Published:Updated:

'மீனவர்களை சந்திக்க மறுப்பது வெட்கக்கேடான செயல்...' மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் தாக்கு!

'மீனவர்களை சந்திக்க மறுப்பது வெட்கக்கேடான செயல்...' மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் தாக்கு!
'மீனவர்களை சந்திக்க மறுப்பது வெட்கக்கேடான செயல்...' மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் தாக்கு!

டந்த 6ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். 6 ஆண்டுகளுக்கு பின் தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் உயிரிழந்திருப்பது மீனவர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து மீனவர் சாவுக்கு காரணமான இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவரை வெளியேற்ற வேண்டும். தொடர்ந்து வரும் மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மத்திய அரசு பிரதிநிதிகள் நேரில் வந்து இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்க வேண்டும் எனக்கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுப்படும் வரை பலியான மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் வந்து சந்தித்தார். உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின் பின்னர் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மீனவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது ‘‘21 வயதுடைய இளைஞன் இன்று இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உள்ளார். இதனை கண்டித்து கடந்த 6 நாட்களாக மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல மட்டுமல்ல போராட்டத்திற்கு தி.மு.க.வின் ஆதரவை தெரிவிக்கவும் வந்துள்ளேன். ஆனால் மத்திய அரசோ இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை கூட இலங்கை அரசை நோக்கி தெரிவிக்க வில்லை.

தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் மீனவர்கள் 'தங்களை சந்திக்க வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா உடனே வரவேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர். 'அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அவரது துறையை சார்ந்த அதிகாரிகளையாவது வர சொல்லுங்கள்' என்கின்றனர். இந்த சூழலில் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை சந்திக்க மத்திய அரசு பிரதிநிதிகள் வராதது வெட்கக்கேடான செயல். வேதனையான செயல்.

கேரளாவில் நடந்த சம்பவத்தில் இத்தாலி கடற்படையினரை கைது செய்தவர்களுக்கு ஏன் இலங்கை கடற்படையினரை கைது செய்ய முடியவில்லை. இது போன்ற கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் தி.மு.க நேற்று எழுப்பியது. தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சர்களுக்கு கடிதமும் எழுப்பியுள்ளேன். மீனவர்ளுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கும் தி.மு.க.

'உயிரிழந்த மீனவருக்கு அரசு அறிவித்த நஷ்ட ஈடு கூட எங்களுக்கு தேவையில்லை. நிம்மதியாக தொழில் செய்ய வழி செய்யுங்க்ள் என போராடி வரும் மீனவ மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மாநில அரசோ அதற்கு உரிய அழுத்தம் தராமல் உள்ளது. எனவே மீனவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை தி.மு.க அவர்களுக்கு துணை நிற்கும்’’ என்றார்.

முன்னதாக துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர் சரோனிடம் நலம் விசாரித்தார். பின்னர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மீனவர் பிரிட்ஜோவின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்

ஸ்டாலின். முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி பவானி, முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல், மாவட்ட செயலாளர் திவாகரன் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.

- இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி