Published:Updated:

‘அம்மா போல இல்ல சின்னம்மா..!’ - தினகரனின் சங்கர மட ரகசிய சந்திப்பு

‘அம்மா போல இல்ல சின்னம்மா..!’ - தினகரனின் சங்கர மட ரகசிய சந்திப்பு
‘அம்மா போல இல்ல சின்னம்மா..!’ - தினகரனின் சங்கர மட ரகசிய சந்திப்பு

‘அம்மா போல இல்ல சின்னம்மா..!’ - தினகரனின் சங்கர மட ரகசிய சந்திப்பு

ஜெயலலிதா இருந்தவரை ஆட்சிப்பிரச்னை மட்டும்தான். அவரது காலத்துக்குப்பிறகு இப்போது அ.தி.மு.க-வில் உட்கட்சிப் பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சாந்த முகத்துடன் ஓ.பி.எஸ் கொடுத்துவரும் குடைச்சல், அ.தி.மு.க-வின் அதிகாரப் பதவியில் இருப்பவர்களை பாடாய்ப்படுத்துகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தாலும் மோடியின் நிஜ முகம் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது ஆளும் அரசு. ஆட்சி அமைக்க அழைக்கும் சட்டப்படியான சம்பிரதாயத்துக்கே அத்தனை விறைப்பு காட்டியவர்கள் இனிவரும் நாட்களில், தங்களை அரசுக் கார்களில் பவனி வர அனுமதிப்பார்களா என்ற ஐயம் அவர்கள் மனதில் வலுவாக உள்ளது. மத்திய அரசின் விறைப்பு ஒரு பக்கம் என்றால் ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை கிளப்பும் எதிர்க்கட்சிகள், சிடு சிடு முகம் காட்டும் உள்ளுர் பி.ஜே.பி, சிறை சென்றுவிட்ட சின்னம்மா, தினகரனை மிரட்டும் அந்நிய செலாவணி... என நாலாதிசைகளில் இருந்தும் வரும் தாக்குதல்களுக்கு நடுவே ஒவ்வொருநாளும் அரசை நடத்துவது என்பது அந்தரத்தில் நடக்கும் சாகசமாகத்தான் இருக்கிறது. 

இத்தனைக்கும் தீர்வாகவே நேற்று (07-03-2017) காஞ்சி சங்கர மடத்தில், டி.டி.வி தினகரன் - சங்கராச்சாரியார் சந்திப்பு நிகழ்ந்ததாக சொல்கிறார்கள். அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று காலை 11.25 மணிக்கு, அ.தி.மு.க கொடியோ வேறு எந்த அடையாளங்களோ இல்லாமல் தனது காரில் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் இருவருடன் காஞ்சி சங்கர மடத்துக்குக் சென்றார். கட்சியின் மாவட்ட பிரமுகர்களுக்குக்கூட இவ்விஷயம் தெரிவிக்கப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது. வாசலில் இருந்து அவரை மடத்தின் ஸ்ரீகாரியம் பவ்யமாக ஜெயேந்திரரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

ஜெயேந்திரருடன் எப்போதும் இருக்கும் உதவியாளர்கள்கூட இந்தச் சந்திப்பின்போது வெளியே அனுப்பப்பட்டனர். 24 மணிநேரமும் அவருடன் இருப்பதற்காக பணிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் என்ற மருத்துவர் மட்டுமே உடன் இருந்தார். அவரும் சற்றுத் தள்ளியே அமரவைக்கப்பட்டார். சுமார் 2 மணி நேரம் நிகழ்ந்த இந்தச் சந்திப்பின் முதல் 40 நிமிடங்கள் ஜெயேந்திரருடன், டி.டி.வி தினகரன் நீண்ட ஆலோசனை செய்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் அந்த அறைக்கு விஜயேந்திரர் வரவழைக்கப்பட்டார். அதன்பிறகு அவர்களிடையே நடந்த உரையாடல் சுமார் ஒரு மணிநேரத்தைத் தாண்டி நீண்டது என்கிறார்கள். 

சந்திப்பு முடிந்து 1.40 மணிக்கு அங்கிருந்து சத்தமின்றி வெளியேறினார் டி.டி.வி தினகரன். மடத்துக்குள் வரும்போது ஒருவித இறுக்கமான மனநிலையுடன் வந்த தினகரன் வெளியேறும்போது உற்சாகக் களையுடன் புறப்பட்டுச் சென்றாராம். வெளியுலகம் தெரியாமல் நிகழ்ந்த இந்தச் சந்திப்பு குறித்து சங்கராச்சாரியாருக்கு நெருக்கமானவர்களிடம்கூட தெரிவிக்கப்படவில்லை என்கிறார்கள். 

காஞ்சிபுரத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வரதராஜப் பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சிமடத்தின் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரையும் கைது செய்தது அப்போதைய அ.தி.மு.க அரசு! மத்தியிலும் மாநிலத்திலும் செல்வாக்கோடு திகழ்ந்த சங்கராச்சாரியார்கள் கொலை வழக்கில் கைதான சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு மடாதிபதிகளுக்கு எதிராகத் துணிந்து நடவடிக்கை எடுத்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கைக்குப்பின் சங்கரமடத்துக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏழாம்பொருத்தமாகிப்போனது. கடந்த காலங்களில், காஞ்சி சங்கரமடத்துக்கும் காமாட்சி அம்மன் கோயில்களுக்கும் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வந்து ஆசி பெற்றுச் சென்றிருக்கிறார். அப்படியொரு சூழ்நிலையிலும் சங்கராச்சாரியார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அப்போது ஆச்சர்யமாகப் பேசப்பட்டது. இதனிடையே சங்கரராமன் கொலைவழக்கில் இருந்து மாடாதிபகள் விடுவிக்கப்பட்டதையடுத்து அ.தி.மு.க-வுடன் விரோதம் பாராட்டாமல் மடத்திலேயே முடங்கிக்கிடந்தார் ஜெயேந்திரர். 

போயஸ் தோட்டத்துக்கும் மடத்துக்குமான இந்த பூசல் ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு ஒரு முடிவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 09.02.2017 அன்று நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழை கோவில் நிர்வாக அதிகாரி நாராயணன் மற்றும் கார்த்திக் சாஸ்திரி, வினோத் குமார் ஆகியோர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்துக் கொடுத்தனர். அரசியல் நெருக்கடியில் இருந்த சசிகலாவுக்கு இந்த சமிக்ஞை கொஞ்சம் தெம்பு தந்ததாம். 

ஓ.பி.எஸ் அணியினரின் தாக்குதல், பி.ஜே.பி-யின் பாராமுகம், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, ஜெயலலிதாவின் மரணத்தில் எழுப்பப்படும் சர்ச்சை... என இப்போது பெரும் சங்கடத்தில் இருக்கும் அ.தி.மு.க தலைமைக்கு சர்வரோக நிவாரணியாக இருப்பது சங்கரமடத்தின் இந்த அழைப்புதான். எனவேதான் இப்படி ஒரு சந்திப்பு திட்டமிடப்பட்டது என்கிறார்கள். அரசியல் காரணங்களுக்கான இந்த சந்திப்பு வெளியே தெரியக்கூடாது என்பதால், இருதரப்பிலும் ரகசியம் காக்கப்பட்டது என்கிறார்கள். 

இந்த சந்திப்பின்போது டி.டி.வி தினகரன், ''கடந்த கால கசப்புகளை மறந்துவிடுங்கள்... அம்மா ஏதோ ஓர் கோபத்தில்,  உங்கள் மீது எதிர்ப்பு காட்டிவிட்டார். அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு. சின்னம்மா அப்படியல்ல... அந்த சம்பவங்களின்போது எத்தனையோ முறை அதை தடுத்து நிறுத்த வலியுறுத்தினார். அம்மா பிடிவாதமாக இருந்துவிட்டார். மனதில் ஒன்றும் வைத்துக்கொள்ளவேண்டாம். சிறைக்கு சென்றிருக்காவிட்டால், இந்நேரம் சின்னம்மாதான் நேரில் வந்து நடந்த விஷயங்களுக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பார்” என்றதும் நெகிழ்ந்துபோனாராம் ஜெயேந்திரர். ''முன்பு நடந்ததை மறந்துவிடுங்கள். இப்போது நடப்பது உங்களின் வழிகாட்டுதலில் நடக்கும் ஆட்சி என்றே வைத்துக்கொள்ளுங்கள்” என டி.டி.வி சொன்னபோது அர்த்தபுஷ்டியோடு சிரித்தாராம் ஜெயேந்திரர். 

இந்தச் சந்திப்பின்போது டி.டி.வி தினகரன் தரப்பிலிருந்து நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாம். 'சின்னம்மாவை பொதுச் செயலாளராக்கியபின் பிரச்னை பெரிதாக இருக்காது என நினைத்தவேளையில், ஓ.பி.எஸ் இப்படி செய்துவிட்டார். பெரும் சிரமங்களுக்கிடையில் எம்.எல்.ஏ-க்களை தக்கவைத்து ஆட்சியைப் பிடித்திருக்கிறோம். இதற்கு பி.ஜே.பி-யினால் பிரச்னை வரக்கூடாது' என்பது முதல் கோரிக்கை. 

இரண்டாவதாக, 'ஜெயலலிதாவின் மரணத்தை தேவையின்றி சர்ச்சைக்கு உள்ளாக்குகிறார்கள். மருத்துவர்கள் அறிக்கையைக்கூட மறுதலிக்கிறார்கள். வேண்டுமென்றெ எழுப்பப்படும் இந்த சர்ச்சையை ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான ஒருவரும், தான் ஆசிரியராக உள்ள அரசியல் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவருகிறார். மற்றவர்களை விட ஜெயலலிதாவுடன் நெருங்கிப்பழகியவரின் நண்பர் என்பதால் அது மக்களைக் குழப்பிவருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்' என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டதாம்.

'மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சியான தி.மு.க-வை விட அ.தி.மு.க-வை கடுமையாக விமர்சனம் செய்துவருவது, உள்ளுர் பி.ஜே.பி-தான். எனவே,பி.ஜே.பி-யை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லவேண்டும்' என்பதே மூன்றாவது கோரிக்கையாக வைக்கப்பட்டதாம்.

நான்காவது கோரிக்கையாக, 'ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் சின்னம்மாவின் தலைமையை கட்சியினர் ஏற்றுக்கொண்ட சூழலில், அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை கிடைத்துவிட்டது. எதிர்பாராத இந்த சூழல் கட்சியை கொஞ்சம் ஆட்டம் காணவைத்துவிட்டது. இப்போது சின்னம்மாவின் பொறுப்பில் இருக்கும் தன்னுடைய தலைக்கு மேலும் ஒரு கத்தியாக அந்நியச் செலாவணி வழக்கு உள்ளது. எதிர்பாராமல் ஏதாவது நேருமானால் கட்சி ஒட்டுமொத்தமாக ஓ.பி.எஸ் கைக்குப் போய்விடும்' என்றவாறே சோகமான முகத்தோடு ஜெயேந்திரரைப் பார்த்தாராம் டி.டி.வி தினகரன். 

''சின்னம்மாவை பெங்களூரிலிருந்து சென்னை கொண்டுவர சட்டப்படியான நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதற்கும் தங்களின் ஆசி வேண்டும்'' எனக்கேட்ட டி.டி.வி தினகரன் கூடவே, ''மத்திய அரசுக்கு நாங்கள் எதிரியல்ல. அவர்களது அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். புதிய ஜனாதிபதி தேர்வின்போதும்கூட மத்தியஅரசின் விருப்பத்துக்குரியவரைத் தேர்ந்தெடுக்க அ.தி.மு.க துணை நிற்கும்'' என்றளவுக்கு இறங்கிவந்து முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறார். அத்தனையையும் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தாராம் ஜெயேந்திரர். சந்திப்பின் இடையில் இரண்டு முறை காபி வர, அதனை சுவைத்தபடியே சுமார் இரண்டு மணிநேர சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது என்கிறார்கள். இறுதியாக, கிளம்பும்போது கவர்னரின் சமீபத்திய நடவடிக்கைகளை எடுத்துச்சொல்லியதோடு, 'தமிழகத்துக்கு முறையான கவர்னர் நியமனம் நடைபெற்றால், அதில் தங்களுக்கு ஆதரவான மனநிலை உள்ள ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்பதையும் மறக்காமல் சொல்லிக்கிளம்பியதாகச் சொல்கிறார்கள். 

கிளம்பும்போது ''எல்லாம் ஷேமமாகும்...'' என ஆசிர்வதித்ததோடு டி.டி.வி தினகரன் கொண்டு சென்ற ஆப்பிள்களில் சிலவற்றை அவரிடமே திருப்பிக்கொடுத்ததோடு குங்குமத்தை நெற்றியில் திலகம் இட்டு அனுப்பிவைத்தாராம் ஜெயேந்திரர். 'சங்கரமட வரலாற்றில் இதுவரை ஜெயேந்திரர் எந்த அரசியல்வாதியுடனும் இவ்வளவு மணிநேரம் சந்திப்பு நடத்தியது இல்லை' என்கிறார்கள். 

'எவ்வளவு பெரிய வி.ஐ.பி-யாக இருந்தாலும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே ஜெயேந்திரர்  தன்னை வணங்குபவர்களின் நெற்றியில் குங்குமம் இடுவார். மற்றநேரங்களில் எல்லாம் கைகளில்தான் கொடுப்பார். டி.டி.வி தினகரனுக்கு நெற்றியில் குங்குமம் இட்டது, அவரது கோரிக்கைகளுக்கு ஜெயேந்திரரின் பாசிட்டிவான பதில்' என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். 

இதற்கிடையே, ஜெயேந்திரர் -டி.டி.வி தினகரன் சந்திப்பு திட்டமிடப்பட்ட ஒன்று என்கிறார்கள். இதன் பின்னணியில், பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இருப்பதாக இன்னொரு தரப்பு சொல்கிறது. கவர்னரின் அழைப்புக்காக, கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் காத்திருந்தபோதும் அழைப்பு வரத் தாமதமானபோது அதை எதிர்த்த முதல்தலைவர் சுப்பிரமணியன் சுவாமிதான். தன் கட்சியைச் சார்ந்தவர் என்றபோதும், 'கவர்னர் மீது வழக்கு தொடுப்பேன்' என கடுமை காட்டியவர் அவர். என்ன காரணத்தினாலோ சசிகலா ஆதரவு நிலை எடுத்துவிட்ட அவர், அ.தி.மு.க-வுக்கு எதிரான பி.ஜே.பி-யின் செயல்பாட்டை ரசிக்கவில்லை என்கிறார்கள். அப்போது உதித்ததுதான் 'சங்கராச்சாரியார்கள் - டி.டி.வி தினகரன் சந்திப்பு' என்கிறார்கள். 

தி.மு.க சம்பிரதாயமான எதிர்ப்பைக் காட்டினாலும் மத்திய அரசு, தமிழக பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான பத்திரிகை ஆசிரியர் ஆகியோரிடமிருந்துதான் அ.தி.மு.க ஆட்சிக்கு வலுவான எதிர்ப்பு வருகிறது என்பதால், இவர்கள் அனைவராலும் மதிக்கப்படும் காஞ்சி மடத்துடன் இணக்கம் காட்டுவதாகச் சொல்கிறார்கள். ''சங்கராச்சாரியார்களுடன் தனிப்பட்ட நட்பு பாராட்டுவது போன்ற செயல்களால் இந்த எதிர்ப்புகள் தானாகவே முனை மழுங்கிவிடும். தங்களது மதிப்புக்குரியவரின் ஆசிபெற்றவர்கள் என்ற எண்ணம் உருவானால் விமர்சனத்தை ஓரளவு குறைத்துக்கொள்வார்கள் என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் திட்டமாம். அதனால்தான் சந்திப்பின்போது வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வில்லையென்றாலும் குறைந்தது விமர்சனத்தின் கடுமையாவது குறையும்” என்ற கணக்கில்தான் சங்கராச்சாரியார்களை சந்திக்க சசிகலா தரப்புக்கு யோசனை சொன்னதாம் சுப்பிரமணியசுவாமி தரப்பு. 

சங்கராச்சாரியார்களிடம் இந்தச் சந்திப்புக்கு அனுமதி கேட்கப்பட்டபோது, கடந்த கால கசப்புகளை நினைத்து 'அந்தக் கட்சியோட தொடர்பே வேணாம்' என ஆரம்பத்தில் மறுத்தார்களாம். அதேசமயம், 'இந்தியா முழுவதும் தான் ஆன்மிகப் பக்தர்களிடையே மதிக்கப்பட்டபோதும் வழக்குவிவகாரத்தால், தான் அலைக்கழிக்கப்பட்டு அவப்பெயருடன் முடங்கிக்கிடப்பது அவருக்கு வேதனையை தந்ததால், மீண்டும் தான் தமிழகத்தில் முந்தைய பெருமைகளுடன் வலம் வர அரசுடன் அனுசரணையாக இருப்பதே நல்லது' என நினைத்தே சந்திப்புக்கு சம்மதித்தார் என்கிறார்கள். 

ஆதாயத்துக்காக ஆன்மிகவாதிகளைத் தேடிப்போகிறார்கள் அரசியல்வாதிகள்... செல்வாக்கை மீட்பதற்காக அரசியல்வாதிகளை நாடிச் செல்கிறார்கள் ஆன்மிகவாதிகள். இதுதான் அரசியல்....!

- எஸ்.கிருபாகரன்

அடுத்த கட்டுரைக்கு