Published:Updated:

பெண் ஏன் ஆணைத் தியாகம் செய்ய வேண்டும்!? என்ன சொல்கிறார் கவிஞர் சக்திஜோதி!?

பெண் ஏன் ஆணைத் தியாகம் செய்ய வேண்டும்!? என்ன சொல்கிறார் கவிஞர் சக்திஜோதி!?
பெண் ஏன் ஆணைத் தியாகம் செய்ய வேண்டும்!? என்ன சொல்கிறார் கவிஞர் சக்திஜோதி!?

“எல்லோரும் வீடு திரும்பி விட்டார்களா?” என்கிற ஒற்றை வரியை கவிஞர் யவனிகா ஸ்ரீராம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்படி அவர் பதிவிட்டிருந்த ஒருநாளில், எல்லோரும் வீடு திரும்பியிருக்கவில்லை. அந்த நாளின் அரசியல், சமூகச் சூழலின் பின்னணி அறியாதவர்கள் தமிழ் நிலத்தில் ஒருவரும் இருக்கமுடியாது. “மெரினா புரட்சி” அல்லது “தை புரட்சி”  என தமிழக வரலாற்றில் குறிப்பிட ஏதுவானதொரு வலுவான இளைஞர் எழுச்சியின் இறுதிநாளில் யவனிகா ஸ்ரீராம் என்ற கவிஞன் எழுதியிருக்கும் இந்தச் சொற்களில் பிரதிபலித்திருப்பது தனித்த அந்தக் கவிஞருடையது மனது மட்டுமல்ல. என்னுடையதும் உங்களுடையதும் மற்றும் இந்த இளைஞர் எழுச்சியை வரவேற்ற அல்லது வரவேற்காது போன யாவருடையதும். எல்லோரும் பத்திரமாக வீடு திரும்பியிருக்க வேண்டுமே என்பதாகத் தான் இருந்திருக்க முடியும். 

தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டினை மீட்டெடுக்கும் பொருட்டு அலங்காநல்லூரில்  சிலநூறு பேர்களுடன் தொடங்கிய போராட்டம்  மெரினாவில் திரண்டது. பின்பு சமூக வலைத்தளங்களின் மூலமாக தாங்களாகவே இணைந்துகொண்ட இளைஞர்களின் போராட்டமானது, மெல்ல மெல்ல தமிழகத்தின் மற்ற பெருநகரங்களுக்கும் கிராமங்களுக்கும் உடனடியாக பரவி இலட்சக் கணக்கானவர்களை ஒன்றிணைத்தது. ஆறுநாட்கள்வரை இரவும் பகலும் அத்தனைபேரும் இணைந்திருந்தும், அவர்களிடத்தில் தன்போக்கில் அமைந்திருந்த ஒழுங்குமுறையினை ஒட்டுமொத்த உலகமும் கவனம் கொள்ளத் தொடங்கியது. போராட்டத்தின் ஆறாம்நாளில் இளைஞர் கோரிக்கை அரசாங்கத்தால் ஏற்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீக்கப்பட்டது. ஆனால்  இறுதிநாளில் ஆயிரக்கணக்கான காவலர்களை அனுப்பி, இளைஞர்கள் மீது தமிழக அரசு நிகழ்த்திய வன்முறையானது இளைஞர் எழுச்சியைத் தாழவே முடியாத அதிகாரத்தின் அடையாளமாக ஆகியிருக்கிறது. 

ஏழாம்நாளில் அதிகாலையில் சிதறடிக்கப்பட்ட இளைஞர்கள், கைது செய்யப்பட்டவர்கள் என அன்றிரவு பலரும் வீடு திரும்பியிருக்கவில்லை. அந்த இரவில்தான் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் “எல்லோரும் வீடு திரும்பி விட்டார்களா?” எனக் கேட்டிருந்தார்.

இவரது இந்தக் கேள்விக்கு, கவிஞர் கலாப்பிரியா, எம்.டி.மார்டிநெஷ் என்பவரது “போர்” எனத் தலைப்பிட்ட கியூபா நாட்டுக்கவிதையை பின்னூட்டம் இட்டிருந்தார். 

“எல்லா விமானங்களும் இருப்பிடங்களுக்குத் திரும்பின

எல்லா மனிதர்களும் வீடுகளுக்குத் திரும்பவில்லை 

எல்லா வீடுகளும் திரும்பினவர்களின் வீடுகளாயில்லை

திரும்பினவர்களின் வீடுகளில் எல்லாமும்

இருக்கவில்லை” 

போர்நிலத்தில் வீடுகளின் துயரம் பற்றிய இந்த மொழியாக்கக் கவிதையைப் படித்தவுடன் கவிஞர் கலாப்ரியாவின் ஒரு கவிதை நினைவுக்கு வந்தது. 

“அந்திக்கருக்கலில் 

இந்தத் திசைதவறிய பெண்பறவை 

தன் கூட்டுக்காய் 

தன் குஞ்சிற்காய் 

அலைமோதிக் கரைகிறது.

எனக்கதன் கூடும் தெரியும் 

குஞ்சும் தெரியும் 

இருந்தும் 

எனக்கதன் பாஷை புரியவில்லை.”  

இந்தக்கவிதையில், பறவையின்  பாஷையை அறிந்து கொள்ள இயலாத இயலாமையில் உள்ள கவிஞனின் நிலையை பல்வேறு சமூக, அரசியல் நிகழ்வுகளில் பொருத்திப் பார்த்துக்கொள்ள இயலும். அதிகாரத்தின் பாஷைக்கும் சாமானியனின் மொழிக்கும் சம்பந்தமே இல்லை என்பதை சமீபத்து தைப் புரட்சியும் நிரூபித்துவிட்டது. 

வெகு சாதாரணமாக நகர்கிற தினங்களில் கூட வெளியே சென்றவர்கள் வீட்டிற்குத் திரும்பும்வரையில் வீட்டிலிருப்பவர்களுக்கு ஏதோ ஒருவகையான பதற்றம் இருக்கிறது. பல்வேறு காரணங்களினால் வீடு திரும்ப இயலாது போகிறவர்களின் துயரத்தினால் தினந்தோறும் ஏதோ ஒரு வீடு பீடிக்கப்படுகிறது. முக்கியமான போராட்டக்காலங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். 

ஒவ்வொரு எட்டு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை காணாமல் போவதாக `தேசிய குற்றப்பதிவேட்டுச் சட்டம் (NCRB- National Crime Records Bureau )' குறிப்பிடுகிறது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி கடத்தப்பட்டும், காணாமல் போனதாலும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமலேயே போய்விடுகிறார்கள்.  காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தகவல் இவ்வளவு என்றால் பதிவுகளில் வராதவை இன்னும் கூடுதலாக இருக்கும். மேலும் பல்வேறு கலவரங்களில் காணாமல் போனவர்களைப் பற்றிய தேடல் முடிவடைவதேயில்லை. 

2002 இல் நடந்த குஜராத்தில் நடந்த மதக்கலவர வன்முறையில் 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். இந்த கொடிய நிகழ்வில்  2458 பேர் காயமடைந்தும் 223 பேர் காணாமல் போனார்கள் என்பதாக அரசு புள்ளிவிபரம் சொல்கிறது. அரசு பதிவேடுகளில் இது போன்ற நிகழ்வுகளின் பயங்கரவாத விளைவுகள் வெறுமனே எண்களாக அல்லது வெற்றுக்கணக்குகளாக காலபோக்கில் மாறிவிடுகிறது. தலைமுறை கடந்தும் நீக்கப்பட இயலாத துயரத்தோடு கூடிய பலரை இன்று வரையில் அடையாளம் காணமுடியும். இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் உண்மைக்கதை Rakul Dholakia இயக்கத்தில் பர்சானியா(Parzaniya) என்கிற திரைப்படம் எடுக்கப்பட்டது.  பார்சி இனத்தைச் சேர்ந்த 10 வயது மகனைத் தேடித் காத்திருக்கும் தாயையும் தகப்பனையும் மையமாகக் கொண்டது இந்தக் கதை. காணாமல் போன மகனைத் தேடி அலைகிற தந்தை காவல் நிலையம் வருகிறார். இறந்து கிடப்பவர்களுக்கு மத்தியில் ஒருவேளை இருக்கலாம் என்று தேடிக்கொள்ளச் சொல்கிற காவலர் அந்தத் தகப்பனிடமும் மற்றவர்களிடமும் நடந்துகொள்கிற முறையில் அரசு இயந்திரம் என்பது பல சமயங்களில் இயந்திரமாக மட்டுமே செயல்படுகிறது என்பதையும் அந்த இயந்திரத்திற்கு சாமானியனின் மொழியை புரிந்து கொள்ளவே தெரியாது என்பதையும் உணரமுடியும்.  

காணாமல் போகிற குழந்தைகள் பற்றி ஏற்பட்டுள்ள கவனம் காணாமல் போகிற இளைஞர்கள் சார்ந்து குறைவாகவே இருக்கிறது. இளமையில்  காணாமல் போய்விட்ட பெண் அல்லது ஆண், காதலினால் வீட்டைவிட்டு ஓடிப்போனவர்களாகவே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இளமையில் காணாமல் போகிற ஆணுக்கும் பெண்ணுக்கும் பின்னால் காதல் மட்டுமே இருப்பதில்லை என்கிற வேறு ஒரு உண்மையும் இருக்கிறது. பொதுவாகவே  இளைஞர்கள் பலவேறு சமூகக் காரணிகளினால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படுகிற பாதுகாப்பு கொஞ்சம் வளர்ந்த நிலையில் இயல்பாகவே குறைந்து விடுகிறது. பெற்றோரை விட்டு விலகி சமூகத்திற்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு இளைஞன் அவன் சந்திக்கக் கூடிய மனிதர்களினால் பல்வேறுவிதமான அனுபவங்களுக்கு உள்ளாகிறான். குறிப்பிட்ட அடுத்த பருவம் வரையில், தவறும் சரியுமான மனப்போராட்டத்தில் அலைகழிக்கப் படுகிறவனாகவும் இருக்கிறான். இளம் பெண்களுக்குக் கிடைக்கிற பாதுகாப்பு இளைஞர்களுக்குத் தேவையில்லை என்கிற பொது மனநிலையும் இருக்கிறது. சரியான வழிகாட்டுதலோ அல்லது நட்போ கிடைக்காத இளைஞன் அந்தப் பிராயத்தில் சமூகத்தின் பல்வேறு தவறுகளுக்குக் காரணமாகிறான். இம்மாதிரியானவர்கள்  பல சந்தர்ப்பங்களில் விளைவை ஆராயும் திறனின்றி மிகப்பெரிய தவறுகளை இழைத்து விடுகிறார்கள். வேறு சில சந்தர்ப்பங்களில் எந்தத்தவறும் செய்யாத அப்பாவியான சிலர் மற்றவர்களின் தவறுகளுக்காகப் பலியாவதுமுண்டு.  தவிர, சமூகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் பொதுவாகவே பல்வேறு காரணங்களினால் இளைஞர்களைச் சந்தேகிப்பதாகவே இருக்கிறது. இதனால் தீவிரவாதத்தடுப்பு, நக்சலைட் ஒடுக்கம் மற்றும் போராட்டங்களை ஒடுக்குதல் என்கிற பெயர்களில் அரசு நிகழ்த்தும் முரட்டுச்செயல்பாடுகள் பெரும்பாலும் இளைஞர்களை நோக்கியதாகவே இருக்கிறது. இம்மாதிரியான வேளைகளில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போகிற சாமானியர்கள் அனேகமாக தங்கள் வீடு திரும்புவதேயில்லை.   

1976 இல் நெருக்கடி நிலை பிரகடனாகியிருந்த வேளையில் கோழிக்கோடு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவரான ராஜன் என்பவர் கேரளக் காவல்துறையால் நக்சலைட் எனத் தவறாகக் கைது செய்யப்படுகிறார். விசாரணையின்போது, கைது செய்து அழைத்துச் சென்ற அடுத்தநாளே அவர் கொல்லப்படுகிறார். ஆனால் அந்த கொலை  காவல்துறையால் மறைக்கப்படுகிறது. ராஜனின் தகப்பனார் D.V. ஈச்வர வாரியார் ஒரு கல்லூரிப் பேராசிரியர். மகனை ஒப்படைக்கக்கோரி நெருக்கடி நிலையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னால், கிட்டத்தட்ட ஒண்ணரை ஆண்டுகள் கழித்து வழக்குத் தொடுக்கிறார். அதன்பிறகே ராஜன் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  

அந்தத் தந்தை நிகழ்த்திய தொடர் போராட்டத்தின் விளைவாக  காவல்துறையில் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை கிடைத்தது. மேலும் கருணாகரன் தலைமையிலான கேரளா அரசு கலைக்கப்பட்டது. இந்த நீதிமன்ற விசாரணை அது சார்ந்த தன்னுடைய அனுபவங்களின்  நினைவுகளை  D.V. ஈச்வர வாரியார் புத்தகமாக எழுதியுள்ளார்.  இந்தப் புத்தகம், ஷாஜி என்.கருண் இயக்கத்தில் ‘பிறவி’ என்கிற பெயரிட்டு திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. குளச்சல் மு யூசுப் மொழியாக்கத்தில் ”ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்” (காலச்சுவடு வெளியீடு) என்கிற தலைப்பில் தமிழில் வெளியாகியுள்ளது. “நான் வாசல் கதவை அடைப்பதில்லை, பெருமழை எனக்குள்ளேயே பெய்து தீர்க்கட்டும், ஒருபோதும் கதவுகளைத் தாழிடமுடியாத ஒரு தகப்பனை அரூபியான என் மகனாவது அறிந்து கொள்ளட்டும்” என்று இந்தப் புத்தகத்தின் முடிவில் சொல்லிருக்கிறார் ஈச்வர வாரியார். அதிகாரத்தின் பிடியில் சிக்கி இறந்து போன மகனுக்காக போராடிய இந்தத் தந்தையைப்போல போராட வாய்ப்பு ஏதுமற்ற நிலையில் என்றாவது ஒருநாள் மகன் வீடு திரும்புவான் என்றெண்ணி காலமெல்லாம் அடைக்கப்பட இயலாத கதவுகளோடு காத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களும் இங்கே இருக்கிறார்கள்.  

வீடு திரும்பாத மகன்களைப் பற்றிய இன்றைய நிலை ஒருபுறமிருக்க போர்க்களத்திற்கு சென்றிருக்கும் மகன்களின் தாய் பற்றிய சங்க இலக்கியப்பாடல்கள் மிக முக்கியமானவை. சங்க அகப்பாடல்களில் பெண் என்பவள் தலைவியாகவும், தலைவனுக்குக் காத்திருப்பவளாகவும் இருக்கிறாள். தலைவிக்கு தலைவன் என்கிற ஒற்றை நோக்கு மட்டுமே அகப்பாடல்களில் காட்டப்படுகிறது. ஆனால் புறப்பாடல்களில் காட்டப்படுகிற பெண் என்பவள் பெரும்பாலும் தாயாகவும் வீரம் நிறைந்தவளாகவும் இருக்கிறாள். தாய்மையின் முதன்மையான இயல்பே வீரம் செறிந்த ஆண் மகனைப் பெற்றுத் தருவதுதான் என்பதாகவும், போர்க்களத்தில் மரித்துப் போகிற மகனுக்காக பெருமிதம் அடைகிறவளாகவும் புறப்பாடல்களின் பெண் இருக்கிறாள். 

சங்கப்பெண்பாற் புலவர் வெள்ளமாளர் என்பவரது புறநானூற்றுப் பாடல் ஒன்று, 

“வேம்புசினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,

எல்லா மனையும் கல்லென் றவ்வே

வெந்துஉடன்று எறிவான் கொல்லோ

நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?”

“போரில் ஈடுபட்ட எல்லா வீரர்களும் வீடு திரும்பிவிட்டனர். வேப்பமரத்தின் கிளைகளை ஒடித்துக்கொண்டிருப்பவர்களும், காஞ்சிப்பண் பாடிக்கொண்டிருப்பவர்களும், நெய்யுடைய கையராக வெண்மையான சிறு கடுகினை புகைக்கவும் என எல்லோருடைய வீடுகளும் ஆரவாரமாக விளங்குகிறது. போருக்குச் சென்ற என்னுடைய மகன் மட்டும் நீண்ட நேரமாகியும் இன்னும் வரக்காணோமே! இந்த நெடுந்தகை, பகை வேந்தரை வென்றழித்தே வருகிறான் போல, அதனால்தான் அவனது தேர் மட்டும் தாமதித்து வருகிறது“  என தாயின் கூற்றாக இந்தப்பாடல் அமைந்துள்ளது. 

காயம் அடைந்தவர்களை பேய்கள் அணுகும் என்பது பழந்தமிழர் மரபு. எனவே வீட்டின் முகப்பில் வேப்பிலை தழையை செருகி வைப்பர். வெண்கடுகை நெய்யில் இட்டு புகைத்தால் காயம்பட்டவர்களை பேய்கள் அணுகாது என்பதும் ஒரு நம்பிக்கை. வேம்பினை மருந்தாகவும் நம்பிக்கையாகவும் பயன்படுத்தியுள்ளனர்.  எனவே காயம் பட்டவர்களை பராமரிக்கும் பரபரப்பில் அந்த ஊர் ஆரவாரமாக இருக்கிறது. எல்லோரும் வந்துவிட்ட நிலையில் போருக்குச் சென்ற மகன் வீடு திரும்பவில்லை என்பது ஒரு தாய்க்கு வருத்தம் தரக்கூடிய செய்தி. ஆனால் தன்னுடைய நாடு வெற்றிக்கு மிக அருகிலிருக்கும் செய்தியை அறிந்த நிலையில்தான் அந்த ஊர் ஆரவாரம் மிகுந்திருப்பதாக இருக்கமுடியும். அதனைக் கருத்தில் கொண்டே இந்தப் பாடலைத் தொகுத்தவர்கள் வாகைத்திணையில் வரிசைபடுத்தியுள்ளனர். இசையோடு கூடிய மகிழ்வை ஊரார் கொண்டிருக்க, எதிரி நாட்டு வேந்தனையும் தன்னுடைய மகன் அழித்துவிட்டுத் திரும்புவதாகவும், அதனால்தான் அவனுடைய தேர் தாமதித்து வருவதாகவும் அந்தத்தாய் நினைத்துக் கொள்கிறாள்.  

எந்தப்போரிலும், போரின் தொடக்கத்தில் அமைக்கப்படுகிற தலைமை சார்ந்த படிநிலைகள், போர் தீவிரப்பட்ட நிலையில் தன் போக்கில் மாற்றம் கொண்டுவிடும். போருக்குச் சென்ற பலரும் இறந்து போகையில்   எஞ்சியிருப்பவர்கள் போரினை வழிநடத்திச் செல்வதும் மரபு. இதனடிப்படையில் அமைந்த ஐயரினாதரின் புறபொருள் வெண்பாமாலையின் பாடல்,  

“கல்நின்றான் எந்தை, கணவன் களப்பட்டான்

முன்னின்று மொய்ய விந்தார் என்ஐயர் -  பின்னின்று

கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி   

எய்போல் கிடந்தான் என் ஏறு (176).“

“என் தந்தை முதல் நாள் நடந்த போரில் இறந்து நடுகல்லானான்; என் கணவனும் போர்களத்தில் இறந்தான். என் உடன் பிறந்தோரும் பகைவர் முன் நின்று போர்களத்தில் விழுப்புண்பட்டு இறந்தனர்; என் மகன் அஞ்சி ஓடிய தன் நடை மறவருக்குப் பின்னாக நின்றான். தன் படையைக் கெடுத்த பகைவர்களோடு போர் செய்ய விரைந்தான். அதனால் அவன் அம்பு தைக்கப்பட்ட முள்ளம்பன்றி போல் போர்க்களத்தில் கிடந்தான்” என்று தாய் குறிப்பிடுகிறாள். புறபொருள் வெண்பாமாலையின் இந்தப்பாடலில் காட்டப்படுகிற தாய் வெள்ளமாளர் காட்டுகிற தாயுடன் ஒப்பீடு செய்யப்படுகிறாள். 

நிகழ்காலத்தின் பல்வேறு நிகழ்வுகளில் தங்கள் மகன் வீடு திரும்புவானா, இல்லையா என்கிற நிலை வரும்போது தாய் தகப்பன் இருவருக்குமே  முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சங்ககால புறப்பாடல்களில்  தாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து புனையப்பட்டுள்ளன. அகம், புறம் இரண்டிலுமே தந்தை பற்றிய குறிப்புகள் இல்லை. நிகழ்கால நிகழ்வுகளாக முன் குறிப்பிட்டவை அனைத்திலும் உள்ள பின்னணி போர்க்காலப் பின்னணி இல்லை. வெவ்வேறு காரணங்களினால் வீடு திரும்பாத மகன்களைப் பற்றியது. மெரீனா புரட்சி, குஜராத் கலவரம் அல்லது ராஜன் வழக்கு ஆகிய இவைகளில் அரசின் இயந்திரத்தன்மைக்கும் தனிமனித உணர்வுக்கும் இடையிலான உளவியலில் தாயை விடவும் தகப்பன் அதிக முக்கியத்துவம் அடைகிறான். ஆனால் போர்க்காலங்களில் தாய்க்கே சங்ககாலம் முதல் இன்றுவரையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் தந்தையோ, கணவனோ, மகனோ அல்லது வேறு எந்த உறவிலிருந்தாலும்  ஒரு ஆணை மனமுவந்து தன்னுடைய நாட்டிற்காக தியாகம் செய்வது பெண்ணின் கடமையாகிறது. 

ஒரு பெண் எந்தக்காலத்திலும் போர்க்களத்தில் இறந்த மகனுக்காக கணவனுக்காக கௌரவிக்கப்படுகிறவளாகவே இருக்கிறாள்.  இரண்டாம் உலகப்போர் நிகழ்வுகளைச் சார்ந்து பல்வேறு கதைகள் எழுதப்பட்டன. அதனைத் தழுவி திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன. அவற்றில் James Bradley,  தன்னுடைய தந்தை John Bradley  பணிபுரிந்த அமெரிக்கக் கடற்படை ஜப்பானுக்கு எதிராக நிகழ்த்திய போரின் நினைவிலிருந்து எழுதிய கதையிலிருந்து “Flags of our Fathers” என்கிற திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் போரில் இறந்தவர்களின் தாயை ‘Gold Star Mother’ என்று குறிப்பிடுகிறார்கள். இந்தப் போரில் ஹங்க் என்கிற அமெரிக்கப் படைவீரன் இறந்துவிடுகிறான்.

போர் நிகழ்வுகளைப் பத்திரிக்கையில் மட்டுமே பார்த்து அறிந்துகொள்ள முடிகிற காலகட்டத்தில் அதிகாலையில் செய்தித்தாளை எடுப்பதற்காக அவனுடைய அம்மா கதவைத் திறக்கிறாள். அப்போது அங்கே ஓடிவருகிற பத்திரிக்கையாளர்கள், “உங்கள் மகன் ஹீரோ’ ஆகிவிட்டார், இத்தகைய வீர மகனாக உருவாகும் விருப்பம் அவருக்கு   குழந்தைப்பருவத்திலேயே இருந்ததா? “ என பல கேள்விகளை கேட்பார்கள். அந்த அம்மா அமைதியாக கேட்டுக்கொண்டிருந்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் அழத்தொடங்குவார். சொந்த நாட்டிற்கான உயிர் தியாகத்தில் வீடு திரும்பாத மகனுக்காக ஒரு பெண்ணின் கண்ணீர் அவளுக்குள் புதைக்கப்படுகிறது. ஒரு பெண்ணிற்குள் புதைந்திருப்பவை ஏராளம் என்று சொல்கிற பலரும் அறியமாட்டார்கள், அவளுக்குள் புதைந்திருப்பவை அனைத்துமே கண்ணீர். அவள் கண்ணீரை மறைத்துக்கொள்வதாலேயே அவள் தியாகம் செய்தவளாக ஆகிறாள். 

-சக்திஜோதி