Published:Updated:

“பெண்கள் சக்தியெனப்படுக” : ரஷ்யா முதல் நெடுவாசல் போராட்டம் வரை!

மு.நியாஸ் அகமது
“பெண்கள் சக்தியெனப்படுக” : ரஷ்யா முதல் நெடுவாசல் போராட்டம் வரை!
“பெண்கள் சக்தியெனப்படுக” : ரஷ்யா முதல் நெடுவாசல் போராட்டம் வரை!

'ஆற்றல் இல்லாமல் இங்கு எதுவும் இயங்காது' என்பது பெளதீகம். ஆற்றல் வேண்டுமென்றால் உணவு வேண்டும்... நடக்க, பேச, எழுத, ஏன் உறங்கக்கூட உணவு வேண்டும். ஆனால், இந்தப் பெளதீகம் தோற்கும் இடம் கோபத்திடம் மட்டும்தான்... உணவு இல்லையென்றாலும் கோபம் வரும்... அப்படித் தங்கள் பிள்ளைகள் உணவில்லாமல் சாகிறார்கள் என்று கனன்ற கோபம், ஒரு பேரரசை வீழ்த்தியது.

அது 1914 காலகட்டம். முதலாம் உலகப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. போரும், வறுமையும் இணைபிரியா தோழர்கள்தானே.... எதற்காகப் போராடுகிறோம்.. யார் மகிழ்ச்சிக்காக என்று தெரியாமலேயே ரஷ்ய வீரர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள்... செத்துக்கொண்டும் இருந்தார்கள். தெரிந்தவர்களுக்கு மன்னனை எதிர்த்து கலகம் செய்ய அச்சம். அந்தச் சமயத்தில் போரில் ஈடுபட்டு இருந்த ரஷ்ய வீரர்களுக்கு சில தகவல்கள் வருகிறது. மைனஸ் டிகிரி குளிரிலும் நடுங்காதவர்கள், அந்தத் தகவலைக் கேட்டதும் நடுங்கிப்போனார்கள்; உள்ளுக்குள் உடைந்தும்போனார்கள்.  அந்தத் தகவல், “பசியால்... வறுமையால்.... ஒருவேளை உணவு இல்லாமல் வீரர்களின் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கின்றன”  என்பதுதான். உள்ளுக்குள்ளேயே மருகினார்களே தவிர, திடமாக என்ன முடிவெடுப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது பெண்கள் முடிவெடுத்தார்கள்... இனியும் நாம் பொறுமையாக இருந்தால் நம் பிள்ளைகளை இருளில் நாமே தள்ளியதுபோல ஆகிவிடும் என்று ரஷ்யத் தலைநகர் பெட்ரோகிராடில் பெண் தொழிலாளர்கள் கொதித்தெழுந்தார்கள். 1917 மார்ச் 8-ம் தேதி வீதிக்கு வந்தார்கள்.  

நெருப்பென்றால் பரவுவது இயல்புதானே... அதுவும் ஏற்கெனவே உள்ளுக்குள் கனன்று கொண்டிருப்பவர்களை அந்த நெருப்பு உடனே தழுவும்தானே... ஆம், அந்தப் போராட்ட நெருப்பு பரவியது... மாணவர்கள், இளைஞர்கள், அரசு அதிகாரிகள் பின், ராணுவத்தினரும் அந்தப் போராட்டத்தில் குதித்தார்கள். சரியாக எட்டாவது நாள்... தம் குழந்தைகளின் நல்எதிர்காலத்துக்காக வீதிக்குவந்த பெண்கள், முடியாட்சியை வீழ்த்தினார்கள். இது சர்வதேச மகளிர் தினம் குறித்த ஒரு நீண்ட வரலாற்றின் சிறு பகுதி.

சரி, இப்போது பெட்ரோகிராடில் வீதிகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலுக்கு வாருங்கள்... அங்கு குழுமியிருக்கும் பெண்களைச் சந்தியுங்கள். அமுதா... கவிதா... லெட்சுமி, வளர்மதி,  வசந்தா அம்மா எனப் பெண்கள் கூட்டம் வரலாற்றின் பக்கங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாழ்வாதார போராட்டங்களைத் தாங்களே முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  

“வழக்கமான உள் அரசியலால் நெடுவாசல் போராட்டம் பிசுபிசுத்துவிட்டது. போராட்டத் தலைவர்கள் திக்குத்தெரியாமல் திணறுகிறார்கள்” என வழக்கம்போல அதிகாரவர்க்கம் வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்க... போராட்டத்தின் முதல் வரிசையில் பெண்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்; போராட்டத்தை முனைப்புடன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

போராட்டக்களத்தில் முனைப்புடன் கோஷம் போட்டுக்கொண்டிருக்கும் லெட்சுமி, “ஏற்கெனவே எண்ணெய் எடுக்க ஆழ்துளை கிணறு வெட்டிய பகுதிகள் முழுவதும் எண்ணெய்க் கழிவுகள். நாளை எரிவாயுவை எடுக்கிறேன் என்று நிலத்தையும்... காற்றையும் சேர்த்து மாசுப்படுத்தி விடுவார்கள். நாளைக்கு என் பேரப்பிள்ளைகள் வாழவேண்டும். இல்லை, அதற்காகத்தான் இந்தப் போராட்டம்” என்று திடமாகக் களத்தில் நிற்கிறார். 

இதையேதாம் வசந்தா அம்மாவும், “நாங்கள் சாகும்போது... நாளை எம்பிள்ளைகள் உணவுக்காக என்ன செய்யப்போகிறதோ... எங்கு பிச்சை எடுக்கப்போகிறதோ என்ற தடுமாற்றத்தில்தான் சாக வேண்டுமா...” என்று அழுத்தமாகக் கேட்கும் அவர், தொடர்ந்து... ''மொத்த தமிழகமும் நெடுவாசல் நோக்கிவந்து, அரசின் சதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்... இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்'' எனக் கோரிக்கைவைக்கிறார்.

இதேபோல தங்கச்சிமடத்தில், இலங்கைக் கடற்படைக்கு எதிரான போராட்டத்திலும்... பெண்கள்தான் முதல் வரிசையில் நிற்கிறார்கள். “எம் பிள்ளைகளை கொன்றுகொண்டே இருப்பார்கள்... அரசு கள்ள மெளனம் சாதித்துக்கொண்டே இருக்குமா...”  என அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்.

ரஷ்யா... தமிழகம். மொழி... பிரச்னை... புவியியல் என எல்லாம் வேறு. ஆனால், 1917-ம் ஆண்டு இதே உணர்வுதான் ரஷ்ய வீதிகள் முழுவதும் எதிரொலித்தன. அந்த நாட்டுப் பெண்கள், “நாங்கள் பசியால் சாகிறோம்... விலையேற்றத்தால் சாகிறோம்... போரால் சாகிறோம்... அரசால் சாகிறோம்...” என்று குரல் எழுப்பினார்கள். அந்த அரசுக்கு எதிரான புரட்சித் திரியை பற்றவைத்தார்கள். இதே உணர்வுதான் இப்போது தமிழகத்திலும் இருக்கிறது. ஆம், அரசு நம்மை வஞ்சிக்கிறது என்று நம் பெண்கள் நம்பத்தொடங்கி இருக்கிறார்கள்... நம் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துக் கவலைகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். 

அரசு, தம் மேட்டிமைத்தனத்திலிருந்து இறங்கிவந்து... இனத்தின் பிரச்னையைத் தீர்க்கவில்லையென்றால்... ரஷ்யாவில் நிகழ்ந்தது நாளை இங்கும் நிகழலாம். ஏனெனில், இப்போது போராட்டக்களங்களில் முதல் வரிசையில் நிற்பது பெண்கள்

பெண்கள் சக்தியெனப்படுக!

- மு. நியாஸ் அகமது