Published:Updated:

நடையைகட்டிய கருணாநிதி: ஜெ. கிண்டல்!

விகடன் விமர்சனக்குழு
நடையைகட்டிய கருணாநிதி: ஜெ. கிண்டல்!
நடையைகட்டிய கருணாநிதி: ஜெ. கிண்டல்!
நடையைகட்டிய கருணாநிதி: ஜெ. கிண்டல்!

 சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலை எதிர்கொள்ளாமல் கருணாநிதி நடையை  கட்டி விட்டார் என முதலமைச்சர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தில் கிண்டல்  செய்து பேசினார்.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திக்  தொண்டைமானை ஆதரித்து இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெயல்லிதா பல இடங்களில்  பேசினார்.

அதன் ஒருபகுதியாக, புதுப்பட்டியில் பேசுகையில்,”புதுக்கோட்டை அதிமுகவின்  கோட்டை.ஒராண்டு ஆட்சியின் பல்வேறு திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி  வருகிறேன்.புதுக்கோட்டை சிறப்பு நிதியாக 50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளேன்.இன்னும்  நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு புதுக்கோட்டை புதுப்பொலிவு பெறும்.

கடந்த மைனாரிட்டி ஆட்சியில் கொடிகட்டிப்பறந்த நில அபகரிப்பு கொட்டம் அடக்கி  வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சட்டத்தின் மாண்பு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது,நடைபெறுவது ‘இடை’ தேர்தல்  அல்ல;ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகளை ‘எடை’ போடும்  தேர்தல் என்று சொன்ன திமுக தலைவர் கருணாநிதி, இந்த ’இடை’ தேர்தலை  எதிர்கொள்ள முடியாமல் ‘நடை’யைக் கட்டிவிட்டார்.

ஓராண்டில் இவ்வளவு சாதனைகளை நாங்கள் புரிந்திருந்தாலும் மின் பற்றாக்குறை  விஷயத்தில் நீங்கள் சற்று வருத்தத்தில் இருப்பீர்கள் என்பதை அறிவேன்.முந்தைய  மைனாரிட்டி திமுக ஆட்சியில் மின்சார உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்காததே  இந்த நிலைமைக்கு காரணம்.

நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட  1000 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டப் பணிகள்  துரிதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக முதல் அலகு இந்த ஆண்டு ஜூலை மாதமும்;  இரண்டாம் அலகு நவம்பர் மாதமும் தமது உற்பத்தியை துவக்க இருக்கின்றன. இதனைத்  தொடர்ந்து 500 மெகாவாட் திறன் கொண்ட மூன்றாம் அலகும் செயல்பாட்டிற்கு வர  இருக்கிறது.

இதே போன்று, 1,200 மெகாவாட் மின் திறன் கொண்ட வட சென்னை அனல் மின்  திட்டத்தின் இரண்டு யூனிட்டுகளும்; 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மூன்றாம்  நிலை அனல் மின் நிலையமும் விரைவில் உற்பத்தியை துவக்க உள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. இதன்  இரண்டு யூனிட்டுகளும் விரைவில் மின் உற்பத்தியை துவக்க உள்ளன. இதன் மூலம்  உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே உள்ள 3,500 மெகாவாட் மின் பற்றாக்குறை  முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டு தமிழ்நாடு விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாகத்  திகழும்என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில வாரங்களாக காற்றாலைகளின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதன்  காரணமாக தமிழ்நாட்டின் மின் நிலைமை தற்போது கணிசமான அளவு முன்னேற்றம்  அடைந்திருக்கிறது.

விரைவில் மின் மிகை மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு மீண்டும் பெறும் என்பதை  உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.புதுக்கோட்டை மக்கள் புதுப் பொலிவுடன்  வாழ்வதற்கான அனைத்துத் தேவைகளையும், வசதிகளையும் நாங்கள் நிச்சயம் செய்து  தருவோம் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் உங்களுக்கு தெரிவித்துக்  கொள்கிறேன்”

இந்த தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்து அதிமுக  வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்”என்றார்.