Published:Updated:

பணம் படைத்த பன்னீர்செல்வம்!, ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம்-8

பணம் படைத்த பன்னீர்செல்வம்!, ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம்-8
பணம் படைத்த பன்னீர்செல்வம்!, ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம்-8

பணம் படைத்த பன்னீர்செல்வம்!, ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம்-8

பன்னீர்செல்வத்தின் ஆள்-அம்பு-படை-பட்டாளம் 

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பன்னீர்செல்வத்தை எதிர்த்துப் போட்டியிட்டவர் ஐக்கிய ஜமாத்தைச் சேர்ந்த அபுதாகீர். தி.மு.க அபுதாகிரை வைத்து பன்னீரை வீழ்த்திவிடலாம் என்று தப்புக் கணக்குப்போட்டு அவரை நிறுத்தியது. தி.மு.க நிறுத்திய அபுதாகீர் வேறு யாருமல்ல... பன்னீர்செல்வம் அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் வீடு வாங்க உதவியவர்; கூட்டுறவு வங்கியில் பன்னீருக்காக ஜாமீன் போட்டவர். அந்த அபுதாகீரைத்தான் தி.மு.க பன்னீருக்கு எதிராக நிறுத்தியது. பழைய நண்பர்கள்... தேர்தல் களத்தில் புதிய எதிரிகளாக நின்றனர். அந்தத் தேர்தலில் அபுதாகிர் தோற்றார். பன்னீர்செல்வம் வென்றார். தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட அபுதாகிரைப் பன்னீர் பரம விரோதியாக நினைக்கவில்லை. பழைய நண்பனை பயனுள்ள நண்பனாகப் பார்த்தார். அவரை அழைத்து வந்து அ.தி.மு.க-விலேயே சேர்த்துவிட்டார். அதற்கும் காரணம் இருந்தது. அபுதாகிரின் வளைகுடாத் தொடர்புகள் பன்னீருக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவரை வைத்து மிகப்பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டிய தேவை அப்போது பன்னீருக்கு இருந்தது. வளைகுடா நாடுகளில் அபுதாகிரை வைத்துத்தான் பன்னீர்செல்வம் முதலீடுகளைச் செய்தார்.  அங்கு பல சொத்துக்களை வாங்கிப்போட்டார். அதற்கு வழிகாட்டியாக அபுதாகிர் பயன்பட்டார். அதேநேரத்தில், மணல் ராஜா, பாலமுருகன், பத்திர எழுத்தர் நாகராஜ் என்ற கூட்டம் ஒன்றும் பன்னீருடன் கூட்டணி அமைத்தது. தேனி மாவட்டத்தில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கலாம்... அவற்றை யார் பெயரில் வாங்கலாம்... என்பதற்கு யோசனை சொல்லும் ஆள், அம்பு, படை, பட்டாளமாக பாலமுருகன், நாகராஜ், மணல் ராஜா மாறினார்கள். 

தேனி, பெரியகுளம் பகுதிகளில் உள்ள சொத்துக்கள் விபரம் பத்திர எழுத்தர் நாகராஜூக்கு அத்துப்படி. அவர் வழிகாட்டுதலில் போடி முந்தல் எரியாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தோப்புகள், பெரியகுளம் கைலாசபட்டி கோயில் காடுகள், சோத்துப்பாறை, கும்பக்கரை, உப்புக்கோட்டை, போடேந்திரபுரத்தில்  தோப்புகள், குமுளி, வண்டல்மேடு, வெள்ளிவிழுந்தான், ராஜகுமாரி, கஜானாபாறை, ரோசப்பூகண்டம், கம்பமெட்டு பகுதிகளில் ஏலக்காய், காபித் தோட்டங்கள், பெங்களூரில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் நத்தம் விஸ்வநாதன் மகன் அமர், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் சேர்ந்து தொடங்கிய தொழில் சாம்ராஜ்ஜியம் என்று பன்னீரின் சொத்து சாம்ராஜ்ஜியம் பலமடங்கு உயர்ந்தது.  

பன்னீர் சொத்து சேர்ந்(த்)த வழிகள்!

கிரானைட் அதிபர் பி.ஆர்.பி-யோடு பன்னீருக்கு நெருக்கம் ஏற்பட்டது. பி.ஆர்.பி தொழிலுக்கு சமயங்களில் பன்னீர்செல்வம் ஆதரவாக நின்றார்; அதற்குக் கைமாறாக பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டுக்குள் சில கிரானைட் குவாரிகளைக் கொண்டுவர பி.ஆர்.பி வழி செய்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல கிரானைட் குவாரிகள் பன்னீரின் பினாமி சொத்துப் பட்டியலில் இடம்பிடித்தன. அதுபோல கேரளாவில் 1500 ஏக்கரில் டீ எஸ்டேட் ஒன்று புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதை விசாரித்தபோது, அதற்குப் பின்னால் பன்னீர்செல்வம் இருப்பது தெரியவந்தது. இன்னும் விசாரித்தபோது பன்னீர்செல்வத்துக்காகவே அந்த எஸ்டேட் வாங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்த விஷயம் உம்மன்சாண்டி மூலம் ஜெயலலிதாவின் காதுகளுக்கு வந்தது. ஆனால், அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், பன்னீர்செல்வத்தைக் கொஞ்சம் தள்ளிவைக்க ஆரம்பித்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தபோது, ஜெயலலிதாவுக்கு பன்னீரைத் தவிர வேறு விசுவாசமான ஆள் கிடைக்கவில்லை.

ஓ.பன்னீர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பொதுப்பணித்துறை டெண்டர்கள் தாறுமாறாக நடைபெற்றன. ஜெயலலிதா, சசிகலாவைப் பொறுத்தவரை கார்டனுக்கு வரவேண்டியது வந்துவிட்டால் போதும் என்று  இருந்தனர். அதனால், பன்னீர் செல்வம் மட்டுமல்ல... அ.தி.மு.க அமைச்சர்களில் பசையுள்ள உள்ள இலாக்காக்களை வைத்திருந்தவர்கள் கார்டனுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு, தங்களுக்காக கொஞ்சம் கிள்ளி எடுத்துக் கொண்டனர். ஆனால், நத்தம் விஸ்வநாதனும், பன்னீர்செல்வமும் மட்டும் இதில் விதிவிலக்கு. இவர்கள் இருவரும் தங்களுக்கு அள்ளி எடுத்துக்கொண்டு, கார்டனுக்கு கொஞ்சத்தை கிள்ளிக் கொடுத்தனர். பசையற்ற துறைகளை வைத்திருந்த அமைச்சர்கள் என்ன செய்வதென்று தெரியாமல், அதிகாரிகளை கசக்கிப் பிழிந்தனர். பன்னீர்செல்வத்துக்குத்தான் அந்தப் பிரச்னை இல்லை அல்லவா! அவர் வசம் பொதுப்பணித்துறை இருந்ததே! பொதுப்பணித்துறை டெண்டர்கள் பன்னீர்செல்வத்தின் வீட்டிலேயே விடப்பட்டன. ஒவ்வொரு டெண்டருக்கும் கார்டன் பெயரைச் சொல்லி, 30 சதவிகித கமிஷன் கறாராக நிர்ணயிக்கப்பட்டது; போலி பில்கள் போடப்பட்டன. திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் பெரும்பகுதி பன்னீர் செல்வத்தின் பாக்கெட்டுக்குப் போனது.

ராக் அன்டு ஆர்ச் மற்றும் இன்பிரா டெவலப்பர்ஸ் 

ராக் அன்டு ஆர்ச் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனம், ஈரோட்டில் இருந்து செயல்படுகிறது. செம்பரம்பாக்கம், நேமம், அயனம்பாக்கம் என்று ஏரிகள் தொடங்கி கூவம் ஆறு சீரமைப்பு வரை பல வேலைகள் இந்த நிறுவனத்தின் வசம் கொடுக்கப்பட்டன. தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்ற 90 சதவீத வேலைகள், ராக் அன்டு ஆர்ச் கன்ஸ்டிரக்ஷன் இல்லாமல் நடந்திருக்காது. இதன் இயக்குநர்கள் பழனிகவுண்டன்பாளையம் குமரப்பா கவுண்டர் துரைசாமி, பகலையூர் சென்னிமலை கவுண்டர் சுப்பிரமணியம். இதைப்போல, கடந்த 5 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை வேலைகளில் கோலேச்சிய மற்றொரு நிறுவனம் அன்னை இன்பிரா டெவலப்பர்ஸ். இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் சுப்பிரமணியம் அசோக் குமார், கலைச்செல்வி, ரவீந்திரன்.  இந்த இரண்டு நிறுவனங்களோடு இரண்டு லெட்டர் பேடு நிறுவனங்களும் உள்ளன. இந்த நான்கு நிறுவனங்களைத்தாண்டி, வேறு யாருடனும்  பொதுப்பணித்துறை ஒப்பந்தம் போடவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மூலம் அரசாங்க வேலைகளை எடுக்க ஆரம்பித்த இந்த நிறுவனங்கள், கடந்த 5 ஆண்டில் சம்பாதித்த தொகை பல நூறு கோடிகள்; அதில் சில நூறு கோடிகள் பன்னீருக்குப் போனது. 

2011-12 பட்ஜெட்டில் அன்றைய நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை ஆழப்படுத்தி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த 163 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். ஆனால், அதில் சில கோடிகள் கூட செலவு செய்யப்படவில்லை. சோழவரம் ஏரியை டி.ராஜாராம் என்பவர் தூர்வாரினார். போரூர் ஏரி ராக் ஆர்ச் கன்ஸ்டிரக்சன் என்ற நிறுவனமும் அயனம்பாக்கம் ஏரியை இன்பிரா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனமும் தூர்வாரின. இந்த இரண்டு நிறுவனங்களும்  முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவுக்கு நெருக்கமானவை என்று சொல்லப்பட்டன. 

போலி பில்கள்... ஏமாற்றும் வேலைகள்!

போரூர் ஏரி கொள்ளளவை உயர்த்த 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ராக்-ஆர்ச் கன்ஸ்டிரக்சன் நிறுவனம் ஏரியை ஆழப்படுத்தாமல், ஏரியில் உள்ள மண் சரியாமல் இருக்க கட்டுமானப் பணியை மட்டும் செய்தார்கள். மேடான பகுதிகளில் உள்ள மண்ணை அள்ளி தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு விற்றனர். அதில் ஒரு பெரும்தொகை கிடைத்தது. அதுதவிர்த்து பணி முடிந்துவிட்டது என்ற போலியான பில்கள் தயாரிக்கப்பட்டன. 5 கோடி ரூபாய்க்குள் பணிகளை முடித்துவிட்டு, மற்ற போலி பில்களை வைத்து 20 கோடியை சுருட்டிக் கொண்டனர். அய்யணம்பாக்கம் ஏரியில் ஒரு பகுதியில் 60 அடி ஆழம்வரை மணல் இருந்தது. அந்த மணலை திருவேற்காடு நகராட்சித் தலைவர் பவுலிடம் 10 கோடிக்கு விற்றனர். பவுல் அதை 15 கோடிக்கு விற்றார். இங்கும் கரைகள் மட்டும் சரிசெய்யப்பட்டன. ஆனால், 30 கோடிக்கு எம்.புத்தகம் தயாரிக்கப்பட்டு ஒப்பந்தக்காரர் பெயரில் கசோலை கொடுக்கப்பட்டது. நேமம் ஏரிக்கு 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இங்கு கிடைத்த மணல் சேகர் ரெட்டிக்கு 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு சில கட்டுமான வேலைகள் செய்யப்பட்டன. மற்ற தொகைக்கு வழக்கம்போல் பில்கள் தயார் செய்யப்பட்டு 80 கோடி ரூபாய் சுருட்டப்பட்டது. மூன்று அரசாணைகள் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 179 வேலைகள் நடந்ததாக எம்.புத்தகம் சொல்கிறது. ஆனால், இவற்றில் ஒரு வேலைகூட நடக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். அதன்விளைவுகளை சென்னை 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் அனுபவித்தது. அப்போது ஏற்பட்ட பெருமழையில் சென்னை மூழ்கியதற்கு முக்கியக் காரணங்கள் பன்னீர் செல்வம் பொதுப்பணித்துறையில் நடத்திய இந்தக் கூத்துக்கள்தான். இவை எல்லாம் மிகச்சிறிய சாம்பிள்கள் மட்டுமே. இந்தக் கொள்ளை தமிழகம் முழுவதும் நடந்தது. அதில் பலகோடிகள் பன்னீர்செல்வத்தின் பாக்கெட்டுக்குப் போனது. அதில் பல சொத்துக்களை வாங்கி ஆக்கிரமித்தார்; சில சொத்துக்களை ஆக்கிரமித்து வாங்கினார். அப்படி பன்னீர் ஆக்கிரமித்த 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் கதை அடுத்த அத்தியாயத்தில்...

பயணம் தொடரும்...

- ஜோ.ஸ்டாலின்
 

அடுத்த கட்டுரைக்கு