Published:Updated:

தென் பெண்ணையின் தொப்புள்கொடி கெடிலம்! “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் 11

தென் பெண்ணையின் தொப்புள்கொடி கெடிலம்! “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் 11

தென் பெண்ணையின் தொப்புள்கொடி கெடிலம்! “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் 11

தென் பெண்ணையின் தொப்புள்கொடி கெடிலம்! “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் 11

தென் பெண்ணையின் தொப்புள்கொடி கெடிலம்! “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் 11

Published:Updated:
தென் பெண்ணையின் தொப்புள்கொடி கெடிலம்! “கார்ப்பரேட் கொள்ளையும்... நாம் கொடுக்கும் விலையும்!” அத்தியாயம் 11

ண்டில் பல மாதங்கள் தண்ணீர் ஓடிய காலத்துக்கு, அவரது ஞாபக உலகம் விரைந்து செல்கிறது. ஆற்றைக் கடந்துசெல்ல பரிசல்களில் ஏறிச்சென்ற இளமைக்காலத்தில் அவர் நுழைந்துவிடுகிறார். வெளியே வரச் சிரமப்படுவதை உணர்ந்துகொள்ள முடிகிறது. வெண்ணை உருகுவதற்குள் பெண்ணை பெருகிவிடும் என்ற முதுமொழி கூறுகிறபோதே, திடீரென்று பெருகிவரும் பெண்ணை வெள்ளத்தில் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டு இறந்தபோன விபரங்கள், அவர் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஒவ்வொன்றாக யோசித்துச் சொல்கிறார். இதன்பின்னர் 1963-ம் ஆண்டில் இங்கு பாலம் அமைக்கப்பட்டு, பரிசல் பயணம் தடைப்பட்டது வரையிலான தகவல்கள் அனைத்தையும் கூறி முடிக்கிறார். கவிஞர் பெண்ணைவளவன் கூறிய தென் பெண்ணை இன்று காணாமல் மறைந்துபோனது. வசந்தகாலத்தை இழந்துவிட்டது. அழிவின் விளிம்பில் நிற்கும் தென் பெண்ணை துயரம், யாராலும் அறிந்துகொள்ள முடியாதது. அதன் கரைகளை அகற்றினார்கள், நதியின் வாழ்விடத்தைத் தமது தம்முடைய இருப்பிடமாக மாற்றிக்கொண்டார்கள். அனைத்துக் கழிவுகளையும் சுமக்கும் குப்பைமேடாகிப்போன பெண்ணை இன்று அனாதைப் பிணங்களைச் சுட்டெரிக்கும் சுடுகாடாகவும் மாறிப்போனது. இதைவிடவும் துயரம் ஒரு நதிக்கு வேண்டுமா? திருக்கோவிலூர் சந்திப்பில் இவ்வாறான பல தகவல்கள் கிடைக்கின்றன. திருக்கோவிலூரின் அகலமான நிலப்பரப்பில் ஆர்ப்பரித்துச் சென்ற தென் பெண்ணை இன்று இல்லை. மனித முயற்சியில் மீண்டும் தென் பெண்ணை உயிர்ப்பைப் பெறுமா என்ற கேள்வி ஏக்கமாய் மனதுக்குள் எழுந்து நிற்கிறது. ஆனாலும் ஒரு சிறு நம்பிக்கை. தென் பெண்ணையின் மரணம் கண்முன்னால் நிகழ்வதைச் சகித்துக்கொள்ள முடியாத மக்களிடம் ஒருவிதமான கோபம் கனன்று நிற்கிறது. அந்தக் கோபம் செயல்பாட்டுக்கான தூண்டுதலைத் தருகிறது. சிறுகுழுக்களை அமைத்துக்கொண்டு நதித் தாய்க்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று களமிறங்குகிறார்கள். திருக்கோவிலூர் சந்திப்பில் அந்த ஐவரைப் பார்க்கிறேன். அவர்கள் இளைஞர்கள். யார் அந்த ஐவர்? 

தென் பெண்ணையைக் காப்பாற்றும் ஐவர் குழு!

தென் பெண்ணையின் பிறப்பிடம்வரை சென்று பயணம் செய்து... வரலாறு, தொன்மங்கள் முதல் அனைத்தையும் ஆய்வுசெய்து, அதிலிருந்து விழிப்பு உணர்வை உருவாக்கி, தென் பெண்ணையைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐவர்தான் இவர்கள். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்கிறார்கள். இவர்களுக்கு பொருள் உதவி செய்வதற்கு யாரும் தயார் இல்லை. ஆனாலும் இவர்களின் பயணம் தொடர்கிறது. இந்த ஐவரின் அர்ப்பணிப்பின் மீது ஈர்ப்புக்கொள்கிறேன்; பெயரையும் இங்கு பதிவுசெய்யும் அவசியம் என்று கருதுகிறேன். சிங்கார உதயன், நன்நூலகர் அன்பழகன், தே.இளையராஜா, சத்தியமூர்த்தி, ஆலம்பாடி பாலமுருகன் என்ற ஐவர்தான் இவர்கள். முயற்சி செய்துபார்க்கும் இளைஞர்களையும், அவர்களுக்கு ஊக்கம்தரும் சிலரையும் பார்க்கும்போது, புதிய நம்பிக்கைகள் தோன்றுகின்றன. நதிக்கரை மக்களின் மண்சார்ந்த விழிப்பு உணர்வும், அதனால் ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளும்தான், தமிழக நதிகளைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை உறுதிசெய்யும். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது அணை. 150 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. கட்டப்பட்ட ஆண்டு 1864. இந்த அணையின் நீளம் 1,200 அடிகள். கால்வாய்கள் வெட்டி, நீரை, சுற்றுப்புறக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் கட்டமைப்பு இன்னமும் செயல்பாட்டில் இருக்கிறது. நம் முன்னர்கள் எத்தனை ஆண்டு இந்தக் கால்வாய்களையும், மதகுகளையும் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதை யோசிக்கும்போது, நம் மக்கள் கடந்துவந்த பாதையை மேலும் உற்றுப் பார்க்க மனம் விரும்புகிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆங்கிலேயர்களின் சிறப்பு!

எல்லா அணைகளுக்கும் வெள்ளம் ஒரு சோதனைதான். திருக்கோவிலூர் அணைக்கும் 1874-ஆம் ஆண்டு சோதனைக் காலம். பெரும் வெள்ளத்தால் அணை உடைந்துபோனது. கால்வாய்கள் காணாமல்போய் அது இருந்த இடம் மேடுபள்ளமாய் மட்டும் தெரிந்தது. பெருவெள்ளத்தில் அணையின் வடக்குப் பகுதி முற்றாகச் சேதமடைந்துவிட்டது. வெள்ளச் சேதம் விவசாயச் சேதமாக மாறியது. இதன் பின்னர் அணையைச் சீரமைப்பதைத் தவிர, ஆங்கிலேயருக்கு வேறுவழியில்லாமல் போய்விட்டது. இத்தோடு, அணையைச் சீரமைப்பது மட்டும் பயனளிக்காது என்பதை உணர்ந்தவர்கள், 1,200 அடி நீளம் கொண்ட அணையை 1,791 அடிகளாக  விரிவாக்கம் செய்தார்கள். ஆங்கிலேயர்களிடம் ஒரு சிறப்பு என்னவெனில், எல்லா விபரங்களையும் கல்வெட்டுகளில் வடித்து ஆதாரமாக்கிவிடுகிறார்கள். திறக்கப்பட்ட காலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று பெண்ணையாற்றங்கரையில் நீர் செல்லும் மதகுகளுக்கிடையே கம்பீரமாக இருக்கிறது. கல்வெட்டில் உள்ள தகவல் ஒன்று நம்மைப் பெரிதும் யோசிக்க வைக்கிறது. காலத்தைவென்று கம்பீரமாக மக்கள் மனதில் நிற்பதற்கு இந்தத் தகவல்களும் ஒரு காரணமாகும். அரசு ஒதுக்கிய பணத்தில் சிக்கனமாய்ச் செலவு செய்து அரசுப் பணத்தை மிச்சப்படுத்தியுள்ளோம் என்பதைக் கல்வெட்டில் பெருமிதத்துடன் செதுக்கிவைத்துள்ளார்கள். இன்றைய அரசு, ஒப்பந்தப் பணிகளில் நடைபெறும் கொள்ளைகளோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது உடல் ஒருவிதமான அதிர்ச்சியை எதிர்கொள்கிறது. தென் பெண்ணையின் அழிவைப்போலவே, இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது கெடிலம். இது, அழிந்துகிடக்கும் கோலத்தைப் பார்க்கச் சகித்துக்கொள்ள முடிவதில்லை. ஆனால், இதை அழித்த அடாவடி மனிதர்கள் செல்வச்செழிப்போடு இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கெடிலம் கரை நாகரிகம் என்று புகழ்மிக்க வரலாற்றை உருவாக்கிய, கெடிலத்துக்குத் தொன்மையான வரலாறு உண்டு. தென் பெண்ணையைப்போலவே கடந்தகால நீர்வளப் பெருமை கொண்டது இது. கெடிலம் என்பதற்கு ஆழ்ந்த நீர் ஊற்றிலிருந்து தோன்றிய நதி என்று கூறப்படுகிறது. 

புராணக் கதை!

கள்ளக்குறிச்சி வட்டம் மையனூர் மலையில் தோன்றி, மைனூர் ஏரியில் அடியெடுத்துவைத்து, பல ஊற்றுக் கால்வாய்களிலிருந்து அங்குவந்து சேர்ந்த நீரையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு, கெடிலம் தன் பயணத்தைத் தொடர்கிறது. இது, கருடா நதி என்றும் அழைக்கப்படுகிறது. கெடிலத்துக்குத் தொன்மையான புராணக் கதை ஒன்றும் இருக்கிறது. வறட்சி தாண்டவமாடிய ஒரு காலத்தில் விஷ்ணுவின் கருடன், மையனூர் மலைக் குன்றில் தனது அலகால் சுணை ஒன்றை உருவாக்கி, அதிலிருந்து கெடிலம் நதியைத் தோற்றுவித்து... என்று புராணக் கதை, கெடிலத்தைப் பற்றிப் பேசுகிறது. மொத்தம் 55 மைல் நீளம் கொண்ட கெடிலம் தொடங்கிய இடத்தில் சிற்றாற்றைப்போலக் காட்சியளித்தாலும்... கடலூர் வட்டத்தில் அது, அகன்று விரிந்த நதியாக மாறிவிடுகிறது. இடையில் அமைந்த, விரிந்த வடிநிலங்கள் இதற்கான மழைநீரைச் சேகரித்துத் தந்துவிடுகின்றன. கெடிலத்தில் அமைந்துள்ள அணைகள், அதன் தொல்சிறப்பைத் தெரிவிக்கின்றன. நான்கு அணைகள் உள்ளன. தாமல் அல்லது புத்தனேந்தல், திருவதிகை, வாணமாதேவி, திருவந்திபுரம் ஆகிய அணைகளே அதன் பெயர்கள். இதில், புத்தனேந்தல் அணையைத் தவிர மற்ற அணைகள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. வேறு எந்த நதிகளிலும் இல்லாதவாறு கெடிலத்தில் அருகருகே நான்கு அணைகளை ஆங்கிலேயர் அமைத்துள்ளனர். இந்த அணைகள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து, 10 கிலோ மீட்டர் தூரம் இடைவெளிவிட்டு அமைந்துள்ளன. பொதுவாக அணைகள் இவ்வாறு கட்டப்படுவதில்லை. கெடிலத்தின் நீர்வளம்தான் அதற்குக் காரணமாகத் தெரிகிறது.

இயற்கை தந்த சிறப்பு!

சுதந்திரத்துக்குப் பின்னர் கட்டப்பட்டது புத்தனேந்தல் அணை அல்லது தாமல் அணை. ஆற்றுக்கு வட பகுதியில் புத்தனேந்தலும், தென் பகுதியில் தாமல் என்னும் கிராமமும் அமைந்திருப்பதால் இந்தப் பெயரை, இது பெற்றுள்ளது. திருக்கோவிலூருக்குக் கிழக்கே 15 கிலோ மீட்டர் தூரத்தில் அணை உள்ளது. வேறு அணைகளுக்கு இல்லாத சிறப்பை இயற்கை இந்த அணைக்கு வழங்கியுள்ளது. பாறைகள் நிறைந்த பகுதியில் கெடிலம் ஓடுகிறது. நீர் ஓட்டத்திலேயே அமைந்த பாறைகளை அப்படியே பயன்படுத்தி, இதையே இடைத் தடுப்பாகக் கொண்டு அணை அமைக்கப்பட்டிருக்கிறது. இது, கட்டப்பட்ட ஆண்டு 1953. இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட அணையின் தொடர்ச்சி இது. இதிலிருந்து கால்வாய்கள் வெட்டப்பட்டு, 519 ஏக்கர் நிலம் பாசன வசதியைப் பெறுகின்றன. திருவந்தி அணை,  ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய மூத்த அணைகளில் ஒன்று. அணை 1847-ம் ஆண்டில் கட்டப்பட்டது. நெடுங்காலமாக இந்த இடத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்ட பாரம்பர்ய அணை ஒன்று இருந்ததாகவும், இடத்தேர்வு, நீர் சேமிக்கும் பொருத்தப்பாடு போன்ற நம் மக்களின் திறனை வியந்த ஆங்கிலேயர் இதே ஆண்டில் நவீனமாக்கினர் என்றும் கூறப்படுகிறது. இதன் ஆரம்பகால நீளம் 421 அடிகள். இப்போது இதன் அளவு 523 அடிகள். கடலூரிலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கெடிலம் நதியில், ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் அணை திருவந்திபுரம் அணைக்கட்டு. 1836-ம் ஆண்டில் கட்டப்பட்டப்பட்ட இந்த அணை, கடலூரிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கெடிலத்தின் கடைசி அணையும் இதுதான். இந்த அணையின் நீளம் 436 அடிகள். அணையிலிருந்து புறப்படும் கெடிலம் கடலில் கலந்துவிடுகிறது. கெடிலத்தின் மற்றோர் அணை வாணமாதேவி. திருவதிகைக்குக் கிழக்கில் 8 கிலோ மீட்டர் தூரத்திலும், கடலூரிலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்திலும் இது அமைந்துள்ளது. இதனை, பல்லா நத்த அணை என்றும் அழைப்பர். இது 1863-ம் ஆண்டில் கட்டப்பட்டது. முன்னால் இதன் நீளம் 436 அடிகள். 1903-ம் ஆண்டில் அணை மீண்டும் விரிவாக்கப்பட்டு நீளம் 503 ஆக அதிகரிக்கப்பட்டது. அணைகள் பல கட்டிப் பெருவாழ்வு வாழ்ந்த கெடிலம் பற்றிய மற்றொரு தகவலை நாம் அறிந்துகொள்வது அவசியம்.

மலட்டாறு பெயர் வந்தது ஏன்?

கெடிலம், தென் பெண்ணையில் வந்து சேரும் ஆறும் அல்ல... பிரிந்து செல்லும் ஆறும் அல்ல. ஆனாலும், தென் பெண்ணையின் நீரைப் பெறும் தொப்புள்கொடி உறவைப் பெற்றுள்ளது. தென் பெண்ணையையும் கெடிலத்தையும் இணைக்கும் தொப்புள்கொடியின் பெயர்தான் மலட்டாறு. வெள்ளம் பெருகிவரும் பெண்ணையின் மிகை நீரைச் சுமந்துசென்று கெடிலத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியை மலட்டாறு செய்கிறது. மலட்டாற்றுக்கும் சுவையான வரலாற்றுத் தகவல்கள் இருக்கின்றன. இயற்கையானதா அல்லது செயற்கையாக வெட்டப்பட்ட நதியா என்ற இதன் பிறப்பு ரகசியம் இன்னமும் ஆதாரத்தோடு அறியப்படாமலேயே இருக்கிறது. மலட்டாறு என்ற பெயர் ஏன் வந்தது என்பதிலிருந்துதான் இதன் பிறப்பின் ரகசியம் குறித்த கேள்வி எழுகிறது. ''நீரற்ற ஆறு, என்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது'' என்கிறார்கள் சிலர். இது உண்மையல்ல. தொன்மைக் காலம் முதல் அண்மைக் காலம்வரை, இது நீர் வளம்கொண்ட ஆறு என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. இதைத் தவிர ஆராயத்தக்க மற்றோர் ஆதாரம் கிடைத்துள்ளது. திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த சங்ககால மலையமான்களுக்கு மலட்டாறு என்னும் பட்டயப் பெயர் உண்டு. தென் பெண்ணையின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி மடைமாற்றம் செய்வதற்கு மலையமான்களால் வெட்டப்பட்ட ஆறாக இது இருக்கலாம். இந்த ஆய்வு முற்றுப் பெறுமானால், தமிழ் மக்களின் நீர் மேலாண்மை பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.

(நதி ஓடும்)

- சி.மகேந்திரன்