Published:Updated:

சிங்கப்பூர்.. தொப்பி..மின்கம்பம்.. இப்படியும் ஜெயிக்கலாம் அ.தி.மு.க வாரிசுகள்.

சிங்கப்பூர்.. தொப்பி..மின்கம்பம்.. இப்படியும் ஜெயிக்கலாம் அ.தி.மு.க வாரிசுகள்.
சிங்கப்பூர்.. தொப்பி..மின்கம்பம்.. இப்படியும் ஜெயிக்கலாம் அ.தி.மு.க வாரிசுகள்.

ஆர்.கே நகரில் ஜெயிச்சு, நாட்டுமக்களுக்கு மட்டுமே நல்லது பண்ணணும்கிற நோக்கத்தோட ராப்பகலா முழிச்சிக்கிட்டு,  தினம்தினம் சண்டைபோட்டுக்கிட்டு, பிரேக்கிங் நியூஸ்களை அள்ளித் தெளிச்சு கண்ணுல தண்ணி வர வெச்சிக்கிட்டு இருக்கிற அ.தி.மு.க-வின் வாரிசுக் கட்சிகளுக்கு, தேர்தலில் ஜெயிக்க எப்படி எல்லாம் வாக்கு கேட்கலாம்னு  நம்ம சார்பில் சில ஐடியாஸ்...

* மொதல்ல அ.தி.மு.க அம்மா கட்சியின் வேட்பாளரான தினகரன் மேட்டருக்கு வருவோம். ஊரே அவரை சிங்கப்பூர் குடிமகன்னு சொல்லிக் குடைச்சல் கொடுத்துக்கிட்டு இருக்கு. ஆனா, அதையே அவர் தனக்கு சாதகமா பயன்படுத்திக்கொள்ளலாம். ஆமாங்க. தமிழ்நாட்டை சிங்கப்பூரா  மாத்துவேங்கிறதுதான் ஜெயலலிதாவோட தாரக மந்திரமே. அப்படின்னா சிங்கப்பூர்ல இருந்து மொத்த வித்தைகளையும் கற்ற ஒருத்தராலதானே சிங்கப்பூரா மாற்ற முடியும்? அப்படின்னா எனக்குத்தான் மக்கள் வாக்களிக்கணும்னு சொல்லிப் பார்க்கலாம். அதைவிட ஒருபடி மேலே போய், என்னை மைண்ட்ல வெச்சுதான் தமிழ்நாட்டை சிங்கபூரா மாத்துவேன்னு ஜெயலலிதா அப்போ சொன்னாங்கன்னு குந்தாங்குலையா எதையாவது அள்ளிப்போட்டு பிரசாரம் பண்ணலாம். தேர்தல் ஆணையமாகப் பார்த்துதான் எம்.ஜி.ஆரின் தொப்பியையே எங்களுக்கு ஒதுக்கியிருக்காங்க. இது ஏழைகளின் தொப்பி, இனத்தின் தொப்பி, எம்.ஜி.ஆரின் தொப்பினு வாயில வந்ததையெல்லாம் சொல்லி வாக்கு கேட்கலாம். ஆனால் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தொப்பி... தொப்பி... எனக் கிண்டல் செஞ்சு வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது தினகரனின் பொறுப்பு.

* இந்தப் பக்கம் அது என்ன கட்சி... ஆங். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடுகிற ஓ.பி.எஸ் குரூப்புக்கான ஐடியா. அந்தக் கட்சிக்காரங்க, சிங்கப்பூரை வெச்சு ஜெயலலிதா சொன்ன வசனத்தைதான் சொன்னாங்க. ஆனா, அதுக்கு முன்னாடியே எம்.ஜி ஆர் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு என்னைப் பற்றி பாட்டாவே பாடி, குறியீடாகச் சொல்லிட்டுப் போயிட்டாருன்னு சொல்லி கொளுத்திப் போடலாம். ஆமா. எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து, அம்மா மூன்றெழுத்து, அதுக்குப் பிறகு பார்த்தா ஓ.பி.எஸ்-தான் மூன்றெழுத்து... அப்படின்னா என்னைத்தானே சொல்லிருக்கார்னு எகிடுதகிடாகச் சொல்லி, மக்களிடம் பிரசாரம் பண்ணலாம். அப்படினா  ஈ.பி.எஸ்-கூடதான் மூணு எழுத்துன்னு யாராவது கூட்டத்தில் சொல்லி கும்மாங்குத்தாக ஆக்கிவிட வாய்ப்பிருப்பதால், அவர்களை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். கடைசியாக, கடந்த தேர்தலில் சாதாரண கம்பம் தொகுதியில் நின்னபோதே எங்களை ஜெயிக்க வெச்ச மக்கள், இப்போது மின்கம்பத்திலே நிற்கும்போது ஜெயிக்கவைக்காமலா விடுவார்கள்? என பன்ச் அடித்து பரபரப்பைக் கூட்டலாம்.

*அடுத்து, லிஸ்ட்டுல இருக்கிறது தீபாதானே. அவங்களுக்கும் இருக்குது மக்களே ஐடியா. தினகரன் டீமும், மதுசூதனன் டீமும் சும்மா பிரசாரத்துக்காக, பேருக்காகத்தான்  எம்.ஜி.ஆருடைய பெயரை யூஸ் பண்றாங்க. ஆனா, நான் பேரவை பேருக்கே எம்.ஜி.ஆர் பேரைத்தான் யூஸ் பண்ணிருக்கேன் அப்படின்னா நான்தானே ஜினல் ஜினல் ஒரிஜினல் அ.தி.மு.க-னு தனி ட்ராக்கில் போய் பிரசாரம் பண்ணலாம். ஆனா பழக்கதோஷத்தில் பிரசார மேடைமேல் ஏறிக்கொண்டு நீங்கள்தான் கூற வேண்டும்னு மக்களைப் பார்த்துச் சொல்லிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது பேரவையின் பொறுப்பு. ஏன்னா அப்புறம் எதுக்கு நீங்க வந்திருக்கீங்கனு மக்கள் திருப்பிக் கேட்டுவிட வாய்ப்பு உண்டு.

பி.கு: அப்புறம், இந்த லிஸ்ட்டையும் தாண்டி அ.தி.மு.க-வின் வாரிசுன்னு யாராவது வந்தா, அவங்களுக்கும் சீரும் சிறப்புமாக ஐடியாக்கள் கொடுக்கப்படும்.

- ஜெ.வி.பிரவீன்குமார்