Published:Updated:

கிரண்பேடியை ஏன் அழைக்கவில்லை? அமைச்சரை முற்றுகையிட்டு பி.ஜே.பி.யினர் ஆவேசம்

Vikatan Correspondent
கிரண்பேடியை ஏன் அழைக்கவில்லை? அமைச்சரை முற்றுகையிட்டு பி.ஜே.பி.யினர் ஆவேசம்
கிரண்பேடியை ஏன் அழைக்கவில்லை? அமைச்சரை முற்றுகையிட்டு பி.ஜே.பி.யினர் ஆவேசம்
கிரண்பேடியை ஏன் அழைக்கவில்லை? அமைச்சரை முற்றுகையிட்டு பி.ஜே.பி.யினர் ஆவேசம்

புதுச்சேரி அரசு சார்பில் நடக்கும் மகளிர் தின விழாவில், மாநில ஆளுநர் கிரண்பேடியை ஏன் அழைக்கவில்லை எனச்சொல்லி, அமைச்சரை முற்றுகையிட்டு பி.ஜே.பி. மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து அவருக்கும், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் அமைச்சரவைக்கும் அதிகார மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. அரசு சம்மந்தப்பட்ட அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் இரு தரப்பும் மாறி மாறி புறக்கணிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் தனியார் திருமண நிலையம் ஒன்றில் மகளிர் தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அழைப்பிதழ், அரசு விளம்பரத்தில் புதுச்சேரியின் நான்கு பெண் எம்.எல்.ஏக்களின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் புதுவை கவர்னர் கிரண்பேடியின் பெயர் அச்சிடப்படவில்லை.

கிரண்பேடியை ஏன் அழைக்கவில்லை? அமைச்சரை முற்றுகையிட்டு பி.ஜே.பி.யினர் ஆவேசம்

இந்நிலையில் விழாவில் பங்கேற்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சரான கந்தசாமி, விழா நிகழ்விடத்துக்குச் சென்றார். அப்போது அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் சாலையிலேயே அவரது காரை மறித்து பி.ஜே.பி.யின் மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர்.

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், தற்போது மாநில கவர்னராகவும் இருந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கிரண்பேடியை அரசு நடத்தும் விழாவில் அழைக்காதது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர். மகளிர் நலன் காக்க கொண்டாடப்படும் இந்த நாளில், மாநிலத்தின் கவர்னராக பதவி வகிக்கும் கிரண்பேடியை அழைக்காததன் மூலம் பெண்களை அவமானப்படுத்திவிட்டீர்கள் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கந்தசாமி, "இதுகுறித்து எனக்கு ஏதும் தெரியாது. அதிகாரிகளிடம் விசாரிக்கிறேன்” என்றார். ஆனால் அமைச்சரின் பதிலை ஏற்காமல் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பி.ஜே.பி. மகளிர் அணியினரை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டம் நடத்த அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியலிலும் பி.ஜே.பி. மகளிர் அணியினர் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

- ஜெ.முருகன்,

படங்கள்: அ.குரூஸ்தனம்