பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

கே.மாணிக்கம், ராயபுரம்.

கழுகார் பதில்கள்

எங்கள் பகுதிக்குப் பேச வந்த

##~##
மு.க.ஸ்டாலின், 'எப்படி வெற்றி பெற்றோம் என்பது அவர்களுக்கும் தெரியவில்லை. ஏன் தோற்றோம் என்பது நமக்கும் புரியவில்லை’ என்றார். இது உண்மையா?

  எதுவும் புரியாத இரண்டு பேரிடம்தான் தமிழகம் இத்தனை ஆண்டுகளாக சிக்கிக்கொண்டு தவிக்கிறது என்று ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக இருக்குமோ!

 மணிநாயகம், மேலூர்.

கழுகார் பதில்கள்

  ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அதிகப்படியான நடவடிக்கைகள் எடுத்துவிட்டதாக காங்கிரஸ் அரசு பயப்படுகிறதாமே?

அந்த பயத்துக்கு இரண்டு காரணங்கள்!

ஒன்று... இனிமேல் விசாரணையை வேகமாகக் கொண்டுபோனால், காங்கிரஸ் அமைச்சர்களை யும் கைது செய்தாக வேண்டும்!

இரண்டாவது... தெலுங் கானாவைச் சேர்ந்த 9 காங்கிரஸ் எம்.பி-கள். தங்களது ராஜினாமாக் கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி இருக்கிறார்கள். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், காங்கிரஸின் பலம் நாடாளுமன்றத்தில் குறையும். அப்போது தி.மு.க-வின் தயவு நிச்சயம் தேவை.

இந்த இரண்டும்தான் காங்கிரஸின் பயத்துக்குக் காரணமாக இருக்க முடியும்!

 கோபால்கிருஷ்ணன், ஏழாயிரம் பண்ணை.

கழுகார் பதில்கள்

  'கம்யூனிஸ்ட்கள் இன்னமும் முதிர்ச்சி பெறவில்லை’ என்கிறாரே பிரணாப் முகர்ஜி?

கம்யூனிஸ்ட்களை லேசாகக் குறை சொன்னாலே, அவர்களுக்குக் கோபம் கொப் பளிக்கும். ஆனால், கவுண்டமணி ஸ்டைலில் திட்டினாலும் காங்கிரஸுக்கு கோபம் வராது. இந்த முதிர்ச்சியைச் சொல்கிறாரா? அல்லது பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரியைவிட தனக்கு அதிக வயதாகிவிட்டதைச் சொல்கிறாரா?

எந்த அடிப்படையில் சொன்னாலும், காங்கிரஸ் 'அளவுக்கு’ கம்யூனிஸ்ட்கள் முதிர்ச்சி அடைய முடியாதுதான்!

 சுப.சீனுவாசன், ஸ்ரீரங்கம்.

கழுகார் பதில்கள்

  சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொள்கிறார்களே சாமியார்கள்?

கழுகார் பதில்கள்

  சாமியார்கள் எதற்கும் விதிவிலக்கு அல்ல என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி!

''உலக வாழ்க்கையைத் துறந்து விட்டதாக நம்பப்படும் ஆன்மிக வாதிகள்கூட உண்மையில் உலக நியதியில்தான் இயங்கு கின்றனர். சாதாரண மக்களிடம் காணப்படும் அதே குறிக்கோள், ஒன்றை அடைந்துவிட எடுத்துக் கொள்ளும் அதே தீவிர முயற்சி, ஆசைப்பட்டதாகவே மாறிவிடத் துடிக்கும் துடிப்பு என்பவை அவர்களிடமும் உள்ளன. அறிந்துகொண்டுவிடவும், அடைந்துவிடவும், பிடியில் கொண்டு வந்துவிடவும், தன்னிடமே பத்திரமாக வைத்துக்கொள்ள நினைத்தலும் இவர்களிடமும் இருக்கிறது. ஆன்மிகவாதிகள் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் நோக்கம் புனிதமானதுபோலவும், மற்றவர்கள் எடுக்கும் முயற்சிக்கு முற்றிலும் மாறு பட்டதுபோலவும் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் எந்த வேறுபாடும் இல்லை. அவர்கள் துறந்து சென்றதாக எண்ணும் உலகத்துக்கும், வாழ்ந்துகொண்டு இருக்கும் ஆன்மிக உலகத்துக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. அதுவேதான் இது. இதுவேதான் அது!''

- ஜே.கே. சொன்னதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?

 குறள்பித்தன், தஞ்சாவூர்.

கழுகார் பதில்கள்

இனி என்னவாகும் செம்மொழி?

  செம்மொழிக்கு எந்த சோதனையும் வரவில்லை. செம்மொழி ஆய்வு நிறுவனம் என்னாகும் என்று கேளுங்கள். அந்த நிறுவனத்துக்காக சென்னை செம்மஞ்சேரியில் ஒதுக்கப்பட்ட 17 ஏக்கர் அப்படியே கிடக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்ட நூலகத்தில் இருந்த புத்தகங்களைப் பூட்டிக்கிடக்கும் புதிய தலைமைச் செயலகத்துக்குள் கொண்டுபோய் போட்டுவிட்டார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டியது மத்திய அரசாங்கம்தான். இங்கு உதாசீனப்படுத்தப்பட்டுள்ள செம்மொழி நிறுவனம், மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ள மனித வள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் வருவதாகும். அவர்கள்தான் பரிகாரம் காண வேண்டும்.

அந்த நிறுவனத்துக்கு, தகுதியானவரை, தலைவராக மத்திய அரசு முதலில் நியமிக்க வேண்டும். இது கருணாநிதியின் குடும்பச் சொத்து அல்ல. செம்மொழி வேறு, கனிமொழி வேறு என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்!

 முகேஷ்.கிருபாகரன், கோத்தகரி.

கழுகார் பதில்கள்

'பயங்கரவாதத் தாக்குதல்களை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவது கடினம்’ என்கிறாரே ராகுல்?

அப்புறம் என்ன செய்வதாய் உத்தேச மாம்?

'பிரதமர் பதவிக்கு ராகுல் தகுதியாகிவிட்டார்’ என்று திக்விஜய் சிங் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். இதைப் பார்க்கும்போது அதை நம்பத்தான் வேண்டும்!

 வரதராஜன், நெல்லிக்குப்பம்.

கழுகார் பதில்கள்

'பா.ம.க. விரைவில் ஆட்சி அமைக்கும், அதற்காக பாடுபடுவோம்’ என்று அன்புமணி இன்னமும் நம்பிக்கையுடன் சொல்கிறாரே?

'தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளால்தான் பா.ம.க. தோற்றுப்போனது’ என்றும் சொல்லி இருப்பதைக் கவனித்தீர்களா? கூட்டணியில் இருந்து கழன்றுகொள்ளும் பணியை கச்சிதமாகத் தொடங்கி விட்டார்கள். பா.ம.க-வின் பாஷையில் ஆட்சி அமைப்போம் என்றால், அன்புமணிக்கு பதவி வாங்கிக் கொடுப்போம் என்று பொருள்!

 'பாட்ஷா’ பரமன், சிவகாசி

கழுகார் பதில்கள்

  எங்கள் சூப்பர் ஸ்டார் இவ்வளவு சீக்கிரம் சிங்கப்பூரில் இருந்து வருவார் என்று எதிர்பார்த்தீரா?

அவருக்கு அன்பான வேண்டுகோள்... மூன்று மாதங்கள் முழு ஓய்வுகொள்ளுங்கள். அப்புறமாக 'ராணா’வை யோசிக்கலாம். 'சுவர் இருந்தால்தான் சித்திரம்’ என்ற பழந்தமிழின் பழமொழி அறிந்தவர்தானே நீங்களும்!

 கனகசபை, ஆத்தூர்.

கழுகார் பதில்கள்

  மும்பையில் குண்டு வெடிப்பு தொடர்கதை ஆகிவிட்டதே?

  மும்பை மக்கள் முகத்தில் 93-ம் ஆண்டு பரவிய பீதி இன்னமும் தொடர்கிறது. நம்முடைய உளவுத் துறையின் கையாலாகத்தனமும் காவல் துறையின் மெத்தனமுமே இதற்குக் காரணம். இப்போது குண்டுவெடித்த ஜவேரி பஜார் பகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை குண்டு கள் வெடித்து உள்ளன. எனவே, அங்கு போலீஸ் பூத் எப்போதுமே உண்டு. சில நாட்களுக்கு முன்னர்தான் அதை போலீஸார் அகற்றி உள்ளனர். இங்கிருந்து நடந்து போனால், ஐந்து நிமிடங்களில் காவல் நிலையத்துக்குப் போய் விடலாம். அப்படிப்பட்ட இடத்தில் குண்டு வெடித்திருப்பது அவமானம்!

 பூவரசி, பெரணமல்லூர்.

கழுகார் பதில்கள்

  மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்கிறார்களே?

  15 ஆண்டுகளாக இழுபறியாக இருக்கும் இந்த மசோதாவுக்கு இரண்டு தடங்கல்கள்தான் இப்போது. முலாயம்சிங் யாதவுக்கு உ.பி. பெண் களும், லாலுபிரசாத்துக்கு பீகார் பெண்களும் வாக்களிப்பதை நிறுத்தினால்தான், இந்த மசோதா நிறைவேறும்!

 சங்கரநாராயணன், திருப்பூர்.

கழுகார் பதில்கள்

  நடிகர் சிரஞ்சீவிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லையே?

  எப்படித் தருவார்கள்? சொந்த செல்வாக்கு உள்ள எந்த மனிதரையும் டெல்லி காங்கிரஸ் தலை மைக்கு எப்போதும் பிடிக்காது. இந்திராவுக்கு காமராஜரையும், ராஜீவ் காந்திக்கு சரத்பவாரையும் பிடிக்காமல்போனதற்கு இதுதான் காரணம். மகாராஷ்டிரா முதல்வரான பவார்... டெல்லி வந்திருந்தபோது அவரை அழைக்காமல் மற்ற தலைவர்களைவைத்து மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார் பிரதமர் ராஜீவ். இதற்கு சோனியாவும் விதிவிலக்கு அல்ல. புதுச்சேரி ரங்கசாமியை இழந்ததும் இதனால்தான். ஆந்திராவில் செல்வாக்குள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனை முதல்வராக்குங்கள் என்று சொன்ன தற்காகவே, அவருக்குத் தர மறுத்த ஜன்பத்வாசிகள்... ஜனங்களின் எண்ணங்களுக்கு முரணானவர்கள்!

 வீரமுத்து அருணாசலம், கீரமங்கலம்.

கழுகார் பதில்கள்

  பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இப்போது என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பாட்டாளி, மக்கள், விடுதலை, சிறுத்தை... ஆகிய சொற்களுக்குத் தகுந்த மாதிரி நடந்து கொள்ளுங்கள்!

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு