Published:Updated:

தாயும், சேயும் மரணம்... தர்மபுரியில் தொடரும் மகப்பேறு மரணங்கள் !

தாயும், சேயும் மரணம்... தர்மபுரியில் தொடரும் மகப்பேறு மரணங்கள் !
தாயும், சேயும் மரணம்... தர்மபுரியில் தொடரும் மகப்பேறு மரணங்கள் !

2014-ம் ஆண்டு. நவம்பர் மாதம், அடுத்தடுத்து பதினொன்று பச்சிளம் குழந்தைகள் இறந்ததால் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இப்போது, மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. புதுவையில் அரசு மருத்துவமனை அலட்சியத்தால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதே அலட்சிய புகாரில் சிக்கியிருக்கிறது தர்மபுரி அரசு மருத்துவமனை.

சாரதா.. 24 வயது கர்ப்பிணி.  போச்சம்பள்ளிக் கிராமத்தைச் சேர்ந்தவர்.  பிரசவத்துக்காக கடந்த 8-ம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். செக் -அப் மேல் செக்-அப் செய்து குழந்தை நன்றாக இருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லை. சுகப்பிரசவம்தான் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது சாரதாவின் குடும்பம்.  ஆனால், மறுநாள் பிரசவத்தின்போது குழந்தையும், மறுநாள் காலையில் சாரதாவும் இறந்துபோகவே, தவறான சிகிச்சை என்று வெடித்திருக்கிறது சர்ச்சை.

என்ன நடந்தது.? சாரதாவின் அக்கா விஜயலட்சுமியிடம் பேசினோம். “8-ம் தேதியே இங்க கொண்டு வந்து சேர்த்துட்டோம். டெஸ்ட் மேல டெஸ்ட்

எடுத்தாங்க. குழந்தை நல்லா இருக்கு.  நல்லா உதைக்குதுனெல்லாம் சொன்னாங்க. இங்க வர்றதுக்கு சிலநாட்களுக்கு  முன்னாடி பிரைவேட்ல  டெஸ்ட் எடுத்து பார்த்தோம் அங்கயும் குழந்தை நல்லா இருக்குனுதான் சொன்னாங்க. நாங்க நம்பிக்கையா இருந்தோம்.  9-ம் தேதி மதியமே வலி எடுத்துருச்சி.. ஆனால், டாக்டருங்க யாரும் உடனே வந்து பாக்கல. ராத்திரிக்குத்தான் பிரசவத்தை ஆரம்பிச்சாங்க. நான்தான் பக்கத்துல இருந்தேன்.

பெரிய டாக்டருங்க யாருமே இல்லை. டிரைனிங் டாக்டர்களுக்கு கத்துக்கொடுக்குறேங்குற பேர்ல நாலஞ்சு பேரு சேர்ந்து என் தங்கச்சிய போட்டு அமுக்கினாங்க. ரொம்ப நேரமா குழந்தை வெளியவே வரல. சாரதா வாய்ல இருந்து ரத்தம் வர ஆரம்பிச்சிருச்சி. நான் பயந்துபோய் டாக்டருங்ககிட்ட போய் சொன்னேன். அதுக்கு உதட்ட கடிச்சிகிட்டாங்கம்மா என சொன்னவர்களிடம் நான் மீண்டும் பேச முயல... 'நீ பிரசவம் பாக்குறியா? இல்லை நாங்க பாக்கட்டுமா?'னு எரிஞ்சி விழுந்தாங்க. அதுக்கப்புறம்  நான் வாயை திறக்கல. எனக்கு பயமும் தாங்கல.

உடனே  ஒருத்தர் ஓடிப்போய் ஒரு பெரிய டாக்டரை அழைச்சுட்டு வந்தார். அவர் வந்ததும்,  இவ்வளவு நேரமா என்ன பண்றீங்கனு கோவமா கேட்டுட்டு  குழந்தையை வெளியே எடுத்து தூக்கிட்டு போயிட்டார். ஆனால், சாரதாவுக்கு ரத்தம் நிக்காம  வந்துகிட்டே இருந்துச்சி. ரத்தம் எங்கிருந்து வருதுனு தெரியாம எல்லா டாக்டருங்களும் முழிச்சாங்க. அப்ப ஒரு டாக்டர் கர்ப்பப்பைலயிருந்துதான்  ரத்தம் வருதுனு சொன்னார். உடனே கர்பப்பையை வெளியில எடுக்கணும் இல்லைனா பொண்ணோட  உயிருக்கு ஆபத்துனு சொல்லி கையெழுத்து வாங்கினாங்க.  

இந்த நேரத்துல குழந்தை இறந்துடுச்சுனு சொன்னாங்க.  குழந்தை மூணரை கிலோ எடைல பொறந்துச்சு. அந்தக் குழந்தை இறந்துடுச்சுனு இவங்க சொல்றதை ஏத்துக்கவே முடியலை. இன்னொரு பக்கம் என் தங்கச்சி உயிருக்கு போராடீட்டு இருந்தா. என்ன பண்றதுன்னே தெரியலை.

தங்கச்சிக்கு பாட்டில் பாட்டிலா ரத்தம் ஏத்தினாங்க. ஒண்ணுமே  ஏறல. மிஷின் வேலூர்ல இருந்து கொண்டு வர்றாங்க.  சிகிச்சைக்கு சேலத்துக்கு தான் போகணும்னு சொன்னாங்க. ஆனா மிஷினும் வரலை. சேலத்துக்கும் கொண்டு போகலை. என் தங்கச்சி உயிர் போயிடுச்சு.

தனியார் ஆஸ்பத்திரிக்கு போக வக்கு இல்லாமத்தான ஏழைங்க நாங்க தர்ம ஆஸ்பத்திரியத் தேடி வர்றோம். எங்க உசுரோட விளையாடுறாங்க. அந்த டிரெய்னிங் டாக்டருங்க என் தங்கச்சியை போட்டு கண்ணாபின்னானு அமுக்குனதும் என் தங்கச்சி துடிச்சதும்  என் கண்ணுலயே நிக்குது," என அழுது புலம்புகிறார் விஜயலட்சுமி.

மருத்துவமனை டீன் சுவாமிநாதனிடம் பேசினோம், “சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்காமல் குழந்தையும், ரத்தம் உறையும் தன்மை இல்லாமல் போனதால் ரத்த இழப்பும் ஏற்பட்டு தாயும் இறந்திருக்கிறார்கள்.  தாயை காப்பாற்றிவிட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. மற்றபடி, மருத்துவர்களின் அலட்சியம் என்பதெல்லாம் தவறான குற்றச்சாட்டு," என்றார்.

பிரசவித்த தாய் குழந்தையின் முகத்தையும், பிறந்த குழந்தை தாயின் முகத்தையும் பார்க்காமலேயே மரணத்தை தழுவுவதைவிட கொடுமை வேறென்ன இருக்க முடியும்? சிந்தித்துப் பணியாற்றுங்கள்  தெய்வங்களே..!

- எம்.புண்ணியமூர்த்தி