Published:Updated:

எந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைச் சின்னத்துக்கு வந்து விழும் வாக்குகள் - இது மத்திய பிரதேச சர்ச்சை!

எந்தப் பொத்தானை அழுத்தினாலும்  தாமரைச் சின்னத்துக்கு வந்து விழும் வாக்குகள் - இது மத்திய பிரதேச சர்ச்சை!
எந்தப் பொத்தானை அழுத்தினாலும் தாமரைச் சின்னத்துக்கு வந்து விழும் வாக்குகள் - இது மத்திய பிரதேச சர்ச்சை!

உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது வாக்கு பதிவு எந்திரங்களில்   தில்லுமுல்லு வேலைகள் நடந்ததாக மாயாவதி, கெஜ்ரிவால் ஆகியோர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில், பின்ட் மாவட்டத்தில் உள்ள, 'அட்டர்' சட்டமன்ற தொகுதியில் வரும்  9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக இங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.   


அரசியல் கட்சியினர், தேர்தல் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அழுத்தும் சின்னத்தில்தான் ஓட்டுகள் பதிவு செய்யப்படுகிறதா என்பதற்கான சோதனை மற்றும் செய்முறை விளக்கம் நடைபெற்றது. வாக்கு பதிவு எந்திரங்களுடன் ரசீது வழங்கும் எந்திரங்களும் இணைக்கப்பட்டிருந்தன.  அப்போது வந்திருந்தவர்கள் பல்வேறு சின்னங்களில் உள்ள பொத்தான்களை அழுத்தி ஓட்டு போட்டனர். அப்போது, எந்த பொத்தானை அழுத்தினாலும்  தாமரை சின்னம் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்தது.  


இது, மத்திய பிரதேசத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதுகுறித்து, எதிர்கட்சிகள்  தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தன.  இது குறித்து விளக்கம் அளிக்க பின்ட் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். 'அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்ட மன்ற தேர்தல்களில் ஓட்டு எந்திர தில்லுமுல்லு  குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என்று வேண்டுகோள் வைத்தார்.


மத்திய பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய சிங் கூறுகையில், ''ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பி.ஜே.பி என்ன வேண்டுமானாலும் செய்யும். எங்களுக்கு இந்த மின்னணு வாக்கு எந்திரத்தில் நம்பிக்கை இல்லை. ஓட்டுசீட்டு முறைப்படி இடைதேர்தலை நடத்த வேண்டும்" என்றார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்