Published:Updated:

''100 கருணாநிதி சேர்ந்தாலும், ஜெயலலிதா ஆக முடியாது!''

தா.பாண்டியனின் 'அடடே' சர்டிஃபிகேட்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை மந்திரி சபை மாற்றப்பட்டு இருக்கிறது. மந்திரி சபை மாற்றம் தவிர, வேறு எதுவும் நடந்துவிடவில்லை!'' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் தா.பாண்டியன் பேசியதாக ஒரு செய்தி பரவி, கடந்த வாரம் பரபரப்பு கிளம்பியது!

 ஆனால் தா.பாண்டியன், 'ஜெயலலிதா அரசின் சாதனைகளைப் பாராட்டித்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்தியது. குறை ஏதும் கூறவில்லை...’ என்று மறுத்து இருந்தார். தொடர்ந்து முரசொலி பத்திரிகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான 'ஜனசக்தி’யில் வெளியான தா.பாண்டியனின் பேச்சை அப்படியே பிரசுரித்து, தா.பா-வைக் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் தா.பா-வை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

''மனிதநேய மக்கள் கட்சியின் விழாவில் நீங்கள் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாக கருணாநிதி குற்றம் சாட்டுகிறாரே?''

''தனக்குத்தானே கேள்வி கேட்டு, தனக்குத்தானே பதிலும் சொல்லிக்கொள்ளும் கருணாநிதிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதை ஒரு பொருட்டாகவும் நான் கருதவில்லை!

''100 கருணாநிதி சேர்ந்தாலும், ஜெயலலிதா ஆக முடியாது!''

அன்றைய தினம் நான் அப்படிப் பேசவே இல்லை. அன்று எங்களது 'ஜனசக்தி’ நாளிதழின் நிருபர் அந்தக் கூட்டத்துக்கு வரவில்லை. மறுநாள் என் பேத்தி திருமணம் இருந்ததால், நானும் பத்திரிகை அலுவலகத்துக்குச் செல்லவில்லை. நானும் கவனிக்க முடியாமல் போயிற்று. அதனால், மற்ற பத்திரிகைகளில் வெளியான செய்தியைத் தொகுத்து அப்படியே வெளியிட்டுவிட்டார்கள். இதைத்தான் தனது வழக்கமான ஆயுதமாக கருணா நிதி பயன்படுத்தி இருக்கிறார்.''

''நடிகர் கார்த்தி திருமணத்துக்காக ஜெயலலிதா அவரது வீட்டுக்கே சென்று வாழ்த்தினார். ஆனால், நீங்கள் நேரில் திருமணப் பத்திரிகை வைத்தும் முதல்வர் வரவில்லை. முதல்வரை விமர்சித்து நீங்கள் வேதனைப்பட்டதாக கருணாநிதி மேற்கோள் காட்டுகிறாரே?''

திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பது மரியாதை; மரபு. ஆனால், அழைத்தவர்கள் எல்லாம் வர வேண்டிய கட்டாயம் இல்லை. முதல்வர் ஜெயலலிதா பொது வாழ்க்கையில் இருப்பவர். அவருக்குப் பல பணிகள், நிகழ்ச்சிகள் இருக்கும். அதற்குத்தான் அவர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவர் வருவதாகத்தான் இருந்தது. அதற்காக, திருமண மண்டபத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் அவர் வர முடியாமல் போக... அவரது பிரதிநிதியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா ப்ரியாவை அனுப்பிவைத்தார். மேலும், ஜெயலலிதா கைப்பட எழுதிய வாழ்த்துக் கடிதத்தையும் பரிசையும் கொடுத்து அனுப்பினார். ஆனால், அந்தப் பரிசு, பணம் அல்ல. மற்றபடி, சிவக்குமார் வீட்டுத் திருமணத்துக்கு ஏன் போனார்? என் வீட்டுத் திருமணத்துக்கு ஏன் வரவில்லை என்கிற சின்ன புத்திக் கேள்வி எனக்கு இல்லை. இதில் அரசியல் சாயம் பூசி, அ.தி.மு.க-வுக்கும் எங்கள் கட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுத்த கருணாநிதியும் வேறு சிலரும் முயல்கிறார்கள். அவர்கள் முயற்சி வெற்றி பெறாது!''

''ஜெயலலிதா அரசு திடீர் என்று விதித்துள்ள வரி விதிப்புகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?''

''முன்னாள் முதல்வர் கருணாநிதி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காகப் போடப் பட்டுள்ள வரிகள் அவை. கடந்த ஆட்சியில்

''100 கருணாநிதி சேர்ந்தாலும், ஜெயலலிதா ஆக முடியாது!''

1.25 லட்சம் கோடிக்கு கடன் சுமையை கருணா நிதி ஏற்றிவைத்துள்ளார். அதனைத் தீர்க்க, நிலைமையைச் சீராக்க இந்த வரி உயர்வுகூட போதாது. இன்னும் கருணாநிதி மீதும் வரி போட வேண்டும். கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோதும் இதேபோலத்தான் தமிழகத்தைப் பெரிய கடன் பள்ளத்தில் தள்ளி இருந்தார் கருணா நிதி. இந்தப் பள்ளத்தை நிரப்பி சீர் செய்யவே, அ.தி.மு.க. அரசுக்கு ஒரு வருடம் பிடிக்கும். அதனால், வரி உயர்வு பற்றிப் பேச கருணாநிதிக்கு யோக்கியதையே கிடையாது.''

''உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... சமச்சீர்க் கல்வி நிலைப்பாட்டில் ஆளும் கட்சியின் அத்தனை நடவடிக்கைகளும் திருப்திகரமாக இருக்கின்றனவா?''

''இதுவரை ஜெயலலிதா எடுத்துவரும் அத்தனை வேகமான நடவடிக்கைகளிலும் நான் விவேகத்தைக் காண்கிறேன்; முதிர்ச்சியைக் காண்கிறேன். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சட்ட சபையில் தீர்மானம் போட்டது ஆகட்டும்... கச்சத் தீவை மீட்க தமிழக அரசு எடுத்த முடிவு ஆகட்டும்... அத்தனையும் புத்திசாலித்தனமான, துணிச்சலான வழிமுறைகள்.

சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் மாற்றுக் கருத்தாக சந்தேகம் எழுந்தபோது, அ.தி.மு.க-விடம் விளக்கம் கேட்டோம். அவர்கள்வைத்த விளக்கமும் நியாயமானதாக இருந்தது. தி.மு.க. மாதிரி அவசர கதியில் அரைகுறைச் சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர ஜெயலலிதா விரும்பவில்லை. எனவே, இந்த விஷயத்தில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடுதான் சரியானது. ஒன்று மட்டும் சொல்கிறேன், 100 கருணாநிதிகள் ஒன்று சேர்ந்தாலும், ஒரு ஜெயலலிதா ஆக முடியாது!

அதே சமயம், எதிர் காலத்தில் மக்களுக்கு எதிராகவும், எங்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக யார் செயல்பட்டாலும், அதை சுட்டிக் காட்டவும் தயங்க மாட்டோம்.''

''நீங்கள் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கேட்டதாக தகவல்கள் எழுந்ததே?''

''நான் கேட்கவில்லை; என் சார்பில் நீங்களும் கேட்க வேண்டாம். அரசியலில் பொறுப்புகள் தேடி வர வண்டும்; நாம் தேடிப் போகக் கூடாது!''

- டி.எல்.சஞ்சீவிகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு