Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே-28 : 19.10.83

பிரீமியம் ஸ்டோரி
பழசு இன்றும் புதுசு

'என் கண்ணின் கண்மணிகள் அம்மன், மதி, மதுவுக்கு, உங்களின் ஐயாவின் அன்​பான வணக்கங்கள். 

##~##

என் செல்வங்களே! நான் உங்களுக்குக் கடிதம் எழுதவில்லை என்று கலங்கி இருப்பீர்கள். தினம் தினம் கடிதம் எழுத எனக்கு ஆவல்தான். ஆனால், ஒரு கடிதமேனும் எழுத இயலாத நிலை. இனி எழுதலாம். எழுதுவேன். என் அம்மன், என்னை எண்ணிக் கலங்காதே. குழந்தைகளைக் கண் கலங்காமல் கவனி. என் கண்மணி அம்மன், நான் இல்லையே தவிர... எங்களின் விலை மதிப்பில்லா சொத்துகள், மதி, மதுவே. அவர்களை அறிவில் சிறந்தவர்களாகவும், ஆரோக்கியத்தில் சிறந்தவர்களாகவும் வளர்க்க வேண்டியது உனது கடமை. இப்போது அவர்​களின் தாயும் நீ, தந்தையும் நீதான்.

என் அம்மன், பிள்ளைகளைக் கவனிக்கும் பக்குவம் நீ அறியாததல்ல. எனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணிக் கவலையில் பிள்ளைகளிடம் கவனக் குறைவாக இருக்க வேண்டாம். என் அம்மன், நாம் பல தடவை பிரிந்தோம்; சந்தித்​தோம். ஆனால், இப்பிரிவு சந்திப்பைத் தருமா?

நான் இறந்தாலும் உன், பிள்ளைகளின் நினைவுடனேயே இறப்பேன். என் அம்மனுக்கும், மதி, மதுவுக்கும் ஐயாவின் அன்பான முத்தங்கள். உங்களின் சுக துக்கத்துக்கு அடிக்கடி கடிதம் எழுது.

வானில் மதி ஒன்றென்பர்

நானோ மூன்றென்பேன்

ஏனென்றால் என் குழந்தைகள்

மதிவண்ணனும் மதுமதியும்

இரு வான் முழுமதி அல்லவோ

எனவே, வானில் மதி மூன்றென்பேன்.

மாமாவுக்கு, எனக்கு வேண்டியவர்களுக்கும், சுகம் சொல்லவும். அவர்களையும் எனக்கு அடிக்கடி எழுதும்படி சொல்லவும். எனக்கு வரும் கடிதங்கள் தணிக்கை செய்த பிறகே எனக்குத் தருவார்கள். மதியும் ஐயாவுக்குக் கடிதம் எழுது.

அன்புள்ள சகோதரி பவளக்கிளி...

எமது பிடிபாடின் பின், ரகசிய பொலி​ஸாரின் கொடுமையான சித்ரவதைகளை சகிக்க முடியாமல் திணறுகிறோம். பின், அதே வகையான கொடுமைகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டபோது, உடல்

பழசு இன்றும் புதுசு

மரத்து, அவையும் சுலபமாகத் தாங்கும் நிலை எமக்கு ஏற்பட்டு, இன்னும் மனிதனாய் நிமிர்ந்து நடமாடுகிறோம். உண்மையில் எமது ஓரளவான ஆரோக்கியம் எனக்கு ஆரோக்கியமே. எமக்கு நடந்த மிருகத்தனமான கொடுமைகளை நான் விவரிப்பின் நீங்கள் மயக்கமடைவது உறுதி.

எனது ஆசை எல்லாம் வேறு யாருக்கேனும் இந்த வகையான கொடுமை​கள் ஏற்பட இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதுதான். இவ்வகைக் கொடுமைகளின் பின் நீதிமன்றத்தில் நிறுத்தி, விசாரணை என்ற போர்வையில் மரண தண்டனையும் நீதிமன்றம் விதித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு, மிகக் கேலிக்குரிய தீர்ப்பு என்பது பத்திரிகைகளைப் படித்தால் தெரியும். என்னை வெளியே விடக் கூடாது என்று ஒரே கொள்கையில் வஞ்சம் தீர்த்துள்ளார்கள். நான் சிறிதேனும் இது பற்றிக் கலங்கவில்லை. மேலும், நான் இதற்கு முன் கடிதம் எழுத முடியாத நிலை ஏற்பட்டதன் காரணத்தால் எழுதவில்லை. இப்போது தாராளமாய் எழுதலாம்.

அடிக்கடி அம்மன், மதி, மதுவை எண்ணி என் மனம் கலங்கும். நீங்கள் அவர்களுக்கு ஆறுதலாய்

பழசு இன்றும் புதுசு

இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் மனதைத் தேற்றிக்கொள்வேன். பவளக் கிளி, அம்மன் பிள்ளைகளை கவனமாய் கவனிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

முன்பு தலைவரும் நானும் மற்றும் எல்லோரும் பனாக்கொடை ராணுவ முகாமில் தடுப்புக் காவலில் இருந்தோம். இப்போது மரண தண்டனையின் பின்னர் நானும் ஜெகனும் வெலிக்கடையில் உள்ளோம். நீங்களும் நண்பர்களும் அடிக்கடி கடிதம் எழுதவும். பவளக்கிளி, உங்கள் வீட்டு விலாசத்துக்கு நான் போடும் கடிதங்களை அம்மனிடம் கொடுக்கவும். அதில் ஏதாவது சிரமம் இருப்பின், எனக்குத் தெரியப்படுத்தவும். நண்பர்கள் தங்களை நன்கு வளர்த்துக்கொள்ளவும். மிகுதி உங்கள் பதில் கண்டு. நண்பர்களின் வளர்ச்சியே எங்கள் மகிழ்ச்சி.

பின் குறிப்பு :- என் உடல், பொருள், ஆவி அனைத்தும் இனத்துக்குச் சொந்தமானது. எனவேதான், என் மரண தண்டனையின் பின் பிறருக்குத் தேவையான உறுப்புகள் என்னில் இருந்து அகற்றிய பின், எஞ்சிய உடலை யாழ் மருத்துவ மாணவர் பீடத்திடம் ஒப்படைக்கும்படியும், என் கண்ணொளியைக் கண்ணொளி வேண்டும் ஒரு தமிழ் மகனுக்குக் கொடுக்கும்படியும், அந்தக் கண்ணொளி மூலம் மலரப்போகும் தமிழ் ஈழத்தை விரைவில் காண்பேன் என்றேன்.

முக்கியம். நான் இறந்த பின்பும், என் பெற்றோர்க்கோ, மனைவி மக்களுக்கோ என் உடல் சொந்தம் இல்லை. என் இனத்துக்கே சொந்தம் என்பதாகும். நான் என் நலன் விரும்பியா? தீர்மானிக்க வேண்டியது நீங்களே!

இனத்தின் விடுதலையே என் விடுதலை...

- செ.குட்டிமணி

 படுகொலையை மேற்பார்வையிட ஹெலிகாப்டர்!

வெலிக்கடை சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகளைப் படுகொலை செய்தது யார்?

''திட்டமிட்டது சிறை அதிகாரிகள்; செய்து முடித்தது சிங்கள வெறியர்கள்; வேடிக்கை பார்த்தது ராணுவம்'' என்கிறார்கள்.

வெலிக்கடை சிறை, டச்சுக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது. நடுவே வட்டத்துடன் சிலுவை வடிவில் அமைந்த மூன்று அடுக்கு 'சேப்பல்’ கட்டடத்தில், ஜூலை 25 அன்று சுமார் 3 ஆயிரம் கைதிகள் இருந்தனர். தமிழ்க் கைதிகள் அதில் 140 பேர்.

கட்டடத்தின் கீழ்ப் பகுதி ஏ-3, பி-3, சி-3, டி-3 என்று நான்கு விசேஷப் பிரிவுகளாகப் பிரிக்கப்​​பட்டி​ருக்கிறது. பி-3 பகுதியில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை இருந்தனர். சி-3 பகுதியில் 28 தமிழ் அரசியல் கைதிகள் இருந்தனர். டி-3-ல் 29 தமிழ்க் கைதிகள் ஏ-30லும் கட்டடத்தின் மாடிப் பகுதிகளிலும் சிங்களக் கைதிகள்.

ஜூலை 24, புத்தரின் புனித நாளான 'போயா’ தினம்; உபவாச நாள். மறுநாள்தான் படுகொலைகள் நடத்தப்பட்டன. புத்தர் சிலையின் கீழே தமிழ்ப் பிணங்கள் குவிக்கப்பட்டன.

ஊரடங்குச் சட்டம் உள்ளபோது கொலை​களை நடத்துவது ஒரு சாமர்த்தியமான யுக்தி. கதவைத் திறந்துகொண்டு கைதிகளைக் கொல்லப்​போகும்போது, தப்பி வெளியே ஓடி​னாலும் மரணம் நிச்சயம்!

ஜெயில் அதிகாரிகள் சிங்களக் கைதிகளில் மிக மோசமானவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சாராயம் கொடுத்துத் தயார் செய்தார்கள். மணி 2-30 ஆனதும் கத்தி, கோடரி, ரம்பம், இரும்புக் கம்பி, குத்தூசிகளுடன் சிங்களக் கைதிகள் 'சேப்பல்’ கட்டடத்துக்குள் நுழைந்தார்கள்.

குட்டிமணி, ஜெகன் ஆகியோரை நடு வட்டத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். பிறகு கண்களைத் தோண்டி எடுத்தார்கள். இந்தக் கொடுமையைச் செய்து முடித்த பிறகு, 'ஜெய வேவா’ (சிங்களத்தில் வெற்றி கோஷம்) கூக்குரல்களும் எழும்பின.

பி-3 ல் ஆறு கொலைகள் 45 நிமிடத்​துக்குள் நடந்தன. பிறகு டி-3 ல் 29 பேர் கொல்லப்​பட்டார்கள். கடற்படை வண்டிக்கு வெடிகுண்டு வைத்ததாகக் கைதான (!) சிறுவன் மயில்​வாகனன், டி-3-ல் இருந்தான். அவன் தப்பி ஓடியபோது, ஒரு கைதி அவனை மறைத்துவைத்தார். அதைப் பார்த்துவிட்ட ஜெயிலர், மயில்வாகனனைத் தானே பிடித்து இழுத்து வந்து கத்தியால் வெட்டிக் கொன்ற பயங்கரம் நடந்தது.

மறு நாள் இரவு சி-3- ல் இருந்த 28 தமிழ்க் கைதிகளும் இடம் மாற்றப்பட்டார்கள்.

கீழ்ப் பகுதியில் எதிரெதிரே 5 அறைகளும் மறுபுறம் 3 அறைகளும் உண்டு. மாடி ஒரு நீண்ட ஹால். அதில் பாதிரியார் சிங்கராயர், பாதிரியார் சின்னராஜா, டாக்டர் ராஜசுந்தரம், டேவிட், நித்தியானந்தன், டாக்டர் தர்மலிங்க, கோவை மகேசன், போதகர் ஜெயகுலராஜா, டாக்டர் ஜெயதிலகராஜா ஆகிய 9 பேர் வைக்கப்பட்டிருந்தனர்.

சி-3 கைதிகள் 28 பேரை இதே கட்டடத்துக்குக் கொண்டுவந்ததன் ரகசியம் 27-ம் தேதி மாலை 4 மணிக்குத் தெரிந்தது. அப்போது சிங்களக் கைதிகள் ஆயுதங்களுடன் ஒய்-ஓ கட்டடத்தில் நுழைந்தார்கள். அவர்களுக்குத் தலைமை தாங்கி வந்தது யார் தெரியுமா? சேப்பால ஏகநாயகா! இத்தாலி விமானத்தை ஹைஜாக் செய்த அதே 'மன நோயாளி’க் கைதிதான். இந்த முறையும் கதவுகளைத் திறக்கும் பிரச்னை இல்லை.

கீழே இரண்டாவது கொட்டடியில் இருந்த யோகராஜா மட்டும் தப்பித்தார். அவருக்கும் உடன் இருந்தவர்களுக்கும் கோடரி வெட்டுகள் விழுந்தன. மூவரும் சுருண்டு விழுந்ததும் இறந்ததாகக் கருதி விட்டுவிட்டனர். ஆனால், யோகராஜா அரை மயக்கத்தில்தான் இருந்தார்.

டக்ளஸ் இருந்த செல் கதவைத் திறக்க சிங்கள வெறியர்கள் முயற்சித்தபோது, உள்ளிருந்தவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். தங்கள் சாப்பாட்டுச் சட்டியில் வேண்டுமென்றே முன்னெச்சரிக்கையாக வைத்திருந்த மீதி ரசத்தை கொலைகாரர்கள் கண்ணில் கொட்டினார்கள். எல்லாவற்றையும் மீறிக் கம்பிக் கதவை வெளிப்புறம் இழுத்துத் திறக்க வெறியர்கள் முனைந்தபோது, கைகளால் தடுத்தனர்.

டாக்டர் ராஜசுந்தரம் சிங்களக் கைதிகளிடம், ''நமக்குள் ஏன் தகராறு?'' என்று சமாதானம் செய்யப் போனார். அவர் தலையில் கோடரி விழ, ஊற்றாக ரத்தம் பெருகிக் கீழே விழுந்து இறந்தார். நித்யானந்தன், போதகர் ஜெயகுலராஜா ஆகியோருக்குக் கண் அருகே பலத்த காயங்கள் ஏற்பட்டன.

கீழ்ப் பகுதியில் 17 பேர் உட்பட 18 பேர் இறந்தார்கள். அதே நேரத்தில், ராணுவ அதிரடிப் படை நுழைந்தது. கண்ணீர்ப் புகை வீசி வெறியர்களை விரட்டினார்கள். இரண்டே நாட்களில் சில மணி நேரத்தில் 58 பேர் செத்தார்கள்.

முதல் நாள் சம்பவத்தின்போது, சிறைக்கு மேலே வானத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுற்றிக்கொண்டு இருந்ததாம் - புத்தர் சிலைக்கு அருகே கிடந்த பிணக் குவியலை வட்டமிட்ட கழுகுகளைப்போல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு