Published:Updated:

கலெக்டர் மதிக்கவில்லை... ஓரங்கட்டும் கொறடா..! அணி மாறும் அ.தி.மு.க எம்.பி?

Vikatan Correspondent
கலெக்டர் மதிக்கவில்லை... ஓரங்கட்டும் கொறடா..! அணி மாறும் அ.தி.மு.க எம்.பி?
கலெக்டர் மதிக்கவில்லை... ஓரங்கட்டும் கொறடா..! அணி மாறும் அ.தி.மு.க எம்.பி?
கலெக்டர் மதிக்கவில்லை... ஓரங்கட்டும் கொறடா..! அணி மாறும் அ.தி.மு.க எம்.பி?

அரியலூர் கலெக்டர் மரியாதை கொடுக்க மறுக்கிறார்; கொறடா பேச்சை கேட்டுக்கொண்டு எம்.பி.யை கலெக்டர் அலட்சியப்படுத்துகிறார். கொறடாவால் சிதம்பரம் எம்பி சந்திரகாசி அணி மாறப்போகிறார் என அரியலூர் அ.தி.மு.கவினர் மட்டத்தில் பரபரப்பாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணம் வழங்கும் விழா, தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரியலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நிவாரணம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பி சந்திரகாசி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ உள்ளிட்ட பல அதிமுகவினர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், தாமரை ராஜேந்திரன் ஆகியோர் திட்டங்களைத் துவங்கி வைத்துப் பேசிகொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், சிதம்பரம் தொகுதி எம்பியான சந்திரகாசியை பேச அழைத்தார்கள். 'எனக்கு மரியாதை இல்லாத இடத்தில் நான் பேசி என்ன பயன். நான் பேசவில்லை' எனக் கூறி மறுத்துள்ளார். ஆனால், கொறடா ராஜேந்திரன் இதைப் பார்த்துகொண்டு எந்த பதிலும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பத்து பேருக்கு 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிவாரணத்தை வழங்கி ஒருவழியாக முடித்தனர். பின்பு, கூட்டத்தை முடித்து மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் அவரது அலுவலக இருக்கைக்குச் சென்றார். அவரோடு கொறடா ராஜேந்திரனும் உடன் சென்றார். அப்போது, சிதம்பரம் எம்பி சந்திரகாசியை, தனது அறைக்கு அழைத்துள்ளார் கலெக்டர். ஆனால், சந்திரகாசியோ, நீங்க என்ன மரியாதை கொடுக்கிறீங்க. நீங்க கூப்பிட்டா நான் வரணுமா என கூறிவிட்டு கோபத்தோடு காரில் ஏறிச் சென்றுவிட்டார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த கொறடாவும், என்ன பிரச்னை என்றுகூட  கேட்காமல்  அமைதியாக இருந்துள்ளார்.

கலெக்டர் மதிக்கவில்லை... ஓரங்கட்டும் கொறடா..! அணி மாறும் அ.தி.மு.க எம்.பி?

சந்திரகாசி, கலெக்டர், கொறடா மூவருக்கும் அப்படி என்னதான் பிரச்னை என்று அ.தி.மு.க முக்கிய பிரமுகர்களிடம் பேசினோம். "கொறடாவால் அரியலூரில் அ.தி.மு.க.வே அழிந்து கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம் தான் எம்.பி கோபப்பட்டுப் போனது. கொறடா கீழ்மட்ட பதவியிலிருந்து படிப்படியாக வந்திருந்தால் தொண்டர்களின் மனநிலை புரிந்துகொண்டிருப்பார். ஆனால், எடுத்த உடனே அரியலூர் மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ, அரசின் தலைமை கொறடா என மூன்று பதவிகளை வகித்து வருவதால் தொண்டர்களின் மனநிலை புரியாமல் தலைகால் தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார். கொறடாவின் பிஏ தான், கலெக்டர் சரவணவேல்ராஜ். கொறடா தாமரை ராஜேந்திரன் ஒரு முயலுக்கு மூணுகால்னு சொன்னா ஆமாம் மூணுகால்னுதான் கலெக்டரும் சொல்லுவார். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கம்.

அரசு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டரால் நடத்தப்படுகிறது என்றால், கலெக்டர் தரப்பிலிருந்து முறையாக சொல்லணுமா வேண்டாமா. ஆனால், அரியலூர் மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சி எதற்கும் எம்.பி சந்திரகாசியை அழைப்பதில்லை. ஏன், கூப்பிடவில்லை என்று பலமுறை அவரே கலெக்டரிடம் கேட்டுள்ளார். அதற்கு, கலெக்டர் எந்தப் பதிலும் சொன்னது கிடையாது. அதேபோல், மக்கள் குடிதண்ணீர் வரவில்லை, ரோடு சரியில்லை பட்டா கொடுக்கவில்லையென்று என்று மக்கள், எம்.பி.யிடம் மனுகொடுத்துள்ளனர். இதுதொடர்பாக கலெக்டரிடம் பேசி பிரச்னை தீர்க்கலாம் என்பதற்காக அவருக்கு போன் அடித்துள்ளார். ஆனால், அவர் போன் எடுக்கவில்லை. இது குறித்து ஏ.பி.ஆர்.ஒ சரவணனிடம் பேசினால், கலெக்டர் தூங்கிகிட்டு இருக்கார். அவர் எழுந்ததும் போன் அடிக்கச்சொல்கிறேன் என்று போனை வச்சிடுவார். ஆனால், கலெக்டர் போன் செய்யமாட்டார். அப்படின்னா, எம்.பி.யை மதிக்கவில்லையென்று தானே அர்த்தம். இது ஒருதடை இருதடவை அல்ல, பலதடவை இப்படி நடந்துகொண்டிருக்கிறார்.

கலெக்டருக்கு யார்கொடுக்கும் தைரியம். இதற்கு முக்கிய காரணம், கொறடா தாமரை ராஜேந்திரன்தான். அவரது பேச்சை கேட்டுக்கொண்டுதான் கலெக்டர் இப்படி செய்துகொண்டிருக்கிறார். கொறடாவை மீறி யாரும் இப்பகுதியில் அரசியல் செய்துவிடக்கூடாது. இவரை எதிர்த்து அரசியல் செய்தால் அவர்களை ஓரங்கட்டிவிடுவார். அதேபோல் பலரை ஓரங்கட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல், மாவட்டத்தில் எந்த டெண்டர் வந்தாலும் கொறடாவின் அக்கா மகன் பிரேம்தான் எடுத்துக்கொடுப்பார். மற்ற நிர்வாகிகள் யாருக்கும் டெண்டர் கொடுக்கமாட்டார். இப்படி இருந்தால் எப்படி கட்சிக்காரன் நமக்கு வேலை செய்வான் என்று ஒருதடவை சந்திரகாசி, கொறடாவிடம் கேட்டுள்ளார். அதற்காக அன்றிலிருந்து கட்சியில் மட்டுமல்ல எல்லா நிகழ்ச்சிகளிலிருந்து கலெக்டர் மூலமாக எம்.பி.யை மட்டம் தட்டிக்கொண்டிருக்கிறார்.

கலெக்டர் மதிக்கவில்லை... ஓரங்கட்டும் கொறடா..! அணி மாறும் அ.தி.மு.க எம்.பி?

அரசு விழாவில் பேசவில்லை என்று எம்.பி வெளிப்படையாகவே சொல்லும்போது, கட்சியில் உயர் பதவியில் இருக்கும் கொறடா ஏன் எம்.பி பேசவில்லை என்று கேட்கவேண்டுமா. ஒரு கட்சிக்காரனுக்கு அசிங்கம் என்றால் அது அவருக்கும்தானே அசிங்கம்தானே. இதை பேசிமுடிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றால் என்ன அர்த்தம். நீங்களே யோசித்துப் பாருங்கள். அ.தி.மு.க இப்போது கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. இந்த நேரத்தில் கட்சிப் பெயரை சொல்லவே கட்சிக்காரர்கள் யோசிக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் அரசியலில் யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்று பலரை ஒடுக்க நினைப்பது சரியா. பலமாதங்களாக கொறடா மீது எம்.பி. அதிருப்தியில் இருக்கிறார். இவர் அணிமாறினால் கொறடாதான் காரணம். இவரைப் போன்று பல நிர்வாகிகளும் இந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள். கொறடா இந்த நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும். இல்லையேல் எம்.பி உட்பட பல நிர்வாகிகள் அணிதாவல் நிகழ்ச்சி கூடியவிரைவில் அரியலூரில் நடைபெறப் போகிறது. இதில் எந்த மாற்றமுமில்லை" என்று முடித்தார்கள்.

கலெக்டர் சரவணவேல்ராஜிடம் பேசினோம். "நான் யாருக்கும் ஆதரவாகச் செயல்படவேண்டிய அவசியம் எனக்கில்லை. அரசு நிகழ்ச்சி என்றால் கூப்பிடலாம். எல்லா நிகழ்ச்சிக்கும் கூப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. நான் முறையாக கூப்பிட்டதால்தான் அவர் நிவாரணம் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். நான் கூப்பிடவில்லையென்றால் எப்படி கலந்துகொண்டிருப்பார். நான் கூப்பிடவில்லை என்று சொல்கிறாரே. ஏன் கூப்பிடவில்லை என்று அவரிடமே கேளுங்கள்" என்று முடித்துகொண்டார்.

- எம்.திலீபன்

படங்கள்: ராபர்ட்