Published:Updated:

'சிறை வாழ்க்கைக்குப் பின்னால்...' - வைகோ கற்றுத்தரும் 7 பாடங்கள்!

'சிறை வாழ்க்கைக்குப் பின்னால்...' - வைகோ கற்றுத்தரும் 7 பாடங்கள்!
'சிறை வாழ்க்கைக்குப் பின்னால்...' - வைகோ கற்றுத்தரும் 7 பாடங்கள்!

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, 2009-ல் க்யூ பிராஞ்ச் போலீசார் தன்மீது தொடுத்த வழக்கை, விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி மனுத் தாக்கல் செய்தார். அதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, வைகோவை ஜாமீனில் செல்ல விருப்பமா எனக் கேட்டும், 'ஜாமீன் வேண்டாம்' என்று உறுதியாகக் கூறி, சிறைக்குச் செல்லத் தானே முன்வந்துள்ளார். மீம்ஸ் மெட்டீரியலாகச் சுற்றிக் கொண்டிருக்கும் வைகோவின் சமீபத்திய செயல்பாடுகள் அவருக்கு உச்சபட்ச சோதனைக்காலம். தாமாக முன்வந்து ஜாமீன் வேண்டாம் எனக் கூறிச் சிறை சென்றதற்குப் பின்னால் வைகோ நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் இவைதான்... 

எப்போதும் முன்னிலையில் இரு
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடக்குதுனு உலகமே உன்னிப்பாகக் கவனிச்சுக்கிட்டு இருக்கும்போது மக்கள் நலக் கூட்டணி தேர்தலில் நிற்கிறதானுகூட யாரும் விசாரிக்கத் தயாரா இல்லை. ஆனா, அண்ணன் வைகோ இப்போ முக்கியமான ஸ்டன்ட் எடுத்து வாலன்டியராக அரெஸ்ட் ஆனதால் ஆர்.கே நகர் இடைத்தேர்தலையே இப்போ தள்ளி வைக்கலாம்னு பேசிக்கிட்டு இருக்காங்களாம். ஒட்டுமொத்த மக்களையும் ஒரே டேக்கில் தன்பக்கம் திருப்பிய வைகோ இதிலிருந்து நமக்குச் சொல்லவருவது எப்போதும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதையே..! இதையே எங்க ஊர்ல வேறமாதிரி சொல்வாங்க. சரி அது எதுக்கு... விடுங்க!

கொண்ட கொள்கை தவறாதிரு
'என்னைப் பார்க்க யாரும் சிறைக்கு வரவேண்டாம். கருவேல மரங்களை அகற்றும் வேலையை மட்டும் பாருங்கள்...' எனத் தெரிவித்திருக்கிறார் வைகோ. இதையேதான் கமல்ஹாசன் 'புள்ளகுட்டிகளைப் படிக்க வைங்க' என எளிமையாகச் சொல்லியிருப்பார். 'என்னை நீங்கள் வந்து பார்த்தாலும் எதுவும் ஆகப் போறதில்லை. அதனால், நான் செஞ்ச நல்ல விஷயத்தையாவது நீங்கள் இனிமேல் தொடருங்கள்' எனக் கூறியிருக்கிறார். தான் சிறை சென்றாலும் தன் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனச் சொல்லாமல் சொல்கிறார்.

எதற்கும் தயாராயிரு
ஜாமீனில் செல்ல விரும்பாமல் தானே முன்வந்து சிறையில் அடைபட்டிருப்பதைப் பார்க்கும்போது, நீங்கள் எந்த வினையைப் புரிந்தாலும் அதற்கு ஈடான எதிர்வினை நிகழும் எனும் நியூட்டனின் மூன்றாம் விதியையே நேர்குத்தாக நின்று நிறுவுகிறார் எனத் தெரிகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த வழக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகிறது. எனவே, இப்போதே அதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்ளலாம் எனச் சொல்ல வருகிறார். 

போராட்ட வாழ்வில் துணிவோடிரு
தமிழக மக்களுக்கு ஆதரவான போராட்டங்களில் எப்போதும் முன் நிற்பவர் வைகோ. இப்போதும் சீமைக்கருவேல மரங்களை அழிக்கும் வேலைகளிலும், விவசாயிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். அடுத்து என்ன வேண்டுமானாலும் நிகழும் என்கிற சூழலில் எப்போதும் அடுத்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் முனைப்போடு இருக்கவேண்டும் என்பதே இவற்றின் மூலம் வைகோ நமக்குச் சொல்லவரும் பாடம். 

அடக்குமுறைக்கு ஒடுங்காதிரு 
இதற்கு முன்பும் 2002-ம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் கைதான வைகோ 19 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்தார். அதற்குப் பிறகு தி.மு.க-வோடு கூட்டணி அமைத்து நான்கு எம்.பி.சீட்களை வென்று பிறகு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மனக்கசப்பாகி அ.தி.மு.க-வோடு இணைந்து அடுத்த தேர்தலைச் சந்தித்தார். அதற்குப் பிறகும், பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குப் போய் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். 'சினம்கொண்ட சிங்கத்தை சிறையில அடைச்சா அது செல்லையே சிதைச்சிடும் பரவால்லையா..?' எனக்கேட்டு அதிகார வர்க்கத்தை எப்போதும் எதிர்த்தே அரசியல் செய்திருக்கிறார். 

உண்மைக்கு அணுக்கமாயிரு
இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க எந்த முயற்சிகளையும் செய்யவில்லை. ஒரு இனப் படுகொலை நிகழ்வதற்குக் காரணமாயிருந்த தி.மு.க வுக்கு மன்னிப்பே கிடையாது. அதை மக்களுக்குத் தெரியப் படுத்துவதற்காகத்தான் இந்த சிறைத் தண்டனையை மனமுவந்து ஏற்றுக் கொண்டதாகச் சொல்லியிருக்கிறார் வைகோ. 'தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும்' என்பதைப் போல தனக்கு வேதனை ஏற்பட்டாலும் பரவாயில்லை... எதிரிக்குச் சோதனையாக வேண்டும் என உணர்த்துகிறார். 

செயல்பட்டுக் கொண்டேயிரு 
வைகோ அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்த காலம் முதல் இப்போது வரை ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறார். அவருக்குத் தேவையே இல்லாத சூழல்களிலும்கூட  'அ.தி.மு.க-வை யாராலும் அழிக்க விடமாட்டேன்' என வான்ட்டடாக வந்து வண்டியேறியது, முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பரீட்சை எழுத வாழ்த்துச் சொல்வது வரை எல்லாக் கணங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். சிறைக்குச் சென்ற பின்னும் வைரல் மனிதராகவே சமூக ஊடகக் களங்களில் நிற்கிறார். 

- விக்கி