Published:Updated:

''சரத்குமாருக்கு பணம் மட்டுமே குறிக்கோள்!'' - என்ன சொல்கிறார் முன்னாள் நண்பர்?

''சரத்குமாருக்கு பணம் மட்டுமே குறிக்கோள்!'' - என்ன சொல்கிறார் முன்னாள் நண்பர்?
''சரத்குமாருக்கு பணம் மட்டுமே குறிக்கோள்!'' - என்ன சொல்கிறார் முன்னாள் நண்பர்?

ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல், வழக்கமான தி.மு.க - அ.தி.மு.க போட்டியாக இல்லாமல், அ.தி.மு.க-விலேயே எந்த அணி மக்கள் செல்வாக்கு பெற்ற அணி என்பதை நிரூபிக்கும் களமாக அமைந்திருக்கிறது. ஆனால், சமத்துவ மக்கள் கழகம் புது முடிவு எடுத்து ஆர்.கே நகரில் களம் இறங்கியிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தல் வரையிலும் அ.தி.மு.க கூட்டணியில் இருந்துவந்த 'ச. ம. க' இப்போது தி.மு.க கூட்டணியில்...!

'ஏன் இந்த திடீர் மாற்றம்?' என்ற கேள்வியோடு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணனை சந்தித்துப் பேசினோம்....

''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடும்.  அ.தி.மு.க ஆதரவோடும் நாங்குநேரி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக ஜெயித்து வந்து மக்கள் பணி ஆற்றினேன். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் எங்களுக்கு திருவொற்றியூர் தொகுதியைத் தருவதாக ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார்.ஆனால், ஏற்கெனவே நான் இருந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் கூட்டணிக்குள் வரவும், அவருக்கு (சரத்குமார்) திருச்செந்தூரை ஒதுக்கிவிட்டார்கள்.அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தலில் எனக்கு வாய்ப்பளிப்பதாக ஜெயலலிதா உறுதி கொடுத்திருந்தார். ஆனால், அதன்பிறகு அவர் உடல்நலம் குன்றி, 75 நாள் மருத்துவமனை சிகிச்சையில் இருந்து இறந்தும்போனார். அதற்குப் பிறகு அந்தக் கட்சியில் தலைமை என்று சொல்லும் அளவுக்கு யாருக்கும் தகுதியில்லை என்ற நிலையாகிவிட்டது.

போயஸ்கார்டனில் வீடு வாங்கி குடியேறும் அளவுக்கு இருந்த ஒரு பெரிய நடிகை, பின்னாட்களில் தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற உயரிய பொறுப்பை எட்டிய தலைவர் ஜெயலலிதா.ஆனால், அவரோடு 33 வருடங்கள் கூடவே இருந்து தவறான பாதையில் வழிநடத்தி சிறைச்சாலைக்கே இட்டுச் சென்றதோடு, தண்டனையையும் வாங்கிக் கொடுத்து, இறுதியில் மக்கள் யாருமே பார்க்கமுடியாதவாறு மறைத்து வைத்து மரணம் வரையிலும் கொடுமை படுத்தியவர்களைப் போய்ப் பார்த்துப்பேச எனக்கு மனம் ஒப்பவில்லை.அந்தக் கட்சியும் பிடிக்கவில்லை.அதனால்தான் இப்போது ஆர்.கே. நகர் தொகுதியில், தி.மு.க வேட்பாளரை ஆதரிக்கிறோம்.''

''அ.தி.மு.க-வில் சசிகலா அணியை ஏற்றுக்கொள்ளாத நீங்கள், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் ஆதரவு அளிக்காமல், தி.மு.க-வுக்கு ஆதரவளிப்பது ஏன்?''

''ஏற்கெனவே நான் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து மனக் கஷ்டத்தோடுதான் வெளியே வந்தேன்.இப்போது அதே சமத்துவ மக்கள் கட்சி ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்குத்தான் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, நானும் அதே அணிக்கு ஆதரவு தெரிவித்து ஒன்றாக இருப்பதென்பது முடியாத காரியம்.மேலும், தி.மு.க செயல்தலைவர் மு.க ஸ்டாலினும், தி.மு.க-வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு இரண்டுமுறை அழைத்தார். அதனை ஏற்று நாங்களும் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தருவதாகக் கூறினோம்.''

''தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறாரே....?''


''ரோடு ரோடாக எல்லோரிடமும் வாக்கு கேட்டுச் செல்லும்போது, எதிரில் வந்த சரத்குமாரிடமும் மரியாதை நிமித்தமாக ஆதரவு கேட்டிருக்கிறார்... அவ்வளவுதான். ''

''ஆர்.கே நகர் தொகுதியில், சரத்குமாரே போட்டியிட்டால், உங்களது நிலைப்பாடு என்ன?''

''சரத்குமார் இங்கு போட்டியிட்டால் நிச்சயம் தோற்றுவிடுவார். பணம் மட்டுமே அவரது குறிக்கோள். மற்றபடி யாருடைய நலனையும் கருத்தில்கொள்ள மாட்டார். சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பிப்பதில் முக்கியமான நபராக நானும் இருந்தேன். ஆனால், கட்சியில் இருந்த பணக்காரர்களிடம் எல்லாம் பணத்தை மட்டும் பிடுங்கிக்கொண்டு, எல்லோரையும் ஏழைகளாக்கிவிட்டார் சரத்குமார். இப்படி பணம் கொடுத்து ஏழையாகிப் போன 50 பேர் பட்டியலை இப்போதுகூட என்னால் எடுத்துக்காட்ட முடியும். இதுமட்டுமல்ல... தனக்குக் கீழே இருக்கிற இருவரை வைத்து சொந்தக் கட்சிக்காரர்களிடமே சண்டையை மூட்டிவிடுவார். இன்றுவரையிலும் நடிகராக மட்டுமே இருக்கிறாரே தவிர, உண்மையான ஒரு கட்சித் தலைவராக சரத்குமார் எப்போதும் இருந்தது இல்லை.''

''சமத்துவ மக்கள் கட்சிக்கு விரோதமாக நீங்கள் நடந்துகொண்டதாக சரத்குமார் சொல்கிறாரே....?''

''அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டுத்தான் நானும் சரத்குமாரும் எம்.எல்.ஏ -க்கள் ஆனோம்.அந்த நன்றியை மனதில் வைத்து நான் அ.தி.மு.க விசுவாசியாக இருந்தேன். ஆனால், அவரது தனிப்பட்ட பிரச்னையான நடிகர் சங்கப் பிரச்னையில், அ.தி.மு.க தனக்கு உதவவில்லை என்று சொல்லி அ.தி.மு.க தலைமை மீது கோபப்பட்டார். அதனை வெளிக்காட்டும்விதமாக, கூட்டணியில் இருந்து வெளியேறச் சொல்லி என்னையும் கட்டாயப்படுத்தினார். நான் சம்மதிக்கவில்லை. உடனே அவரே பி.ஜே.பி-க்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிக்கையும் வெளியிட்டுவிட்டார். இதுதான் நடந்தது.''

''நாடார் சமுதாய மக்களின் வாக்கு மிகுதியாக உள்ள ஆர்.கே நகர் தொகுதியில், சரத்குமாரின் பிரச்சாரம் எடுபடும்தானே...?''

'' 'நான் (சரத்குமார்) நாடாரே இல்லை' என்று சரத்குமாரே பேட்டி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல....நான் (எர்ணாவூர் நாராயணன்) நாடார் சங்கங்களுக்கும், பேரவைகளுக்கும் சென்றுவருவதை தவறு எனச் சொல்லித்தான் என்னைக் கட்சியை விட்டே வெளியேற்றினார் சரத்குமார். இதையெல்லாம் அவர் டி.வி பேட்டியில் சொல்லிவந்ததை நான் பதிவு செய்தே வைத்திருக்கிறேன். அதனால், இங்குள்ள நாடார் மக்கள் அனைவரும் சரத்குமார் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை.அவர் இங்கு வந்து பிரச்சாரம் செய்தால், நடிகர் என்ற வகையில் வடிவேலுக்கும் செந்திலுக்கும் கூடுகிற கூட்டம்தான் வருமே தவிர, ஒரு நாடார்கூட சரத்குமார் பேச்சைக்கேட்டு ஓட்டுப் போடமாட்டார்கள்.இதை மட்டும் அவர் மறுத்துப் பேசட்டும்... அப்புறம் நான் பதில் கொடுக்கிறேன்...''

-என்று மீசையை நீவிவிட்டபடியே சரத்குமாருக்கு சவால்விட்டு பேட்டியை முடித்துக்கொண்டார் எர்ணாவூர் நாராயணன்!

- த.கதிரவன்