Published:Updated:

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

தமிழருவி மணியன்

பிரீமியம் ஸ்டோரி

எம்.ஜி.ஆர்.  செய்த புரட்சி?

##~##

மிழகத்தின் திரையுலக வரலாற்றிலும், அரசியல் வரலாற்றிலும் அழிக்க முடியாத தனி இடத்தைப் பெற்றவர் எம்.ஜி.ஆர். - 'நடிப்புக்கான பாவங்களைச் சரியான விகிதத்தில் வெளிப்படுத்த இயலாத முகம்’ என்று புகழ்பெற்ற இயக்குநர் எல்லிஸ்.ஆர்.டங்கனால் மறுதலிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் முகம்தான், தமிழரின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டது. அந்த முகத்தை மாநிலம் முழுவதும் காட்டியே தி.மு.கழகம் அண்ணாவின் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது. சிவாஜி கணேசனைப்போல் எம்.ஜி.ஆர். நடிப்பின் சிகரம் தொட்டவர் இல்லை. ஆனாலும், கலையுலகம் அவருடைய காலடியில் கிடந்தது. கலைஞரைப்போல் எம்.ஜி.ஆர். சாகச அரசியல்வாதி இல்லை. என்றாலும், கலைஞரின் அரசியல் சாணக்கியம் எம்.ஜி.ஆர். முன் எடுபடவே இல்லை. எம்.ஜி.ஆர். உண்மையில் ஒரு தனிப் பிறவிதான்!

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

 கலைஞரால் 'புரட்சி நடிகர்’ என்று புகழப்பட்ட எம்.ஜி.ஆர்., எந்த விதமான அடிப்படையும் இன்றி மதியழகனின் தம்பி கே.ஏ.கிருஷ்ணசாமியால் கடற்கரைக் கூட்டத்தில் ஒரு கணத்தில் 'புரட்சித் தலைவர்’ என்று அறிவிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவரானதும், ஜெயலலிதா புரட்சித் தலைவி யானதும் தமிழர்தம் 'புரட்சி’ குறித்த புரிதலுக்கான அடையாளம் இன்றி, வேறு ஒன்றும் இல்லை. பிழைப்பு அரசியல்வாதிகளுக்கும் பாமரத்தனமான ரசனையில் ஊறித் திளைக்கும் தொண்டர் குழாமுக்கும், லெனின், சேகுவேரா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எல்லாம் ஒன்றுதான். 'புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர்., காந்திய உண்ணாவிரதத்தைக் கையாண்டபோதுகூட ஒரு புரட்சியை உருவாக்கி இருக்கிறார்.

காந்திய யுகத்தில் உண்ணாவிரதம் ஒரு வலிமை மிக்க அரசியல் ஆயுதமாக வெள்ளையர் ஆட்சிக்கு

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

எதிராகப் பயன்படுத்தப்பட்டது. கோரிக்கை நிறை வேறும் வரை உண்ணாவிரதம் நீடிப்பதுதான், காந்தியத்தின் சிறப்பு அம்சம். அடையாள உண்ணாவிரதம், ஒரு நாள் உண்ணாவிரதம், ஒரு மணி நேர உண்ணாவிரதம் இருப்பதற்கு காந்தியப் போர் முறையில் கடுகளவும் இடம் இல்லை. ஆனால், கால நடையில் 'சாகும் வரை உண்ணாவிரதம்’ என்பது விளம்பரத்தில் நாட்டம் உள்ள மலினமான மனிதர்களுக்குச் சாத்தியமாகப்படவில்லை. மக்களின் பார்வையில் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள 'ஒரு நாள் உண்ணாவிரதம்’ இருப்பது அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையானது.

எம்.ஜி.ஆர்.தான் முதன் முதலில் வெறும் 8 மணி நேர உண்ணாவிரதத்தை அரசியல் அரங்கில் அறிமுகம் செய்து புரட்சிகரமான சாதனை படைத்தார்.

தன்னுடைய பால்ய பருவத்தில் தாயின் அரவணைப் பில் கும்பகோணத்தில் குடியிருந்தபோது, மூன்று நாட்கள் உண்ண உணவின்றிப் பசித்துக்கிடந்ததை 'நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தன் சுய சரிதையில் விளக்கமாக எழுதிய எம்.ஜி.ஆர்., பசியின் கொடு மையை முழுமையாக அனுபவித்தவர். தன்னைத் தேடி வந்தவர்களின் பசியாற்றுவதில் அவருக்கு இணையாக இன்னொருவர் இல்லை. அந்தக் கருணை மனம் காரணமாகவே, 'எல்லோரும் 8 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தால் போதும்’ என்று அவர் முடிவு எடுத்திருக்கக்கூடும்.

மதுரை திலகர் திடலில் 3-5-1974 அன்று தி.மு.க. அரசை எதிர்த்து, தோழமைக் கட்சிகளுடன் எம்.ஜி.ஆர். உண்ணாவிரதம் இருந்தார். சித்திரைத் திருவிழாவின்போது நடந்த எம்.ஜி.ஆரின் 8 மணி நேர உண்ணாவிரதமும் இன்னொரு திருவிழாவாகவே மதுரை மக்களால் பாவிக்கப்பட்டது. மூங்கில் தடுப்பு வரிசையில் காத்திருந்து பல்லாயிரம் மக்கள் எம்.ஜி.ஆர். தரிசனத்தில் பரவசப்பட்டனர். அதே நாளில் மதுரை முனிச்சாலையில் தி.மு.க-வினர் சிலர் உண்ணும் விரதத்தில் ஈடுபட்டு அரசியல் நாகரிகத்தை உயர்த்திப் பிடித்தனர்.

எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது தி.மு.க. அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த எம்.ஜி.ஆர்., முதலமைச்சராகப் பவனி வந்தபோதும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். தமிழகத்தின் தேவைக்கேற்ப மத்திய அரசு அரிசியை வழங்காமல் அலட்சியப்படுத்தியபோது, 1982 அக்டோபரில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து உண்ணாவிரத அறிவிப்பை வெளியிட்டார். அதற்கு முன்பு மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தவும் வழி வகுத்தார். மக்களின் மகத்தான ஆதரவை மரணிக்கும் நாள் வரை பெற்றிருந்த எம்.ஜி.ஆரின் ஆளுமைக்கு மத்திய அரசு பணிந்து நின்றது. அவருடைய காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த 8 மணி நேர உண்ணாவிரதம், அவசரம் அவசரமாக மத்தியக் கிடங்கில் இருந்து அரிசியை வரவழைத்துவிட்டது. எம்.ஜி.ஆரைப்போலவே ஜெயலலிதாவும் உண்ணாவிரத மேடையில் உட்கார்ந்தார். இருவருக்கான களங்களும் வெவ்வேறாக அமைந்தன.

தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வராகவும், இளைய வயதில் பொறுப்பேற்ற முதல் இளம் முதல்வராகவும் பெருமை பெற்ற ஜெயலலிதா, ஜூலை 3, 1994-ல் காவிரி நீர்ப் பிரச்னையில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். ஜெயலலிதா தன் அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். வழியில் 8 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துவிடவில்லை. 'கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும்’ என்றார். காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்னையில் தீர்வு காண, 'மத்திய அரசு காவிரி ஆணையத்தின் தீர்ப்பின்படி தண்ணீர் விடப்படுகிறதா என்று கண்காணிக்க ஒரு குழு அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துத் தொடங்கப்பட்ட ஜெயலலிதாவின் உண்ணாவிரதம், நான்கு நாட்கள் நீடித்தன. அவரின் உறுதி கண்டு அஞ்சிய மத்திய அரசு நீர் வளத் துறை அமைச்சராக அன்று இருந்த வி.சி.சுக்லாவை அனுப்பிவைத்தது. கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியைப் பெற்ற பின்பே, ஜெயலலிதா தன் உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.

பதவி நாற்காலியை 2006-ல் கலைஞரிடம் பறிகொடுத்து, எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்த ஜெயலலிதா, வீழ்ந்துபட்ட தன் அரசியல் செல்வாக்கை மீண்டும் உயர்த்திப் பிடிக்க, காவிரிப்

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

பிரச்னையையே கையில் எடுத்தார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வற்புறுத்தி, வள்ளுவர் கோட்டத்தின் முன் உண்ணாவிரதத்தை 20-3-2007 அன்று தொடங்கினார்.

மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர். ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் கர்நாடகத்தில் எதிர் விளைவை ஏற்படுத்தியது. தமிழகத்துக்கு வரும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சாலைகள் மறிக்கப் பட்டன. பெங்களூருவிலும், மாண்டியாவிலும் ஆர்ப்பாட்டங்கள் அரங்கேறின. விவசாயிகளின் தலைவர் மாதே கவுடா, மாண்டியாவில் எதிர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். கன்னட வெறியர் வட்டல் நாகராஜ் ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலம் நடத்தி, 'ஜெயலலிதாவின் கோரிக் கையை மத்திய அரசு அங்கீகரிக்கக் கூடாது!’ என்று மகஜர் அளித்தார். கர்நாடக ஜனதா தளம் ஜெயலலிதாவின் உண்ணாவிரதம் நடந்த நாளைக் கறுப்பு தினமாக அறிவித்தது. இன்று வரை காவிரிப் பிரச்னையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

ராஜபக்ஷேவின் அரக்கத்தனமான ராணுவ நடவடிக்கைகளால் ஈழத்தில் அன்றாடம் தமிழினம் கொன்று குவிக்கப்பட்டபோது, தாயகத் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கியது. 2004-ல் நடந்த தேர்தலில் மிக மோசமான தோல்வியைத் தழுவி, மக்களவையில் பிரதிநிதித்துவம் இழந்திருந்த அ.தி.மு.க., மறு உயிர்ப்புக்கான தருணத்தைத் தேடி நின்றபோது, ஈழ மக்களின் துயரம் அதன் கண் முன் தென்பட்டது. ஜெயலலிதா உடனே களத்தில் இறங்கினார். போர் நிறுத்தம் வேண்டி 9 மார்ச், 2009 அன்று மூன்றாவது முறையாக உண்ணாவிரதத்தில் ஒரு நாள் உட்கார்ந்தார். 'தமிழருக்கு சம உரிமையும், சம வாய்ப்பும் இலங்கைத் தீவில் கிடைக்க இந்தியா உதவ வேண்டும்’ என்று குரல் கொடுத்தார். ஈழத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் மறுவாழ்வு பெறுவதற்குத் தனது சொந்தப் பணம்

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

5 லட்சமும், அ.தி.மு.க-வின் சார்பில் 1 கோடியும் தருவதாக அறிவித்தார். அன்று மாலை 5 மணிக்கு வைகோ பாசம் பொங்க அளித்த பழரசம் அருந்தி உண்ணாவிரதம் முடித்தார். ஆனால், ஈழத் தமிழருக்கு இன்று வரை துன்பத்தில் இருந்து விடுதலை வாய்க்கவே இல்லை.

தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டங் களில் ஜெயலலிதா, 'ஈழத் தமிழருக்காக இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும்’ என்று ஆர்ப்பரித்தார். முள்ளி வாய்க்கால் அவலம் அழிவின் உச்சத்தை அடைந்தபோது தமிழகத் தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. வாக்குக்காக தேர்தல் களத்தில் வாய் வீரம் காட்டி நாக்கு யாகம் நடத்தியவர்கள், மௌனப் பார்வையாளர்களாக முடங்கிவிட்டனர். சட்டமன்றத் தேர்தலில் இனத் துரோகத்தால் கலைஞர் வீழ்ந்தார். ஆட்சி பீடத்தில் மூன்றாவது முறை மக்களால் அமர்த்தப்பட்ட ஜெயலலிதா, சட்டப்பேரவையில் ஈழத் தமிழர் நலன் நாடி இந்திய அரசு செயற்பட வற்புறுத்தித் தீர்மானம் இயற்றினார். ஏழு கோடி மக்களின் மன உணர்வைப் பிரதிபலிக்கும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்துக்கு இந்திய அரசு மரியாதை தந்ததா? பொருளாதாரத் தடை கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும், இலங்கையுடன் புதிய பொருளாதார ஒப்பந்தங்கள் போடுவதை இந்திய அரசு நிறுத்தவில்லை. தமிழரின் இன உணர்வை அவமதிக்கும் வகையில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்குக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் அரசு, முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழகத்து மக்களையும் திட்டமிட்டு அவமானப்படுத்துகிறது. ஈழத் தமிழருக்காக உண்ணாவிரதம் நடத்தி, சட்டப் பேரவையில் பொருளாதாரத் தடை வேண்டித் தீர்மானம் இயற்றிய ஜெயலலிதா, இனி ஈழத் தமிழர் உரிமை காக்க என்ன செய்யப்போகிறார்? காலம் ஆவலுடன் காத்திருக்கிறது நடக்கப்போவதை எதிர் பார்த்து!

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு