Published:Updated:

ஜெயலலிதா புறக்கணித்த தினகரனுக்கு ஜெ.தொகுதி சீட்! யார் இந்த தினகரன்? #TTVDinakaran

ஜெயலலிதா புறக்கணித்த தினகரனுக்கு ஜெ.தொகுதி சீட்! யார் இந்த தினகரன்? #TTVDinakaran
ஜெயலலிதா புறக்கணித்த தினகரனுக்கு ஜெ.தொகுதி சீட்! யார் இந்த தினகரன்? #TTVDinakaran

ரு நிறுவனத்துக்குள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நுழைந்து, பின்னர் மேலாளராகவே மாறினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு நிலைதான் இன்றைய அ.தி.மு.க-வின் நிலையும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே. நகருக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருந்தது. இப்போது, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், வெவ்வேறு குழுக்களாக பிரிந்திருக்கும் அ.தி.மு.க-வில், சசிகலா அணி சார்பில் அவரின் அக்காள் மகன் டி.டி.வி தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் சார்பாக ஆர்.கே.நகரில் யார் போட்டியிடுகிறார் என இன்னும் அறிவிப்பு வரவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனைப் பெற்ற பிறகு அ.தி.மு.க-வில் தினகரனை மீண்டும் சேர்த்தார். கட்சியில் சேர்க்கப்பட்டவுடனேயே அவருக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர் ஆன சில நாட்களிலேயே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தினகரனுக்குக் கிடைத்துள்ளது. ஜெயலலிதா இருந்தபோது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில்கூட இல்லாத ஒருவரை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஏற்க முடியாது என்று கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆர்.கே நகரில் அவர் போட்டியிடுகிறார் என்றதும் கூடுதல் அதிர்ச்சி அடைந்தனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும், முதலமைச்சர் ஆகும் எண்ணம் எனக்கு இல்லை. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியே தொடர்வார்" என்று தெரிவித்தார். 

யார் இந்த டி.டி.வி தினகரன்?

சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் 3 மகன்களில் ஒருவர் டி.டி.வி. தினகரன். ஜெயலலிதாவுடன் நெருங்கிப் பழகத் தொடங்கிய சசிகலா, அவரின் அக்காள் மகன்களை அரசியலுக்கு வர வைத்தார். தினகரன், பாஸ்கரன் மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரையும் பொதுவாக டி.டி.வி சகோதரர்கள் என்றே அழைப்பார்கள். இவர்கள் மூவரும் அ.தி.மு.க-வில் பல்வேறு சலுகைகளைப் பெற்று கட்சியின் முக்கியஸ்தர்களாக வலம் வந்தனர். 1988-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, தினகரன் கட்சியில் முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்தார். பின்பு, 1990-ல் சசிகலா கணவர்  நடராஜனுக்கும், தினகரனுக்கும் இடையே இருந்த நட்பை அறிந்த ஜெயலலிதா, தினகரனை விலக்கி வைத்திருந்தார். ஆனால், சீக்கிரமே சசிகலாவின் மூலம் ஜெயலலிதாவின் குட் புக்கில் மீண்டும் இடம்பிடித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். சுதாகரனை, ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனாக அறிவித்து 1995-ம் ஆண்டு ஆடம்பரமான முறையில் திருமணம் செய்து வைத்தார். ஆனால், 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சுதாகரன் தனது வளர்ப்பு மகன் அல்ல என்று ஜெயலலிதா அறிவித்து, அவரை கார்டனில் இருந்து வெளியேற்றினார். கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா உள்பட அவரின் குடும்ப உறுப்பினர்கள் தனக்கு எதிராக செயல்பட்டதால், அவர்கள் அனைவரையும் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றினார் ஜெ. பிறகு 2012-ம் ஆண்டு, மன்னிப்புக் கடிதம் அளித்து, சசிகலா மட்டும் போயஸ் தோட்டத்துக்குள் மீண்டும் நுழைந்தார். டி.டி.வி உள்பட மூன்று சகோதரர்களையும் இறக்கும் வரை போயஸ் தோட்டத்துக்குள் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி தினகரனுக்கு எதிராக, 20 வருடத்துக்கு முந்தைய அந்நிய செலாவணி நெறிமுறை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையில் முறைகேடு செய்ததாக அவருக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தினகரனுக்கு இந்தியாவுக்கு வெளியே உள்ள வங்கிக் கணக்கில் அதிக தொகை டெபாசிட் செய்ததற்காகவும், 1991-96-ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அதனை இந்தியாவுக்கு மாற்ற முயன்றதற்காகவும்.   2000-வது ஆண்டில் அபராதம் விதித்தது. அவருக்கு மொத்தமாக 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவரின் முறையீட்டுக்கு பின்னர் 25 கோடி ரூபாயாக அது குறைக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு தினகரன் எமரால்டு கன்ஸ்ட்ரக்‌ஷன் (Emeralad Construction) என்ற கம்பெனி நடத்தி வந்தார். ஆனால், அதில், மற்றவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ, அவர் மீது வழக்கு தொடுத்தார். பின்பு, ஹவாலா வழக்கிலும் சிக்கியுள்ளார் தினகரன்.

தினகரன் - பன்னீர்செல்வம் உறவு எப்படி?

கடந்த 2001-ம் ஆண்டில், ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், தமிழகத்தின் முதலமைச்சராக அ.தி.மு.க-வின் சாதாரண தொண்டராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை பதவியேற்கச் செய்தார். அவரை கட்சி ரீதியாக மேம்படுத்திய பெருமை தினகரனையே சேரும். தினகரன் 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளத்தில் போட்டியிட்டபோது, அவர் பன்னீர்செல்வம் வீட்டில் தங்கியிருந்தார். தினகரனின் வெற்றிக்காக பன்னீர்செல்வம் கடுமையாக உழைத்தார்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம், அ.தி.மு.க ஜெயிக்குமா அல்லது மற்ற கட்சிகள் ஜெயிக்குமா என்ற கேள்வி எழும். அ.தி.மு.க-வுக்கும், மற்ற கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டியும், பலத்த எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, அ.தி.மு.க-வில், தினகரன் ஜெயிப்பாரா இல்லை, ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் நிற்பவர் ஜெயிப்பாரா என்ற குழப்பத்தில் தமிழக மக்கள் உள்ளனர். வெவ்வேறு கட்சிகளுக்கு இடையே நிலவிய போட்டி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குள்ளேயே ஏற்பட்டிருக்கிறது. ஆர்.கே நகர் மக்களின் மனோநிலையைப் பொறுத்தே, அடுத்த நான்கு ஆண்டுகளில் அந்தத் தொகுதியின் வளர்ச்சி அமையும். எனவே, இந்த இடைத்தேர்தல் என்பது ஆர்.கே நகருக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் தான்...!

- நந்தினி சுப்பிரமணி