Published:Updated:

சிறையில் எனது தனிமனித சுதந்திரம்தான் பாதிக்கப்பட்டது: ஆ.ராசா

சிறையில் எனது தனிமனித சுதந்திரம்தான் பாதிக்கப்பட்டது: ஆ.ராசா
சிறையில் எனது தனிமனித சுதந்திரம்தான் பாதிக்கப்பட்டது: ஆ.ராசா
சிறையில் எனது தனிமனித சுதந்திரம்தான் பாதிக்கப்பட்டது: ஆ.ராசா

சென்னை: சிறையில் இருந்த காலங்களில் என்னுடைய தனிமனித சுதந்திரம்தான் பெரிதும்  பாதிக்கப்பட்டது என்று சென்னை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அமைச்சர் ஆ.ராசா  கூறினார்.

2ஜி வழக்கில் கைதாகி சிறையிலடைக்கப்பட்ட ராசா,ஜாமீனில் வெளியே வந்துள்ள  நிலையில், 15 மாதங்களுக்குப் பிறகு,டெல்லியிருந்து முதல்முறையாக நேற்று மாலை  தமிழகம் வந்தார்.

விமான நிலையத்திலிருந்து நேராக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்  கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராசா,”அலைக்கற்றை ஊழல் வழக்கில்  இதுவரை 47 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. இதில் எதிலும் எனக்குப் பின்னடைவு  ஏற்படவில்லை. முதலில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்றனர்.  பின்னர் சிபிஐ ரூ.36 ஆயிரம் கோடி ஊழல் என்றது. ஆனால் வழக்கை விசாரித்த  நீதிமன்றம் அதை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி  ரூபாய் என்பது பத்திரிகையாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம்.

எங்கள் வீட்டில் நான் எட்டாவது பையன். சகோதர, சகோதரிகள் ஏழு பேர் வீடுகளிலும்  சோதனைகள் நடந்தன. சிபிஐ அதிகாரிகள், அமலாக்கப் பிரிவினர், வருமான  வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் எல்லாம் என்ன கண்டுபிடித்திருக்கின்றனர்  என்று நீதிமன்றத்தில் கேட்டேன். அந்தக் கேள்வியைத் தொடர்ந்து கேட்பேன்.

சிறையில் இருந்த காலங்களில் என்னுடைய தனிமனித சுதந்திரம்தான் பெரிதும்  பாதிக்கப்பட்டது. சிறையில் திமுக தலைவர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி நூலை 10  முறைக்கும் மேல் படித்தேன். அந்த நூல் எனக்கு நெஞ்சுரம் அளித்தது. எத்தனை  சோதனைகள் வந்தாலும் தாங்கக்கூடிய வல்லமையை அளித்தது.

நான் கைது செய்யப்பட்டது,அரசியல் பழி வாங்கும் செயலா என்று கேட்கப்படுகிற்து.
இந்தக் கேள்விக்கு நான் எதையும் யூகமாகக் கூற முடியாது.

திமுக முக்கிய தலைவர்கள் விமான நிலையத்தில் உங்களை வரவேற்க வராதது  உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறதா? என்று கேட்கிறீர்கள்.

மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு என்னுடைய இல்லத்திற்கே வந்ததற்குப் பிறகு, முழு  தலைமைக் கழகமும் என்னை வரவேற்றதாக நான் உணருகிறேன்.திமுக தலைவர்  கருணாநிதி எனக்கு மாலை அணிவித்து வரவேற்ற போது நான் என்னுடைய பிறவிப்  பயனை அடைந்ததாக உணருகிறேன்.இதை விட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை”  என்றார் ராசா.

கனிமொழிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு உங்களுக்குத் தரப்படவில்லையே? என்ற  கேள்விக்கு, ”இதுவரை செய்திகள் கேட்டீர்கள்.இப்போது கலகம் பண்ண பார்க்கிறீர்கள்.  ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று பதிலளித்தார் ராசா.

அண்ணன்-தம்பி:கருணாநிதி

முன்னதாக கருணாநிதியிடம்,ராசாவை இத்தனை மாதங்கள் கழித்து நீங்கள்  பார்க்கிறீர்கள். அவரைப் பார்த்த போது உங்கள் உணர்வு எப்படி இருந்தது? ராசா எப்படி  உணர்ந்தார்?என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கருணாநிதி,”ஏறத்தாழ ஓராண்டு காலத்திற்கு மேலாக பிரிந்திருந்த  தம்பியை, ஓர் அண்ணன் பார்க்கும்போது என்ன உணர்வு இருக்குமோ அந்த உணர்வு  தான் என்னுடைய உணர்வாகவும் இருந்தது.என்னுடைய உணர்வு தான் தம்பி ராசாவின்  உணர்வும்”என்று கூறினார்.

ராசா மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு ”இப்போதே அவர் தீவிர  அரசியலிலே தான் இருக்கிறார்”என பதிலளித்தார் கருணாநிதி.