Published:Updated:

ஏழை மாணவர்களுக்கு 10 வருடங்களாக இலவச டியூஷன்... இந்த இளைஞரைத் தெரிந்துகொள்வோமா?! #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஏழை மாணவர்களுக்கு 10 வருடங்களாக இலவச டியூஷன்... இந்த இளைஞரைத் தெரிந்துகொள்வோமா?! #VikatanExclusive
ஏழை மாணவர்களுக்கு 10 வருடங்களாக இலவச டியூஷன்... இந்த இளைஞரைத் தெரிந்துகொள்வோமா?! #VikatanExclusive

ஏழை மாணவர்களுக்கு 10 வருடங்களாக இலவச டியூஷன்... இந்த இளைஞரைத் தெரிந்துகொள்வோமா?! #VikatanExclusive

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலக்கடலின் மேற்பரப்பை கதிரவன் பொன் மஞ்சளாக்கியிருந்த மாலை நேரம், திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது நமது வாகனம். வரிசையாக நிறைய இடங்களில் வழி கேட்டு தெருவை அடைந்த போது நன்றாக இருட்டியிருந்தது. நாம் சந்திக்கப் போகும் நபர் ஹரிஹரன்.

10 வருடங்களாக மீனவர் பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு கட்டணமில்லாத மாலை நேர பயிற்சி வகுப்பை எடுத்து வருகிறார் இந்த இளைஞர். அவருக்கு அழைக்கலாம் என அலைபேசியை எடுத்த கணத்தில் "வாங்க சார்.. போகலாம்" என்ற குரல் கேட்டுத் திரும்பினோம். வெள்ளை வேட்டி கட்டி இன்முகத்துடன் வரவேற்றார் ஹரிஹரன். 

வகுப்புகளில் அடிக்கடி 'பின் டிராப் சைலன்ஸ்' எனச் சொல்வார்களே அப்படித்தான் இருந்தது பள்ளிக்கூடம். படிக்கட்டுகளில் ஏறத்துவங்கினோம். "என்ன சார்.. மாணவர்கள் யாரும் வரலையா, நாமதான் முதல்ல போறோமா?" என நாம் கேட்க. "இல்ல சார் இப்போ பத்தாவது, பன்னிரண்டாவது தேர்வு நடந்திட்டு இருக்கில்ல. அதான் பசங்க அமைதியா படிச்சிட்டு இருக்காங்க" எனச் சொல்லியவாறு ஒரு வகுப்புக்குள் நுழைய கிட்டதட்ட 70 மேற்பட்ட மாணவர்கள் அத்தனை அமைதியாக படித்துக்கொண்டிருந்தார்கள்.                 

"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இங்கே திருவொற்றியூர்தான். வைஷ்ணவா காலேஜ்ல பி.காம் படிச்சேன். முதல் முதல்ல 2005 -ம் வருஷம் பிரெண்ட்ஸ் கொஞ்ச பேர் சேர்ந்து ' ஒரு பிடி அரிசி திட்டம்'னு ஆரம்பிச்சோம். அதாவது தினமும் நம்மளால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமா மாதம் முழுவதும் சேகரிச்சோம். அந்த அரிசியை ஆதரவற்றோர் இல்லங்கள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள்னு எங்கெல்லாம் தேவைப்படுதுனு கேட்டு அங்கெல்லாம் கொண்டு போய்க் கொடுத்திட்டு வருவோம்.

 முதல் முறை இதை ஆரம்பிச்சப்போ 10 - 25 கிலோ அரிசி வரைக்கும்தான் சேகரிக்க முடிஞ்சது. ஆனா இன்னும்  அதிகமா தேவை இருந்தது. அப்போதான் 'இப்போ நம்மளால முடிஞ்ச அளவுக்கு, அவர்களுக்குத் தேவையான  அரிசியைத் கொடுத்திட்டிருக்கோம். நாம இல்லைனா அவங்களுக்குத் தேவையான அரிசியை எப்படி உருவாக்கிக்க  முடியும். அதுக்கு அடிப்படையா என்ன தேவைன்னு யோசிச்சப்போ அறிவைக் கொடுக்கிறதுதான் சரியானதா  இருக்கும்னு முடிவு பண்ணினோம். கல்வின்னா மதிப்பெண்கள் எடுக்குறது மட்டுமல்லாம அவங்களுக்குத்  தேவையானதை அவங்களே தேர்ந்தெடுக்கிற பகுத்தறிவை வளர்க்கிறதுதானே உண்மையான கல்வியா இருக்கும்.  ஒரு காலத்தில இது பாரதியார் படிச்ச ஸ்கூல், இது வ.உ.சி படிச்ச ஸ்கூல்னு பெருமையா சொல்லிப்போம். ஆனா  இப்போ இது ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்த ஸ்கூல், ஸ்டேட் செகண்ட் வந்த ஸ்கூல்னு சொல்லிட்டிருக்காங்க.

 சுயமா முடிவெடுக்கிற அறிவை வளர்த்தெடுக்கணும்ங்கிற எண்ணத்தில ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தப் பயிற்சி  மையம். முதல்ல 7 குழந்தைங்க எங்ககிட்ட வந்திட்டிருந்தாங்க. இப்போ 90 பேர் படிக்கிறாங்க. 2008 ல ஆரம்பிச்சு  கிட்டதட்ட 10 வருஷத்தை நெருங்கிட்டோம். முதல்ல கடலை ஒட்டின ஒரு சின்ன இடத்துலதான் வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நான் படிச்ச ஸ்கூலோட தாளாளர் கிருஷ்ணன் என்னைக் கூப்பிட்டாரு, போய்ப் பார்த்தேன். 

'இங்கே படிச்சிட்டுப்போன பசங்க எல்லாம் நிறைய துறைகள்ல இருக்காங்க. ஆனா அவங்க யாருமே பண்ணாத ஒரு விஷயத்தை நீ பண்ணிட்டு இருக்க. தினமும் ஈவ்னிங் டைம்ல நீ இங்கேயே பசங்களைக் கூட்டிட்டு வந்து டியூஷன் எடுத்துக்கலாம்'னு உற்சாகப்படுத்தினாரு. 

"இந்தப் பகுதியில பெரும்பாலும் மீனவக் குடும்பங்கள்தான். இங்கே இருக்கற குழந்தைங்க நிறைய தடைகளைக் கடந்துதான் படிக்கவே முடியும்ங்கிற நிலைமையில டியூஷனுக்கெல்லாம் வரவைக்க முடியுமான்னு ஒரு சின்ன தயக்கம் இருந்தது. ஆனா ஒவ்வொரு வருஷமும் அவங்களோட எண்ணிக்கை அதிகமானதே தவிர குறையவே இல்லை. இதுவரைக்கும் 700 பேருக்கு மேல இங்கே படிச்சிட்டு வெளியே போயிருக்காங்க. யாருகிட்டேயும் பணம் வாங்குறது இல்லை. எங்களால என்ன முடியுமோ.. அதை செஞ்சு கொடுத்துக்கிட்டு இருக்கோம். வீட்ல அம்மா, அப்பா ரெண்டு பேருமே சுத்தி இருக்கவங்களப் பத்தி மட்டுமே யோசிச்சிட்டிருப்பாங்க. எதுனாலும் முதல் ஆளா போய் நிப்பாங்க. படிச்சிட்டு 7 வருஷம் சும்மாதான் இருந்தேன். அப்போ முழுக்க சப்போர்ட் பண்ணினது அம்மா அப்பாதான்.  

பொதுவா நம்மள ஒரு பத்துப் பேர் இருக்கிற கூட்டத்தில பேசச் சொன்னா ரொம்ப தயங்குவோம். அது குழந்தைங்ககிட்ட இன்னும் அதிகமா இருக்கும். முதல்ல அந்தத் தாழ்வு மனப்பான்மையை அவங்ககிட்ட இருந்து உடைக்கிறதுக்காக ஸ்பாட்ல திடீர்னு ஒரு டாபிக் கொடுத்து பேசச் சொல்லுவோம். இப்படி தொடர்ச்சியா யார் வேணும்னாலும் ஏதாவதொரு டாபிக்ல அவங்களுக்கு தோணுற விஷயங்களைப் பேசுவாங்க. இது தவிர மாதம் ஒருமுறை வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்களைச் சிறப்பு விருந்தினரா அழைச்சு பேச வைப்போம்.

எங்க சென்டர்ல படிச்சிட்டுப் போன பையன் ஒருத்தன் ஒரு நாள் என்னை வந்து பார்த்தான் 'நான் இங்கதாண்ணே படிச்சேன், இங்கே நான் என்ன கத்துக்கிட்டேனோ அதை இவங்களுக்கும் சொல்லிக் கொடுக்க ஆசை. நான் வரலாமா'ன்னு கேட்டான். 'தாராளமா வா'ன்னு சொன்னேன். இப்படி என்கிட்டே ஸ்டூடண்டா இருந்த 14 பேர் இப்போ குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திட்டிருக்காங்க."

"இங்கே 'ஒரு ரூபாய் சேமிப்புதி திட்டம்'னு ஒண்ணு செயல்படுத்திட்டு இருக்கோம். சேமிச்சுக் கிடைக்குற பணத்தை வைச்சு செருப்பு, ஜாமென்ட்ரி பாக்ஸ்னு யாருக்கு தேவையோ அவங்களுக்கு கிப்ட் பண்ணுவோம். விடுமுறை நாள்கள்ல கருவேல மரம் வெட்டுறது, ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம்னு  போய் எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யுறதுன்னு செலவழிப்போம். மதிப்பெண்களைத் தாண்டி சுயமா முடிவெடுக்கிற தன்னம்பிக்கையை வளர்க்கிறதுதானே சார் உண்மையான அறிவு..?" என்ற வார்த்தைகளோடு முடிக்கிறார் ஹரிஹரன்.

பலமாக ஆமோதித்துவிட்டு விடைபெற்றோம்!

- க. பாலாஜி 
 படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு