Published:Updated:

ஜனநாயகத்துக்குப் பதிலாக பணநாயகத்துக்குத்தான் மதிப்பு... தேனியில் ஜி.கே.வாசன் அதிரடி!

ஜனநாயகத்துக்குப் பதிலாக பணநாயகத்துக்குத்தான் மதிப்பு... தேனியில் ஜி.கே.வாசன் அதிரடி!
ஜனநாயகத்துக்குப் பதிலாக பணநாயகத்துக்குத்தான் மதிப்பு... தேனியில் ஜி.கே.வாசன் அதிரடி!
ஜனநாயகத்துக்குப் பதிலாக பணநாயகத்துக்குத்தான் மதிப்பு... தேனியில் ஜி.கே.வாசன் அதிரடி!

தேனி மாவட்டத்தின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம், இன்று தேனியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும், தேர்தலில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசிப்பதற்கானது. இதில், `உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி ஏற்பட்டால் மட்டுமே மாநிலம் வளர்ச்சி அடைய முடியும். கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சியிலே வளர்ச்சி இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று. அதற்குக் காரணம், ஊழல் பெறுகி, மக்கள் பணி குறைந்துவிட்டது. ஆனால், மக்கள் மத்தியில் விழிப்புஉணர்வு ஏற்பட்டிருக்கிறது.  மக்கள் பணி அதிகம் செய்யக்கூடிய நிலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்மூலம் ஏற்படும். இப்போது, அதிகாரிகள்தான் தங்கள் அதிகாரத்தால் பணிகளைச் செய்துவருகிறார்கள். அது, போதுமானது இல்லை. ஆக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சியிலே தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான் உள்ளாட்சி வளரும், உயரும். அதற்காகத்தான் இந்த கூட்டம்`` என்றார் வாசன். பிறகு செய்தியாளர்களிடம்...

உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்டம் என்ன?

சென்ற அக்டோபரில், கட்சி தனியாகப் போட்டியிடும் அளவுக்குத்தான் வேட்புமனு தாக்கல்செய்தோம். கடந்த  ஆறு மாதங்களாக தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு எங்கள் கட்சியின் பலத்தை, மரியாதையைப் புரிந்துகொள்ளும் ஒற்றைக் கருத்துடைய கட்சியினருடன் இணைந்து, உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. 

யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு தற்போது கூட்டணி என்று சொல்கிறீர்களே அதற்கு காரணம்?

உண்மைதான். இன்றுவரை யாருடனும் கூட்டணி இல்லை. நாங்கள் இன்னும் எந்தப் பிரசாரமும் செய்யவில்லை. இந்த முடிவுக்குக் காரணம், இடைத்தேர்தலிலே நம்பிக்கை வரவில்லை. ஜனநாயகத்துக்குப் பதிலாக பணநாயகம்தான் அதிகளவிலே இருக்கும் சூழல். அது மாற, தேர்தல் ஆணையம்  கண்டிப்புடன் நடக்க  வேண்டும். மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். 

ஆர். கே. நகர் தேர்தலை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

குழப்பமான தேர்தலாகவே கருதுகிறேன். 

டெல்லியில் போராடும் விவவாயிகள் சுய நலத்துடன் போராடுகிறார்கள் என்ற தமிழிசையின் கருத்து பற்றி...

விவசாயிகளை அரசியல் கட்சிகளும் கட்சித் தலைவர்களும் கொச்சைப்படுத்த வேண்டாம். காரணம், அவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்கமுடியும். இந்தியாவின் அடித்தளமான வளர்ச்சியே விவசாயத்தில்தான் இருக்கிறது என்பதை மனதில் வைத்துகொள்ள வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடிவருகிறார்கள். மத்திய அரசும் மாநில அரசும் அவர்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வேதனைக்குரியது. ஆக, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஹைட்ரோகார்பன் பற்றி...  

நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களும் இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போர்க்கொடி ஏந்திய நிலையில் இருந்தனர். மக்கள் மட்டுமல்லாது, விவசாயிகளும் பல அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்த பிறகு, ஒரு உத்தரவாதம் பெற்றுக்கொண்டு, அவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்கள். இந்தச் சூழலில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதுபோல மீண்டும் அந்தத் திட்டத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரு அச்சத்தை ஏற்படுத்தி, அந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திடுகிறது என்றால், அது மக்களுக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகம். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது. அதற்கு, அந்தப் பகுதி மக்களுடன் தமிழ் மாநில காங்கிரஸ் துணை நிற்கும். 

மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்படுவது பற்றி...

மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது நாளுக்கு நாள் தொடர்ந்துவருகிறது என்றால் அதற்கு காரணம், மத்திய மாநில அரசுகளின் மெத்தனப் போக்கு. மாநில அரசு, மீனவர்களுக்காக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பதில்லை. மத்திய அரசு மீனவர்களின் எதிர்ப்பார்ப்புகளை  இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேசி, கோட்பாடுகளை ஏற்படுத்தத் தவறுகிறது. அதனாலே, விதிமுறைகளைத் தாண்டி இலங்கை அரசினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படும் நிலை உருவாகிறது என்பதை இந்திய அரசு உணர வேண்டும். 

தமிழகத்தில் த.மா.கா-வின் நிலை...

`அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வகையிலே தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணா விரதம் என்று மக்கள் பிரச்சனையிலே முதல் இயக்கமாகக் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ். அந்த வகையிலே, தமிழகத்தின் முதல் இயக்கமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இன்னும் வளரவில்லை என்றாலும்கூட, தமிழகத்தின் மரியதைக்குரிய இயக்கமாக த.மா.கா செயல்பட்டுவருகிறது. மக்களின் நம்பிக்கையை நாங்கள் வருங்காலங்களில் பெறுவோம். `` என்று பதிலளித்தார் ர் ஜி.கே.வாசன். 

தொகுப்பு: உ.சுதர்சன் காந்தி (மாணவப் பத்திரிகையாளர்) 
படங்கள்: வீ.சக்தி அருணகிரி.