Published:Updated:

மிஸ்டர் கழுகு: மதுரை மீட்பு ஸ்டார்ட்!

மிரட்டப்படும் அட்டாக்... துரத்தப்படும் பொட்டு!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''சமச்சீர்க் கல்வி தீர்ப்பு வந்ததும், வருவேன்!'' என்று முன்கூட்​டியே  சொன்ன கழுகார்... கரெக்ட்டாக வந்தார்.

 ''கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர்க் கல்விதான் செல்லும்... ஜெயலலிதா கொண்டுவந்த சமச்சீர்க் கல்வித் திருத்தச் சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்து இருப்பது, இன்றைய ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு. இதைக் கேள்விப்பட்டதும் ஜெயலலிதாவின் முகம் சிவந்ததாம்!'' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் கழுகார்.

''தேன் கூட்டில் கையைவைத்து மாட்டிக் கொண்டார் முதல்வர் என்றுதான் அதிகாரிகள் பலரும் நினைக்கிறார்கள். 'கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த சமச்சீர்க் கல்வியில் இருக்கும் குறைபாடுகளைக் களைந்து அந்தத் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்து​வோம்’ என்று சொல்லி இருந்தால், இத்தனை சிக்கல்​கள் வந்திருக்காது என்கிறார்கள் அதிகாரிகள்.

மிஸ்டர் கழுகு: மதுரை மீட்பு ஸ்டார்ட்!

'முதல்வருக்கு இந்த விஷயத்தில் யாரும் சரியாக அட்வைஸ் செய்யவில்லை. தேர்தல் முடிவு வருவதற்கு முன்னதாகவே, ஜெயலலிதாவைத் தனியார் பள்ளி ஒன்றின் உரிமையாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்து,  சமச்சீர்க் கல்விக்கு எதிராக பல விஷயங்களைச் சொன்னார். அப்போதே, 'நான் முதல்வராக வந்தால், சமச்சீர்க் கல்வி இருக்காது’ என்று ஜெயலலிதா வாக்கு கொடுத்தாராம். அந்தத் தனியார் பள்ளி உரிமையாளர் சொன்ன விஷயங்களை, பின்னர் க்ராஸ்செக் செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. இந்தத் திட்டத்தை ஆதரித்து கருத்து சொன்னால், 'கருணாநிதி ஆள்’ என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று பயந்தார்கள் அதிகாரிகள். அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்களாவது ஜெயலலிதாவைச் சந்தித்து இந்த திட்டத்தின் உண்மை நிலையைச் சொல்லி வாதாடி இருக்கலாம். அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழக அரசின் திருத்தச் சட்டத்துக்காக வாதாடிய அரசு வக்கீலும், அரசின் கொள்கைகளைத் தெளிவாக விளக்கவில்லை. இத்தனையும் சேர்ந்துதான் முதல்வருக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது’ என்கிறார்கள் கோட்டையில்!''

''கருணாநிதி கொண்டுவந்ததை எல்லாம் நிறுத்தி​விட வேண்டும் என்பது நோக்கமாக இருந்தால், இப்படித்தானே ஆகும்?''

''இந்தத் தீர்ப்பு வரும்போது, முதல்வர் போயஸ் கார்டனில் இருந்தார். 11 மணிக்கு கோட்டைக்கு வந்திருக்க வேண்டும். 12 மணிக்கு, சென்னை நிருபர்கள் சங்கக் கட்டடம், 9 கலைக் கல்லூரிகளை வீடியோ கான்ஃபெரன்சிங் மூலமாகத் திறந்துவைக்கும் நிகழ்வுக்கு ஜெயலலிதா ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் 12.45-க்கு சமச்சீர்க் கல்வி பற்றிய வழக்கில் தீர்ப்பு என்பது தெரிய வந்ததும், மதியம் 1.30-க்கு நிகழ்ச்சிகளை மாற்றச் சொன்னாராம் முதல்வர். அதன் பிறகு 1.25 மணிக்குத்தான் கோட்டைக்கு வந்தார். ஜெ. முடிவுக்கு முரணான தீர்ப்பு வந்ததால், அடுத்து நடந்த நிகழ்வுகளில் அதிக உற்சாகம் இல்லாதவராக ஜெயலலிதா காட்டிக்கொண்டார். அடுத்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த சப்ஜெக்ட்தான் ஓடியதாம்.''

''அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்?''

''உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போவார்கள். இப்படியே போனால், பிள்ளைகள் எப்போது படிப்பது? எப்போது தேர்வு நடத்துவது? என்ற குழப்பங்கள்தான் மிஞ்சும். பொதுவாகவே, கல்வி விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சறுக்கல்தான். ஜூலை 15-ம் தேதி பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள். அன்றைய தினத்தை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சட்டமாகவே கொண்டுவந்தார். தி.மு.க. ஆட்சியில் விமரிசையாகவே கொண்டா​டினார்கள். ஆனால், கடந்த 15-ம் தேதி அப்படி எந்த ஏற்பாடும் இல்லை.

'அ.தி.மு.க-வினர் இதைக் கொண்டாட மாட்டார்கள். எனவே, தி.மு.க-வினர் கொண்டா​டுங்கள்’ என்று கருணாநிதி முந்தைய நாளே அறிக்கைவிட்டார். அவர் சொன்னது மாதிரியே ஆளும் கட்சி நடந்துகொண்டது. 15-ம் தேதி காலையில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் காமராஜர் சிலைக்கு செய்தித் துறை அமைச்சர் செந்தமிழன் உள்ளிட்டோர் சென்று மாலை அணிவித்தார்கள். முதல்வர் இதில் கலந்துகொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் இதைக் கொண்டாடினார்கள் என்ற தகவல் கிடைத்ததும்தான்... கல்வி வளர்ச்சி நாள் அறிவிப்பு சமாசாரமே முதல்வருக்குத் தெரிய வந்ததாம். உடனே அவசர அவசரமாக காமராஜர் ஞாபகம் வந்தது. மதியம் 2.15 மணிக்கு உச்சி வெயிலில் வந்து மாலை அணிவித்தார். 'முதல்வருக்கு முன்கூட்டியே இதுமாதிரியான தகவல்களைச் சொல்லாதது அவரது செயலாளர்களின் குறைபாடு’ என்று கோட்டை அதிகாரிகள் மத்தியில் பேச்சு உள்ளது!'' என்ற கழுகார்,

''இதைவைத்து 'முரசொலி’ அடித்த கிண்டல்​தான் சூப்பர். '2.15 மணிக்கு ஜெயலலிதாவே வந்து மலர் தூவி இருக்கிறாரே அது போதாதா? காமராஜர் கொடுத்துவைத்தவர்தான்’ என்கிறது அந்த பாக்ஸ் செய்தி!'' என்று சொல்லிவிட்டு அடுத்த சப்ஜெக்ட் தாவினார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: மதுரை மீட்பு ஸ்டார்ட்!

''மதுரையில் இருந்து உமது நிருபர்கள் அனுப்பிய 'அட்டாக்’ மேட்டரைப் படித்தேன். 'மதுரையை மீட்டு ஆன்மிக நகராக மாற்றுவேன்’ என்று ஜெயலலிதா சொன்னாரே ஞாபகம் இருக்கிறதா? அதற்கான வேலைகளை மும்முரமாகத் தொடங்கிவிட்டார்கள். 'அட்டாக்’ பாண்டி மீது வரிசையாகப் பல வழக்குகளைப் போட்டு வெளியில் வராமல் செய்யத் திட்டம். 'பொட்டு சுரேஷ்’ என அழைக்கப்படும் சுரேஷ் குமாரும் இந்த வளையத்துக்குள் வெகு சீக்கிரம் வருகிறார்.''

''அப்படியா?''

''சுரேஷ் குமார் தனக்கு முன் ஜாமீன் தர வேண்டும் என்று மதுரை முதன்மை செசன்ஸ் நீதிபதி பாஸ்கரன் முன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார் அவசர அவசரமாக!

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செய​லாளர் தளபதியும் இதே மாதிரி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். திருமங்கலம் அருகே உள்ள வேங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவனாண்டி என்பவர் மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் ஆஷ்ரா கர்க்கிடம் ஒரு புகாரைக் கொடுத்து உள்ளாராம். '

மிஸ்டர் கழுகு: மதுரை மீட்பு ஸ்டார்ட்!

5 கோடிமதிப்பிலான எனது சொத்தை

மிஸ்டர் கழுகு: மதுரை மீட்பு ஸ்டார்ட்!

40 லட்சம் மட்டுமே  கொடுத்து தளபதி பறித்துக்கொண்டார். சுரேஷ் குமார் என்பவரின் அலுவலகத்துக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார்கள். அங்கு தாய் மூகாம்பிகை சேதுராமன், திருமங்கலம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர், எஸ்ஸார் கோபி ஆகியோர் இருந்தார்கள். எங்களை மிரட்டி நிலத்தை எழுதி வாங்கினார்கள்.’ என்று அதில் சொல்லப்பட்டுள்ளதாம். இந்தப் புகாரைவைத்துத் தன்னைக் கைது செய்துவிடுவார்களோ என்று பயந்த சுரேஷ் குமார், முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார். 'எஃப்.ஐ.ஆர். இன்னும் போடாத நிலையில் எப்படி முன் ஜாமீன் கொடுக்க முடியும்?’ என்று நீதிபதி மனுவை நிராகரித்தார். தி.மு.க. வக்கீல்கள் வசம் விசாரித்தால், வித்தியாசமான லாஜிக் ஒன்றைச் சொல்கிறார்கள்.''

''அது என்ன?''

''சுரேஷ்குமார் மீது 10-க்கும் அதிகமானபுகார்கள் வந்துள்ளன. அதன் மீது இன்னும் போலீஸார் எஃப்.ஐ.ஆர். போடவில்லை என்பது உண்மைதான். எஃப்.ஐ.ஆர்.போட்டால், யார் புகார் கொடுத்தார்களோ... அவர்களை மிரட்டவோ அல்லது காம்ப்ரமைஸ் பண்ணவோ செய்வார்கள். எனவே, இனிமேல்  கைது செய்துவிட்டு அப்புறமாக எஃப்.ஐ.ஆர். போடும் ஸ்டைலை மதுரைப் போலீஸ் பண்ணப் போகிறது என்கிறார்கள். இதற்கு இன்னொரு முக்கியமான நோக்கமும் உண்டாம். கமிஷனர், எஸ்.பி.... போன்ற மேலிடத்துப் பிரமுகர்கள் தவிர, மற்ற போலீஸ் அதிகாரிகள் இன்னமும் தி.மு.க. தரப்புக்கு மேட்டர்களை பாஸ் பண்ணும் காரியங்களைக் கனகச்சிதமாகப் பார்க்கிறார்களாம். 'போலீஸ்காரங்களுக்குப் பயந்துதான் பெரிய அதிகாரிகள் இப்படி நடந்துக்கிறாங்க’ என்றும் பேச்சு.

மதுரை மாநகரை ஒட்டிய உத்தங்குடியில் நாகர் ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை வாங்கியது தொடர்பாக, ஒரு மேட்டர் ஓடிக்கொண்டு உள்ளது. கருணாநிதியின் சினிமா தயாரிப்பாளர் மார்ட்டின் மூலமாக சுகுமார் என்பவருக்குக் கை மாறிய நிலம்... அழகிரியின் மனைவி காந்திக்கு வந்து சேர்ந்தது. சுகுமாரை ரகசிய இடத்தில்வைத்து விசாரித்து அனுப்பியதாம் போலீஸ். இது காந்திக்கும் சிக்கலைக் கொடுக்கலாம் என்று அழகிரி அரண்டுகிடக்கிறாராம்!'' என்ற கழுகாரிடம்... ''மதுரையில் சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து குவித்திருப்பதாகச் சொல்கிறார்களே?'' என்றோம்!

''மதுரையில் கருமுத்து கண்ணனின் சகோதரி மகனான தியாகராஜனுக்குச் சொந்தமான பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குள் சி.பி.ஐ-யின் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினார்கள். காலை 7.30 மணியில் இருந்து டி.ஐ.ஜி. முருகேசன் தலைமையில் ஆறு பேர் குழு ரெய்டு செய்தது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, கடந்த 2010 செப்டம்பர் மாதம் இந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டதாம். நஷ்டக் கணக்கு காட்டியது உண்மைதானா என்பது தொடர்பாக இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில், மதுரை திருநகரில் உள்ள பாரமவுன்ட் டெக்ஸ்டைல்ஸ் மில்லிலும் ரெய்டு நடந்தது. நொடிந்துபோயுள்ள இந்த மில்லை வி.வி.ஐ.பி. ஒருவர் வாங்கப்போவதாகக் கிளம்பிய செய்திக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை!

அதே சமயம், இந்த தியாகராஜனுக்கு மத்திய அமைச்சர் ஒருவருடன்  நல்ல நெருக்கம் உண்டு. அவரைக் குறிவைக்கவே இந்த ரெய்டு என்றும் சொல்கிறார்கள். அது உண்மையாக இருந்தால், அடுத்த கட்டமாக ஒரு மசாலா கம்பெனி, சிமென்ட் நிறுவனம்,  செல் நிறுவனம், கண் மருத்துவமனை போன்றவற்றுக்கும் சிக்கல் வரலாம்!'' என்ற பிட்டையும் போட்டுவிட்டுப் பறந்தார் கழுகார்!

போலீஸ் பிடியில் காஜாமலை விஜய்!

மிஸ்டர் கழுகு: மதுரை மீட்பு ஸ்டார்ட்!

தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் பின்னே, அதிரடிப் பிரமுகராக வலம் வந்த பெரிய மிளகுப்பாறை பகுதி கழகச் செயலாளரான காஜாமலை விஜய் தற்போது போலீஸ் பிடியில்.  

தன்னை மீறி திருச்சி மாநகராட்சியில் டெண்டர் எடுக்க வந்த கான்ட்ராக்டர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி அடித்தது, விளையாட்டு அரங்கில் நேரு கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பந்தோபஸ்து பணிக்கு வந்த ஏ.சி. ஒருவரின் கன்னத்தில் பளார் விட்டது, கேஸ் சிலிண்டர்களைக் கடத்திய விவகாரம் தொடர்பாக  விசாரணைக்கு வந்த இன்ஸ்பெக்டரின் வாக்கிடாக்கியை பறித்துக்கொண்டு விரட்டியடித்தது என்று, கடந்த ஆட்சி காலத்தில் காஜாமலை விஜய் மீது சராமரியாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. ஆட்சி மாறியதைத் தொடர்ந்து காஜாமலை விஜய்யை போலீஸ் தேடினார்கள். அதனால் கடந்த 18-ம் தேதி மாலை திருச்சி, கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார். காஜாமலை வீட்டு முன்பக்கம் இருந்த கீற்றுக்கொட்டகையில் அவரே தீ விபத்து ஏற்படுத்தினார் என்பதுதான், முதல் வழக்காகப் பாயும் என்கிறார்கள்.

பொங்கிய துரைமுருகன்!

மிஸ்டர் கழுகு: மதுரை மீட்பு ஸ்டார்ட்!

எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் துரைமுருகனின் சினம் கொண்ட முகத்தை கருணாநிதி பார்த்தார்!

கனிமொழியைப் பார்க்க சமீபத்தில் டெல்லி சென்றார் துரைமுருகன். ஒருபக்கம் கனிமொழியையும் இன்னொரு பக்கம் ஆ.ராசாவையும் உட்கார வைத்துக் கொண்டு ஒருமணிநேரம் பேசிவிட்டு வந்தார். அப்போது ஸ்டாலின் குறித்து கனிமொழி சில சமாசாரங்களைச் சொல்லி வருந்தியதாகத் தகவல். இதை சென்னை வந்த துரைமுருகன், ஸ்டாலினிடம் சொன்னாராம்.. இது கருணாநிதிக்குத் தெரியாமல் இருக்குமா?

துரைமுருகனை அழைத்து, ''ஏன்யா உனக்கு இந்த வேலை? குடும்பத்துக்குள்ள குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறியா?'' என்று கேட்டதுதான் தாமதம், பொங்கித் தீர்த்துவிட்டாராம் துரை. ''ஐம்பது வருஷமா உங்களோட  இருக்கேன். ஆனா என்னையே நீங்க நம்பலை. அப்புறம் வேற யாரை நம்புவீங்க?'' என்று கொந்தளித்து,  தன் மனசில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட்டு விருட்டென்று  வந்துவிட்டாராம். அப்புறமாக ஸ்டாலின், வேலு ஆகியோர் சமாதானம் செய்தும் பயனில்லாமல்.... சிங்கப்பூருக்கு டிக்கெட் போட்டுக் கிளம்பிவிட்டார். அங்கிருந்து கம்போடியா போனதாகச் சொல்கிறார்கள். ஐந்துநாட்களாக ஆள் இல்லை!

இதேமாதிரி இன்னொரு சம்பவமும்! மகளிர் அணிப் பிரமுகர் ஒருவர் தன்னுடைய மகனுக்கு பொதுக்குழு உறுப்பினர் பதவியைக் கேட்டு ஸ்டாலினிடம் போனார். அவர் இல்லை என்று மறுத்து திருப்பி அனுப்பிவிட்டாராம். அந்தப் பிரமுகர் கருணாநிதியிடம்,  'என்னைப் பார்த்தாலே தம்பிக்குப் பிடிக்கல. நான் அடிக்கடி போய் கனிமொழியைப் பார்க்கிறேன்ற வருத்தமாகக்கூட இருக்கலாம்’ என்று சொல்ல... உடனடியாக ஸ்டாலினை வரச்சொல்லி அந்த பிரமுகர் முன்னாலேயே கடிந்து கொண்டாராம் கருணாநிதி.

மொத்தத்தில் கருணாநிதி - ஸ்டாலின் விரிசல் அதிகமாகி வருகிறது! 

கேபிள் சுறுசுறு!

அரசின் கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் நிறுவனமானது, தகவல் தொழில்நுட்பத் (ஐ.டி) துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. பின்னர், இதை முதல்வரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி நடந்தது. ஆனாலும், கேபிள் டி.வி. தொடர்பான தொழில்நுட்பப் பணிகளை ஐ.டி. துறையினர்தான் கவனிக்க வேண்டும் என்பதால், முதல்வரே தன்னிடம் வைத்திருக்க விரும்பவில்லை என்கிறார்கள்.  இந்த நிலையில், கேபிள் டி.வி. நிறுவனத்தை கடந்த ஆட்சியில் செய்ததைப்போல அல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் இதற்கென அலுவலகம் அமைக்கவும், மாநில அளவில் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பணிகளுக்காக இப்போதே கேபிள் டி.வி. நிறுவனத் தலைவரை நோக்கி, கூட்டமாகப் படையெடுக்கிறார்களாம்!

மிஸ்டர் கழுகு: மதுரை மீட்பு ஸ்டார்ட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு