Published:Updated:

‘கஞ்சா கருப்புவை வைச்சு நதிநீரை இணைக்கிறோம்!’ - பா.ஜ.கவுக்கு அடிப்பொலி ஐடியாஸ்

‘கஞ்சா கருப்புவை வைச்சு நதிநீரை இணைக்கிறோம்!’ - பா.ஜ.கவுக்கு அடிப்பொலி ஐடியாஸ்
‘கஞ்சா கருப்புவை வைச்சு நதிநீரை இணைக்கிறோம்!’ - பா.ஜ.கவுக்கு அடிப்பொலி ஐடியாஸ்

புதிய இந்தியாவைக் கொண்டுவருவோம், புதிய இந்தியா இந்தா வருது, அந்தா வருதுனு கதை கதையா சொன்னது மத்திய அரசு. இப்போ புதிய இந்தியாங்கிறது அரசின் செயல்பாடுகள்ல இல்லை, மக்களோட மனங்களில்தான் இருக்குதுனு யாருக்குமே தெரியாத அரிய தத்துவத்தை சொல்லியிருக்கிறார் பிரதமர். சமகாலத்தில் ஆகச்சிறந்த உட்டாலக்கடி பதில் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். சரி புதிய இந்தியாவுக்குத்தான் இப்படி ஒரு விளக்கத்தைச் சொல்லிருக்காங்க ஆல்ரெடி அவங்க சொன்ன சில  தேர்தல் வாக்குறுதிகளையும் ஃபியூச்சரில் இதே பாணியில எப்படி சமாளிக்கலாம்னு சில டிப்ஸ்களையாவது நாம் கொடுப்போமா..

ஊழலை ஒழிப்போம் கருப்புப்பணத்தை வெளியே கொண்டு வருவோம் :

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது சொன்ன இந்த வாக்குறுதியை யாராவது என்ன ஆச்சுன்னு கேட்டா, 'இப்போவும் அதைத்தான் சொல்றோம் ஊழலைக் கண்டிப்பாக ஒழிப்போம்; கருப்புப்பணத்தையும் அப்படியே வெளியே கொண்டுவருவோம்; ஆனா எப்போங்கிறதுதான் எங்களுக்கே தெரியாது. கொள்கையில கரைக்டா இருப்போம். நீங்க வேணும்னா பாருங்க அடுத்த தேர்தலின்போதும் இதே வாக்குறுதியைத்தான் கொடுப்போம்'னு சொல்லி சமயோஜிதமா சமாளிக்கலாம்.

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கு இணையான அதிகாரங்கள் வழங்கப்படும் :

இதைப்பற்றி எல்லாம் யாராவது கேள்வி கேட்டா, 'அதாவது மக்களே அந்த வாக்குறுதியின் அர்த்தம் என்னன்னா மத்திய அரசு எந்த அளவுக்கு மக்களைப் போட்டு பந்தாடுகிறதோ அதே அளவு சம உரிமையை மாநில அரசுக்கும் கொடுப்போம், அவங்களும் சேர்ந்து மக்கள் தலையில கும்மி அடிக்கலாம் அதைத்தான் அப்படி நாசூக்காகச் சொன்னோம்'னு பதில் சொல்லி கேள்வி கேட்ட வாயை கேட் போட்டு அடைக்கலாம்.

வேலை வாய்ப்பையும், தொழில் முனைவோருக்கு சாதகமான நிலையையும் உருவாக்குவோம் :

இந்த விஷயம் குறித்து யாராச்சும் கேள்வி கேட்டாங்கனா 'ஆமா நாங்கதான் அதைச் சொன்னோம். ரூம் போட்டு குப்புறப்படுத்து யோசிச்சதுல ஒரு ஐடியா கிடைச்சுருக்குது. அதாவது முதலில் வேலை பார்க்கிறவங்களோட வேலையை எல்லாம் பிடுங்கலாம்னு இருக்கோம். இப்போ அங்கே காலி இடம் ஒண்ணு உருவாகுமா? அந்த இடத்தை வேலை தேடுறவங்களுக்குக் கொடுப்போம் இப்படி மாற்றி மாற்றி ஆட்சிக்காலம் வரைக்கும் பண்ணலாம்னு இருக்கோம். எப்படி செம ஐடியாவுல' எனக் கேட்டு தமக்குத் தாமாகவே பூரித்துக்கொள்ளலாம்.

விவசாயிகளுக்குச் சரியான புள்ளிவிவரங்களை வழங்குதல் :

கூட்டணியில் அப்போ ஏதோ 'ரமணா' விஜயகாந்த் இருந்ததை நம்பி அப்படி ஓர் அறிவிப்பைச் சொல்லிட்டோம் நாங்க. நீங்களே சொல்லுங்க இப்ப என்ன பண்ணுறதுன்னு விவசாயிகள்கிட்டேயே திரும்பக்கேட்டு வழி அனுப்பி வைக்கலாம்.

நதி நீர் இணைப்பு :

ஆமா அந்த நதி நீரையெல்லாம் இணைக்கிறோம்னு சொன்னீங்களே என்னதான் ஆச்சுன்னு யாராவது கேட்பதற்கு முன்னாலேயே ஆல்ரெடி தாமிரபரணியில நதி நீரையெல்லாம் இணைச்சு கஞ்சா கருப்பு நடிச்ச சீனை தீவிரமாக உட்கார்ந்து பாத்துக்கிட்டு வாரோம். மொதல்ல எப்பிடியாச்சும் கஞ்சா கருப்புவைக் கட்சியில் இணைக்க பிளான் பண்ணுறோம் அதுக்குப் பிறகு விரைவில் அவரை வெச்சு நதி நீரையும் இணைச்சுருவோம்னு நம்புறோம்னு ஏதாவது வாயில வந்ததை வண்டி வண்டியாகச் சொல்லி வைக்கலாம்.

பதுக்கலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் : 

இதையெல்லாம் யாரும் கேட்கப்போறது இல்லை. அப்படியே கேட்டாலும், 'நாங்க சொன்னது மாதிரி நீதிமன்றம்லாம் சரியா அமைச்சிட்டோம் பாஸு. ஆனா பதுக்கும்போது சரியா போலீஸ் வந்து பிடிக்காததனால பதுக்கலை தடுக்க முடியலை. இல்லைனா பதுக்கலைத் தடுத்திருப்போம்கிறதை ரிப்ளையாக அப்ளை செஞ்சு கேள்வி கேட்கிறவங்களுக்கெல்லாம் சப்ளை பண்ணலாம். ஹ்ம்ம்ம் வேற என்னத்த பண்ணுறது?

அப்புறம் நீங்களும் ஏதாவது ஐடியா வெச்சுருந்தா அந்த ஃப்ரீடம் 251 போனுல அவங்களுக்கு ஃபார்வர்டு மெசேஜாக பண்ணிவிடுங்க மக்களே....

- ஜெ.வி.பிரவீன்குமார்