Published:Updated:

‘ஸ்டாலினுக்கு அந்த பயம் வந்துவிட்டது!’ ஓ.பன்னீர்செல்வம் பதிலடி

‘ஸ்டாலினுக்கு அந்த பயம் வந்துவிட்டது!’ ஓ.பன்னீர்செல்வம் பதிலடி
‘ஸ்டாலினுக்கு அந்த பயம் வந்துவிட்டது!’ ஓ.பன்னீர்செல்வம் பதிலடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்ற பயத்தில், கோடை வெயிலின் வெப்பம் தாங்காமல் தி.மு.க.செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எதையெதையோ பேசிவருகிறார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரின் இல்லத்தில் நேற்று (புதன்) செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவற்றுக்குப் பதிலளித்த ஓ.பி.எஸ்."ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களின் வேட்பாளர் மதுசூதனன் வெற்றி பெறுவார். இதை அறிந்துகொண்ட மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தால் எதைஎதையோ பேசுகிறார். கோடை வெயிலின் வெப்பத்தை அவரால் தாங்க முடியவில்லை.அவர் என்மீது வைத்துள்ள குற்றச் சாட்டுக்கு நான் ஏற்கெனவே பதிலளித்துள்ளேன். இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் அவர் ஏன் அதையே திரும்ப கேட்கிறார். அதே நேரத்தில் ஊழல் குறித்தும் பேச அவருக்கு தகுதியில்லை. தி.மு.கவினர் மீது இன்னமும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு நடக்கிறது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு இருக்கிறது. இன்னும் நிறைய ஊழல் வழக்குகள் உள்ளன. இதையெல்லாம் அவர் மறைத்துவிட்டுப் பேசுகிறார். ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள்.

அதே போல சேகர் ரெட்டி விவகாரம், அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மணல் டெண்டரில் அவருக்கு முன் உரிமை என்பதெல்லாம் இல்லை. நான் திருப்பதிக்கு சாமி கும்பிட போனேன். அங்க அவர் தமிழ்நாடு சார்பாக உறுப்பினராக இருக்கிறார். தேவஸ்தானத்தில் இருப்பவர்கள் எல்லாம் என்னுடன், மற்ற விஐபிகளுடன் போட்டோ எடுப்பது போல எடுத்தார்கள். அவ்வளவுதான். அதை இப்போது விமர்சனம் செய்கிறார்கள். அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதனை விசாரிக்க தனி விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்ற முடிவை நான் முதல்வராக இருக்கும்போதே எடுத்தேன். அதனை அறிவிக்கவும் செய்தேன். ஆனால் அதற்குள் சசிகலா தரப்பு பல்வேறு குழப்பங்களை நிகழ்த்திவிட்டனர். இதுவும் மு.க. ஸ்டாலின்  அறியாதது அல்ல. அதேபோல அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதில் என்னவோ நடக்கிறது, அதனால் நாம் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும், அதோடு ஜெயலலிதாவுக்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்துவிட்டால் நம்மை கட்சியினரும் பொதுமக்களும் எல்லாவடிவத்திலும் தாக்குவார்கள், கட்சிக்காரர்கள் நமது வீட்டை சூறையாடுவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வலியுறுத்தினேன், எச்சரித்தேன். அவரும் கேட்டுக்கொண்டார். சசிகலாவிடம் சென்று நான் தெரிவித்த விஷயத்தை கூறியிருக்கிறார். வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க சசிகலா தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை.

நான் மருத்துவர் கிடையாது. எந்த மருந்து எந்த நோய்க்கு என்று தெரியாது. ஆனால் விஜயபாஸ்கர் மருத்துவர். அவருக்கு எல்லாம் தெரியும். அப்படி இருந்தும் விசாரணை கமிஷன் அமைத்தால் ஓபிஎஸ்ஸை தான் முதலில் விசாரிக்கவேண்டும் என்கிறார். ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கலாமா வேண்டாமா என்று அவர்கள்தான் முடிவெடுத்து இருக்கவேண்டும். இதையே தான் நான் முன்பே கூறினேன். எனது நேரடி நிர்வாகத்தில் எதுவும் இல்லை. அரசு விஷயம் என்றால் நான் பொறுப்பு. மருத்துவ குழுவிடம் எல்லா பொறுப்பும் இருந்தது. எங்களிடம், 'அம்மா நல்லா இருக்காங்க, இன்னும் நாலைந்து நாளில் வீட்டுக்குப் போய்விடுவாங்க' என்று தான் கூறினார்கள். பின்னர் இரண்டு நாளில் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள் என்றும் கூறினார்கள். ஆனால் நடந்தது வேறு. அதனால்தான் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது அதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று நான் அமைச்சர்களிடம் கூறினேன். விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்றும் அறிவித்தேன். இதை யாராலும் மறுக்கமுடியாது.

ஆனால் எல்லாம் தெரிந்தும் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் தேர்தலுக்காக, பரபரப்புக்காக எதாவது பேசவேண்டும் என்பதற்காக பேசியுள்ளார். அதற்கு எல்லாம் நான் பதில் சொல்லமுடியாது. உறுதியாக ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்தத் தேர்தல் மட்டும் அல்ல எந்தத் தேர்தல் வந்தாலும் திமுக படு தோல்வி அடையும். மக்களிடத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் அவர் குளிர்காய பார்க்கிறார். அது நடக்காது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எல்லா கட்சிகளின் நிலையையும் கொள்கைகள் குறித்தும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதனை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நான் 3-ம் முறையாக முதல்வராக ஆக்கப்பட்ட பின்னர், சசிகலா குடும்பம் கொடுத்த நெருக்கடிகள், கெடுதல்கள், அவமானங்கள் ஏராளம். அதில்தான் 10 சதவீதம் சொல்லி இருக்கிறேன். மீதம் உள்ள 90 சதவீதம் அவமானங்களை எனக்குள்ளே புதைத்துக்கொண்டேன் என்றுதான் கூறியிருக்கிறேன். இதில் குழப்பம் தேவையில்லை. இதில் ஸ்டாலின் குற்றம் சாட்ட தேவையே இல்லை. இதில் என்ன அவருக்கு சந்தேகம்.

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை நானும் பார்த்தேன். நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. வீடுகள் கட்ட, என்ன நிதியாதாரம் என்பதை அவர் கூறவில்லை. தேர்தலுக்காக அவர் கூறியிருக்கிறார். ஆர்.கே. நகர் தொகுதி எப்போதும் ஜெயலலிதா தொகுதிதான். அதுதான் அவருக்கும் ஸ்டாலினுக்கும் எரிச்சலைத் தருகிறது. ஜெயலலிதா உண்மையான விசுவாசிகள் நாங்கள்தான் என்று மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள். எங்களின் ஆட்சி மீண்டும் வரும். அப்போது முதல் வேலையாக ஜெயலலிதா மரணத்தின் பின்னே உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர விசாரணை கமிஷன் அமைப்போம். நீதி விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்டுவோம்.

எங்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்று கருத இடமில்லை. அதே நேரத்தில் என்னை முதல்வராக்க பாஜக முயற்சி செய்தது என்றும் கூறிட முடியாது. இப்போது நாங்களும் ஆர்.கே.நகரில் போட்டி யிடுகிறோம். பாஜகவும் போட்டியிடுகிறது. அப்புறம் என்ன அவர்கள் என்னை ஆதரிக்கிறார்கள் என்று கூறுவது. சந்தேகத்தின் அடிப்படையில் யூகத்தின் அடிப்படையில் கூறுவதற்கு பதிலளிக்க முடியாது.

இன்று உள்ள பிரச்னை என்னவென்றால் கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்துக்குள் சென்றுவிட கூடாது என்பதுதான். அந்த நிலை தடுத்து நிறுத்தப்படவேண்டும். எந்தக் கட்சியும் அதில் சிக்கிவிடக் கூடாது. அதைத்தான் ஜெயலலிதா எங்களிடம் கூறி கட்சியை ஒப்படைத்து விட்டுச் சென்று இருக்கிறார்கள். அதையே தான் நாங்கள் 122 எம்.எல்.ஏ.களிடமும் கேட்டு இருக்கிறோம். பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கபட்டது தற்காலிகம் தான். ஏன் எனில் அப்போது தம்பிதுரை, செங்கோட்டையன் என்று பலரின் பெயர்கள் பொதுச் செயலாளர் பதவிக்கு அடிபட்டது. அதனால் அப்படி குழப்பம் நீடிக்கக் கூடாது என்றுதான் சசிகலாவை பொதுச் செயலாளராக நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

எனது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்றது குறித்து விசாரணை கமிஷன் வைக்கப்படும் என்று தினகரன் கூறியுள்ள கருத்தை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். விசாரணை கமிஷன் அமைக்கட்டும், அதை சந்திக்கத் தயார். குற்றம் செய்து இருந்தால் தண்டனை வழங்கட்டும். ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து உறுதியாக இறக்கப்படுவார். அவர் எங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம்.

சசிகலாவின் படத்தை பெயரைக் கூட பயன்படுத்தாமல் தினகரன் ஒட்டு கேட்பது, இந்தியாவிலேயே அவர்கள் அணியில்தான் நடக்கிற விஷயம். கட்சியின் பொதுச் செயலாளர் படத்தை பெயரைப் பயன்படுத்தாமல் தேர்தல் பிரசாரம் நடத்துவது அவர்கள்தான். இந்த நிலை தேவையா என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. மிகப்பெரிய தோல்வியை தினகரன் சந்திக்கப் போகிறார். அதனால் அவர் எங்களைப்பற்றி பேசுகிறார். எங்கள் சின்னம் மின்கம்பம், இரண்டு மின் விளக்கு. அதைத்தான் ஒருவிளக்கு எம்ஜிஆர், இன்னொரு விளக்கு ஜெயலலிதா என்று கூறினேன். இதில் என்ன தவறு இருக்கு. இரண்டு தலைவர்களும் எங்களுக்கு ஒளிவிளக்காக இருக்கிறார்கள். கண்டிப்பாக தர்ம யுத்தத்தில் நாங்கள் ஜெயிப்போம்." என்று கூறினார்.

- சி.தேவராஜன்