Published:Updated:

'கட்சிதான் சம்பளம் கொடுக்கிறது; சட்டையும் கொடுக்கிறது!'  -ஆர்.கே.நகரில் சி.பி.எம் லோகநாதன் 

'கட்சிதான் சம்பளம் கொடுக்கிறது; சட்டையும் கொடுக்கிறது!'  -ஆர்.கே.நகரில் சி.பி.எம் லோகநாதன் 
'கட்சிதான் சம்பளம் கொடுக்கிறது; சட்டையும் கொடுக்கிறது!'  -ஆர்.கே.நகரில் சி.பி.எம் லோகநாதன் 

'கட்சிதான் சம்பளம் கொடுக்கிறது; சட்டையும் கொடுக்கிறது!'  -ஆர்.கே.நகரில் சி.பி.எம் லோகநாதன் 

க்கள் நலக் கூட்டணியைத் தவிர்த்துவிட்டு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். ' அ.தி.மு.கவின் இரு அணிகள் மற்றும் தி.மு.க அளவுக்கு எங்களால் செலவு செய்ய முடியாது. ஆனால், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும்' என தொகுதி மக்களை நெகிழ வைக்கிறார் சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன். 

அரசியல் கட்சித் தலைவர்களின் வருகையாலும் வேட்பாளர்களின் தொடர் பிரசாரத்தாலும் ஆர்.கே.நகர் தேர்தல் களம் அதிர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரையில் இல்லாத அளவுக்குத் தொகுதி மக்கள் வாக்குறுதிகளைக் கேட்டு வருகிறார்கள். டி.டி.வி.தினகரன், மதுசூதனன், மருது கணேஷ், கங்கை அமரன், தீபா என ஆளுக்கொரு பக்கம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தாலும், தோழர்கள் படையோடு வீடு வீடாக ஏறி இறங்கி வருகிறார் சி.பி.எம் கட்சியின் வேட்பாளர் லோகநாதன். ' ஊழல் பணத்தை வாரி இறைத்து இவர்கள் வாக்கு கேட்கின்றனர். இப்படிச் செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தாலும், ஊழல் செய்யத்தான் திட்டம் வகுப்பார்கள். நாங்கள் மக்களின் எதிர்கால நன்மைக்காக உழைக்கிறோம். நான் போட்டிருக்கும் சட்டையைக் கூட கட்சித் தோழர்கள்தான் வாங்கிக் கொடுத்தார்கள். தொடர்ந்து மக்கள் பிரச்னைகளுக்காக போராடி வருகிறேன். கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்துவது முதல் மீனவ மக்களுக்கு ஏற்றுமதி வளாகம் அமைப்பது வரையில் நீங்கள் விரும்பும் எம்.எல்.ஏவாக இருப்பேன்' என ஒவ்வொருவரையும் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். காலையில் இருந்து இரவு வரையில் செங்கொடி ஏந்தியபடி, தோழர் குழுவும் அவருடன் வலம் வருகிறது. 

" ஆர்.கே.நகரை வி.ஐ.பி தொகுதியாக வெளியில் உள்ள மக்கள் பார்க்கின்றனர். அதற்கான எந்த வசதிகளும் தொகுதிக்குள் இல்லை. பெட்ரோலிய நிறுவனமான சி.பி.சி.எல்லின் குரூடு ஆயிலும் குடிநீரும் கலந்தே வருகின்றன. சி.பி.சி.எல்லின் பைப் லைன் பிரச்னைக்கு ஆட்சியாளர்கள் எந்தத் தீர்வையும் சொல்லவில்லை. 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேம்பாலம், சுரங்கப் பாதை அமைப்போம்' என தி.மு.கவும் அ.தி.மு.கவும் மாறி மாறி வாக்குறுதி அளிக்கின்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு யாரும் ஆர்.கே.நகரை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு மீன்களை ஏலத்தில் எடுப்பதற்காக தினம்தோறும் ஏராளமான மக்கள் வருகின்றனர். ஆனால், கழிப்பறை முதற்கொண்டு எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை. தொகுதிக்குள் மருத்துவர் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம்தான் செயல்படுகிறது. 'வட்டத்துக்கு ஒரு சுகாதார மையம் அமைப்போம்' என மக்களிடம் பேசி வருகிறோம். தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையில் மக்களிடம் உண்டியல் மூலம் வசூல் செய்தோம். அந்தப் பணத்தில்தான் பிரசாரப் பணிகள் நடந்து வருகின்றன. மாணவப் பருவத்தில் இருந்தே கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் வேட்பாளர் லோகநாதன். தொகுதி மக்களின் தேவைகளை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டவர். இதுவே எங்களுக்கு கூடுதல் பிளஸ்" என்கிறார் சி.பி.எம் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் சுந்தர்ராஜன். 

' தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது?' என சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். " மக்களிடம் எங்கள் வேட்பாளருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அவர் மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் புரிந்து கொண்டவர் மட்டுமல்ல. அவர்களுடைய அடிப்படைத் தேவைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றவர். போட்டியிடும் வேட்பாளர்களிலேயே மிகவும் இளையவர் லோகநாதன் மட்டும்தான். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு மாற்று தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மத்தியில் ஆள்பவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதில், தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கல்விக் கட்டணக் கொள்ளையில் இருந்து கனிமவளக் கொள்ளை வரையில் இவர்களுக்கும் பங்கு இருக்கிறது. இவர்களுக்கு மாற்றான ஓர் அரசியலை முன்னெடுத்து வருகிறோம். அ.தி.மு.கவின் இரண்டு கோஷ்டியும் பணம் விநியோகிப்பதாக தகவல் வருகிறது. இதுகுறித்து புகார் வந்தால், தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் கொடுக்கும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். ஆர்.கே.நகர் முழுக்கவே ஏழை எளிய மக்களும் மீனவ மக்களும் பெரும்பான்மையாக உள்ளனர். அ.தி.மு.கவும் தி.மு.கவும் மாறி மாறி ஆட்சி அமைத்தாலும் தொகுதிப் பிரச்னைகளை யாரும் தீர்க்கவில்லை. குடிநீர் பிரச்னை இன்றளவும் அந்த மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. குடிசை மாற்று வாரிய வீடுகள் எல்லாம் வலுவிழந்து போய் உள்ளது. மக்களுக்காக போராடுகின்ற ஒருவரை வேட்பாளராக நியமித்திருக்கிறோம். மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என உறுதியாக நம்புகிறோம்" என்றார் நிதானமாக. 

ஏழை, எளிய மக்களுக்காகவும் தொழிலாளர் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி, அதே மக்களை அடிப்படையாகக் கொண்டுள்ள ஆர்.கே.நகரை மையமிட்டு போட்டியிடுகிறது. 'தோழர்களின் எதிர்பார்ப்பு வெல்லுமா?' என்பதற்குத் தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும். 

- ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு