Published:Updated:

“மொழிகளைத் திணிக்காதீர்கள்...!” மும்மொழிக் கொள்கை குறித்து கல்வியாளர்கள்!

Vikatan Correspondent
“மொழிகளைத் திணிக்காதீர்கள்...!” மும்மொழிக் கொள்கை குறித்து கல்வியாளர்கள்!
“மொழிகளைத் திணிக்காதீர்கள்...!” மும்மொழிக் கொள்கை குறித்து கல்வியாளர்கள்!

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முயல்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தக் குற்றசாட்டுக்கு வலுச் சேர்க்கும் வகையில் சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மும்மொழிக் கொள்கையை அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தவேண்டும் என்று அதிரடியாகக் கூறியுள்ளார். இது எந்தத் தனி மொழிக்கும் ஆதரவான திட்டம் இல்லை. மும்மொழிப் பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.

சிபிஎஸ்இ பள்ளிகளில்...

இப்போது மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ம் வகுப்பு  முதல் 8-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தமிழ் கட்டாயம் கற்றுத்தர வேண்டும் என்று 2012-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், இந்தச் சட்டத்தில் கேந்திர வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதையா பள்ளிகள் ஆகிய சிறப்புப் பள்ளிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதையா பள்ளிகளில் முதல் மொழி ஆங்கிலமாகவும், இரண்டாவது மொழி இந்தி, மூன்றாவது மொழி சமஸ்கிருதம் ஆகவும் இருக்கின்றன.  தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகளைப் பொறுத்தவரை முதல் மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழி இந்தி அல்லது தமிழ், மூன்றாவது மொழி சமஸ்கிருதம் அல்லது பிரஞ்ச், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகள் என்ற அடிப்படையில் கற்றுத் தருகின்றன. இன்னொருபுறம் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.  

தேவைக்குத்தான் மொழி

மும்மொழிக் கொள்கை மூலம் சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

"கற்றல் செயல்பாடு, மொழிப் புலமை ஆகியவை ஒரு குழந்தையின் தேவை, சூழல், வளர்ச்சி ஆகியவை சம்பந்தப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் எல்லோருமே தாய்மொழியில்  கற்றிருக்கிறார்கள். பின்னர், வயதுக்கும், தேவைக்கும் தகுந்தாற்போல் பிற மொழிகளைக் கற்றிருக்கின்றனர். இந்தியா போன்ற பன்மொழி பேசும் மக்கள் வாழும் இடத்தில் மொழிக் கொள்கை என்பது, தாய் மொழியில் கல்வி தருதல், குழந்தையின் சுற்றுச்சூழலில், அதன் பழகு மொழிகளாக இருக்கக் கூடிய அனைத்து மொழிகளையும் கற்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். குழந்தைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் கற்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. எத்தனை மொழிகள் கற்றாலும் அதனைத் தாய்மொழியின் வழியில் கற்க வேண்டும் என்பதே முக்கியமான ஒன்று. முதலில் தாய்மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பின்னர், வயதுக்குத் தகுந்தாற்போல மொழிகள் அறிமுகப்படுத்தவேண்டும். 10 வயது வரை தாய்மொழியைத் தருதல், அதன் பின்னர் வட்டார மொழி, பின்னர் அன்னிய மொழி என்று எத்தனை மொழி வேண்டுமானாலும் குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.

வெற்றி தந்த தாய்மொழி

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சிவகாமி என்ற பெண் தமிழ் வழியில்தான் படிக்கிறார். அவர், டாக் யுவர் வே டூ ஜெர்மனி என்ற போட்டியில் வெற்றி பெற்றார். ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்தார். அதற்கு முன்பு டாக் யுவர் வே டூ மலேசியா என்ற போட்டியில் வெற்றி பெற்று மலேசியா சென்று வந்தார்.  அந்தப் பெண்ணுடன் ஆங்கிலத்தில் படித்தவர்கள், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் படித்த மாணவர்கள் போட்டி போட்டனர். எனினும் இந்தப் பெண் வெற்றி பெற்றார். அதற்கு காரணம் அவரது தாய்மொழிக் கல்விதான். இப்போது தேவை கருதி ஜெர்மன் மொழி படித்து வருகிறார். ஒரு மொழியின் மேல் அக்கறை ஏற்பட்டு, தேவைக்குத் தகுந்தாற்போல் கற்றுக்கொள்வது என்பது இதுதான்.  மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் கட்டாயப்படுத்தி, ஒரு மொழியைத் திணிக்கக் கூடாது. 

உலக அறிவுக்கு ஆங்கிலமா?

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவும், வெளிநாட்டுக்கு மாணவர்கள் சென்று வரவும் ஆங்கிலம் முக்கியம் என்று புதிய கல்விக்கொள்கையில் மத்திய அரசு கூறியுள்ளது. உலக அறிவு பெறுவதற்கு ஆங்கிலம் முக்கியம் என்று சொல்லியுள்ளனர். இது கல்விக் கொள்கையாக இருக்க முடியாது. உலக அறிவு என்ற ஒன்றே கிடையாது. மண்ணில்தோன்றும் அறிவை உலகத்துக்குப் பயன்படுத்தலாம். அறிவு பெறக்கூடிய மொழியாக ஆங்கிலத்தை அடையாளப்படுத்தக் கூடாது. இந்திய மொழி வளர்ச்சிக்கு சமஸ்கிருதம் மிகப்பெரிய பங்காற்றியிருப்பதாக புதிய கல்விக் கொள்கையில் சொல்லியிருக்கின்றனர். இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.  
தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது. அதில் மாற்றம் இருந்தால், பிறரின் தலையீடு இருக்கிறது என்று அர்த்தம், எனவே நிர்மலா சீத்தாரமன் சொல்வதைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. எந்த மொழியையும் கட்டாயப்படுத்திச் சொல்லித் தரக்கூடாது" என்றார்.  

-கே.பாலசுப்பிரமணி