Published:Updated:

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

தமிழருவி மணியன்

பிரீமியம் ஸ்டோரி

கழகம் கண்ட கலகம்..

திராவிட இயக்க வரலாற்றில் காந்திய ஆயுதத்துடன் அண்ணாவை எதிர்த்துப்

##~##
போராடியவர் ஈ.வே.கி.சம்பத். 'சொல்லின் செல்வர்’ என்று கழகத்தவரால் போற்றப் பட்ட சம்பத், உண்மையில் அந்த அடைமொழிக்கு 100 விழுக்காடு அருகதை உள்ளவர். கழக மேடைகளை மாலை நேரக் கல்லூரிகளாக மாற்றிய பெருமை அவருடைய பேச்சுக்கு உண்டு. அழகான தோற்றம், நாகரிகம் பழுதுபடாத அரசியல் விமர்சனம், கேட்போர் செவிக்குச் சுகம் அளிக்கும் வெண்கலக் குரல், பெரியாரின் அண்ணன் மகன் என்ற பாரம்பரியப் பின்னணி... இவை யாவும் சம்பத்துக்கு வாய்த்த இயல்பான வரங்கள். ஆனால், அவருடைய அவசர முடிவுகள் அவராகவே வரவழைத்துக்கொண்ட சாபங்கள்! 

சம்பத், பெரியாரைப் பிரிந்து அண்ணாவுடன் போயிருக்கக் கூடாது; போனார். போனவர் அண்ணாவிடம் இருந்து விலகிக் தனியாகத் தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கி இருக்கக் கூடாது; தொடங்கினார். தொடங்கியவர் மிக விரைவாக முடிவெடுத்துக் காங்கிரஸில் கலந்திருக்கக் கூடாது; கலந்தார். கலந்தவர் காமராஜரைக் கைவிட்டு இந்திரா காங்கிரஸில் இணைந்திருக்கக் கூடாது; இணைந்தார். தமிழக அரசியல் வானில் குளிர்ச்சி தரும் வெண்ணிலவாய் வலம் வந்திருக்க வேண்டியவர், மின்னலைப்போல் தோன்றிப் புயலைப்போல் மறைந்துவிட்டார். சம்பத்தின் அவசர முடிவுகளால் ஆதாயம் அடைந்த ஒரே மனிதர்... கலைஞர்.

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

பெரியாரின் கீழ் தளபதிகளாக இருந்தவர்கள், தங்கள் அரசியல் ஆசைகளுக்கு வடிவம் கொடுக்க உரிய காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த போதுதான், 'பெரியார் - மணியம்மை திருமணம்’ கை கொடுத்து உதவியது.

திராவிடர் கழகத்தில் இருந்து 'பெரியாரின் வாரிசு’ சம்பத் விலகி, அண்ணாவுடன் சேர்ந்து தி.மு.கழகம் உருவாக அடித்தளம் அமைத்தார். தனிக் கழகம் காண்பதற்கு அண்ணா தயங்கியபோது அவரை ஊக்கப்படுத்தியவர் சம்பத் என்று, அண்ணாவே விரிவாகப் பேசி இருக்கிறார். 'கருஞ்சட்டைப் படைத் தளபதி’யாக இருந்த சம்பத், பெரியாரின் உறவை உதறிவிட்டு, அவருடைய திரண்ட சொத்துக்கு வாரிசாகும் வாய்ப்பை மறுதலித்துவிட்டு, அண்ணாவுக்கு அன்புத் தம்பியாக இருப்பதில் அக மகிழ்ந்தார். ஆனால், அரசியல் உலகில் நீடித்த நட்பும், நிலையான அன்பும் நிரந்தரம் இல்லையே! காலம் இருவருக்கும் இடையில் வேற்றுமையை விரைவாக விதைத்தது.

தி.மு.கழகம் 17 செப்டம்பர் 1949 - அன்று சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பிறந்தபோது, அந்த மேடையில் சம்பத், ஆசைத்தம்பி, நெடுஞ்செழியன், சத்தியவாணிமுத்து ஆகியோர் அண்ணாவுடன் உரையாற்றினர். கலைஞர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து கண்ணதாசனுடன் வந்து, அந்த ஆரம்ப விழாவில் கலந்து

கொண்டார். மேடையில் அவர் பேசவில்லை. ஆனாலும், அவருடைய தனித் திறமையால் தலைவர்களின் பட்டியலில் பின்னர் இடம் பெற்றார். அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன், கருணாநிதி என்றுதான் முதலில் கட்சித் தலைமையின் வரிசை அமைந்தது. கட்சி பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தனி நபர் விமர்சனங்கள் தலைதூக்கின.

நெல்லை மாவட்ட மாநாட்டில் கலைஞரின் போராட்ட வியூகங்களை நேரடியாக சம்பத் விமர்சித்தார். காஞ்சிபுரம் பொதுக் குழுவில் நெடுஞ்செழியன் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தார். சிதம்பரத்தில் 1959 ஜூலையில் நடந்த செயற் குழுவில், 'கழகப் பொறுப்புகளுக்கு வர விரும்புபவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக் கூடாது’ என்று திருத்தம் கொடுத்தார்.

கலைஞரிடம் அதிக நெருக்கம் காட்டிய அண்ணாவுக்கு எதிராகவும் சம்பத் கடுமையான விமர்சனக் கணை தொடுக்கத் தயங்கவில்லை. 'திராவிட நாடு’ கொள்கையில் தீவிரம் போதவில்லை என்றார். நடிகர்களுக்கு வழிபாடு நடப்பதாகக் குற்றம் சாட்டினார். 'அரிதார அரசியல்’ என்ற சொற்பிரயோகம் முதன் முதலில் சம்பத் வாயில் இருந்துதான் வந்தது.

பொதுச் செயலாளர் பொறுப்புக்கு மதியழகனை, சம்பத் முன் நிறுத்தியபோது, கலைஞர்

சி.பி.சிற்றரசுவின் வெற்றிக்குக் கடுமையாக முயன்றார். தன் கண் முன்னே கழகம் பிளவு பட்டு நிற்பதைக் கண்ட அண்ணா, சமரசத்தில் ஈடுபட்டார். அதன் விளைவாக, அண்ணா பொதுச் செயலாளராகவும், சம்பத் அவைத் தலைவராகவும், கலைஞர் பொருளாளராகவும் பொறுப்பேற்றனர். புரையோடிப்போன புண்ணுக்குப் புனுகு தடவப்பட்டது.

தன்னையே ஆட்டிப்படைக்க சம்பத் திட்ட மிடுவதாக அண்ணா நினைத்தார். பெர்னாட் ஷாவின் 'ஆப்பிள் கார்ட்’ என்ற நாடகத்தைத் தழுவி 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று 'தம்பிக்கு’ 5 கடிதங்கள் தீட்டினார்.  கடிதத்தில் மறைமுகமாக அண்ணா, சம்பத்தைத் தாக்கினார்.

இதைப் படித்து மனக் காயம் அடைந்த சம்பத், 'அண்ணாவின் மன்னன்’ என்ற தலைப்பில் கண்ணதாசனின் 'தென்றல்’ இதழில் வெளிப்படையாகத் தலைமையைத் தாக்கி வேகமாக எழுதியதும், கழகத்தில் நடக்கும் கலகம் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்து இழுத்தது.

இந்தப் பரபரப்பான சூழலில், 1961 ஜனவரியில் வேலூரில் கழகப் பொதுக் குழு கூடியது. அதற்கு முன்பு கூட்டப்பட்ட செயற் குழுவில், வன்முறை காரணமாக சம்பத் அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இரவு நடந்த பொதுக் கூட்டத்தையும் புறக்கணித்தார்.

'ஒரு மடாதிபதிபோல் இருக்கிறார் என்று குற்றம் பெரியாரை சாட்டி நாம் வெளியே வந்தோம். அந்த மடாதிபதியைவிட்டு வெளி வந்தது, இந்த மடாதிபதிக்குப் பட்டம் கட்டுவதற்கு அல்ல!’ என்று சம்பத் அறிக்கை வெளியிட்டார். அதன் பின்பு, அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இடையில் சமரசப் பேச்சு அரங்கேறியது. செயற் குழுவில் நடந்த வன்முறைக்கு வருத்தம் தெரிவித்து அண்ணா அறிக்கை வெளியிட வேண்டும் என்று சம்பத் நிபந்தனை விதித்தார். அவருடைய வற்புறுத்தலின்படி, அண்ணா அறிக்கையில் வருத்தம் தெரிவித்தார். வேலூர் வன்முறையில் தங்கள் பங்களிப்பைத் தந்த நடிகர்கள் கோபம்கொண்டனர். அவர்கள் கோபத்தைத் தணிவிக்க, அண்ணா இன்னொரு விளக்க அறிக்கை வழங்கினார்.

எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். செல்வாக்கு, கண்ணதாசனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்களைத் தாக்கித் 'தென்றல்’ இதழில் 'பாவ மன்னிப்பு’ என்ற தலைப்பில் ஓர் உருவகக் கட்டுரையை அவர் தீட்டினார்.

'போர்க் கருவி செய்வதற்காகச் சமைக்கப்பட்ட மண்டபம், போக மண்டபமாயிற்று. ஆத்திரம் கொண்டு இருந்த மக்களின் நடுவே கூத்தர்கள் குடியேறினர். ஆரவாரமும் போர் முரசும் கேட்டுக்கொண்டு இருந்த மாளிகையில் ராகமும் தாளமும் கேட்கத் தொடங்கிற்று’ என்று கவிஞர் எழுதிய கட்டுரையை எதிர்த்து, 'பாவ மன்னிப்பு பயங்கரக் கட்டுரை’ என்ற தலைப்பில் கலைஞர் 'முரசொலி’யில் எழுதி வெளியிட்டார். பிரச்னைகள் பெருகின.

சம்பத்தும் கண்ணதாசனும் திருச்சியில் பேசிய மேடையில் செருப்பு வீசப்பட்டது. 'அடியாட்கள் வன்முறைக் கலாசாரம்’ கழகத்தில் வளர்த்தெடுக்கப்படுவதை எதிர்த்து நுங்கம்பாக்கம் ஏரிக் கரை மைதானத்தில் சம்பத் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். அதிர்ந்துபோன அண்ணா, சம்பத்தை வந்து சந்தித்து உண்ணாவிரதத்தை நிறுத்தும்படி விழிகளில் நீர் வழிய வேண்டினார்.

மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம் இருவரை யும் கழகத்தில் இருந்து விலக்க வேண்டும் என்றும், கழகப் பொருளாளர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பத் வலியுறுத்தினார். 'கழகக் காவலர்கள் கூட்டம்’ நடத்த அண்ணா முடிவெடுத்தார். உடனே கலைஞர், அன்பில், முத்து, எஸ்.எஸ்.ஆர். போன்றோர் செயற் குழுவில் இருந்து விலகி அண்ணாவுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

உண்ணாவிரதம் மூன்றாம் நாளை அடைந்தது. சம்பத்தின் உடல்நிலை அபாயக் கட்டத்தை நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். சம்பத்தின் கைகளைப் பிடித்தபடி, தான் பதவி விலகுவதாகவும், சம்பத்தே கழகத்தை நடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று அண்ணா கூறிக் கண்ணீர்விட்டார். சம்பத் நெஞ்சம் நெகிழ்ந்தார். அண்ணா தந்த பழரசம் அருந்தி உண்ணாநோன்பை முடித்தார்.

கலைஞர், பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக முரசொலியில் அறிவித்தார். வெட்டுப்பட்ட காயத்தில் கட்டுப் போட்ட பின்பும், வழிந்த ரத்தம் நின்றுவிடவில்லை; சிலர் நிற்கவிடவும் இல்லை. சம்பத்தும், கவிஞரும், அவர்களுடைய ஆதரவாளர்களும் இரண்டு மாதங்களுக்குள் (9-4-1961) கழகத்தில் இருந்து விலகி, 19 ஏப்ரல், 1961-ல் 'தமிழ்த் தேசியக் கட்சி’யைத் தொடங்கினார்.

சம்பத்தின் வெளியேற்றம், காலம் கலைஞருக்குக் காட்டிய கருணை. ஒரு தவறான முடிவு, அண்ணாவுக்குப் பின் அரியாசனத்தில் அமர்ந் திருக்க வேண்டிய அரிய வாய்ப்பை, தகுதி மிக்க சம்பத்திடம் இருந்து தட்டிப் பறித்து விட்டது. அரசியல் சதுரங்கத்தில் சரியாகக் காய்களை நகர்த்தும் சாமர்த்தியம் அனைவருக்கும் வசப் படுவது இல்லை!

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு