Published:Updated:

வீடு கட்டுவதும்... வாங்குவதும் எளிதாகுமா? வருகிறது ரியல் எஸ்டேட் சட்டம்..!

வீடு கட்டுவதும்... வாங்குவதும் எளிதாகுமா? வருகிறது ரியல் எஸ்டேட் சட்டம்..!
வீடு கட்டுவதும்... வாங்குவதும் எளிதாகுமா? வருகிறது ரியல் எஸ்டேட் சட்டம்..!

வீடு கட்டுவதும்... வாங்குவதும் எளிதாகுமா? வருகிறது ரியல் எஸ்டேட் சட்டம்..!

ரியல் எஸ்டேட் துறையில் வீடு வாங்குவோர் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) சட்டம் 2015– ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்ட மசோதா கடந்த டிசம்பர் மாதமே டெல்லி மேல்சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது. ஆனால், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில்  கடந்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி இந்தச் சட்ட மசோதா மேல்சபையில் கொண்டு வரப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. 

அந்த விவாதத்தின்போது பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ''விவசாயத் துறைக்கு அடுத்ததாக நாட்டிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டது ரியல் எஸ்டேட் துறை. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவிகித பங்களிப்பை அளிக்கிறது. இப்படிப்பட்ட முக்கியமான ஒரு துறையில் திட்ட மேம்பாட்டாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையேயான நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதனால் வீடு வாங்குவோரின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த மசோதா மூலம் ரியல் எஸ்டேட் துறையில் 70 சதவிகித பணப்பரிவர்த்தனை வங்கிக் கணக்கு மூலமே நடைபெறும். கணக்கில் வராத பணப்புழக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்படும். அந்தந்த மாநில அளவிலான ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்களை உருவாக்குவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. இதன்மூலம், வீடு மற்றும் வணிகத் திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், ஒவ்வொரு திட்டமும் நேரத்துக்கு முடித்து ஒப்படைக்க வழிவகுக்கும். இந்தத் துறையில் விதிமீறலில் ஈடுபடும் புரோமோட்டருக்கு 3 ஆண்டுகள் வரையும், முகவர்கள் மற்றும் வீடு வாங்குவோருக்கு ஓராண்டு வரையும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையும், குறித்த காலத்துக்குள் திட்டங்களை முடித்து ஒப்படைப்பதையும் இந்த மசோதா உறுதி செய்யும். இந்தச் சட்டத்தில் இருதரப்பின் நலன்களும் பாதுகாக்கப்படும். '2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த நோக்கத்தை அடைய ரியல் எஸ்டேட் மசோதா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

 இந்தச் சட்ட மசோதாவைத் தமிழகத்தில் கொண்டுவர தமிழ்நாடு அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உரிய வரைவு விதிகளைத் தயார்செய்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு ஆணையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளது. இதுகுறித்து, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், ரியல் எஸ்டேட் மசோதா பற்றி விரிவாகப் பேசினார். அவர், ''தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, ரியல் எஸ்டேட் (கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி) சட்டம், 2016 - வரைவு விதிகளுக்குப் பொதுமக்களிடமிருந்து கருத்து கேட்டிருந்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கம் இதை முழுமனதுடன் பாராட்டி வரவேற்கிறது. இந்தச் சட்டமானது, எட்டுக்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட்கள் கட்டப்படும்போது... அதை வழிமுறைப்படுத்துகிறது. இது, ரியல் எஸ்டேட் விற்பவரிடமிருந்து அதை வாங்குபவர்களின் உரிமையைப் பாதுகாக்கிறது. தற்போது வீடு வாங்குபவர் தங்களது குறைகளை முறையிட வழி இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. நாங்கள் எங்களது ஆலோசனைகளைச் செயலாளர்க்கு அனுப்பியுள்ளோம். சில ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறோம். தீர்ப்பாயம் தனது உத்தரவை மீறும்போது விதிக்கும் சிறைத்தண்டனைக்குப் பதில் அபராதம் கட்டமுடியும் என்ற விதியின் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளோம். தீர்ப்பாயம் என்பது நீதித்துறைக்குச் சமமானது. அத்தகைய அமைப்பின் உத்தரவை மீறுவது என்பது கடுமையான குற்றமாகக் கருதப்பட வேண்டும். ரியல் எஸ்டேட் ஆணையம் மற்றும் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் முறையை வெளிப்படையாக்கக் கோரியுள்ளோம். ஆணையம் தனது இணையதளத்தில் ரியல் எஸ்டேட் விற்பனை விளம்பரம் செய்யலாம் என்பதை ஆட்சேபிக்கிறோம், இது, ஆணையத்தின் பணிக்கு முரணாக உள்ளது. ஆணையத்தின் படிவத்தில் ஆதார் எண்ணைக் கேட்பது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாக உள்ளது. கட்டுமானம் தாமதமாகும்போது வழங்கும் இழப்பீடு, வங்கியின் வட்டி தொகைக்குச் சமமாக இருக்க வேண்டும்'' என்று சொன்னார்.

இதுகுறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஆ.ஹென்றி, ''இந்திய அரசு 2016-ம் ஆண்டு குடியிருப்பு கட்டுமானத் துறையை முறைப்படுத்தவும் மற்றும் மேம்படுத்தவும் ரியல் எஸ்டேட் (கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சி) சட்டம் 2016-ஐ இயற்றியுள்ளது. அதன்படி தமிழக அரசும் சட்ட விதிகளை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சட்டம் வீடு வாங்குவோருக்கும் வீடு கட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். சிறு மற்றும் நடுத்தர பில்டர்களைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. வீடு கட்டிக் கொடுப்பதில் தாமதம் ஆனால்கூட 10 சதவிகிதம் தண்டத்தொகை கட்ட வேண்டும். ஜெயில் தண்டனை என்றெல்லாம் பிரிவுகளைக் கொண்டு வந்துள்ளார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் 8 சதவிகிதம் அளவுக்குத்தான் லாபம் வைக்க முடியும். ஆனால், தண்டத்தொகை 10 சதவிகிதம் என்கிறார்கள். விவசாயத்துக்கு அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் துறையில்தான் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் தொழிலில் 120 துறையினர் நேரடியாகவும் 1,200 துறையினர் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். ரியல் எஸ்டேட் துறை இயங்கவில்லை என்றால், பல்வேறு துறைகளின் வளர்ச்சி முடங்கும். பொருளாதார நலிவு ஏற்படும். இதையெல்லாம் ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும். எனவே, சிறு மற்றும் நடுத்தர கட்டுமானக் நிறுவனங்களையும் காப்பாற்றும் வகையிலும் இயற்கை இடர்பாடுகளின் போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு குழு அமைத்து ரியல் எஸ்டேட் துறை சட்டத்துக்கு ஆரோக்கியமான ஆலோசனைகளைத் தரவேண்டும். இப்போது கொண்டுவரப்படும் சட்டத்தால் நுகர்வோருக்குப் பாதுகாப்பு இருப்பதுபோலத் தெரியும். ஆனால், இந்தப் புதிய சட்டத்தால் ரியல் எஸ்டேட் துறை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படும்" என்றார்.

நாடாளுமன்றத்தில் ரியல் எஸ்டேட் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அ.தி.மு.க எம்.பி-க்கள் எதிர்த்தனர். ஆனால், இப்போது, அந்தச் சட்டத்துக்குரிய வரைவு விதிகளை உருவாக்கிப் பொதுமக்களின் ஆலோசனைகள், ஆட்சேபணைகளை கேட்டிருக்கிறது. மார்ச் 16-ம் தேதி தொடங்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

அடுத்த கட்டுரைக்கு