Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே -27: 10.8.83

பிரீமியம் ஸ்டோரி
பழசு இன்றும் புதுசு

லங்கை அரசின் பயங்கரக் கொடுமைகளை, அகிம்சை முறையால் களைய முடியாதென்று நினைக்கின்றனர் புரட்சி உணர்வு பெற்ற தமிழ் இளைஞர்கள்! 

##~##

இலங்கைத் தமிழர்கள் நசுக்கப்பட்ட உச்சகட்டத்தில் பிறந்தது தான் தமிழ் ஈழப் புலிகளின் இயக்கம். 1970-ம் ஆண்டு ஆரம்பத்தில், தனிப்பட்ட முறையிலும் கட்டுப்பாடற்ற முறையிலும் செயல்பட்டு வந்த இந்த இளைஞர்கள், 1972-ல் ஒன்றுபட்டு இயக்கமாகச் செயல்படத் துவங்கினார்கள்.

அப்போது இந்த இயக்கத்தில், குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் பிரபாகர், சிவகுமார் ஆகியோர் முன்னணித் தலைவர் களாக இயங்கினர். இந்த இயக்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள், தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சிவகுமார், போலீஸாருடன் நேரடியாக மோதி அவர்களால் சுற்றி வளைக் கப்பட்டபோது, தப்ப முடியாத நிலையில் உயிரை மாய்த்துக்கொண்டார். இலங்கை இளைஞர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது.

1974-ம் வருடம் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோரை முன்னணித் தலைவர்களாகக்கொண்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தோன்றியது. இந்தத் தலைவர்கள் அனைவரும் சமீபத்தில் இலங்கையில் கொல்லப்பட்டனர்.

தங்கதுரை:

''சிங்களத்தில் மட்டும் அல்ல, எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்காகப் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது எங்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்!'' என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர்தான் சிங்கள வெறியர்களால் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை.

ஆயுதப் போராட்டம்தான் ஓர் இனத்தின் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைகொண்ட, அதே நேரத்தில் தனியாகச் சிலரை தொல்லைப்படுத்தும் வன்முறை யில் நம்பிக்கையற்ற ஒரு புதிய புயல்தான் தங்கதுரை. ஈழத்து விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த குட்டிமணியும் ஜெகனும் இவரது தலைமையில் செயல்பட்டனர்.

1948-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடராஜன் - ஜானகி தம்பதிக்கு யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள தொண்டமானாறு என்ற கிராமத்தில் தங்கதுரை பிறந்தார்.

உணர்ச்சித் துடிப்பும், அதே நேரத்தில் மென்மையான போக்கும்கொண்டவர். ஆரம்ப காலத்திலேயே அநியாயங்களைக் கண்டு நெஞ்சம் பதறியவர். பள்ளி மாணவனாக இருந்தபோதே, ஈழத் தந்தை என்று போற்றப்பட்ட செல்வநாயகத்தின் தலைமையில் நடந்த பல போராட்டங்களில் கலந்துகொண்டார். யாழ்ப்பாணக் கச்சேரி (அரசு தலைமையகம்) முன் நடந்த சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டபோது 'சிறைச்சாலை எனக்குப் பூஞ்சோலை, தூக்கு மேடை எனக்குப் பஞ்சு மெத்தை’ என்று 14 வயதிலேயே முழங்கினார்.

தங்கதுரையைப்பற்றி, 'உணர்ச்சித் துடிப்புள்ள வாலிபர். மிகுந்த நிதானத்தோடும் எச்சரிக்கையோடும் போராடும் துணிவுமிக்க வாலிபர்’ என்று ஈழத் தந்தை செல்வா குறிப்பிடுவார். தமிழ் மக்களுக்கு எதிராக அவ்வப்போது கொண்டுவரப்பட்ட சட்டங்களையும் அடக்குமுறைகளையும், தனது விமர்சனத்தால் கண்டித்த தங்கதுரை, ஒரு நல்ல பேச்சாளர்.

வல்வெட்டித்துறையில் உள்ள சிதம்பரா கல்லூரியில் Advanced Level(நம் ஊர் பி.யூ.சி.) வரை படித்தவர். நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களால் மேற்கொண்டு படிக்காமல், முழு நேரப் புரட்சிவாதியாக மாறினார்.

சிங்களர்களின் அடக்குமுறையில் இருந்து விடுபட, விடுதலை ஒன்றுதான் வழி;  அதற்கு ஆயுதப் புரட்சிதான் வழி வகுக்கும் என்றும் திடமாக நம்பினார் தங்கதுரை. அவ்வப்போது சிறு சிறு சம்பவங்கள் மூலம் அரசை ஆத்திரப்படுத்துவதை விடுத்து, பெரிய ராணுவப் புரட்சி மூலம்தான் அடக்குமுறை அரசாங்கத்துக்குப் பதில் அளிக்க வேண்டும் என்பதை முழுமையாக நம்பினார்.

தமிழர்களுக்கு எதிராக, 'தரப்படுத்துதல்’ என்று கூறி, தமிழர் உயர் கல்விக்குச் செல்வதைத் தடை விதித்த அரசை எதிர்த்து, 1972-ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை நடத்திய கூட்டத்தில் இவர் பேசிய பேச்சு இலங்கை அரசைத் திகைக்கவைத்தது.

இவரால் துவக்கப்பட்ட 'தமிழ் ஈழ விடுதலை இயக்கம்’ இன்று விடுதலைக்காகச் செயல்பட்டு வரும் எல்லா இயக்கங்களுக்கும் முன்னோடியாகவும் தாய் வீடாகவும் திகழ்கிறது.

தனிப்பட்ட நபர்களின் கொலை, கொள்ளை ஆகிய வன்முறைகளைப் பலமாக எதிர்த்தவர் தங்கதுரை. முழுப் புரட்சியிலே நம்பிக்கைகொண்டு செயல்பட்டதால்தான், இவருடைய இயக்கத்துக்குப் பெரும்பாலான இளைஞர் களின் ஆதரவு இருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன்கூட ஆரம்பத்தில் இங்கே இருந்தவர்தான்.

இயக்கத்தில் இருந்து சில காரணங்களால் பிரபாகரன் தனிமைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு ஆறுதலையும் ஆதரவையும் தங்கதுரை வழங்கினார். மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடமும் கருணை காட்டிய தூய நெஞ்சினர்.

1980 மார்ச்சில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. தங்கதுரை - நவமணி தம்பதிக்கு, கரிகாலன் என்ற இரண்டு வயதுக் குழந்தை இருக்கிறது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று எல்லோரும் ஆவலாக இருந்தபோது, இலங்கையில் தலைமறைவாக இருந்த தங்கதுரை, ''வீரத்துடன் மரணம் அடைந்த ஒரு தமிழ் வீரனின் பெயரை வைத்திடுங்கள்!'' என்று கடிதம் எழுதினார். அவரது விருப்பப்படியே கரிகாலன் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்தக் கரிகாலன், தன் தந்தை யாரென்று முழுவதும் அறிந்துகொள்ளும் முன்பே தங்கதுரையின் வாழ்வு கருகிவிட்டது.

சென்னையில் வசிக்கும் அவர் மனைவி நவமணி, குழந்தை கரிகாலன் மற்றும் உள்ள உறவினர்கள் அனைவரும் தங்கள் சொந்த துக்கத்தைவிட, இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கு சரியான வழி காட்டு பவரை இழந்துவிட்டோமே என்பதற்காகத்தான் வருத்தப்படுகிறார்கள். இறுதியாக, 1980 டிசம்பரில் இலங்கை சென்ற தங்கதுரை, பிறகு திரும்பவே இல்லை. இரண்டு ஆண்டு காலம் அங்கேயும் அரசின் கையில் சிக்காமல் போராடியவர். 1983-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதியன்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டார். இவரைப்பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2 லட்சம் தரப்படும் என்று அரசு அறிவித்தபோதும், யாரும் காட்டிக் கொடுக்கவில்லை.

தங்கதுரை வந்து போகும் இடங்கள் எல்லாம் கண்காணிக்கப்பட்டன. இவருக்கு உதவிய ஒரு சிறிய பெட்டிக் கடையைக்கூட அரசு விட்டுவைக்கவில்லை. தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

35 ஆண்டுக் காலச் சிறைத் தண்டனை - ஆயுள் தண்டனை ஆக இரண்டையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தெரிந்தபோதுகூட பதற்றப்படாமல், 'தமிழ் இன விடுதலை இயக்கங்களை நசித்தே ஆவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் ஓர் அரசின் மன்றத்தில் இனியும் மெனக் கெடுவதற்கு ஏதும் இல்லை. உங்களது நோக்கம் எம்மைத் தண்டிக்க வேண்டும் என்பதே. அதை இனி எந்தவித இடையூறும் இல்லாது, விருப்பம்போல் மிகச் சுலபமாய்ச் செய்யுங்கள்!’ என்று தனது எண்ணத்தைக் கம்பீரமாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியவர் தங்கதுரை.

குட்டிமணி:

''நான் இறந்த பின்பும்கூட என் பெற்றோருக்கோ, மனைவி மக்களுக்கோ என் உடல் சொந்தம் இல்லை. என் இனத்துக்கே சொந்தம் என்பதாகும். என் நலம் விரும்பியா நான்? தீர்மானிக்க வேண்டியது நீங்களே! இனத்தின் விடுதலையே, என் விடுதலை!'' என்று மனைவிக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டார் இலங்கைக் கொட்டடியில் படுகொலை செய்யப்பட்ட இன்னொரு தமிழ் மாவீரர் குட்டிமணி.

தொண்டைமானாறு அடுத்துள்ள வல்வெட்டித் துறையில் செல்வராஜாவுக்கும் அன்னமாமயிலுக்கும் மகனாகப் பிறந்தவர் குட்டிமணி என்று அழைக்கப் படும் யோக சந்திரன். தன் மகன் மூலம் தங்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் யோகம் வருமென்று அவர் பிறந்த 9-5-47 அன்றே நினைத்தார்களோ என்னவோ... அந்தப் பெயரை பெற்றோர் சூட்டினார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே தங்கதுரையோடு நெருங்கிய தொடர்புகொண்டவர். அவரோடு ஐக்கியமானவர். தமிழ் இன விடுதலைக்குக் குரல் கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் ரத்தத்தில் ஊறியிருந்தது. சுயமான சிந்தனை - தெளிந்த போக்கு - ஆர்ப்பாட்டம் இல்லாத நடவடிக்கை - அனைவரையும் அணைத்துச் செல்லும் அழகு - பழகுவதற்கு எளிமை - பார்ப்பதற்குப் புதுமை - இதுதான் குட்டிமணி.

1968-ம் ஆண்டு, ராச ரூபராணியைக் காதல் திருமணம் செய்துகொண்டவர். அந்த இறுகிய மனத்திலும் இந்த மெல்லிய உணர்வுகளுக்கு இடம் இருந்தது என்பதை அறியும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. மதிவண்ணனும் (வயது 12) மதுமதியும் (வயது 7) இவர்களின் செல்லக் குழந்தைகள்.

தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றி அமல் நடத்தப்பட்ட அரசியல் சாசனத்தை எதிர்த்து, தொடக்க காலத்திலேயே இளை ஞர் இயக்கத்தில் குட்டிமணி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். 71-ல் இருந்தே போலீஸ் இவரைத் தேடி வந்தது. ஆயினும் தலைமறைவு அமைப்புகளை அமைப்பதிலும், முன்னணித் தோழர்களுக்கு அதற்கு உரிய பயிற்சிகளைக் கொடுப்பதிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 1973 இறுதியில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்பட்டார். (தமிழ் நாட்டில் இவர் கைதானதுபற்றி இன்னமும் சர்ச்சை நடக்கிறது!) 1977 வரை சிறையில் இருந்தார். பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டபோது, விடுதலையானார்.

ஒரு முறை, ராணுவத்தினர் தனது இரண்டு தோழர்களை ஆயுத முனையில் கைது செய்து ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்வதைக் கேள்வியுற்ற குட்டிமணி, உடனே சைக்கிளில் அவர்களை விரட்டிச் சென்று கைத் துப்பாக்கியுடன் மோதி அவர்களை விடுவித்தார். ஓடும்போது ராணுவ வீரர் ஒருவர் அருகில் இருந்த குழியில் தவறுதலாக வீழ்ந்து உயிருக்காகப் போராடினார். அவரைக் காப்பாற்றி, காயத்துக்கு கட்டுப்போட்டு, ஆனால் ஆயுதத்தைப் பறிமுதல் செய்துகொண்டு அனுப்பினார். குட்டி மணி கைது செய்யப்பட்டவுடன், இலங்கை போலீ ஸாரும் ராணுவத்தினரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் என்பதே இவர் மீது அவர்களுக்கு இருந்த பயத்தைக் காட்டும்.

மரண தண்டனை பெற்ற பிறகும்கூட நீதிமன்றத் தில், ''நீதிபதி எனக்கு அளித்த தீர்ப்பின் மூலம் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்குப் புதிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கூட்டியுள்ளார். என்னைத் தூக்கில் இடுவதன் மூலம், பல்லாயிரக் கணக்கான குட்டிமணிகள் உதயமாவார்கள். என் இனத்துக்காகக் கொடுக்கக்கூடியதாக இருப்பது, தற்சமயம் என் உயிர் மாத்திரமே!

என்னை ஈழத்தில், தமிழ் மண்ணிலேயே தூக்கி லிடுங்கள். என் கண்களைப் பார்வையற்ற ஒரு தமிழ் மகனுக்கு வழங்குங்கள். அதன் மூலம், மலரப்போகும் தமிழ் ஈழத்தை நான் பார்ப்பேன். என் உடலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்குங்கள்!'' என்றார்.

சிறையில் இருந்த குட்டிமணியையும் அவர் தம் தோழரையும் கொன்ற சிங்களர்கள் இதை நினைவில் வைத்தோ என்னவோ, அவரது கண்களையும் தோண்டி எடுத்து, காலால் நசுக்கியிருக்கின்றனர். உலகமே கண்ணீர் வடித்த செய்தி அது!

ஜெகன்:

பழசு இன்றும் புதுசு

தங்கதுரைக்குக் கிடைத்த குட்டிமணி போல, குட்டிமணிக்கு கிடைத்த இணை பிரியா நண்பர் ஜெகன். தொடக்க காலத்தில் இருந்தே ஈழத் தமிழர்களுக்காக மிகத் தீவிரமாகப் போராடியவர். இவரைத் தேடிய படைத் துறையினர், 1978-ம் ஆண்டு இவரைக் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டுபோனபோது, நிராயுதபாணியாகவே அவர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியவர். வீர நெஞ்சு உடையவர். திருமணமாகாதவர்.

வழக்கறிஞர்களிடம் குட்டிமணியும் ஜெகனும், ''மனம் இரங்குமாறு யாரிடமும் மனுப் போட வேண்டாம்...'' என்றும், ''யாரிடமும் மண்டியிட வேண்டாம்...'' என்றும் கேட்டுக்கொண்ட செய்திகள் வெளியாயின.

போராட்டங்களை நேரில் சந்தித்துப் பழக்கப்பட்ட இரும்பு நெஞ்சம்கொண்டவர்கள் இவர்கள். ஆனால், சிறையில் நிராயுதபாணியாகக் காவலில் இருந்தபோது கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டனர். சிறையில் இவர்களுடன் கொல்லப்பட்ட 37 வீரர்களும், நமது பகத்சிங்கை நினைப்பூட்டுகிறார்கள்!

- உதயபாரதி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு