Published:Updated:

'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி

'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி
'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி

'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் சிபிஐ மூலம் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும்வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்) நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிறைவு உரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,"ஒன்றரை கோடி அ.தி.மு.க.தொண்டர்களின் மனதில் உள்ள ஒரே சந்தேகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம். அதற்கு நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை மக்களுக்குத் தெளிவாகும். அதனை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக வை அழிக்க பல பேர் முயன்றனர். எதிர்க்கட்சிகள் எல்லாம் கங்கணம் கட்டிக்கொண்டு தொடர்ந்து முயன்றன. 28 ஆண்டுகாலம் நமது இயக்கத்துக்கு வந்த வேதனைகளை சோதனைகளை தாங்கி, கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. இன்று எந்தக் கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்கமுடியாத எஃகு கோட்டையாக கட்சியை ஜெயலலிதா உருவாக்கித் தந்திருக்கிறார். மக்களின் நலனுக்காகவே ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. ஏழை எளிய மக்களுக்காகவே 50% நிதியை ஒதுக்கி திட்டங்கள் பல நிறைவேற்றி இந்தியாவிலேயே சிறந்த முதல்வராகத் திகழ்ந்தார். 'எனது உறவுகள் எல்லாம் மக்களாகிய நீங்கள்தான் ' என்று கூறி மக்களாட்சி நடத்தியவர்.

எம்ஜிஆர் காலத்திலும்,ஜெயலலிதா காலத்திலும் எவ்வாறு மக்கள் இயக்கமாக அதிமுக வீறுநடை போட்டதோ, அவர்கள் இருவரின் ஆட்சியும் மக்கள் ஆட்சியாக எப்படி வீறு நடை போட்டதோ இன்று நிலைமை மாறிவிட்டது. ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கைக்குள் கட்சி சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அதிமுக உருவானது. அதையேதான் ஜெயலலிதாவும் செய்தார். ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் கைக்குள் செல்லவிடமாட்டேன், எம்ஜிஆர் எப்படி மக்கள் இயக்கமாக நடத்தினாரோ அதே போலத்தான் நடத்துவேன். என்னுடைய காலத்துக்குப் பிறகும் இது தொடரவேண்டும் என்றார்.

ஆனால் இன்று தனிப்பட்ட குடும்பம், கட்சியையும் ஆட்சியையும் கபளீகரம் செய்கின்ற அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நாம் இந்த தர்ம யுத்தத்தைத் தொடங்கினோம். அதன் தொடக்கம் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம். 75 நாட்கள் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்றார். அவரை யாரும் உள்ளே சென்று பார்க்கவில்லை. நாங்கள் காலையில் அங்கே செல்வோம். மாலையில் வருவோம். ஒருவரையும் அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சையில் இருக்கிறார்களே அப்படி என்னதான்  அவருக்கு நேர்ந்தது, லண்டன் அமெரிக்கா சென்று வைத்தியம் செய்து அவரை உயிரோடு பார்க்கவேண்டுமே என்று பலமுறை அவர்களிடம் மன்றாடினேன். ஆனால் அவர்கள் (சசிகலா உறவினர்கள்) காதுகொடுத்துக் கூட கேட்கவில்லை.

ஜெயலலிதா மரணமடைந்த நாளில் மாலை 6.30 மணிக்கு எனக்குத் தகவல் வந்தது. உடனே நான் மருத்துவமனைக்குச் சென்றேன்.அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறி, இரவு 11.30 மணிக்கு அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தியை சொன்னார்கள். இப்போது மக்கள் நலத்துறைச் செயலாளர் கூறுகிறார், எல்லா செய்தியும் நிலவரமும் என்னிடம் தெரிவித்தார்கள் என்று. ஆனால் எந்த செய்தியும் தகவலும் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. இந்த அறிக்கையை வெளியிட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன். 

அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார், பன்னீர்செல்வத்தைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும் என்று. நான்தானே முதலில் நீதி விசாரணை வேண்டும் என்று கூறியது. அதுவும் சிபிஐ வேண்டும் என்று. அப்போதுதானே நாட்டுமக்களுக்கு உண்மை தெரியும் என்று. வரட்டும் என்னிடம். விசாரிக்கட்டும். என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன். உண்மையில் நீதிவிசாரணை வந்தால், முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான்.

2011-ம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில், சசிகலா, எம்.நடராஜன், சுதாகரன், திவாகரன், தினகரன், பாஸ்கரன், வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன், மோகன், தங்கமணி, சுந்தரவதனம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினார். பின்னர் 4 மாதம் கழித்து சசிகலா கொடுத்த மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா சசிகலாவை மட்டும்தான் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டார். அந்தக் கடிதத்தில் கூறியபடி சசிகலா இப்போது நடந்துகொள்ளவில்லை. அப்போதும் ஜெயலலிதா கூறினார், நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று. இது எல்லோருக்கும் தெரியும். கட்சியையும் ஆட்சியையும் தமது குடும்ப கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் கொண்டு வர சதித்திட்டம் தீட்டினார்கள் என்பது தெரிந்துதான் கட்சியில் இருந்து ஜெயலலிதா அவர்களை எல்லாம் நீக்கினார். ஆனால் அந்த சதித்திட்டம் இப்போது நடந்துள்ளது.

சசிகலாவின் பினாமியாக இன்று ஆட்சி நடத்துகிறார்கள். இந்த அசாதாரண சூழலில் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை வந்துள்ளது, நீதி விசாரணை வரும் வரை நமது தர்ம யுத்தம் ஓயாது." என்று கூறினார்.

- சி.தேவராஜன்

அடுத்த கட்டுரைக்கு