ளது. இந்த டேப்பில் உள்ள உரையாடல்களின் முழு விவரங்கள் வெளியில் வந்தால்... புதிய பூகம்பங்கள் கிளம்பலாம்!'' என்றபடி மீண்டும் போலீஸ் சல்யூட் அடித்துக் கிளம்பினார் கழுகார்!

படம்: சு.குமரேசன்

புகார் கொடுத்தவர் வீட்டில் ரெய்டு!

க்சேனாவுக்கு முதல் வழக்கில் ஜாமீன் கிடைத்திருக்கும் நிலையில், அவர்மீது புகார் கொடுத்த சேலம் செல்வராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். பிருந்தாவனம் ரோட்டில் உள்ள செல்வராஜின் வீடு, சினிமா நகரில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் புகுந்த அதிகாரிகள், ஏராளமான ஆவணங்களை அள்ளிப் போயிருக்கிறார்கள். ''சக்சேனாவுக்கு எதிராகப் புகார் கொடுத்த காரணத்துக்காகத்தான், மத்தியில் இருக்கும் தி.மு.க. அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டில்தான் இந்த ரெய்டு நடந்து இருக்கிறது. ரெய்டு போன அதிகாரிகள் ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்காமல், 'சக்சேனா மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் இன்னும் நீ நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கும்’ன்னு செல்வராஜை மிரட்டி இருக்கிறார்கள்!'' என்று செல்வராஜின் நண்பர்கள் சொல்கிறர்கள்.

மிஸ்டர் கழுகு: தயாநிதிக்கு செம சிக்கல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு