Published:Updated:

‘வால்ட் டிஸ்னிதான் இன்ஸ்பிரேஷன்!’ - யூ- டியூப் சக்சஸ் கதை சொல்கிறார் ChuChu Tv வினோத்சந்தர் #VikatanExclusive

‘வால்ட் டிஸ்னிதான் இன்ஸ்பிரேஷன்!’ - யூ- டியூப் சக்சஸ் கதை சொல்கிறார் ChuChu Tv வினோத்சந்தர் #VikatanExclusive
‘வால்ட் டிஸ்னிதான் இன்ஸ்பிரேஷன்!’ - யூ- டியூப் சக்சஸ் கதை சொல்கிறார் ChuChu Tv வினோத்சந்தர் #VikatanExclusive

‘வால்ட் டிஸ்னிதான் இன்ஸ்பிரேஷன்!’ - யூ- டியூப் சக்சஸ் கதை சொல்கிறார் ChuChu Tv வினோத்சந்தர் #VikatanExclusive

சினிமா, தொலைக்காட்சி, இணையம் என எல்லா இடங்களிலுமே குழந்தைகளுக்கான உலகமும், வணிகமும் தனி. வால்ட் டிஸ்னி போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் குழந்தைகளுக்கு என்றே பிரத்யேக சினிமாக்களை, கதாபாத்திரங்களை உருவாக்கி ஹிட் அடித்தன. அதுபோலவே யூ-டியூபில் குழந்தைகளுக்கான அனிமேஷன் வீடியோக்கள் மட்டுமே வைத்துக் கொண்டு உலகளவில் கலக்கி வருகிறது சென்னையில் இயங்கிவரும் chuchu டிவி. இவர்களின் யூ-டியூப் சேனலுக்கு உலகம் முழுக்க இருக்கும் குழந்தைகள் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் அதிக சந்தாதாரர்கள் கொண்ட யூ-டியூப் சேனல்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது இவர்களின் சேனல். உலகம் முழுக்க இருக்கும் டாப் 15 யூ-டியூப் சேனல்களில் எப்போதும் chuchu டிவிக்கு இடம் உண்டு. இவர்களின் ஜானி ஜானி எஸ் பாப்பா வீடியோ இதுவரை எவ்வளவு வியூஸ் வாங்கியிருக்கிறது தெரியுமா? 100 கோடி பார்வையாளர்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது அந்த வீடியோ.

குழந்தைகளை அனிமேஷன் பாடல்கள் மூலம் கட்டிப்போடும் வெற்றி சூட்சுமத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் chuchu டிவியின் நிறுவனர் வினோத் சந்தர். இவர் மறைந்த தமிழ் இசையமைப்பாளர் திரு.சந்திரபோஸ் அவர்களின் மகன்.

"2013-ல் நானும் எனது நண்பர்களும் ஒரு ஐ.டி நிறுவனத்தை நடத்திவந்தோம். நான், கிருஷ்ணன், சுப்பிரமணியன், அஜித் டோகோ, சுரேஷ் என நாங்கள் ஐந்து பேரும் 30 வருட நண்பர்கள். நாங்கள் ஒன்றாக அந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தோம். அத்துடன் எனது அப்பா மூலம் எனக்கும் இசையில் ஆர்வம் இருந்ததால், அவ்வப்போது சிறிய அளவில் இசையமைத்து ஜிங்கிள்ஸ் எல்லாம் கூட வெளியிட்டு வந்தோம். 2006-ல் இருந்தே யூ-டியூபில் வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால் எனக்கு யூ-டியூப் நன்கு பரிச்சயமான ஒன்று. அப்போது ஒருநாள் என் மகள் ஹர்ஷிதாவுக்காக, அவளை மகிழ்விக்க நானே ஒரு அனிமேஷன் வீடியோ தயார் செய்தேன்; அதனை ஹர்ஷிதாவிடம் காட்டிய போது, மிகவும் சந்தோஷப்பட்டார்.

அப்போதுதான் என் வீடியோ குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை கண்டுகொண்டேன். பிறகு முதல் முயற்சியாக chubby cheeks என்ற ரைம்ஸை யூ-டியூபில் வெளியிட்டேன். எனது மகளின் செல்லப்பெயர் chuchu என்பதால், அதே பெயரிலேயே சேனல் ஒன்றை துவங்கி அதனை வெளியிட்டேன். இரண்டே வாரத்தில் அந்த வீடியோவை 3 லட்சம் பார்த்திருந்தனர். எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது. சரி.. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என நினைத்து அடுத்தது டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் ரைம்ஸை அனிமேஷனாக வெளியிட்டேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த ஒரு வீடியோ மூலமாகவே சுமார் 50 ஆயிரம் பேர் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்தார்கள். வெறும் 2 வீடியோக்கள் மட்டும்தான் வெளியிட்டிருந்தோம். ஆனால் அதற்கே பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. அப்போதுதான் இது எங்களுக்கு நல்ல யோசனை எனத் தோன்றியது.

உடனே எங்களுக்கு யூ-டியூப் நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்தது. 'உங்கள் வீடியோக்கள் அருமையாக இருக்கிறன. அதில் ஏதோ ஒரு விஷயம் ஸ்பெஷலாக இருப்பதால், நல்ல வரவேற்பு இருக்கிறது. தொடர்ந்து செய்யுங்கள்' என்றனர். உடனே நானும் எனது நண்பர்களும் இதனை முழுமுயற்சியாக செய்யலாம் என முடிவெடுத்து இறங்கினோம். முதலில் 2 அனிமேஷன் கலைஞர்கள், 2 ஓவியர்கள் என்று சிறிய அளவில்தான் களமிறங்கினோம். தற்போது எங்கள் நிறுவனத்தில் 140 பேர் பணியாற்றுகிறார்கள். ஒரு மாதத்திற்கு 6 முதல் 7 வீடியோக்கள் வரை வெளியிடுகிறோம்.

முதலில் 'பாபா பிளாக்ஷீப்' பாடலைத்தான் அனிமேஷனாக வெளியிட்டோம். பல இடங்களில் அந்தப் பாடல் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. அதில் பிளாக்ஷீப் என மட்டுமே வருவதால் இனவெறியின் அடையாளமாக கருதினர். அதனை மாற்றும் படி, கறுப்பு ஆடுடன், ஒரு வெள்ளை மற்றும் பிரவுன் நிற செம்மறி ஆடையும் சேர்த்து பாடலை மாற்றி வெளியிட்டோம். அதற்கு அமோக வரவேற்பு இருந்தது. அதேபோல ஜேக் அண்ட் ஜில் எனும் பாடலையும் அப்படியே அனிமேஷனாக மட்டும் மாற்றாமல் எங்கள் ஸ்டைலில் பதிவேற்றினோம். இப்படி ஒரு பாடலை அப்படியே பதிவேற்றாமல் எங்கள் ஸ்டைலில் மாற்றி வெளியிட்டதால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பினர்.

எங்கள் அனிமேஷன் பாடல்களில் சூச்சு என்ற கதாபாத்திரத்தை முதலில் உருவாக்கினோம். பின்னர் சாச்சா என்னும் கதாபாத்திரம். இவர்கள் வெள்ளை நிறமுள்ள குழந்தைகள். இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட, 'பல அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சில கோரிக்கைகள் வந்ததன. உங்கள் கதாபாத்திரங்களில் கறுப்பு நிறமே இடம் பெறாதா என அவர்கள் கேட்டனர். உடனே சிக்கு மற்றும் சிக்கா என இரு கறுப்பு நிறமுடைய கதாபாத்திரங்களையும் சேர்த்தோம். பிறகு அதனை நிறைய பேர் பாராட்டினார்கள்.

2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எங்கள் சேனலை துவங்கினோம். முதல் வீடியோவை வெளியிட்டு 3 மாதங்கள் கழித்துதான், 2-வது வீடியோவை வெளியிட்டோம். பிறகு 2014-ம் ஆண்டுதான் இதில் முழு வீச்சோடு களமிறங்கினோம்.  எனது வீட்டிலேயே எனது மகள், மகன் என இருவர் இருப்பதால் அவர்களுக்கு எது பிடிக்கும் என்பதை என்னால் எளிதாக கணிக்க முடிகிறது. அனிமேஷன் பாடல்களுக்கு இசை அமைப்பது எனது வேலை.  எனது நண்பர் கிருஷ்ணன் பாடல்களின் வரி மற்றும் அதன் கருத்தில் கவனம் செலுத்துவார். அஜித் டோகோ, சட்டரீதியான விஷயங்களை பார்த்துக் கொள்வார். சுரேஷ் நிறுவனத்தின் மனிதவளத் துறையை கவனித்துக் கொள்வார். சுப்பிரமணியன் நிதி நிர்வாகத்தை பார்த்துக் கொள்வார். நாங்கள் 5 பேருமே குழந்தைகளின் விருப்பத்தை எளிதில் புரிந்து கொள்பவர்கள். எனவே குழந்தைகளுடன் நன்கு பழகிவிடுவோம். அதுவே எங்களுக்கு ஒருவகையில் கைகொடுக்கிறது என நினைக்கிறேன்.

தற்போது இரண்டு யூ-டியூப் சேனல்களை வைத்திருக்கிறோம். முதலாவதில் 65 லட்சத்திற்கு மேற்பட்டோரும், இரண்டாவதில் 17 லட்சம் பேரும் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். ஆசிய அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான யூ-டியூப் சேனலில் நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம். உலக அளவில் 2-வது இடத்தில் இருக்கிறோம். குழந்தைகள் என இல்லாமல் பொதுவானவர்களுக்கான பிரிவில் டாப் 15 இடங்களுக்குள் இருந்து வருகிறோம். அதேபோல இந்தியாவில் அதிகம் பேர் சந்தாதாரர்களாக இருக்கும் யூ-டியூப் சானலில் நாங்கள் 3-வது இடத்தில் இருக்கிறோம். யூ-டியூபை பொறுத்தவரை ஒரு வீடியோவை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மற்றும் பார்க்கும் நேரம் ஆகியவைதான் முக்கியம். அந்த வகையில் நாங்கள்தான் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறோம். எங்களின் பார்வையாளர் குழந்தைகள்தான் என்பதால், ஒரே வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்கின்றனர். இதனால் பார்க்கும் நேரம் அதிகரிக்கிறது. இது எங்களுக்கு பலம்.

2014-ம் ஆண்டு இந்த சேனலை துவங்கும் போதே, மற்றவை போல சாதரணமாக இல்லாமல் வித்தியாசமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் லட்சியமாக இருந்தது. எங்களின் நோக்கமே குழந்தைகள் மத்தியில் நல்ல எண்ணங்களை, சிந்தனைகளை பரப்ப வேண்டும் என்பதுதான். உலகம் முழுக்கவும் நல்ல விஷயங்கள் என்பவை பொதுவானவைதான். எனவே எங்கள் வீடியோக்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்று குழந்தைகள் மத்தியில் நல்ல எண்ணங்களை வளர்த்தால்தான் அவர்கள் வருங்காலத்தில் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். அதுதான் எங்கள் லட்சியம். எங்கள் குழந்தைகளுக்கு எதுவெல்லாம் நல்ல விஷயங்கள் என சொல்லித் தருவோமோ, அதையேதான் எங்கள் வீடியோ மூலம் உலகம் முழுக்க பரப்புகிறோம்.

ஒரு வீடியோ உருவாவதற்கு பின்பு, எழுத்து, கதை, காட்சி அமைப்பு, அனிமேஷன், ஓவியம் என 12 பேரின் உழைப்பு இருக்கும். கிட்டத்தட்ட ஒரு படத்தை இயக்குவது போலத்தான் இதுவும். தற்போது ஆங்கிலத்தில் மட்டும்தான் எங்கள் வீடியோக்கள் இருக்கின்றன. விரைவில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வீடியோக்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அத்துடன் லைவ் வீடியோக்கள், பொம்மைகள், தொடர் கதைகள், ஆகியவற்றையும் வெளியிட முடிவு செய்துள்ளோம். 

எங்களுக்கு இந்தியாவில் இருப்பதை விடவும், அமெரிக்காவில் இன்னும் பார்வையாளர்கள் அதிகம். அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், கனடா, வியட்நாம் போன்றவை எங்களின் டாப் பார்வையாளர்கள் கொண்ட நாடுகள். உலக அளவில் குழந்தைகள் என்பவர்கள் ஒரே மாதிரிதான் என்பதால், எங்களுக்கு நாடு என்பது ஒரு எல்லையே கிடையாது" என்றவர் யூ-டியூப் உதவியுடன் சாதித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

"எங்களுக்கு பெரும் ஆதரவு அளித்தது யூ-டியூப்தான். எங்கள் சானலை அதிகம் பேர் விரும்புகிறார்கள் என்று தெரிந்ததுமே எங்களுக்கென ஒரு பார்ட்னர் மேனஜரை நியமித்துவிட்டார்கள். பிறகு எங்கள் வீடியோவை எப்போது பதிவிட வேண்டும், அதற்கு உதவும் அனிமேஷன் கருவிகள், எப்படி வீடியோக்களை வடிவமைப்பது என முழு உதவியும் அவர்கள் அளித்தனர். எங்களின் வெற்றிக்கு காரணமான ஒரு விஷயம், அந்நிறுவனம் வழங்கும் தரவுகள்தான். எங்கள் வீடியோக்களை எந்த நாட்டில் அதிகம் பேர் பார்க்கிறார்கள், எந்த வீடியோவை அதிகம் பார்க்கிறார்கள், வீடியோவில் எந்த இடத்தினை அதிகம் பேர் விரும்புகிறார்கள் என முழுமையாக சொல்லி விடுவார்கள். இதன் மூலம் எதுமாதிரியான வீடியோக்களை குழந்தைகள் விரும்புகிறார்களோ, அதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வெளியிடுவோம். குறைவாக விரும்பும் வீடியோக்களை அலசி ஆராய்ந்து குறைகளைக் கண்டறிந்து செழுமைப் படுத்துவோம்.

விளம்பர வருமானம்தான் எங்களின் முதன்மையான வருவாய். தற்போதய நிலையைப் பொறுத்தவரையில் இந்தியாவை விட, அமெரிக்காவில் அதிகம் விளம்பர வருவாய் கிடைக்கிறது. உதாரணமாக இங்கு ஒரு ரூபாய் கிடைத்தால், அமெரிக்காவில் 4 ரூபாய் கிடைக்கும். உலகம் முழுக்க இருந்து வெவ்வேறு விதமான லாபம் வரும். ஒரே முதலீடுதான் அனைத்திற்கும் என்பதால், எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. தற்போது டிவி சேனல்களுக்கு இங்கு விளம்பர வருவாய் அதிகம் கிடைக்கும். ஆனால் அதில் ஓடும் ஒரு விளம்பரத்தை குழந்தைகள் பார்க்கிறார்களா அல்லது யார் பார்க்கிறார்கள் என எதுவுமே தெரியாது. ஆனால் டிஜிட்டல் உலகத்தை பொறுத்தவரை உங்கள் விளம்பரங்களை எந்த நாட்டில், எந்த பிரிவினருக்கு, எந்த வயதினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என திட்டமிட்டு செயல்படலாம். எனவே நீங்கள் தரும் தொகைக்கு, சரியான பலன் கிடைக்கும். தற்போது இந்தியாவில் யூ-டியூப் கிட்ஸ், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் என பல நிறுவனங்கள் டிஜிட்டல் சேவையை அளிக்க உள்ளனர். இந்தியாவில் வளர்ச்சி நன்றாக இருப்பதால், டிஜிட்டல் விளம்பர வருவாயில் அமெரிக்காவின் இடத்தை இந்தியா 2020-ல் பிடித்துவிடும்.

எங்கள் வீடியோக்களில் வரும் விளம்பரங்கள் அனைத்தும் குழந்தைகள் மற்றும் இளம் பெற்றோர்களை மையப்படுத்தியே இருக்கும். எனவே அது அவர்களை சரியாக சென்றடையும். அத்துடன் எங்களின் வீடியோக்களைப் பார்க்கும் குழந்தைகளில் 80% பேர் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் மூலம்தான் பார்க்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் மொத்த வீட்டிற்கும் ஒரு டிவிதான் என இருந்தது எல்லாம் இப்போது கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு கேட்ஜெட். ஒரு ஸ்க்ரீன். இதனால் இதற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. எங்களின் இலக்கு 1 முதல் 6 வயதுள்ள குழந்தைகள்தான். அவர்களுக்கான கருத்துக்களையே நாங்கள் தருகிறோம்" என்றவர் புதியவர்கள் ஜெயிப்பதற்கான வழியையும் சொன்னார்.

"கிரிக்கெட்டில் சதம் அடிக்க வேண்டுமென்றால், ஒரே அடியாக அடிக்க முடியாது. ஆனால் பத்து பத்து ரன்களாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால் சதம் அடித்து விடலாம் என டிராவிட் சொல்வார். அதுதான் எனது பாணியும் கூட, நம்முடைய பெரிய இலக்குகளை ஒரே நாளில் அடைந்து விட முடியாது. அதே சமயம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், சிறிது சிறிதாக திட்டம் போட்டு சாதித்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் ஒருநாள் அதனை அடைந்து விடலாம். ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டால், எந்த இடத்திலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும். அப்படி இயங்கினால் ஒருநாள் நமது வெற்றி நிச்சயம். எங்கள் நிறுவனத்தை உலகப் புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி அளவிற்கு வளர்க்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்" என நமக்கு விடை கொடுத்தார் வினோத் சந்தர்.

வாழ்த்துக்கள்!

நூறு கோடியைத் தாண்டிய அந்த ரைம்ஸ் வீடியோ!

- ஞா.சுதாகர்,

படங்கள்: ப.சரவணக்குமார்.

அடுத்த கட்டுரைக்கு