Published:Updated:

மன்மோகன் சிங் - சோனியா மோதல்?

மன்மோகன் சிங் - சோனியா மோதல்?

பிரீமியம் ஸ்டோரி
##~##

சொன்னால் நம்ப மாட்டீர்கள்...  நம்பிக்கைக்கு உரிய தோழமை யுடன் இருந்த மன்மோகனும் சோனியாவும் இன்று ஒருவருக்கு ஒருவர் மனக் கசப்புடன் வலம் வருகின்றனர்! 

குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 12-ம் தேதி புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா. அப்போது பிரதமர், ''2014-ல் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னால், இதுதான் கடைசி அமைச்சரவை மாற்றம்...'' என்றார். பிரதமரின் இந்த அறிவிப்பு, டெல்லியில் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. ''தனது விருப்பப்படி அமைச்சரவையை மாற்றி அமைக்க, சோனியா விடவில்லை. அந்தக் கோபத்தைத்தான் பிரதமர் இப்படி வெளிப்படுத்தினார்!'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மத்திய இணை அமைச்சர்களாக ஸ்ரீகாந்த் ஜேனா, குருதாஸ் காமத் ஆகிய இருவருக்கும் தனிப் பொறுப்பு தரப்பட்டு இருந்தது. ஆனால், இருவருமே பதவி ஏற்க வரவில்லை. டெல்லியை விட்டே, குருதாஸ் காமத் போய்விட்டார். தன் வருத்தங்களைக் கடிதமாக வடித்து, பிரதமருக் கும் சோனியாவுக்கும் அனுப்பினார். தனிப் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஜேனா, 'ஒரிஸ்ஸாவைப்பற்றி மத்திய அரசுக்கு அக்கறை இல்லை!’ என்று சொல்லி, விழாவைப் புறக்கணித்தார்.

மன்மோகன் சிங் - சோனியா மோதல்?

சட்ட அமைச்சராக இருந்த வீரப்ப மொய்லிக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் விவகாரத் துறை ஒப்படைக்கப்பட்டது. அவரது கோபமும் பிரதமரிடம் தான் திரும்பியது. ''சில சுயநலவாதிகளின் பிரசாரங் களைவைத்து என்னை மாற்றி உள்ளனர். சட்ட அமைச்சகத்தின் நிர்வாகம் சரியாகச் செயல்படவில்லை என்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கூறுவதைவைத்து என்னை மாற்றுவது எப்படி? நீதிமன்ற வழக்குகளில் அரசுக்குப் பின்னடைவு இருக்கலாம். அது அந்த அமைச்சகங்களின் நிர்வாகத் திறமை இன்மை. அதற்கு என்னைப் பலிகடா ஆக்குவதா?'' என்று குமுறினார் மொய்லி.

ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா, மேற்கு வங்க முதல்வராக ஆனதால், அவரது கட்சியைச் சேர்ந்த முகுல் ராய், ரயில்வே இணை அமைச்சர் ஆனார். இந்தப் பதவி ஏற்பு நடந்த பிறகு நடந்தது ஒரு ரயில் விபத்து. பிரதமர் அலுவலகம், முகுல் ராயிடம், 'அஸ்ஸாம் மாநிலத்தில் காம்ரூப் என்ற இடத்துக்குச் சென்று, ரயில் விபத்தைப் பார்வை இடுங்கள்’ என்றது. அவர் உடனே, 'பிரதமரைப் போகச் சொல் லுங்கள்’ என்றாராம். காரணம், கேபினெட் அந்தஸ்து கிடைக்காத வருத்தம் அவருக்கு.

'சட்டத் துறையை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கபில்சிபலிடம் பிரதமர் சொன்னார். ஆனால், கபில்சிபல் ஏற்கவில்லை. 'நீங்கள் சொன்னதற்காகத்தான், தொலைத் தொடர்புத் துறையை வாங்கினேன். எனக்கு மனித வளம் மட்டுமே போதும்.’ என்றாராம். எனவே, சட்டத் துறை சல்மான் குர்ஷித்துக்குத் தரப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களில் மூன்றாவது முறையாக நடந்த இந்த அமைச்சரவை மாற்றத்தில், தான் நினைத் ததை அப்படியே பிரதமரால் செய்ய முடியவில்லை... மற்றவர்களுக்கு மகிழ்ச்சியானதையும் செய்து தரமுடியவில்லை.

இதற்குக் காரணம், பிரதமருக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு என்று சொல்லப்படுகிறது. 'பிரதமர் சொல்வதை, காங்கிரஸ் தலைமை கேட்பது இல்லை...’ என்றும் 'சோனியா சொல்வதை, பிரதமர் கேட்பது இல்லை...’ என்றும் சொல்கிறார்கள் டெல்லியில்.

''சில முக்கியமான துறைகள் மீது பிரதமரால் கைவைக்க முடியவில்லை. அவர்களது துறைகளில் தலையிடவும் பிரதமருக்கு அனுமதி இல்லை. சோனி யாவின் சுற்றுவட்டாரம் இந்தத் தடையை விதித்து உள்ளது. இதனால் விழி பிதுங்கி நிற்கிறார் பிரதமர். அமைச்சரவை மாற்றத்துக்கு முன் சோனியாவும் பிரதமரும் நன்கு பேசியும் ஒருமித்த கருத்து ஏற்படவே இல்லை!'' என்கிறார்கள்.

''யாரை அமைச்சர் ஆக்கலாம் என்று பிரதமர் கருதுகிறாரோ, அவரை நியமிக்கலாம். யாரிடமும் எந்த ஆலோசனையும் பெறாமல், இலாகாவை ஒதுக்கலாம். இது அவரது அதிகாரம்தான். ஆனால், சோனியாவும் சுற்றி உள்ளவர்களும் அதற்கு அனுமதிப்பது இல்லை. எனவே, கபில்சிபல், ப.சிதம்பரம் ஆகிய இருவரிடம் மட்டும்தான் பிரதமர் மனம்விட்டுப் பேசுகிறார். மற்றவர்களிடம் பேசுவதைத் தவிர்க்கிறார்'' என்றும் சொல்கிறார்கள்.

''விவசாயத் துறை அமைச்சரான சரத் பவார், அறிவிக்கப்படாத கிரிக்கெட் அமைச்சராகத் தொடர்கிறார். ஆனால், நாட்டில் சர்க்கரைத் தட்டுப் பாடு, மத்திய கோடௌன்களில் எலிகளின் லூட்டி ஆகியவற்றைத் தடுக்க அவர் எதையும் செய்யவில்லை. மின் தட்டுப்பாட்டை நீக்க, சுசில் குமாரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் அடுத்த நாட்டுத் தலைவரின் உரையைப் படித்து அவமானப்பட்டார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. வயலார் ரவி, சிவில் விமானத் துறையின் நஷ்டத்தைக் குறைக்க எதுவும் செய்யவில்லை. 'அன்புமணி ஊழல் செய்தாரா?’ என்பதை ஆராய்ச்சி செய்த சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், தனது துறை நடவடிக்கைகளில் ஈடுபடவே இல்லை. மு.க.அழகிரியைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால், இவர்கள் யாரையும் பிரதமரால் கைவைக்க முடியவில்லை. உள்ளூர் அரசியல், கூட்டணி அரசியல், சோனியாவின் குடும்ப விசுவாச அரசியல் போன்றவற்றால்தான், இவர்களை நீக்க முடியவில்லை. இந்தச் சிக்கல்கள் தெரியாமல், 'செயல்படாத பிரதமர் என்ற பட்டம் எனக்கு வருகிறதே’ என்று பிரதமர் வருத்தப்படுகிறார்!'' என்றும் சொல்கிறார்கள்.

'இள ரத்தம், அமைச்சரவைக்கு வேண்டும்’ என்று பிரதமர் கேட்க... காங்கிரஸ் தலைமை மிலிந்த் தேவ்ரா, ராஜஸ்தான் ராஜ குடும்பத்தின் ஜிதேந்திராவையும் சிபாரிசு செய்தது. இவர்கள் இருவரும் ராகுல் காந்தியின் ஆட்கள்.

பிறகு எப்படி பிரதமரால் சிரிக்க முடியும்?

- சரோஜ் கண்பத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு