Published:Updated:

'வராது என்போம்... ஆனால், வரும்!’ நெடுவாசல் விவகாரத்தில் மத்திய அரசின் இரட்டை வேடம்

'வராது என்போம்... ஆனால், வரும்!’  நெடுவாசல் விவகாரத்தில் மத்திய அரசின் இரட்டை வேடம்
'வராது என்போம்... ஆனால், வரும்!’ நெடுவாசல் விவகாரத்தில் மத்திய அரசின் இரட்டை வேடம்

ரலாறு காணாத வறட்சியில் சிக்கிய தமிழகம், வறட்சி நிவாரணமாக ரூ.39,565 கோடி வேண்டும் என கோர... வெறும் ரூ.1,748 கோடியை மட்டும் ஒதுக்கி மத்திய அரசு அதிர்ச்சியளித்தது. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் தலைநகரான டெல்லியில் 15 நாட்களாகப் போராட்டம் நடத்தி வரும்போது, அதை துளியும் கண்டுகொள்ளாமல் அவமதித்தது. இப்போது தமிழக மக்கள் கடுமையாக எதிர்க்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இன்னுமொரு அதிர்ச்சியை அளித்திருக்கிறது மத்திய அரசு.

'நெடுவாசலில் மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்' எனச்சொன்ன மத்திய அரசு, இப்போது நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து, 37 நாட்கள் தொடர்ச்சியாக மக்கள் போராடினார்கள். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பெண்கள். தங்கள் குழந்தைகளுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்ன ஆனது வாக்குறுதி?

இந்தத் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும். நோய் பரவும். விவசாயம் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்ற பெரும் அச்சம் இந்த மக்களை போராட வைத்தது. 'புதுகையை தஞ்சை ஆக்குவோம். புன்செய்யை நன்செய் ஆக்குவோம்' என சொல்லப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததால் கடும் வறட்சியில் சிக்கி தவித்து வரும் புதுக்கோட்டையில், பசுமை நிறைந்த பகுதி நெடுவாசல் மட்டும் தான். இந்த பகுதியையும் இந்த திட்டம் பாலைவனமாக்கும் என சொல்லப்பட... மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தத் துவங்கினர். போராட்டத்தின் விளைவாக மத்திய அமைச்சர்கள் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினார்கள். மக்கள் விரும்பாவிட்டால் இந்த திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதி கொடுத்தார்கள். இதன் பின்னரே போராட்டம் கைவிடப்பட்டது.

இப்போது புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில், மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. மக்கள் எதிர்த்தால் அதை செய்யப்போவதில்லை என மத்திய அரசு, இப்போது திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழத்துவங்கியிருக்கிறது.

'ஆறு மாதத்தில் பணிகள் துவங்கும்?'

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து நான்கு பேர் தெரிவித்த கருத்துகள் மிக முக்கியமானது. முதலாமானவர். பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான விழிப்புஉணர்வை தமிழக மக்களிடம் ஏற்படுத்தி, அதன் பின்னர் நெடுவாசலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவோம்." என அவர் தெரிவித்திருந்தார். அவர் சார்ந்த பெட்ரோலியத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘நெடுவாசல் பகுதியில் உள்ள மக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன; அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைத்த பிறகே பணிகள் தொடங்கும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தமிழக அரசு தீர்த்து வைக்கும். மக்கள் திருப்தி அடைந்த பிறகு இந்த திட்டம் அமல்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி பெற்றுள்ள ஜெம்’ லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் கருத்து. அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஹரி பிரசாத், "ஆறு மாதத்தில் இந்த திட்டப்பணிகள் துவங்கும். மக்கள் கருத்து கேட்பு, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதியையும் பெற ஆறு மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கிறோம். இந்த திட்டம் உள்ளூர் மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது. எனவே மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என தெரிவித்திருக்கிறார்.

கையெழுத்தால் குழப்பமடைய வேண்டாம் !

இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "நெடுவாசல் போராட்டக்குழுவினரிடம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளது போன்று, மக்களின் ஆதரவில்லாமல், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டது என நம்புகிறேன். ஏற்கெனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் கையொப்பம் இடப்படுகிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம்," என சொல்லி இருக்கிறார்.

நான்காவது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அளித்த வாக்குறுதி. "வாழ்வாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்பை கருத்தில் கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்காது," என கலெக்டர் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கும் வரை இல்லை... ஏற்பதை தவிர வழியில்லை?

இந்த நான்கு கருத்துகளுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மக்களின் அச்சத்தைப்போக்கி திட்டம் நிறைவேற்றப்படும். மக்களின் அச்சத்தை தமிழக அரசு போக்கும்" என்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம்," என்கிறார். தமிழக அரசு மக்களின் அச்சத்தை போக்கும் என தர்மேந்திர பிரதான் சொன்ன கருத்துக்கு எதிராக, 'திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்' என மாவட்ட கலெக்டர் உறுதி அளிக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் முரணாக ஆறு மாதத்தில் திட்டம் நிறைவேறும் என தனியார் நிறுவனம் சொல்கிறது.

ஆனால் இவர்கள் சொல்வதை எல்லாம் பொருத்திப்பார்த்தால் புரிவது ஒன்று தான். மக்கள் ஏற்கும் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது. ஆனால் மக்களுக்கு இந்தத் திட்டத்தை ஏற்பதை தவிர வேறு வழியில்லை" என்று சொல்வதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. திட்டம் வராது எனச்சொன்னாலும், திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் துவங்கப்பட்டுள்ளதை வேறு எப்படி சொல்ல...

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மிக கடுமையான எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், இந்த திட்டத்துக்கு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்விக்கு மத்திய அரசின் தரப்பில் இன்னும் பதில் சொல்லப்படவில்லை. "இது நெடுவாசலுக்கு மட்டுமான ஒப்பந்தம் அல்ல. 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான 22 நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்" என விளக்கம் சொல்லப்பட்டாலும், இதை விடுத்து 30 இடங்களுக்கு ஒப்பந்தம் போட முடியாது என்பதை யாரும் தெரிவிக்கவில்லை.

நிறுவனத்தின் பின்னணி தெரியுமா?

மொத்தம் 22 நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதில் 4 பொதுத்துறை நிறுவனங்கள். 17 தனியார் நிறுவனங்கள். ஒரு வெளிநாட்டு நிறுவனம். இதில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம், கர்நாடகா பி.ஜே.பி. எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்பத்துக்குச் சொந்தமான ‘ஜெம் லேபரேட்டரீஸ்' நிறுவனம் என்பது கவனிக்கத்தக்க அம்சம்.

நெடுவாசல் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் இருப்பதை கண்டறிந்தது முந்தைய ஆட்சி காலங்களில். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆனால் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான இறுதி முடிவு எதையும் முந்தைய மத்திய அரசுகள் எடுக்கவில்லை. இந்நிலையில் ஓ.என்.ஜி.சி.க்கு பதில் பெரும்பாலான இடங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடும் எதிர்ப்புக்கிடையே இந்த திட்டத்தை எப்படியேனும் செயல்படுத்திட வேண்டும் என துடிக்கிறது மத்திய அரசு. இந்த திட்டம் தொடர்பான மக்களிடம் எழும் 8 கேள்விகள் முக்கியமானவை.

1. முதலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆய்வுக்குட்படுத்தியது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் தான். ஒ.என்.ஜி.சி. என நிலத்தை கையகப்படுத்தி விட்டு, இப்போது தனியார் நிறுவனம் இந்த பணியை மேற்கொள்ளும் எனச்சொல்லி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்த்தது ஏன்?

2. மக்கள் ஏற்காத திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என அறிவித்த மத்திய அரசு, மக்கள் மிக கடுமையாக எதிர்க்கும் திட்டத்துக்கு ஒப்பந்தம் போட்டது ஏன்?.

3, திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்து விட்டது. மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், இந்த திட்டத்தில் மக்களின் அச்சத்தை தமிழக அரசு போக்கும் எனச்சொல்லி இருப்பதன் அர்த்தம் என்ன? இரவு, பகலாக போராடிய மக்களின் சந்தேகங்களை போக்காமல் கையெழுத்திட்டது ஏன்?

4. திட்டத்தை செயல்படுத்தப்பட மாட்டோம் எனச்சொல்லி போராட்டத்தை வாபஸ் பெற வைத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "கையெழுத்து போட்டதால் திட்டம் நிறைவேறியதாக அர்த்தம் அல்ல. குழப்பமடைய வேண்டாம்" என்ற ரீதியில் பேசுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.

5. மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் இந்த திட்டத்தை அறிவித்த போது, இது தொடர்பாக எங்களிடமே மத்திய அரசு கேட்கவில்லை எனச்சொன்னது தமிழக அரசு. இப்போது மாநில அரசு மக்களின் அச்சத்தை போக்கும் என சொல்கிறீர்கள். இதன் மூலம் எதைச்சொல்ல வருகிறீர்கள்?

6. திட்டம் நிறைவேற்றப்பட உள்ள தமிழகம் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இந்த சூழலில் திட்டத்தை எடுத்து நடத்தும் நிறுவனம் தமிழக அரசிடம் எந்த ஆலோசனையும் நடத்தாமல், இன்னும் ஆறு மாதத்தில் திட்டத்தை நிறைவேற்றுவோம் என சொல்வது சரிதானா?

7. மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். மாநில அரசு எதிர்க்கிறது. இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட அனுமதி கிடைக்காது இவை எல்லாம் தெரிந்தும் திட்டத்தை முன்னெடுப்பது ஏன்?

8. காவிரி வடிநில பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனச்சொல்லி விவசாயிகள் போராடி வரும் நிலையில், விவசாயத்தை பாதிக்கும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வருவது ஏன்?

இந்த கேள்விகளுக்கான பதில்களை மத்திய அரசு இன்னும் விளக்கமாய் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டதன் மூலம் மக்கள் நம்பிக்கையை பெறத்தவறிய மத்திய அரசு, இப்போது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் பெரும் சர்ச்சையை விதைத்திருக்கிறது. மக்கள் மீண்டும் போராடத்துவங்கியிருக்கிறார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரச்னை முடிவுக்கு வரும் அல்லது முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என நினைக்கிறது பி.ஜே.பி. ஆனால் மக்கள் எதிர்ப்பை மீறி எதையும் சாதித்து விட முடியாது. இதையெல்லாம் எதிர்கொள்ள தயாராகவே மக்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

- ச.ஜெ.ரவி,

படங்கள் : ம.அரவிந்த்