Published:Updated:

வாலிபால் கோச் வைகோ... பல்துறை வித்தகர் டி.ஆர்..! - நீங்க சம்மர் கேம்ப்க்கு ரெடியா?

வாலிபால் கோச் வைகோ... பல்துறை வித்தகர் டி.ஆர்..! - நீங்க சம்மர் கேம்ப்க்கு ரெடியா?
வாலிபால் கோச் வைகோ... பல்துறை வித்தகர் டி.ஆர்..! - நீங்க சம்மர் கேம்ப்க்கு ரெடியா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம், ஹைட்ரோ கார்பன் போராட்டம் என அரசியல் வட்டாரம் ஆல்வேஸ் பரபரப்பு மோடிலேயே இருக்கிறது. பா.ஜ.க-வுக்கு கங்கை அமரன் பாட்டுப் பாடி ஓட்டுப்பால் கறக்க, நாய்க்குட்டிக்குத் தொப்பி அணிவித்தெல்லாம் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க அம்மா அணித் தொண்டர்கள். இப்படிக் கட்சிக்குக் கட்சி களேபரங்களுக்கு மத்தியில் பிரசார பிஸி இல்லாமல் வெயிலுக்கு கூலாக வீட்டில் உட்கார்ந்து சர்பத் குடித்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை சம்மர் கேம்ப் நடத்த கோச்களாக நியமித்துப் பொழுதைப் போக்குவோம் வாங்க... 

'வாலிபால் கோச்' வைகோ : 

இவர்தான் வேர்ல்டு லெவல் வாலிபால் கோச். இஸ்ரேல், இத்தாலி எனப் பல நாடுகளுக்கும் விளையாட்டு நடைப்பயணம் போன வரலாற்று வாலிபால் வெறியர். ட்ரெய்னிங் போகும் பிள்ளைகளுக்கு போரடிக்காமல் ஏற்ற இறக்கமாய் வரலாற்றுக் கதைகளையும் சொல்லிக் குஷியாக்குவார். கேம்ப்புக்குப் போகும் குழந்தைகளை தாம்பரத்திலிந்து பாரிஸ் கார்னருக்கு நடக்கவிட்டு வார்ம்அப் செய்ய வைப்பார். குழந்தைகளுக்குப் பக்காவான ஃபிட்னஸ் ட்ரெய்னராகவும் செயல்படுவார். ஆனால், ஓப்பனிங் நல்லா இருந்தாலும் ஃபினிஷிங் கொஞ்சம் ரத்தக்களறி ஆகும் என்பதால் கேம்ப்பின் பாதியிலேயே வேறு கோச்சை நாடுவது உங்கள் குழந்தைகளின் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. 

'டண்டணக்கா' டி.ஆர் :

பள்ளிக் குழந்தைகள் கோடை விடுமுறை கேப்பில் அட்டாவதானி, தசாவதானியாக லட்சிய தி.மு.க தலைவர் டி.ஆரை அணுகலாம். பாடகர், இசையமைப்பாளர், டான்ஸர் எனப் பல பிரிவுகளுக்கான கோச்சிங் வகுப்புகளையும் ஒரே குடையின் கீழ் நடத்தி பல்துறை வித்தகர் பட்டம் பெற்றவர். காலையில் இருந்து மாலை வரை ஒவ்வொரு க்ளாஸ்களாகக் குழந்தைகளைக் கூட்டிப்போய் டயர்டாகும் பெற்றோர்களுக்கு இது ஒரு நல்ல ஆஃபர். காலையில் டி.ஆரின் க்ளாஸுக்குக் கொண்டுபோய் விட்டால் பலவிதமான கோச்சிங் க்ளாஸ்களும் ஒரே இடத்திலேயே முடித்து மாலையில் காத்திருக்கும் குழந்தைகளைக் கையோடு அழைத்துச் செல்லலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை!

'ஹே ஹே' கார்த்திக் :

தேர்தல் வந்திடுச்சுனு தட்டி எழுப்பினாலும், 'பை எலெக்‌ஷன்தானே போ மேன்...' எனச் சின்னக்குழந்தை போலக் கையைத் தட்டிவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும் நவரச நாயகனைத் தூங்கவிடாமல் டிஸ்டர்ப் செய்து ஒரு சம்மர் கேம்ப் நடத்த வைக்கலாம். ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாஸ் நடத்தி ஆங்கிலப் பாடத்தில் பொளந்து கட்டுவார் கார்த்திக். பிரிட்டிஷ் இங்கிலீஷ் பாடம் நடத்துவதில் ஹாலிவுட் ஹீரோக்களுக்கே தண்ணி காட்டுவார் நம்ம ஆள். பாடம் நடத்தும்போது மாணவர்கள் தூங்குவதைத்தான் பார்த்திருப்பீங்க. இங்கே, பாடம் நடத்துற வாத்தியாரே நின்னுக்கிட்டே குறட்டை விடுவார். அதை மட்டும் பொறுத்துக்கொண்டால் நீங்க இங்கிலீஷ் பேசுற ஸ்டைல்ல... அப்டியே..!

'மாஸ்டர் ராகவன்' சரத்குமார் : 

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நின்று பிஸியாகலாம் என நினைத்த நாட்டாமைக்கு தொட்டதெல்லாம் சறுக்கல். கட்சித் தொண்டர்கள் புடைசூழ, வேட்பாளராக அந்தோணி சேவியர் என்பவரையும், மாற்று வேட்பாளராக விஜயன் என்பவரையும் தங்கள் கட்சியின் சார்பாக மனுத் தாக்கல் செய்ய அழைத்துப் போனார். வேட்பு மனுவில் வேட்பாளரை முன்மொழிந்த பத்து வாக்காளர்களில் ஒருவர், வேறு தொகுதியைச் சேர்ந்தவர் என்று காரணம் காட்டி அந்த மனுவைத் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். 'நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணுனோம்... ஆனா இப்படி ஆகிப்போச்சு...' னு தமிழ் சினிமா டாக்டர்கள் மாதிரி கட்சி உறுப்பினர்கள் கையைப் பிசைய கனத்த மனதோடு விலகிவிட்டார் நாட்டாமை. 

சரி... எதுக்கு ரெண்டு மாசத்தை வீணாக்கிக்கிட்டு? மிஸ்டர். மெட்ராஸ் பட்டம் வென்ற சரத், ஆணழகன் பட்டம் வாங்கப் பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு மாஸ்டர் ஆகி ட்ரெய்ன் செய்யலாம். ஜிம் ட்ரெயினர் அவதாரம் எடுக்கும் அவரிடம் பயிற்சி பெற ஆட்கள் குவிவார்கள். 'ஐயா' படத்தில் கால்பந்து விளையாடி 'நீங்க கோலைப் போடுங்க... நான் ஆளைப் போடுறேன்..' எனச் சொல்லிக் கம்பத்தில் மோதவிட்ட அனுபவமும் உண்டு. ஆக, ஃபுட்பால் விளையாடச் சொல்லித்தரும் பி.டி. மாஸ்டரும் இவரேதான். #தட் ராகவா... ராகவா மொமென்ட்!

- விக்கி