Published:Updated:

"இரோம் ஷர்மிளா செல்ல வேண்டிய தூரம் நீண்ட நெடியது" - மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து!

"இரோம் ஷர்மிளா செல்ல வேண்டிய தூரம் நீண்ட நெடியது" - மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து!
"இரோம் ஷர்மிளா செல்ல வேண்டிய தூரம் நீண்ட நெடியது" - மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து!


ணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து, 16 வருடங்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளா, அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார். 'மக்களுக்காக தன்னை வருத்திக்கொண்டு போராடியவருக்கு இந்த நிலையா?' என்ற கேள்வி மணிப்பூர் மாநில மக்கள் மட்டுமல்லாது, நாட்டுமக்கள் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
 
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces Specials Powers Act -AFSPA)  1958 -ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நாட்டின் வடகிழக்குப் பகுதி மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்புப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்க இந்தச்சட்டம் வழிவகுக்கிறது. இந்தச் சட்டத்தை கையில் எடுத்த ஆயுதப்படை வீரர்கள் சிலர், சந்தேகப்படும்படியான நபர்களைக் கண்டதும் சுட்டுக்கொல்லும் வெறியாட்டத்தில் இறங்கினர். அதன் ஒருபகுதியாக, கடந்த 2000-வது ஆண்டு மணிப்பூரில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த அப்பாவி மக்கள் 10 பேரை பாதுகாப்புப் படையினர் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி சுட்டுக் கொன்றனர். அதனைத்தொடர்ந்து இந்த வன்முறை வெறியாட்டம் தீயாகப் பரவியது. சந்தேகம்எழும் நபர்களை பிடித்து விசாரிப்பதும், அவர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதுமான கொடூரங்கள் தொடர்ந்து சர்வ சாதாரணமாக அரங்கேறத் தொடங்கின.
 
மனித உரிமை மீறல்!

தொடர்ந்து நீடித்த இதுபோன்ற மனித உரிமை மீறல்களை சகித்துக் கொள்ளமுடியாத சூழ்நிலையில்தான், தனது பொதுவாழ்வுப் போராட்டத்தைத் தொடங்கினார் இரோம் ஷர்மிளா என்ற பெண். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டார். மகாத்மா காந்திக்குப் பின்னர், உடலை வருத்தி இப்படி ஒரு போராட்டத்தை இரோம் ஷர்மிளாவைத் தவிர வேறுயாரும் நடத்தி இருக்க முடியாது. அவர் மேற்கொண்ட இந்தப் போராட்டத்தைத் தற்கொலை முயற்சி என்றுகூறி, அவருக்கு எதிராக மணிப்பூர் மாநில அரசு, இந்திய தண்டனை சட்டம் 309-வது பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து, மணிப்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தில் சிறப்பு வார்டு காவலில் வைக்கப்பட்ட ஷர்மிளாவுக்கு மூக்கு வழியாக வலுக்கட்டாயமாக திரவ உணவு வழங்கப்பட்டு வந்தது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக அவ்வப்போது அவர்மீது தற்கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்து கைதுசெய்வதும் பின்னர் இடையிடையே விடுவிக்கப்படுவதும் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

போராட்டத்திற்கு முடிவு

இவ்வளவு தடைகள் இருப்பினும், மனம்தளராத இரோம் ஷர்மிளா தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். தலைவிரி கோலத்துடனும், மூக்கில் டியூப்புடனும் காட்சியளித்த அவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவதரித்த 'இரும்பு மங்கை' என்று பலரும் போற்றினார்கள். மணிப்பூர் மக்கள் மனதில் இடம்பிடித்த ஷர்மிளாவின் பிம்பத்தை உடைக்க பல வியூகங்களை வகுத்தது அம்மாநில அரசு. அதன் காரணமாக, பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகள் அவர் மீது அள்ளி வீசப்பட்டன.அதன் ஒரு பகுதியாக, ஷர்மிளாவின் தனிப்பட்ட காதல் வாழ்வை பொதுவெளிக்குக் கொண்டுவந்து நிறுத்தியது அரசு. இதைவைத்து மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை சரியச் செய்தது. இதைக் கேள்விப்பட்ட ஷர்மிளா, 'எந்த மக்களுக்காக போராடினாமோ, அவர்களே தமது தனிப்பட்ட வாழ்வை பெரிதாக்குகிறார்களே' என்று வருத்தப்பட்டார். அதுமட்டுமன்றி, 16 ஆண்டுகாலம் மிகக் கடினமான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் கண்டு கொள்ளாமல் இருக்கும் அரசின் நடவடிக்கையால் விரக்தி அடைந்தவர், கடந்த ஆண்டு ஜுலை 26-ம் தேதியன்று தனது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக நீதிமன்றத்தில் அறிவித்தார்.

'தனியொரு பெண்ணாக போராடிய தமது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை.எனவே தனது போராட்டத்தை ஆகஸ்ட் 9-ம் தேதியுடன் முடித்துக் கொள்கிறேன்' என்று அவர் கூறினார். அதன்படி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.அப்போது, "திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளேன்" என்றார்.அவருடைய அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  "அரசியல் அதிகாரத்தின் முன்பு, தனி மனிஷியாக அவரால் என்ன செய்ய முடியும்?" என்ற கேள்வியும் எழுந்தது.
 

அரசியல் கள போராட்டம்

"மக்கள் மீளெழுச்சிக்கும் நீதி கூட்டணி" (People's Resurgence and Justice Alliance) என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி தொடங்கினார் இரோம் ஷர்மிளா. போராளியாக அவரை ஏற்றுக்கொண்ட மணிப்பூர் மக்கள்,அரசியல் போராளியாக ஏற்பதில் தயக்கம் காட்டினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.ஆனாலும் தன்னுடைய கொள்கையில் உறுதியுடன் இருந்த அவர், நடந்து  முடிந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பங்கெடுத்தார்.மாநில முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து, 'தெளபால்' தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலுடன் நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட போது, இரோம் ஷர்மிளா 90 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இபோபி சிங், 18 ஆயிரத்து 649 வாக்குகள் பெற்றார். ஷர்மிளாவின் இந்த மோசமான தோல்வி, அவரை விரக்தியான மனநிலைக்குக் கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன் காரணமாக, அவர் அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களுக்கான போராட்டத்தில் திறம்பட ஈடுபட்டவருக்கு அரசியலில் ஏற்பட்ட பின்னடைவு எதைக் காட்டுகிறது என மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபைனிடம் பேசினோம்.

சகோதரனே வாக்களிக்கவில்லை...

"அரசியலில் இரோம்ஷர்மிளா முழுமையாக இறங்கவில்லை. தன்னிச்சையாக முடிவெடுத்து இறங்கியதாகத்தான் அவருடைய அரசியல் நகர்வைப் பார்க்கிறேன். மக்களுக்கான போராட்டத்தில் அவருக்கு ஆதரவு கொடுத்த அனைத்து சக்திகளையும் அவர் ஒன்று திரட்டத் தவறிவிட்டார். பெண்கள் அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புகள் அவருக்கு ஆதரவு கொடுத்து வந்தார்கள்.  ஜெனிவாவில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும், ஷர்மிளாவின் சகோதரரைச் சந்தித்துப் பேசினேன். தானே ஷர்மிளாவுக்கு வாக்களிக்கவில்லை என்று அவர் சொல்கிறார். அவரிடம் மேலும் பேசியபோது, "ஷர்மிளாவின் அரசியல் நிலைப்பாடுதான் நான் அவரைவிட்டு தள்ளி இருக்கக் காரணம்" என்றார்.

இதேபோன்று மணிப்பூர் மாநில மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த பப்லுவும் அவருக்கு வாக்களிக்கவில்லை. இதுதொடர்பாக பப்லுவிடம் பேசியபோது, "ஷர்மிளாவின் அரசியல் அணுகுமுறையில் ஆழமில்லை. அரசியல் களப்பணியில் வியூகங்களை வகுத்துக் கொண்டு களமிறங்க வேண்டிய நிலை தற்போது உள்ளது. அதனை இரோம் செய்யத் தவறியதே இந்த படுதோல்விக்குக் காரணம். அரசியலில் குதித்த உடனே மாநில முதல்வரை எதிர்த்துதான் போட்டியிடுவேன் என்று இறங்கியதும் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு மற்றொரு காரணம். தனக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி உள்ளது. தான் போட்டியிட்ட தொகுதியில் மக்களின் மனநிலை என்ன? என்பதை அறிய அவர் முயன்றிருக்க வேண்டும் அதையெல்லாம் செய்யத் தவறி விட்டார். அரசியலும், சமூக ஆர்வமும் தனித் தனியானது. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. மக்களுக்கான போராளி என்பதாலேயே அரசியலிலும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பக்கூடாது.அதற்காக சமூக ஆர்வலர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொல்லவில்லை. அப்படி வந்தவர்கள் அதற்கான வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வெற்றியும் பெற்றுள்ளார்கள். அரசியலுக்கான ஆழம் வேறு என்பதை உணர்ந்து அவர் செயல்பட்டிருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் இரோம் ஷர்மிளா மிகவும் நல்லவர். பல தியாகங்களைச் செய்துள்ளார். அம்மாவை பார்க்கவில்லை. சொந்த வாழ்க்கையைப் பற்றி நினைக்கவில்லை. இப்படி நினைத்துப்பார்க்க முடியாத செயல்களை எல்லாம் அவர் செய்துள்ளார். இந்த  சமூகத்திற்கு தேவைப்படுபவராக இரோம்ஷர்மிளா கருதப்படுகிறார். அப்படிப்பட்டவர் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது ஆதரவு அளித்த அனைவரையும் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அவருடைய ஒவ்வொரு முடிவும் இதுவரை அவருடைய தனிப்பட்ட முடிவாகவே இருந்துள்ளது. அதனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வியால் மக்கள் அவரை கொச்சைப்படுத்தியுள்ளனர் என்று கூறமுடியாது. அவர் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது" என்றார்.

போராளிகளை அரசியல்வாதியாக ஏற்பதில் சிக்கல்

மனித உரிமை ஆர்வலர் மார்க்ஸ்-யிடம் பேசினோம்."இந்த தோல்வியால், இரோம்ஷர்மிளாவை மக்கள் சரியாக மதிப்பிடவில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. மக்களுக்காக போராடுகிற மாவோயிஸ்ட்டுகள் இருக்கிற மாநிலமான சட்டீஸ்கரில் மக்கள் ஆதரவு அவர்களுக்கு இருந்தாலும்கூட, தேர்தல் என்று வரும்போது மக்களின் மனநிலை மாறி விடுகிறது. அதேபோன்று 'காஷ்மீரில் 2008-ம் ஆண்டில் நடந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும்' என்று அம்மாநிலத்தில் போராளிகள் குரல்எழுப்பியபோது, 65 சதவிகித மக்கள் வாக்களித்தார்கள். இந்த முடிவால் காஷ்மீர் மக்களை, போராளிகளை மதிக்கவில்லை என்று அர்த்தம் ஆகிவிடாது. அதே நிலைதான் தற்போது மணிப்பூரிலும் இரோம் ஷர்மிளாவுக்கு ஏற்பட்டுள்ளது. 'இரோம்ஷர்மிளா தனிக்கட்சி ஆரம்பித்து ஒன்றும் நடக்கப்போவதில்லை' என்று மக்கள் நம்புகிறார்கள். அதன் தாக்கமே இந்தத் தோல்வி. அதனால் மக்கள் அவரை ஆதரிக்கவில்லை என்று சொல்லிவிட  முடியாது. துணிச்சலாக அரசியலில் இறங்கினாரே தவிர, மக்களை திரட்டத் தவறிவிட்டார். அதுவே தேர்தலில் அவருக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது" என்றார்.

-கே. புவனேஸ்வரி