Published:Updated:

பிரதமர் மோடி சொல்லும் ‘புதிய இந்தியா’ இதுதான் !

பிரதமர் மோடி சொல்லும் ‘புதிய இந்தியா’ இதுதான் !
பிரதமர் மோடி சொல்லும் ‘புதிய இந்தியா’ இதுதான் !

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலியில் உரையாற்றி, பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இந்த ஞாயிற்றுக்கிழமை (26.03.2017) மனதின் குரல் 30-வது நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு நாடு முழுவதும் உள்ள 125 கோடி மக்களும் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மோடி பேசியதில் இருந்து :

"புதிய இந்தியா என்பது அரசின் திட்டமோ, அரசியல் கட்சிகளின் அறிக்கை அல்லது திட்டமோ அல்ல. மாற்றத்திற்கான 125 கோடி மக்களின் விருப்பமே புதிய இந்தியா. பரந்து விரிந்த இந்தியாவை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்ற இந்தியர்களின் உணர்வுப்பூர்வமான விருப்பம் அது. எனவே, நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு அனைவரும் பங்காற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் நமது புதிய இந்தியா கனவு நிறைவேறும். எனவே, புதிய இந்தியா என்பது 125 கோடி மக்களின் முழக்கமாக இருக்க வேண்டும்.

புறக்கணிக்கப்பட்ட, வறுமைக்கோட்டிற்குக் கீழ் வசிப்போர், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த நலன்களை மறந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'மனிதநேயமே கடவுளுக்குச் செய்யும் சேவை' என்ற கொள்கையில் இந்தியர்கள் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனது கடமையை நேர்மையாக நிறைவேற்றினால், அதுவே புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான பங்களிப்பாக அமையும். சுதந்திரம் என்பதில் இருந்து அனைவரும் தற்சார்பு மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக மகாத்மா காந்தி சத்யாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கியதன் நூற்றாண்டு அடுத்தமாதம் வருவதை நினைவுகூர்ந்த பிரதமர், சுதந்திரம் பெறுவதற்காக இந்தியர்கள் காந்திவழியில் முதல்முறையாக சம்பாரன் பகுதியில் போராடத் தொடங்கியதைச் சுட்டிக்காட்டினார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அந்த நிகழ்வு, ஒரு முக்கிய மாற்றமாக அமைந்தது என்றார் அவர்.

மேலும், "இந்திய சுதந்திரப் போரில் நாடு முழுவதும் சாமான்ய மனிதர்களின் அளப்பரிய பங்கினைப்போன்று, தற்போது சுதந்திரத்திற்குப் பின், புதிய இந்தியாவை உருவாக்குவதில் எல்லோருடைய பங்களிப்பும் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் மகிழ்ச்சியும், பலன்களும் ஒருசேரக் கிடைக்கும்.

அண்மைக்காலமாக, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு பெருமளவிலான மக்கள் மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிக மிக ஏழைமக்கள் கூட பணம் இல்லாத வர்த்தகத்தை கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறார்கள். உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு விதங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேம்பட்டுள்ளன. 'BHIM' ஆப்-ஐ நாடு முழுவதும் சுமார் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக ஒவ்வொரு இந்தியரும் தைரியத்துடன் கூடிய வீரராக களமிறங்க வேண்டும். இந்த ஆண்டில் 125 கோடி இந்தியர்களும் சுமார் இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.புதிய இந்தியா உருவாக்கத்தில் தொழிலாளர் வர்க்கத்தினரின் அதிக பங்களிப்பை வரவேற்கிறேன். பணிபுரியும் மகளிருக்கான மகப்பேறு விடுப்பை மத்திய அரசு, 26 வாரங்களாக உயர்த்தி உள்ளது. எதிர்கால இந்தியாவாக விளங்கும், பிறந்த பச்சிளம் குழந்தைகளை உரிய முறையில் மகளிர் பராமரித்து கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மகப்பேறு விடுப்பு காலம் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்கால இந்தியா என்பதை அரசு கருத்தில் கொண்டுள்ளது. இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள 18 லட்சம் மகளிர் பயன் அடைவார்கள்.

ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம். இந்த ஆண்டு மன அழுத்தத்தை மையக் கருத்தாகக் கொண்டு, இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகும் ஒருவருக்கு சுமூகமான மன அமைதியை ஏற்படுத்தக்கூடிய சுற்றுப்புற சூழலை உருவாக்கித் தர வேண்டியது அவசியம். மன அழுத்தம் என்பது குணப்படுத்தக்கூடியது. மனதை ஒருநிலைப்படுத்த யோகாசனப் பயிற்சி மிகச்சிறந்த வழியாகும்" என்று பிரதமர் நரேந்திர மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அந்த நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், பங்களாதேஷ் உடனான இந்தியாவின் நட்புறவு எப்போதும்போல் அமைதி, நல்லிணக்கதுடன் தொடரும் என்றார். பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

"புதிய இந்தியா"-வைப் படைக்க அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பதில் எல்லாம் மாற்றுக்கருத்து யாருக்கும் கிடையாது. உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், எந்தவொரு பணக்காரராவது பாதிக்கப்பட்டாரா அல்லது ஏதேனும் பெருநிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பதை பிரதமர் மோடி தான் தெரிவிக்க வேண்டும். சாமான்யர்கள் தொடர்ந்து, தங்கள் வாழ்வாதாரத்திற்காக, அதே நிலையில் தொடர வேண்டும்; கோடிகளில் புரளும் பெருநிறுவன முதலாளிகள் மேலும் மேலும் பல கோடிகளில் தொடர வேண்டும் என்பதுதான் ஒருவேளை பிரதமர் எதிர்பார்க்கும் 'புதிய இந்தியா'-வாக இருக்குமோ? அடுத்த "மனதின் குரலில்" அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்!

- சி.வெங்கட சேது